சுதந்திரப்போராட்டா வீரர் பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றோடு ஒட்டி வரவேண்டியதொரு தனித்துவமிகு சரித்திர வீரனின் வரலாறு.. ஏனோ நமது செவிகளுக்கும் பார்வைக்கும் வராமலே இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.
“ரயீஸுல் அஹ்ரார் மௌலானா ஹபீபுர் ரஹ்மான் ஸஹ்ணீ லூதியான்வி” ஒரு சுதந்திரப்போராட்ட வீரர் என்பதைவிட தேச விடுதலைக்காக அவர் சொத்தாகவும் சுகமாகவும் இழந்தது மேலதிகம் என்றே கூற வேண்டும். முதலில் மௌலானா அவர்களது வாழ்க்கை குறிப்பினை பார்த்த பிறகு அதன்பின் அவர்களது சுதந்திர போராட்ட பங்களிப்புகளையும், இந்திய திருநாட்டின் மீது அவர்கள் வைத்திருந்த தேசப்பற்று குறித்தும் காணலாம்.
கிபி.1892 ஜூலை 3 அன்று, தற்பொதைய இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் மாகாணத்தின் லூதியானாவில் பிறந்தார் ஹஸ்ரத். அவருடைய தாய்-தந்தை ஆகியோரது பெயர்கள் எதுவும் பிரிட்டிஷ் அரசால் அப்போது ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் அவரது தந்தைவழி பாட்டனார் மௌலானா ஷா அப்துல் காதிர் லூதியான்வி என்பவரும் ஒரு சுதந்திரப்போராட்ட வீரராக அறியப்படுகிறார். கிபி.1857ல் தொடங்கிய பிரிட்டிஷ் ராஜுக்கு எதிரான போரில் பஞ்சாபில் இருந்து ஆயுதம் தரித்து, முகலாய இறுதி அரசர் பகதூர் ஷா சஃபருக்கு ஆதரவாக, சீக்கிய,முஸ்லிம், இந்து வீரர்கள் ஆயிரம் பேரை திரட்டிக்கொண்டு பானிபட் முதல் டெல்லியின் சாந்தினி சௌக் வரை போருக்கு சென்ற… இறுதி மூச்சு வரை போர்க்களத்திலேயே உயிர்நீத்த முதல் பஞ்சாப் வீரன் என அறியப்படும் மௌலானா அப்துல் காதிர் லூதியான்வி.
லூதியான்விக்கள் ஒரு “அரயன்” ( Arain தமிழில் கூறப்படுவது போல அரையர்கள் – குறுநில மன்னர்கள் தான் அவர்களும்) பழங்குடித்தலைவர் என்பதும்… பஞ்சாபின் பழமைவாய்ந்த விவசாயக்குடிகளில் ஒன்று அரயன் பழங்குடி என எழுதுகிறார் அதே பழங்குடியில் வந்த பஞ்சாபை சேர்ந்த கல்பனா ஸாஹ்ணீ, இவர் பிரபல இந்தி திரைப்பட தயாரிப்பாளர் பல்ராஜ் ஸாஹ்ணீயின் மகளாவார். இவர்கள் பாகிஸ்தானின் ராவல்பிண்டியை பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும் பின்னர் லாகூரில் குடியேறிவிட்ட பண்டைய கால போர்வீரர்களான “கத்ரீ” இனத்தை சேர்ந்தவர் என்றும்…கத்ரீக்கள் எப்போதும் ஆளும் அரசுகளுக்கு போர்ப்படை வீரர்களாக இருக்க தங்களது உடல்,பொருள்,ஆவியை அர்பணித்தவர்கள் என்றும்… கத்ரீ எனும் பேரினத்தின் கீழ் இருக்கும் ராஜ்புத், பட், சௌத்ரி, கபூர், கக்கார், ஜாட் போன்ற முப்பதிற்கும் அதிகமான வெவ்வேறு கிளைக்குடிகளில் ஸாஹ்ணீ மற்றும் அரயன் பழங்குடிகளும் அடங்கும், கிமு.326ல் கிரேக்க மன்னன் அலெக்ஸாண்டர் , ஜீலம் நதிக்கரை வரை படையெடுத்து வந்த போது அங்கு ஆட்சி செய்துகொண்டிருந்த மன்னன் (போரஸ் ) எனும் புருஷோத்தமனுக்கு ஆதரவாக படையில் நின்றவர்கள் கத்ரீ பழங்குடியினர் என்றும் குறிப்பிடுகிறார். பஞ்சாபில் இருக்கும் சீக்கிய மதம் சார்ந்தவர்களும் மற்ற முஸ்லிம் ஜாட் பஞ்சாபிகளும் இந்த கோத்திரத்தின் கீழ் உள்ளவர்களே.. கிமு காலந்தொட்டு போராட்டக்குணம் படைத்தவர்களாகவே நாங்கள் இருந்துள்ளோம், அதே ரத்தம் மௌலானா ஹபீபுர் ரஹ்மான் அவர்களுக்கும் ஓடுவதால் அவர் முதன்முதலில் பஞ்சாபில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளில் ஈடுபட்டார்கள், இந்த குறிப்புகளை அடிப்படையாக வைத்து பாகிஸ்தான் அரசு மௌலானா அவர்களின் உறவினர்களை தேடிப்பிடித்து தகவல் சேகரித்து, ஒரு டாக்குமெண்ட்ரி படமாக எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகிறார் கல்பனா ஸாஹ்ணீ.
