தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்கு இலக்கை முன்னிறுத்தி கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து கல்விப்பணியாற்றி வரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் கல்வித்துறை வளர்ச்சி காரணமாக அறிவியல் ஆராய்ச்சிகளும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் பிரமிக்கத்தக்க அளவில் வியாபித்து நிற்கிறது.
ஆனால் அதன் எதிர்விளைவுகளாக தனிமனித ஒழுக்கமும், குடும்ப அமைப்பு முறையும், சமூகத்தில் சட்டம் ஒழுங்கும் சீர்குலைந்து போய்விட்டது.
மட்டுமல்ல. உலகம் தோன்றிய காலம் முதல் உண்டாகாத அளவிற்கு இந்த பூமியின் இயற்கை அமைப்புகள் நிலை தடுமாறி பெரும் நாசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
மனிதனை சுற்றி வாழும் பல்லுயிர்களும் சுற்றுச்சூழலும் கற்பனையில் எட்டாத அளவிற்கு சீரழிவை சந்தித்து வருகின்றன.
ஒட்டுமொத்தமாக பூமிக்கும் மனிதகுலத்திற்கும் வரலாற்றில் இல்லாத வகையில் சோதனைகள் பெருகிக் கொண்டிருக்கிறது.
இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருக்கும் இன்றைய மேற்கத்திய முதலாளித்துவ கல்வி திட்டத்தில் பெரும் சீர்திருத்தத்தை கொண்டு வருவது குறித்து சிந்திக்க வேண்டிய நெருக்கடி முஸ்லிம் அறிவுச் சமூகத்திற்கு இருக்கிறது.
உலகின் அறிவுத்துறை ஒட்டுமொத்தத்திற்கும் ” நீதி மற்றும் கருணை ” என்ற இஸ்லாமிய உயிர்கருத்தை உட்செலுத்த வேண்டிய கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
அதற்கான ஒரு செயல்திட்டம் தான் Islamization of Knowledge.அதாவது அறிவை இஸ்லாமியப்படுத்துதல் என்ற மூலாதார கருத்து.
உலகம் முழுவதும் வியாபித்து நிற்கும் இன்றைய கல்வித்துறை சார்ந்த படிப்புகள் ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் சட்டங்கள் சமூக வழக்கங்கள் என மனித இயங்கியல் மற்றும் இயற்கையுடனான அணுகுமுறை தொடர்பான அனைத்திற்கும் இஸ்லாமிய கருத்தாக்கத்தை முன்வைப்பது தான் அறிவை இஸ்லாமியப்படுத்துதல் என்ற மூலாதார கருத்தின் செயல்திட்டம்.
கடமையானதும் மிகவும் கடினமானதுமான இந்த பொறுப்பை நிறைவேற்றும் பணியில் ஈடுபடும் தமிழை தாய்மொழியாக கொண்ட அறிவுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் இந்த இணையத்தளம் துணையாக நிற்கும்.
இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்வதற்கு….
ஒரு இஸ்லாமிய தமிழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவேண்டிய அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் தேவையான தகவல்களை நீதியாகவும் நிறைவாகவும் அடர்த்தியாகவும் கொண்டுள்ள அறிவின் ஆதாரமாக (Source of Knowledge) இந்த இணையதளம் கட்டமைக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.
எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையில் வாழ்க்கை முறையில் இந்திய நாட்டின் வளர்ச்சியில் சமூக நல்லிணக்கத்தில் உலகத்தின் அமைதியில் பெரும் செல்வாக்கு செலுத்தவிருக்கும் இந்த அறிவுப் புனரமைப்புப் பணியில் சாதிமத வேறுபாடின்றி ஆர்வமுள்ள அனைவரையும் பங்கெடுக்க அழைக்கின்றோம்.
இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள எந்த தலைப்புகள் சார்ந்தும் உங்களது படைப்புக்களை இடம்பெறச் செய்யலாம்.
படைப்புகளில் அந்தந்த துறை சார்ந்த இஸ்லாமிய கருத்தாக்கங்கள் தக்க ஆதாரங்களுடன் இடம்பெற வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
உங்களது படைப்புக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
Email : islamiyaarivukaruvulam@gmail.com
– Admin