தோழர்கள் தயாளனும் சண்முகானந்தமும் எங்கள் சித்தமருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் அவர்களை நூலாய்ச் செய்திருந்த நேர்காணல், ‘தமிழர் மருத்துவம்’. இந்த நூலுக்கு ஆர்ஆர் சீனிவாசன் எழுதியிருக்கும் முன்னுரை, ‘உள்ளது போகாது, இல்லது வாராது’.”மருத்துவர் மைக்கேல் ஒரு சித்த மருத்துவர், சுற்றுச்சூழல் வாதி, வாங்காரி மாத்தையைப் போல் மரங்களை, மூலிகைகளைப் பரப்புபவர், கானகவாசி, தமிழின் தொன்மைகளில் ஆர்வம் மிக்கவர்.
எல்லாவற்றையும் விட முக்கியம் மருத்துவர்களே மறந்து போன மருந்து செய்யும் முறைகளை இளம் மருத்துவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர். பணத்தை விட மருத்துவத் தொடர்ச்சியை விரும்புபவர். மருத்துவம் கார்ப்போரேட் வணிகமாக மாறக்கூடாது என்பதை தன் செயல்களில் வலியுறுத்துபவர். யாரும் என்னைத் தேடி பாபனாசத்திற்கு வர வேண்டாம். அந்தந்த ஊர்களில் இருக்கும் மருத்துவர்களை பார்த்துக்கொள்ளுங்கள் என்று அடிக்கடி கூறுவார்.
சட்டத்தினுள் சிக்காத மன வெளியை சித்தர்களின் திமிறலை ஏதோ ஒரு விதத்தில் செரித்துக் கடந்து செல்கிறார். தொடரட்டும் அது.இன்று மருத்துவம் பூதாகரமான பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது. ஊழல், கொள்ளை, வணிகமயமாக்கம், போலி மருத்துவம் என்று பல்வேறு பெயர்களில் அதனை அழைத்தாலும், அடிப்படையில் சேவை என்பதிலிருந்து மாறி சந்தைப் பொருளாதாரம் என்று உருமாறி இருக்கிறது.
ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களால் நோய் குணமாகக் கூடிய மருத்துவ வசதியை பெற முடியாத சூழல் என்பது தான் இன்றைய மருத்துவத்தின் அடையாளம். மருத்துவமனையின் கட்டடக் கலையே மக்கள் நெருங்கும்படி இல்லை. பன்னாட்டு கார்ப்போரேட் கட்டடங்களின் மாதிரிகளாகவே உள்ளது. மருத்துவம் சேவைப்பாதைகளில் இருந்து விலகியதில் உள்ளூர் பிரச்னையும், பன்னாட்டுப் பிரச்னையும் இணைந்து உள்ளது.
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், தனியார்மயமாதல் ஆகியவை 80 களில் தொடங்கியது. அதற்கு முன்னர் மருத்துவம் சேவை என்றுதான் அழைக்கப்பட்டது, அப்போது மருத்துவத்தின் சேவைப் பண்பாடு சோவியத், சீனா ஆகிய நாடுகளின் அடிப்படைப் பண்பாடாக இருந்தது.ஒவ்வொரு நாட்டின் மரபு சார் மருத்துவம் பெருமை மிகு மருத்துவமாகக் கோலாச்சியிருந்தது.
சீனாவின் அக்குபஞ்சர், மாக்சி புசன் என்று ஒவ்வொரு உள் நாட்டு மருத்துவர்களும் நாட்டின் சுகாதார, மருத்துவக் கொள்கைகளில் முக்கியப் பங்கு வகித்தார்கள், கிராமப் புற மருத்துவச் சேவை என்பது மிக முக்கியமானதாக இருந்து. நன்கு படித்த மருத்துவர்கள் கிராமங்களில் சென்று வேலை செய்வது பெருமைக்குரியதாகக் கருதப் பட்டது. அதே போல எளிய மக்களும், விவசாயிகளும் நவீன மற்றும் உள் நாட்டு மருத்துவ முறைகள் பயிற்றுவிக்கப்பட்டு அவர்களே மக்களை அடிப்படை நோய்களிலிருந்து குணப்படித்தினார்கள்.
