மாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்

by Mohamed Anas

“மனிதர்களில் அதிகமானவர்கள் மிக உறுதியான ஈமானியத் தரத்தையோ, இறை பாதையில் போராடும் தரத்தையோ அடைவதில்லை. அவர்களுக்கு சந்தேகமூட்டப்பட்டால் சந்தேக நிலைக்கு சென்று விடுவார்கள். ஜிஹாத் செய்யுமாறு கட்டளை இடப்பட்டால் ஜிஹாத் செய்ய மாட்டார்கள். இவர்கள் நிராகரிப்பாளர்களோ, முனாபிக்குகளோ அல்ல. சந்தேகங்களை முழுமையாக அகற்றக் கூடிய வகையிலான உள நிலை சார்ந்த ஆழ்ந்த அறிவும், உறுதியும் இவர்களிடம் இருப்பதில்லை. அவ்வாறே தனது குடும்பம், செல்வம் என்பவற்றையெல்லாம் விட மேலாக இறை பாதையில் போராடுவதைக் கொள்ளத்தக்கவாறான அல்லாஹ் மீதும் அவன் தூதுர் மீதுமான ஆழ்ந்த பலமான அன்பும் இவர்களிடம் இல்லை.

இவர்கள் பெரும் சோதனைகளிலிருந்து காக்கப்பெற்று அவ்வாறே மரணிப்பார்களானால் சுவர்க்கத்தில் நுழைவார்கள். சந்தேகங்களை அவர்களிடையே தோற்றுவிக்கும் சிலரால் அவர்கள் சோதிக்கப்பட்டு அச்சந்தேகங்களை நீக்கும் வழியையும் அவர்கள் பெறாவிட்டால் அவர்கள் சந்தேகத்தில் வீழ்வார்கள். ஒரு வகை நிபாக் – நயவஞ்சக நிலைக்கும் அவர்கள் நகரும் நிலை ஏற்படும். அவ்வாறே ஜிஹாத் அவர்கள் மீது விதியாகி போராட்ட நிலையில் அவர்கள் இருப்பின் தண்டனைக்குரியோர் நிலையை அவர்கள் எய்துவர்.

பல்வேறு சோதனைகளால் பாதிக்கப்பட்டுள்ள எமது காலப்பிரவின் அதிகமான முஸ்லிம்களது நிலை இவ்வாறுதான் உள்ளது. அவர்களில் அதிகமானோர் நயவஞ்சகர்களாக நடந்து கொள்கின்றனர். எதிரி வெற்றி பெற்றால் வெளிப்படையாகவே அவர்கள் மதம் மாறுகின்றனர். இத்தகைய நிலையை நாமும், இன்னும் பலரும் கண்டுள்ளனர். இது எமக்கான ஒரு படிப்பினையாகும். பிரச்சினை ஏதுமில்லா சுகவாழ்வு காணப்பட்டால் அல்லது எதிரிகள் மீதான வெற்றி நிலையிலிருந்தால் முஸ்லிம்கள் வெளிப்படையாகவும் அக நிலையிலும் முஸ்லிம்களாகவும், முஃமன்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் அவர்களது அந்த ஈமான் சோதனைகளின் போது நிலைக்க முடியா ஈமானாகும்.”
(பதாவா இப்னு தைமிய்யா 7 / 271, 271)

அறிஞர் அஹ்மத் முஹம்மத் ராஷித் இக் கருத்து பற்றி சொல்லும் விளக்கத்தையும் கீழே தருகிறேன். எந்தப் புத்தகத்தில் இதனைச் சொல்கிறார் என்பது நினைவிலில்லையாயினும் அவர் சொல்லியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

“முஃமினின் மனநிலை குறித்த எவ்வளவு உயர்ந்த பகுப்பாய்வு இது! யார் முஃமினின் இந்த மனநிலை பற்றிய அறிவைப் பெறவில்லையோ அவர் சீர்திருத்த களத்தில் வேலை செய்யத் தகுதியற்றவராகிறார். அவர் அங்கு விடும் தவறுகள் அதிகமாக இருக்கும். சிலபோது அவர் விடும் தவறுகள் மிகப் பாரியதாகவும் அமைந்து விடலாம்.”
இமாம் இப்னு தைமிய்யா முன்வைக்கும் இக் கருத்து பொதுவானதாயினும் முஸ்லிம் அல்லாதோரது சனத்தொகைப் பெரும்பான்மை, அவர்களது அரச ஆதிக்கத்தின் கீழ் சனத் தொகையில் குறைவாகவும், பல வகையில் பின் தங்கியும் வாழும் முஸ்லிம் சமூகங்களுக்கு இது மிகவும் பொருந்தக் கூடியதாகும்.

