சடப் பொருட்களை உற்பத்தி செய்வது போல மிகக் குறுகிய காலத்தில் மனித வள அபிவிருத்தி மேற்கொள்ள முடியாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஒரு சடப் பொருளை உற்பத்தி செய்வதாக இருந்தாலும் அதற்கென்று சில அடிப்படைகள் இருக்கின்றன. அந்தத்துறையில் கற்றவர்கள், பயிற்றுவிக்கப்பட்டவர்கள், அதற்கான உயர் ரக இயந்திரங்கள் என பல பகுதிகள் அதிலே இருக்கின்றன. பல கட்டங்களாக முயற்சிகள் மேற்கொண்ட பிறகு தான் ஒரு பொருள் எங்களுக்கு கிடைக்கிறது.
தரமான தொழிற்சாலைகள் இல்லாமல், தரமான இயக்குனர்கள் இல்லாமல் ஒரு பொருளைக் கூட எங்களால் மிகச் சிறந்த முறையில் உற்பத்தி செய்ய முடியாது.
அதேபோல இன்று மனித வள உற்பத்தியும் அது போன்ற பல்வேறு சவல்களை எதிர்நோக்குகிறது.
கல்விசார் நடவடிக்கைகளுக்காக, ஆன்மீக எழுச்சிக்காக, தொழில் வழிகாட்டல்களுக்காக என உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதனது அதிபர், ஆசிரியர்கள் இன்னும் தரப்படுத்தப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
ஆங்கில ஆக்கிரமிப்புக்கு பின்னர் எங்களிடம் இருக்கக்கூடிய நல்லவைகளை, வளங்களை அவர்கள் எடுத்துக் கொண்டு போகும் போது அவர்களுடைய சிந்தனையையும் கட்டமைப்பையும் விட்டு விட்டுப் போனார்கள்.
ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு நாட்டிலே ஒவ்வொரு கலாசாரம் இருந்தது. அந்த கலாச்சாரத்தையும் இல்லாமல் ஆக்கி விட்டார்கள்.
இப்படியாக பார்க்கும் போது ஒவ்வொரு நாட்டுக்கு என்று இருந்த தனித்துவங்களை அடியோடு அழித்து அவர்களுடைய கொள்கை கோட்பாடுகளை, கலாசாரங்களை விதைத்து விட்டுப் போனார்கள்.
அதிலே அவர்களது கல்விக் கொள்கை பிரதான இடத்தைப் பெறுகிறது. அந்தக் கொள்கைதான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கிறது. அந்த கொள்கை தான் இன்று சமூகத்திற்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முன்பு உலகிலேயே இருந்த கல்வி முறையானது மனிதனை மனிதனாக வாழ வைப்பதற்குரிய கல்வி முறையாகும். அன்று யாரும் தொழிலுக்காகப் படிக்கவில்லை.
ஒரு மனிதன் சம்பாதிப்பதற்காக தன்னை தயார் செய்வதும் இந்த உலகிலே சொகுசாக வாழ்வதற்கு தயார் செய்யப்படுவதுமே இன்றைய கல்விமுறையின் நோக்கமாக இருக்கிறது.
படித்தால் வேலைவாய்ப்பு எடுக்கலாம். வேலை வாய்ப்பு கிடைத்தால் சம்பளம் கிடைக்கும். சம்பளம் கிடைத்தால் சந்தோசமாக வாழலாம் என்பதே இன்றைய கல்வியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே இப்படிப்பட்ட கல்வி முறையில் கடமையுணர்வு, கண்ணியம் பிறருக்கு மரியாதை செய்தல் போன்ற பண்புகள் இல்லாமல் போய் விட்டது.
முன்னோர்களின் கல்வி முறையானது கடமை உணர்வையும் பிறரை கண்ணியப்படுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தையும் தான், கட்டுப்பாடுகள் நிறைந்த ஒருவனாக வாழ வேண்டும் என்பதையும் போதிக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. இதனை குருக்குல கல்விமுறை என்று அழைக்கின்றோம்.
மனிதன் புத்தகத்தின் ஊடாக மாத்திரம் வாழ்க்கையை படித்துக் கொள்ள முடியாது. மாறாக வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதன் மூலமே வாழ்வைக் கற்றுக்கொள்ள முடியும்.
இன்றைய சூழலில் மனித வள அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய பாடசாலைகள், மத்ரசாக்கள், தனியார் பாடசாலைகள், கல்வித்துறையில் எதிர்கால சந்ததியினரை நெறிப்படுத்த வேண்டும் என்று முனைபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் செய்ய வேண்டிய முதல் பணி தங்களை பின்பற்றப்படுவதற்கு தகுதியானவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஒரு வகுப்பில் 40 பேர் இருந்தால் என்பது கண்கள் தன்னை அவதானித்துக் கொண்டு இருக்கின்றன என்பதை ஆசிரியர்கள் மறந்து விடக்கூடாது.2000 மாணவர்கள் இருக்கக்கூடிய ஒரு பாடசாலைக்கு ஒருவர் அதிபர் என்றால் 4 ஆயிரம் கண்கள் அவரை அவதானித்துக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.
