ஒருவருக்கு ஒரு பொறுப்பை கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விடயங்கள் இருக்கின்றன.
“தன்னை யார் என்று புரிந்து கொண்ட மனிதனுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக“ رحم الله امرأً عرف قدر نفسه என்று எங்களுடைய முன்னோர்கள் சொல்வார்கள். இந்த பொறுப்புக்கு நான் தகுதியானவனா? இந்தப் பொறுப்பை என்னால் செய்ய முடியுமா,முடியாதா? என்பது அந்தப் பொறுப்பை தேடிப் போகக் கூடிய ஒருவருக்கு நிச்சயம் தெரியும்.
அதற்கு அவர் தகுதி அற்றவராக இருப்பின் தானும் தன்னுடைய பாடும் என்று இருப்பதுதான் அவர் சமூகத்திற்கு செய்கின்ற மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கும்.
அதேபோல ஒருவரை ஒரு பொறுப்புக்காக நாங்கள் நியமிக்கும் போது அல்லது அவருக்காக பரிந்துரை செய்யும் போது ஆளுக்கு வேலை கொடுக்காமல் வேலைக்கு ஆள் எடுக்க வேண்டும் என்பதுதான் பொது யதார்த்தமாக இருக்கிறது.
தமக்கு தேவையான ஒரு வேலையைச் செய்வதற்கு அந்த வேலையை செய்வதற்கு பொருத்தமான தகுதியுடைய வினைத்திறன் மிக்க ஒருவரை அந்த இடத்துக்கு அமர்த்துவது ஒரு நிறுவனத்தினுடைய, அமைப்பினுடைய, நிர்வாகத்தினுடைய கடமையாக இருக்கிறது.
அப்படி இல்லாமல் “இந்த வேலையை நாங்கள் இவருக்கு கொடுப்போம்“ என்று முடிவு செய்து ஒருவரை நியமித்துவிடும் போது அந்தப் பொறுப்பை எடுத்தவரும் சிரமப்படுவதோடு அந்த நிறுவனமும் அழிந்து போய்விடும். அந்த நிறுவனத்தினுடைய பயனாளிகளும் நட்டம் அடைந்துவிடுவர்.
ஒருவரை ஒரு வேலைக்கு அல்லது பொறுப்புக்கு அமர்த்தும் போது அவதானிக்க வேண்டிய இரண்டு முக்கியமான பண்புகளை அல்குர்ஆன் எங்களுக்கு சொல்லித் தருகிறது.
ஒன்று அமானிதம் நிறைந்தவராக அவர் இருக்க வேண்டும். எடுத்த பொறுப்பை சரிவர செய்து முடிப்பேன் என்ற திடகாத்திரம் இருப்பதோடு இதற்கு முன்னால் எடுத்த பொறுப்புகளை மிகச் சரியாக நிறைவேற்றி இருக்கிறார் என்பதற்கு சான்றாகவும் இருப்பார்.
இரண்டாவது அந்த வேலையை செய்து முடிப்பதற்கான வினைத் திறன் மிக்கவராக, தகுதியுடையவராக அவர் இருக்க வேண்டும்.
இந்த விடயங்களை கவனத்தில் கொண்டுதான் பள்ளிவாசல், மத்ரஸா போன்ற சமூக அமைப்புக்களுக்கு புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட வேண்டும்.
அநேகமான இடங்களில் நாங்கள் ஆளுக்குத்தான் வேலையைக் கொடுத்து இருக்கிறோமே தவிர வேலைக்குரிய ஆட்களை நியமிக்க தவறிவிட்டோம். இதனால் எமது சமூகம் இழந்தவை அதிகம் என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது.
எனவே எமது சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கக்கூடிய நிறுவனங்களை வினைத்திறன் மிக்கதாக மாற்ற வேண்டிய பொறுப்பும் கடமைப்பாடும் எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
ஒரு ஊரை எடுத்துக்கொண்டால் பள்ளிவாயல் நிர்வாகம் என்பது அந்த ஊருக்கு தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய முக்கிய நிறுவனமாக இருக்கிறது. எனவே அதற்குரிய நிர்வாகிகளை தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் நிர்வாக சபைக்கு இவர்கள்தான் என்று சிந்திப்பதை தவிர்த்து ஒரு நிர்வாக சபைக்கு தேவையான தகுதியும் ஆற்றலும் உள்ளவர்களை அடையாளம் காணுங்கள். நீங்கள் உங்களது தனிப்பட்ட வியாபாரத்திற்காக அல்லது காரியாலயத்திற்காக ஒருவரை தெரிவு செய்யும் போது நிச்சயமாக அதற்கு தகுதியானவரைத்தான் தேடுவீர்கள். இதே மனநிலையோடுதான் நாங்கள் பள்ளிவாசல் நிர்வாக சபை தெரிவு செய்யும் போதும் செயற்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் சில பரிந்துரைகளை இங்கே முன்வைக்க விரும்புகிறேன். இவற்றை உங்களது ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
1. இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவருக்கு பள்ளிவாயல் நிர்வாகியாக இருக்க முடியாது.