இவர்கள் ஓர் அமைப்பாக எழுச்சி பெற்று “வெறுங்காலில் நடந்து செல்லும் மருத்துவர்கள்” (bare foot doctors) என்று அழைக்கப் பட்டார்கள். இதன் மூலம் எது என்று பார்த்தோமானால் 1930 களில் சீனாவில் தோழர் மாவோவின் சிந்தனைகளினால் உருவான கிராமப் புணரமைப்பு இயக்கத்தின் தொடர்ச்சிதான்.
இந்த இயக்கத்தினால் உத்வேகம் பெற்றுதான் உலக சுகாதார அமைப்பு அல்மா அடா (Alma Ata declaration) உறுதி ஆவணங்களை 1978ல் சோவியத் சோசலிச குடியரசான கசக்ஸ்தானில் அடிப்படை மருத்துவ சேவைக்கான பன்னாட்டு மாநாட்டில் “2000 த்தில் அனைவருக்கும் மருத்துவம்” என்ற முழக்கத்தோடு உருவாக்கப் பட்டது.
எல்லோருக்கும் மருத்துவம், அடிப்படை மருத்துவ உரிமைகள் போன்ற சொல்லாடல்களே அப்போதுதான் உருவாகின. வளர்ச்சி பெறாத , ஒடுக்கப்பட்ட நாடுகளுக்காக,,அதுவும் மருத்துவத்தில் உள்ள , சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி முழுமையாகப் பேசப்பட்டது. எல்லோருக்குமான மருத்துவம், மனிதனின் அடிப்படை உடல் நலம், மன நலம் போன்றவற்றின் முழுமையைப் பேணுவதின் காரணங்கள்.
நோயற்ற சமூகம் மட்டுமல்ல,மனித வாழ்வின், வளர்ச்சியடைந்த, வளர்ச்சியடையாத நாடுகளின் ஏற்றத்தாழ்வுகளைக் கலைவதே இதன் நோக்கம். இவ்வியக்கங்களின் சிந்தனைகளே உலகை மாற்றியமைப்பதாக இருந்தது, கசக்ஸ்தானின் மையத்தில் வீசப்பட்ட கல். மெல்ல அலைகளாக மாறி உலகெங்கும் படர்ந்தன.
இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது,,பழங்குடி மக்களின் மத்தியில் வேலை செய்வது, அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது என்று பல மருத்துவர்கள் சேவைகளில் ஈடுபட்டனர்…மக்கள் சுகாதாரம் இதன் அடிப்படையாக இருந்தது. பினாயக் சென்,,அபய் பங்கர்..போன்றவர்கள் முக்கியமானவர்கள்,,தமிழகத்திலும் மருத்துவர் ஜீவானந்தம் போன்றவர்கள் மக்கள் மருத்துவம் குறித்துப் பேசினார்கள், செயலாற்றினார்கள்.
கல்பாக்கத்தில் மருத்துவச் சேவைபுரியும் மருத்துவர் புகழேந்தி “ஒரு ரூபாய் மருத்துவர்” என்றே அழைக்கப் பட்டார்.சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, 1980 களில் சீனாவின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் “சேவை மருத்துவத்தை” முற்றிலும் அழிக்க ஆரம்பித்தது. “வெறுங்காலில் நடந்து செல்லும் மருத்துவர்கள்” இயக்கம் மெதுவாக அழிந்து விட்டது. இன்று அதன் நேரதிரான சந்தைப் பொருளாதார மருத்துவம் கோலோச்ச ஆரம்பித்து விட்டது. அமெரிக்க சிந்தனை இதன் மையம் என்று சொல்ல வேண்டியதில்லை.
இன்று உலகமே சந்தைப் பொருளாதார மருத்துவத்தில் மூழ்கி விட்டது. மருத்துவர்களின் சிந்தனைகள் வியாபாரத்தை பெருக்கும் உத்திகளைக் குறித்து சிந்திக்கத் தொடங்கி விட்டது, உள் நாட்டு மரபு சார் மருத்துவம், அமெரிக்க அலோபதி மருத்துவம் என்று எதிரெதிர் சிந்தனையில் மக்கள் குழம்பித் தெரியும் அளவிற்கு கார்ப்போரேட் மருத்துவமே உயர்ந்தது என்று ஒடுக்கப்பட்ட மக்களே இன்று நம்பத் தொடங்கி விட்டார்கள்.