எமது பல்வேறு மட்டங்கள் சார் தலைமைகளதும் சாதாரண மக்களதும் நடத்தைகளையும், பேச்சுக்களையும், வெளியிடும் கருத்துக்களையும் அவதானிக்கும் போது இது நன்கு தெளிவாகிறது.
எம்மை அழுத்திக் கொண்டிருக்கும் பதவி, அந்தஸ்து, செல்வம், மனைவி, பிள்ளைகள் எல்லாம் எமது பலவீனங்களுக்கான அடிப்படைக் காரணங்கள். அவற்றை எல்லாம் காத்துக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் சுற்றியிருக்கும் பலமிக்க சக்திகளை நாம் நாடுகிறோம். அவற்றை நாம் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை.

இதுவே மனிதனின் சாதாரண நிலை. இந்தப் பின்னணியிலிருந்து எழுந்ததுமே இமாம் இப்னு தைமிய்யாவின் ஏற்கனவே நாம் தந்த சிந்தனை. ஒரு சமூக மாற்றத்தையோ அல்லது போராட்டத்தையோ கொண்டு செல்ல விரும்புபவர்கள் முஸ்லிம் சமூகத்தில் இந்த மனத் தத்துவத்தைப் புரிந்திருப்பது அவசியம்.
மூஸா (அலை) அவர்கள் தமது சமூகத்தை பிர்அவ்னின் அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை செய்தார்கள். ஆனால் அந்த சமூகம் தனது மானசீக அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை பெறாமையால் உயர்ந்ததொரு வாழ்வுக்கு இன்னொரு புதிய தலைமுறையை உருவாக்க நாற்பது வருடங்கள் காத்திருக்குமாறு அல்லாஹ் ஏற்பாடு செய்தான்.

எமது சமூகத்தின் ஆன்மீகப் பலவீனம் மிகவும் ஆழமானது. தலைமைகளின் ஆன்மீகப் பலவீனமோ மிகப் பாரியது. அதன் விளைவாகத்தான் பல்வேறு ஒழுக்க சீர்கேடுகளையும், முறையற்ற தொடர்பாடல்களையும் வரை முறையற்ற பொருளாதாரத் தேடல்களையும், நுகர்வுச் செயற்பாடுகளையும் காண்கிறோம்.

நம்பிக்கைப் பகுதியை முறையாகப் படிக்கும் ஒழுங்கொன்று எம்மிடமில்லை. அடிப்படை வணக்க வழிபாடுகளைக் கூட உயிரோட்டமாக நிறைவேற்றுவதற்கான பயிற்றுவித்தல் ஒழுங்குகள் எம்மிடமில்லை. இந்தப் பின்னணியிலேயே ஆன்மீக ரீதியாக நாம் மிக மோசமாகப் பின்தங்கியுள்ளோம்.
இதனோடு சேர்த்து இஸ்லாம் பற்றிய அறிவுச் சிக்கலும் கலக்கும் போது நிலைமை இன்னும் மோசமாகிறது.

-அறிவுச் சிக்கல் + மன நிலைச் சிக்கல் –
அப்துல் ஹமீத் அபூ சுலைமான் விளக்குவது போன்று இதுவே எமது சமகால அடிப்படைப் பிரச்சினையாகும். எம்மைப் போன்ற சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இது ஒரு அபாயகரமான பிரச்சினையுமாகும்.

இப்போது மேலே தரப்பட்ட இப்னு தைமியாவின் சிந்தனையை மீண்டுமொரு முறை அவதானியுங்கள்.

மாற்றம் பற்றியும், அடுத்த சமூகளுடனான உறவாடல் பற்றியும், அரசியல், போராட்டம் பற்றியும் சிந்திக்கும் போதெல்லாம் இப்னு தைமியாவின் அக் கருத்தை மிகவும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

வெறுமனே ஆயுதப் போராட்டத்திற்குத் தான் அக் கருத்து பொருந்தும் எனக் கொண்டு விடக் கூடாது. சிவில், சாத்வீகப் பேராட்டத்திற்கும் இது நன்கு பொருந்தும். அங்கேயும் பல சிக்கல்களையும், அபாயங்களையும் நாம் சந்திக்க வேண்டி ஏற்படுகிறது என்பதை அவதானத்திற் கொள்வோம்.

நன்றி:- உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் நளீமி  – இலங்கை

Source:- https://www.usthazmansoor.com/

Related Posts