எனவே எங்களது வாழ்க்கைதான் எங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுக்கக் கூடிய முதலாவது பாடப்புத்தகமாக இருக்கிறது என்பதைப் புரிய வேண்டும்.
அதேபோல நான் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டியவன் என்ற கடமை உணர்வோடும் தனக்கு மேல் உள்ளவர்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற உணர்வோடும் செயல்படுவது மிகவும் முக்கியமானதாகும். அப்போது தான் தனக்கு கீழ் இருக்கக்கூடியவர்கள் அவர்களுக்குக் கட்டுப்படுவார்கள்.
ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கற்பதற்குப் போன சம்பவத்தை அல்குர்ஆன் நினைவுபடுத்துகிறது. அவர்கள் செல்லும் போது உங்களிடம் இருக்கின்ற அறிவை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்று அறிவுப் பரிமாற்றத்திற்காக போகவில்லை.
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு உங்களை நான் பின் தொடரட்டுமா என்று அவரிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் கேட்டார்.“ என்பதாகவே அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
எனவே கல்வி என்பது ஒருவரை பின்பற்றித்தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற பாடத்தை இங்கே நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
எனவே மனிதவள அபிவிருத்தியில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாத்துறையிலும் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியாக தன்னிறைவு இல்லாவிட்டாலும் போதுமென்ற மனதைக் கொண்டு தன்னை அழகுபடுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் வேண்டும். அதேபோல ஆன்மீக ரீதியாக பலம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.
கடமை உணர்வுள்ள, கண்ணியம் நிறைந்த, கட்டுப்பாடு உடைய ஆசிரியர் சமூகத்தை உஸ்தாத் சமூகத்தை நாங்கள் காணவில்லை. இதனால் எமது பாடசாலைகளும் மத்ரஸாக்களும் வீழ்ச்சிப் பாதைக்குப் போய்க் கொண்டிருக்கின்றன என்பதே யதார்த்தம்.
உண்மைகள் கசப்பாக இருந்தாலும் அவை பதிவு செய்யப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
க.பொ.த சாதாரண தரம் முடித்தவர்களையே மத்ரசா கல்விக்கு உள்வாங்க வேண்டும் என்று ஒரு பரிந்துரை அரச மட்டத்திலே முன் வைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண தரம் வரை கல்வி கற்று விட்டு மத்ரசாவுக்குள் நுழையக் கூடிய ஒரு மாணவனை வழிநடாத்தக் கூடிய அளவு தகுதியும் ஆளுமையும் படைத்தவர்கள் எங்களுடைய மத்ரசாக்களில் இருக்கிறார்களா என்ற கேள்வி இங்கு எழுகிறது?
குறைந்தபட்சம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை படித்தவர்கள், மொழி வளம் நிறைந்தவர்கள் எத்தனைபேர் அங்கிருக்கிறார்கள் என்பதை நாங்கள் சிந்திக்காவிட்டால் குர்துபாவுக்கும் ஸ்பெயினுக்கும் என்ன நடந்ததோ அதுதான் எமக்கும் நடக்கும் என்பதை நாங்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
எனவே மனிதவள உற்பத்தியை சுமந்து இருக்கக்கூடிய பள்ளிவாயல் இமாம்கள், பாடசாலை மற்றும் மத்ரஸா அதிபர்,ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும் கடமையுணர்வுள்ள ஒரு சமூகம் தான் கடமையுணர்வுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். ஆன்மீக ரீதியாக சிகரத்தை தொட்ட ஒரு சமூகம்தான் ஆன்மிகப் பலம் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். பெறுபேறுகளையும் புள்ளிகளையும் மையமாகக் கொண்ட இந்த கல்வி முறையிலிருந்து பெறுமானங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்கும் கல்வியை நோக்கி நகர வேண்டும். அந்தக் கல்வியே உண்மையான ஆளுமைகளை உருவாக்கும். எனவே மனிதவள அபிவிருத்தி எதிர்நோக்கும் சவால்களை உணர்ந்து முன்மாதிரி மனிதர்களாக எங்களை மாற்றிக் கொள்ள முன் வரவேண்டும்.
ஆகவே அறிவு,திறன், மனப்பாங்கு, பழக்கவழக்கம் ஆகிய நான்கு துறைகளிலும் சரியாக நெறிப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவதுதான் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது. எனவே சவால்களை இணங்கண்டு அதிலே வெற்றி பெற இறைவன் எங்கள் அனைவருக்கும் துணை புரிவானாக.
நன்றி:-முப்தி. யூசுப் ஹனிபா – இலங்கை