இந்த வேளையில் தான் தமிழ் மருத்துவக் கழகம்,,கற்ப அவிழ்தம் பத்திரிகை போன்றவை பாறைகளைப் பிளக்கும் விதைகளாக எழுந்து வருகின்றன. திருநெல்வேலியில் தமிழ் மருத்துவக் கழகம் தொடக்கக் கூட்டங்களிலேயே நானும் கலந்து கொண்டிருக்கிறேன், ஒரு மாணவனாக, அய்யா வைகை குமாரசாமி அவர்கள் உத்வேகத்தில் நானும் இழுத்துச் செல்லப் பட்டிருக்கிறேன்.
அது இன்று பல்வேறு மாற்றங்களைடைந்து. உருமாறி அதன் பாதையிலே பல சித்த மருத்துவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். மைக்கேலும் மிக உற்சாகத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறார், சாம்ப சிவன் பிள்ளையைப் போல.பசுமைப் புரட்சியின் வன் முறை, மரபணு மாற்று விதைகள், போன்றவற்றை ஆதரிப்பவர்கள் சித்த மருத்துவத்தை ஏளனமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள், அவர்கள் இந்த நாட்டின் தொல் குடி மக்கள் அல்ல என்பது அவர்கள் சிந்தனைகளிலேயே தெரிகிறது…
தர நிர்ணயம் (standardisation) இல்லாமல் சித்த மருத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்கின்றனர் பி.ஏ.கிருஷ்ணன் போன்றவர்கள் இதன் நெரெதிர் பாதையிலே மருத்துவர் மைக்கேல் வந்து நிற்கிறார். 2500 வருடமாக ஒரே இடத்திலேயே நிற்கிறோம்.எதிராகவும் நாம் எப்போதும் நிற்கிறோம் என்பதும் விளங்குகிறது. தர நிர்ணயத்தைப் பொறுத்தவரை மேற்கத்திய நாடுகள் நம் மருத்துவத்தை அங்கீகரிக்கவில்லை.
அவர்கள் சொல்லும் அளவுகோளுக்கு நான் நடக்க வேண்டும் என்பதும் அதனை நிரூபிக்க வேண்டும் என்பது தான் இவர்களின் கவலை. அவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் நாம் அழிந்து விட்டோம் என்று பொருளா? அவர்கள் ஏன் நமை அங்கீகரிக்க வேண்டும்?…அமெரிக்கக் கவலை நமக்கு வேண்டாம்…இதனை டெங்கு காய்ச்சல் . சிக்கன் குனியா நோய்களைக் கொண்டு விளக்கலாம், தமிழகத்தை இந்நோய்கள் கோடூரமாகத் தாக்கின.
அலோபதி மருத்துவ முறையினால் இதனை முழுமையாகக் கட்டுப் படுத்த முடியவில்லை.பிறகு இதற்குத் தீர்வாக நில வேம்புக் கசாயத்தை சித்த மருத்துவர்கள் முன் வைத்தார்கள். முதலில் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் மக்கள் கசாயத்தைக் குடித்து நோயிலிருந்து விடுபட்டார்கள். வேகமாக இச்செய்தி பரவியது. அரசு இதனைப் பரிசீலித்தது. பின்பு நிலவேம்புக் கசாயம் அரசு மரியாதையுடன் அரசே பரப்பியது. அரசுடைமையானது.
நிறுவனமயமான நிலவேம்பு, உலகத்தால் அங்கீகரிக்கப் பட்ட மருத்துவம் அன்று. தர நிர்ணயப் படுத்தலுக்கும் இது உட்படுத்தப் படவில்லை, ஆனால் இன்று அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. ஏனெனில் இது மண்ணின் மருத்துவம். இந்த மண்ணில் பிறந்த வெயிலாலும், புழுக்கத்தாலும் விளைந்த உடலை , அதே வெயிலிலும் , புழுக்கத்திலும் விளைந்த மருத்துவமே குணப்படுத்தும். அதுவே அறிவு, ஆற்றல்.
வெயிலறியாத நாடுகளின் தர நிர்ணயத்தைப் பற்றி நாம் கவலைப் பட வேண்டியதில்லை. இதனையே நாம் சித்த, மக்கள். மாற்று, உள் நாட்டு, மரபு மருத்துவம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். மருந்தில்லா அக்கு பஞ்சரும் இதன் வழியிலேயே பபணிக்கிறது. வெயிலை உடையாக உடுத்தி மைக்கேலும் பயணிக்கிறார். நிழல்கள் தொடர்கின்றன.”
நன்றி:- ஆர்.ஆர்.சீனிவாசன், பூவுலகின் நண்பர்கள்