2. தெரிவு செய்யப்படுபவர் 60 வயதை விட குறைந்தவராக இருத்தல் வேண்டும் (எங்களுடைய பாராளுமன்றத்தையும் முஸ்லிம் அமைப்புகளையும் தவிர வேறு எந்த நிறுவனத்திலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பணி செய்ய முடியாது என்பதுதான் உண்மை. 60 வயதைத் தாண்டியவர்கள் மக்களை நிர்வாகம் செய்வதை தவிர்த்து தங்களை நிர்வாகம் செய்து, தன்னுடைய எஞ்சிய வாழ்வை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி தன்னுடைய மண்ணறையை அலங்கரித்து
கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுதான் பொருத்தமாக இருக்கும்)
3. கல்வித் தகைமை கொண்டவராகவும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
4. நல்ல குடும்பப் பின்னணி கொண்டவராக இருத்தல் வேண்டும்
5. நிர்வாக சபையில் வாலிபர்களுக்கான இடம் நிச்சயப்படுத்தப்பட வேண்டும்.( 30 வயதை விட குறைந்தவர்களுக்கு குறைந்தது 30 சதவீதமான இடம் வழங்கப்பட வேண்டும்)
6. ஊரைப் பிரதிநிதித்துவப்படுத்த கூடிய சமூக அங்கீகாரமும் தூர நோக்குமுடைய உலமாக்கள் இருவர் அல்லது மூவரை உள்வாங்க வேண்டும்.
7. துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ளவர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
8. இப்படிப்பட்ட ஒரு நிர்வாக சபையை தெரிவு செய்வோமானால் அவர் களுக்கு இருக்கக்கூடிய ஆறு வருடங்களில் ஏதாவது ஒன்றை சாதித்து விட்டு செல்வார்கள் என்பது நிச்சயம்.அதைவிடுத்து தொடர்ந்தும் இருக்கின்ற ஒரு சிலர்தான் இதனைச் செய்வார்கள் என்ற நிலையிருந்தால் எங்களது நிலைமை மேலும் மோசமடையும் என்பதில் இரண்டு கருத்து இல்லை. கடந்த கால வரலாறு அதற்கு சாட்சியாக இருக்கிறது.
மேலும் ஒரு நிர்வாக சபையை ஊரிலே தெரிவு செய்யும்போது “எங்களுக்கு எதற்கு இந்த வீண் வம்பு“ என்று ஒதுங்கிப் போகிற பொது மக்களும் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களே என்பதை மறந்துவிடாதீர்கள்.
ஊரிலே ஒரு தவறு நடைபெறுகின்றது அல்லது தகுதியற்றவர்கள் பள்ளிவாயலை நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்கள் அல்லது ஒரு இயக்கத்தினுடைய கேந்திர நிலையமாக பள்ளிவாயலை மாற்றியிருக்கிறார்கள் என்றால் அதற்காக ஊர் மக்கள் நிச்சயம் குரல் கொடுக்க வேண்டும்.
எனவே நிர்வாகம் செய்ய கூடியவர்கள் பொதுமக்களினுடைய அப்பாவித்தனத்தை முதலீடாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. பொதுமக்களும் தங்களுடைய பொடுபோக்கு அல்லது பொறுப்பற்றதனம், இது எங்களுக்கு தேவை இல்லை என்று ஒதுங்கி போவதனால் அடுத்த தலைமுறை நாசமாகிக் கொண்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே பள்ளிவாசல் நிர்வாக சபைக்கு எப்படியானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற ஒரு அளவுகோள் நிச்சயம் இருக்க வேண்டும். முஸ்லிம் கலாசார திணைக்களம், வக்பு சபை என்பன இதுதொடர்பில் எடுத்துவரும் பணிகளை நாம் பாராட்ட வேண்டும்.
இந்த நாட்டிலே இருக்கக்கூடிய பள்ளிவாயல்களில் வினைத்திறன் மிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றிருந்தால் அதை இயக்கக்கூடிய நிர்வாகசபையினர் தகுதி படைத்தவர்களாக, தூர நோக்குடையவர்களாக,விரிந்த மனப்பாங்குடையவர்களாக, இருக்க வேண்டும் என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
நன்றி:-முப்தி. யூசுப் ஹனிபா – இலங்கை
Source:-https://tamil.newsnow.lk/2021/06/பள்ளிவாயில்களும்-நிர்வா/