ஆபிரகாமுக்கு இயற்கையாகவே மருத்துவத் துறையில் மட்டற்ற ஆர்வம் இருந்தது. அவர் திண்டுக்கல்லில் ஆசியராகப் பணியாற்றும் போதே மருத்துவ முறைகள் கொண்ட ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்து, அவற்றை ஆராய்ந்து, அவற்றில் கூறப்பட்டுள்ளபடி, முறையுடனே மருந்துகளைத் தயாரித்து, அவற்றை நோயுற்று வாழும் எளியோர்க்கும் நண்பர்களுக்கும் கொடுத்து வந்தார்.
இந்த மருந்துகள் எதிர்பார்த்த படியே நல்ல பலனை நல்கின, எனவே இத்துறையில் மேலும் மேலும் வெற்றி காண வேண்டும் என்ற பேரவா அவருக்குண்டாயிற்று. இதன் காரணமாக, திண்டுக்கல்லிலிருந்து பழனிக்குச் செல்லும் சாதுக்கள் ரிஷிகள் ஆகியோரைச் சந்தித்து, அவர்களுடன் அளவளாவி சித்த மருத்துவத்தின் சிறப்புகளையும் அதன் சீரிய குணங்களையும் பல உண்மைகளையும் அவர் அறிந்து கொண்டார்.
மூலிகைகளின் குணமாக்கும் தன்மையைக் கண்டறிந்து, அவற்றை உபயோகித்து, பலவாறான நோய்களைப் போக்கிய பழந்தமிழ் மக்களின் மாண்பினை எண்ணி எண்ணி வியந்தார். இவ்வைத்தியத்தின் மூலமாகத் தீராத நோய்களையும் தீர்க்க முடியும் என்று அவர் கண்டார். எனவே சித்த மருத்துவம் அவர்தம் சிந்தனையைக் கவர்ந்தது.
பண்டுவர்நாட்கள் செல்லச் செல்ல ஆசிரியர் ஆபிரகாம் சித்த மருத்துவத்தில் சிறந்த அறிவும் அனுபவமும் பெற்று விளங்கினார். முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் அல்லவா ? அவர் அளித்த மருந்துகள் மக்களின் பிணி நீக்கி, நலம் தந்தமையால் அங்குள்ள மக்கள் அவரைப் பண்டுவர் என்று அன்புடன் அழைக்கலாயினர். வைத்தியரைப் ‘பண்டுவர்’ என்று அழைப்பது பாண்டிய நாட்டு வழக்கம்.
நாளடைவில் இது மருவி பண்டிதர்” என்ற சிறப்புப் பெயர் அவருக்கு ஏற்பட்டது.சுருளி மலைக்குச் செல்லல்திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள ஆனைமலையம்பட்டியில் திரு பொன்னம்பலம் என்பவர் வசித்து வந்தார். இப்பெரியவர் வைத்தியம் இரசவாதம் முதலியவைகளில் சிறிது அனுபவம் பெற்றிருந்தார். அன்னாரின் குமாரர்கள் திண்டுக்கல் மாதிரிப் பள்ளியில் கல்வி பயின்று வந்தனர்.
பிள்ளைகளும் மற்றவர்களும் ஆபிரகாமைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதைக் கேட்டு அவரைச் சந்திக்க விழைந்தார் திரு பொன்னம்பலம். எனவே ஆபிரகாமின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பெரு மகிழ்வு எய்தினார். அதன் பின்னர், அடிக்கடி அவரிடம் சென்று சித்த மருத்துவம் பற்றி உரையாடிப் பயனடைந்தார். ஆபிரகாமின் பேரில் அவர் ஆழ்ந்த அன்பு கொண்டவராகி, கோடை விடுமுறை நாட்களைத் தம் இல்லத்திலேயே கழிக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டார்.
அவரது விருப்பத்திற்கிணங்கி ஆபிரகாமும் திரு பொன்னம்பலம் அவர்களின் இல்லத்தையடைந்தார். ஆபிரகாம் அங்கு தங்கிய நாட்களில் சில அபூர்வமான மருந்துகளைத் தயாரிக்கும் விதத்தையும், பஸ்பம், செந்தூரம், சுன்னம் போன்ற வற்றைச் செய்யும் முறைகளையும், புடமிடும் விதத்தையும் பொன்னம்பலத்திற்குக் காண்பித்தார். இவற்றில் இன்பமுற்ற பொன்னம்பலம், பண்டிதரின் பெருமையையுணர்ந்தவராய், அவரைச் சித்தர்கள் முனிவர்கள் ஆகியோர் தங்கியிருக்கும் சுருளி மலைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்.
