இன்று நமக்குத் தேவைப்படுவதெல்லாம் மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் போன்ற ஈடுஇணையற்ற ஓர் ஆங்கில மருத்துவர்!

by Mohamed Anas

இந்தக் கொரோனா காலத்தில் நம்மிடையே இல்லையே என்று நான் அதிகம் நினைத்து வருந்துவது பேராசிரியர் மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் அவர்களைப் பற்றித்தான். அவர் அடிப்படையில் ஓர் ஆங்கில மருத்துவர். காச நோய் உட்பட நெஞ்சக நோய்களுக்கு மருத்துவம் வழங்கக்கூடியதில் வல்லவர். எயிட்ஸ் நோயாயில் இறந்துபோனவரின் சடல ஆய்வைத் தயங்காமல் செய்தவர்.

முழுவதும் ஆங்கில மருத்துவராக இருந்த போதிலும், சித்த மருத்துவத்தின் தொழில்நுட்பத்தையும் மருந்துகளின் வீர்யத்தையும் ஆங்கில மருத்துவத்தில் இல்லாத சித்தமருத்துவச் சிறப்புகளையும் அறிந்திருந்த ஒரே ஆங்கில மருத்துவர் அவர் தான். இரு துறை மருத்துவமுறைகளும் வேறு வேறு என்பதைத் தனக்குக் கற்பித்துக்கொண்டார். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரைப் பொதுசிகிச்சையாக வழங்க முன்மொழிந்தவரும், அவரே.

தன்னுடன் பணிபுரிந்த மருத்துவர்களுடன் இணைந்து, ‘எயிட்ஸ் சிகிச்சையில் சித்தமருத்துவத்தின் பங்கு’ என்ற ஆய்வுக்கட்டுரையை வழங்கியிருக்கிறார். கூட்டுமருத்துவ சிகிச்சை என்பது அவரது வழிமுறையாக இருந்தது. கூட்டுமருத்துவ சிகிச்சை அவசியம் என்பதை ஒரு மருத்துவர் கண்டுணரவே அவர் தான் கற்றறிந்த மருத்துவத்தில் சிறந்தவராக இருக்கவேண்டும் என்பது என் கணிப்பு.

எளிய மருத்துவம், எளிய மக்களுக்கான மருத்துவம் அவருடைய தீராத வேட்கையாக இருந்தது. கண்டிப்பானவர், பிடிவாதம் மிக்கவர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என்று எங்கள் சித்தமருத்துவர் கு. சிவராமன் அவருடைய குணங்கள் பற்றி நிறைய சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இது போன்ற உயிர்போராட்டக் காலங்களில், மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் போன்றோர் இருந்திருந்தால் மனித சமூகத்தின் மீது ஒட்டுமொத்த பார்வையைக் கொண்டு, கூட்டுமருத்துவ முறையை முன் மொழிந்திருக்கமுடியும். அதுமட்டுமன்றி, தான் கற்றறிந்த துறையைத் தாண்டி இன்னொரு மருத்துவத்துறையின் சிறப்பை அறிந்துகொள்ள முடிகிறதென்றால் எவ்வளவு சிறந்த அறிவியல் சிந்தனையாளராக, மனிதச் சிந்தனையாளராக அவர் இருந்திருக்கவேண்டும்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, இங்கிலாந்தில் மேற்படிப்பு படித்துவிட்டு மீண்டும் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். எயிட்ஸ் நோய் சிகிச்சைக்கு சித்தமருத்துவத்தின் மருந்துகள் பற்றிய தன் ஆய்வை டர்பனில் நிகழ்ந்த மாநாட்டில் சான்றுகளுடன் சமர்ப்பித்தவர். ஒவ்வொருக்கும் அவரவர்க்கு “உரிய சிகிச்சை” என்பதற்காக அயராமல் போராடிய உண்மையான மருத்துவர்.

ஒரு குறிப்பிட்ட நீண்ட காலத்திற்கு அற உணர்வு தவறாமல், தமிழ்ச்சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கியவர். அவர் செய்த சாதனைகள் போன்றவற்றைச் செய்ய மீண்டும் இங்கே அவர் போல ஒரு பிம்பம் உருவாகவேண்டுமோ என்று தோன்றுகிறது. குறுகிய மருத்துவப்பார்வை முக்கியமா, உயிர் முக்கியமா என்னுமிடத்து ஒவ்வொரு மனித உயிரும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று உணர்ந்த ஒரு மருத்துவர் நம்மிடையே அவசியம் தேவைப்படுகிறார்.

மருத்துவர் செ.நெ.தெய்வநாயகம் போல் ஒருவர் இன்று நம்மிடையே தேவைப்படுகிறார்.

நன்றி:- சித்த மருத்துவர் குட்டி ரேவதி

Related Posts