தம் நண்பர் சிலரையும் ஆபிரகாமையும் அழைத்துக் கொண்டு சுருளி மலைக்குப் புறப்பட்டார். மலைக்குச் செல்லும் வழி இயற்கையன்னையின் எழிற் கூடமாக இலங்கியது. அம்மலையோ, இன்பந்தரும் கனி மரங்களும் இனிய மணங்கமழும் மூலிகைகளும் இன்னிசையுடன் சலசலக்கும் நீரோடைகளும் நிறைந்து காண்போர் கருத்தைக் கவரும் வண்ணம் விளங்கியது.
எனவேகருணானந்த மகரிஷிசுருளி மலையை யடைந்தவுடன் அங்குள்ள ஒரு சிறு மண்டபத்தில் அனைவரும் இளைப்பாறினர். அச்சமயம் அங்கே வந்த ஒரு சாது ஆபிரகாமைத் தனியே அழைத்துச் சென்றார்; துறவியாரின் பின்னே சென்ற ஆபிரகாம் ஒரு நீரோடையின் கரையில் சந்தன மர நிழலில், பொன்மேனியுடனும், முகப் பிரகாசத்துடனும் வீற்றிருந்த கருணானந்த மகரிஷியைக் கண்டார்.
அவரது பாதங்களை வணங்கி அச்சத்தாலும் ஆச்சரியத்தாலும் பேச நா வெழாமல் நின்றார். கருணானந்தர் ஆபிரகாமின் பேரில் அன்பு கொண்டவராய், ”குழந்தாய் உனக்கு என்ன வேண்டும் ? தேவையானதை யாம் தருவோம்” என்று கூற, ”தங்களது ஞான உபதேசம் பெற்றால், நான் புனிதனாவேன்” என்று பயபக்தியுடன் கூறினார். குருநாதர் மகிழ்ச்சியுடன் ”உன் விருப்பப்படியே அடிக்கடி என்னிடம் வந்து உபதேசம் பெற்றுக் கொள்வாயாக என்று மொழிந்தார்.
‘வேறு உனக்கு என்ன வேண்டும்? ‘ என்று குருநாதர் மறுபடியும் வினவவே, ஆபிரகாம் “மக்கள் பலவிதமான கொடிய நோய்களாலும், பாம்புக் கடியினாலும் துன்பப்படுவதைக் கண்டு, இவை யாவற்றிற்கும் ஓர் அருமருந்து இருந்தால் மக்கள் பிணி நீங்கி நன்மை பெறலாமே என்று வெகு நாட்களாக யான் விரும்பியதுண்டு. எனவே தங்களது அருளால் சகல நோய்களும் நீங்கக் கூடிய ஒரு மருந்து கிடைக்கப் பெற்றால் மிகுந்த புண்ணியம் பெற்றவனாவேன்” பதிலிறுத்தார்.
ஆபிரகாமின் கருணையுள்ளத்தைக் கண்ட குருநாதர் அங்ஙனமே அநேக மருந்துகளின் செய்முறைகளை ஆபிரகாமுக்குச் சொல்லிக் கொடுத்தார். பண்டிதர் மகரிஷி கூறிய செய்முறைகளைக் குறித்துக்கொண்டு, வணங்கி விடை பெற்றார். திரு பொன்னம்பலமும் மற்றோரும் ஆபிரகாம் பண்டிதரால் சித்த வைத்தியம் சிறப்புற்று விளங்கும் என்று மகிழ்வெய்தினார்.
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்1877-ம் ஆண்டு முதல் அருள்மிகு கருணானந்த மகரிஷியால் கிடைக்கப் பெற்ற, உயிர் காக்கும் அற்புத குணம் வாய்ந்த மருந்துகளைக் கொண்டு ஆபிரகாம் பண்டிதர் மருத்துவப் பணி புரியத் தொடங்கினார். மகரிஷிக்குத் தம் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் தாம் தயாரித்த மருந்துகளுக்குக் ”கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்” என்று பெயரிட்டு மக்களுக்கு அளித்து வந்தார்.
பாலர் முதல் முதியோர் வரை யாவருக்கும் இம்மருந்துகள் பெரிதும் பயன்பட்டன. மக்கள் தாம் பெற்ற நற்சுகத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறினர். ஆபிரகாம் பண்டிதர் தம் விடுமுறை நாட்களிலெல்லாம் சுருளி மலைக்குச் சென்று தம் குருநாதரைக் கண்டு மருந்துகள் பற்றிய மேலும் பல அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.தஞ்சையில் மருத்துவப் பணிதஞ்சையில் குடியேறிய பின்பு, 1890ம் ஆண்டு ஆபிரகாமும் அவரது மனைவியாரும் தங்களது ஆசிரியப் பணியை விட்டு விட்டு,
கருணானந்தர் சஞ்சீவி மருந்துகளைப் பெருமளவில் தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டனர். தஞ்சை நகருக்கு மேல்புறமுள்ள நிலத்தைப் பண்டிதர் விலைக்கு வாங்கி, அங்கு ஒரு விவசாயப் பண்னையை நிறுவினார். இப்பண்ணையின் ஒரு பகுதியில் மருந்துகள் தயார் செய்வதற்குத் தேவைப்படும் பல அரிய மூலிகை களையும் அவர் பயிரிட்டார் . 1894ம் ஆண்டு நல்லதொரு மனையை விலைக்கு வாங்கி அங்கே குடியேறினார்.
1898ம் ஆண்டில் இந்தியாவின் மலைவாசஸ்தலங்களிலும் மலையடி வாரமுள்ள நகரங்களிலும் குறிப்பாகக் கோயமுத்தூர், மைசூர் பகுதி களிலும் பிளேக் என்னும் தொத்துநோய் பரவியது. இக் கொடிய கொள்ளை நோய்க்குப் பரிகாரம் தரக் கூடிய மருந்துகள் எதுவுமே அக் காலத்தில் இல்லை என்று கூறலாம். ஆபிரகாம் பண்டிதர் தயாரித்த செந்தூர சஞ்சீவி மாத்திரையும்.
வெளிப் பிரயோகத்திற்கான கார மாத்திரையும் இவ்வியாதியினால் அல்லலுற்றோருக்கு உடனடியாக நல்ல குணம் அளித்தன. ஏராளமானோர் இம் மருந்துகளை வாங்கிப் பயனடைந்தார்கள். இதன் விளைவாகப் பண்டிதருக்கு மிகுந்த செல்வ மும் நற்பெயரும் ஏற்பட்டன. இதே போல பண்டிதர் தயாரித்த சமய சஞ்சீவி என்னும் மருந்து காலரா என்னும் விஷ்பேதிக்குச் சிறந்த மருந்தாக விளங்கியது.
காலரா நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்ததாக இம்மருந்து விளங்கியதால் ஆயிரக் கணக்கானோர் உயிர் பிழைத்தனர். சளி, இருமல், மாந்தம், சன்னி போன்ற நோய்களால் துன்புறும் குழந்தைகளுக்குப் பண்டிதர் தயாரித்த சஞ்சீவி கோரோசனை மாத்திரைகளும் சஞ்சீவித் தைலமும் மிகவும் தருவனவாக இருந்தன. மற்றும் பலவிதமான லேகியங்களையும், பற்களைப் பாது காக்கும் தந்த சஞ்சீவி சூரணத்தையும் பண்டிதர் தயாரித்தளித்தார்.
பாரதம் மட்டுமல்லாமல், ஸ்ரீலங்கா போன்ற பல அண்மை நாடுகளி லுள்ள மக்களும் இம்மருந்துகளை உபயோகித்துப் பயனடைந்தனர். அந்நாட்களில் கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள் பரவி இருந்த அளவு வேறு மருந்துகள் எவையுமே பரவவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.பண்டிதர் அவர்களுக்கு இம்மருந்துகளால் செல்வமும் புகழும் குவிந்தன.
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு” என்னும் செந்நாப் போதாரின் ;சிறப்பு மொழிக்கிணங்க, பண்டிதர் அவர்களின் உள்ளத்தைப் போலவே அவர்தம் நிலையும் மேலும் மேலும் உயர்ந்தது.
நன்றி:– பேராசிரியர் தனபாண்டியன்