ஆங்கிலேயரை எதிர்த்து பகதூர்ஷா ஸஃபருக்கு ஆதரவாக படைதிரட்டி வந்த மௌலானா ஹபீபுர் ரஹ்மான் அவர்களுடைய வம்சத்தில் பிறந்த அப்துல்லாஹ் பாட்டி (Dullah Bhatti) அதே முகலாய அரசர் அக்பருக்கு எதிராகவும் வடக்கு பஞ்சாபில் இருந்து முகலாய அரசாங்கம் விளக்கிக்கொள்ளப்படவும் போராடிய மற்றொரு வீரரும் உண்டு. இவர்கள் அரசர்களின் இராணுவத்தில் பணி செய்வதையே தொழிலாக கொண்டவர்கள் என்பதற்கு இவை ஒரு சிறிய சான்று.
இப்போது ஹபீபுர் ரஹ்மான் அவர்களது கதைக்கு வருவோம்.
மௌலானா அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தினை கற்ற ஒரு மார்க்க போதகராக மட்டும் இருந்துகொண்டிருந்த நிலையில் கிபி.1921ல் “Islam in Danger” – “இஸ்லாம் ஆபத்தில் உள்ளது” எனும் முழக்கத்தை முதன்முதலாக பள்ளிவாசல் குத்பாவில் எடுத்துரைக்கிறார். அதில் அவர் ஆங்கிலேயர்கள் செய்யும் வியாபார மோசடி, கல்வி கயமைகள், மதங்களுக்குள் செய்யும் உட்பூசல்கள் என அனைத்தையும் மக்கள் மத்தியில் பரப்புகிறார். இது ஆங்கிலேயரை எரிச்சலூட்டுகிறது.அவரது எழுச்சிமிகு பேச்சுக்கள் ஆங்காங்கே ஆங்கிலேயருக்கு எதிராக போராட மக்களை தூண்டுகிறது. அடிக்கடி சிறையிலடைக்கப்படுகிறார், மௌலானா அவர்களது சிறைவாசம் மட்டும் சுமார் 14 ஆண்டுகள் ஆகும். இடையில் மௌலானா அப்துல் அஸீஸ் அவர்களது மகளான ஷஃபாத்துனிஸா அவர்களை மணக்கிறார். பேகம் ஷஃபாத்துனிஸாவும் ஒரு சுதந்திர போராட்ட வீராங்கனை தான், பலமுறை ஆங்கிலேய அதிகாரிகளால் குடும்ப உறவினர் முன் வைத்து மானபங்கப்படுத்தப்பட்டாலும் அவருடைய சீற்றம் குறையவில்லை. அவர்களும் அடிக்கடி சிறைவாசங்களை அனுபவிததுள்ளார்கள்.
ஒருமுறை லாகூர் ரயில் நிலையத்தில் “இந்துக்கள் குடம்” – “முஸ்லிம்கள் குடம்” என தனித்தனியாக எழுதப்பட்டிருந்த தண்ணீர் குடங்களை பார்த்து ஆத்திரமடைந்த மௌலானா அவர்கள், அங்கிருந்து இந்து,முஸ்லிம், சீக்கிய தோழர்களை கொண்டு அவற்றை உடைத்தெரிந்தார். இதற்காகவும் சிறை சென்றார்.
காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் கிலாபத் இயக்கத்தோடும் தன்னை இணைத்துக்கொண்டார். ஜாமியத்துல் உலமாஹில் ஹிந்த் கட்சிக்கு முதன்மை பணியாற்றிய மௌலானா அவர்கள் 1920ல் மஜ்லிஸ் ஏ அஹ்ரார் உல் இஸ்லாம் எனும் இஸ்லாமிய மக்கள் அரசியல் கட்சியை துவங்கினார். இது பஞ்சாப் மக்களின் தேசிய இயக்கமாக அறியப்பட்டது. இக்கட்சி துவங்கப்பட மௌலானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களது அறிவுரையும் இருந்தது.
கிபி.1929ல் டெல்லி சென்டிரல் அசம்ப்ளி மீது வெடிகுண்டுகள் வீசிவிட்டு தப்பியபோது அவருக்கு ஆதரவாகவோ புகலிடம் அளிக்கவோ முன்வராத நிலையில் மௌலானா முன்வந்து பகத்சிங், அவருடைய தாய் வித்யாவதி மற்றும் அவருடைய சகோதரர்கள் ஆகியோருக்கு ஒரு மாத காலம் வீட்டில் வைத்து ஆதரவு கொடுத்து அவர்கள் ஆங்கிலேயர் கையில் சிக்காமல், பாகிஸ்தான் லாகூருக்கு தப்பித்துப்போக உதவினார். இதற்காக மௌலானாவும் அவரது மனைவியும் பல இன்னல்களுக்கு ஆளாகினர். பகத்சிங்கின் குடும்பத்தில் பலர் இந்துக்களாகவும் பலர் சீக்கியராகவும் மேலும் சிலர் முஸ்லிம்களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1931ல் தேசியக்கொடி ஏற்றும் போராட்டத்தை முன்னெடுத்த நேரூவுக்கு ஆதரவாகவும், ராவி நதிக்கரையில் நேரு அவர்கள் தேசியக்கொடி ஏற்றிய அதே நேரத்தில் டெல்லி ஷாஹி ஜூம்மா மஸ்ஜித் கொடிக்கம்பத்தில் இவரும் தேசியக்கொடி ஏற்றினார். சுமார் 300 ஆங்கில அதிகாரிகள் சுற்றிநிற்க அவர் செய்த செயல் மிகப்பெரிய விஷயமாக பாராட்டப்பட்டது. பிறகு 1947ல் தேசப்பிரிவினையின் (சுதந்திரம் அளிக்கப்போகும் முதல் நாள்) போது அவருடைய பூர்வீக இடமான பாகிஸ்தான் லூதியானாவில் இருந்து தமக்கு பாகிஸ்தான் வேண்டாம், இந்தியா தான் வேண்டும் என கூறி மனைவியுடன் வந்து டெல்லி அகதி முகாம்களில் அடைக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கே திரும்பி போ என நண்பர்கள் பலர் கூறியும் கேளாமல் இந்தியா பஞ்சாபிலேயே இறுதி வரை மிகப்பெரும் சிரமங்களுக்கிடையே வாழ்ந்து இறந்து போனார்.
மௌலானா அவர்களுக்கு ஸரீதுர் ரஹ்மான் லூதியான்வி என்ற ஒரே மகன் இருந்தார், அவரையும் சுதந்திர போராட்டக்களங்களில் பங்கெடுக்கச்செய்தார் மௌலானா. பகத்சிங் அவர்களுக்கு செய்த உதவிக்காக இப்போது வரை அவரது குடும்பத்தினர் மௌலானா அவர்களது குடும்பத்தினரோடு நட்பு பாராட்டி மகிழ்கின்றனர். பகத்சிங் அவர்களது தம்பி மகன் அபை சர்தார் சாந்து மௌலானா அவர்களது பேரன் அதீக்குர் ரஹ்மான் லூதியான்வி அவர்களை சந்தித்து உரையாடுவதும் குடும்ப விழாக்களில் பங்கெடுத்துக்கொள்வதும் தொடர்கிறது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த உதவியை நமது குடும்பம் மறந்திடக்கூடாது என நாங்கள் சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிறோம் என்கிறார் அபை சர்தார். பஞ்சாபில் எப்போதும் சிக்கிய-முஸ்லிம் மக்களிடையே திருமண உறவு நீடிப்பது இயல்பானது, எங்களில் நாங்கள் பழங்குடிக்கிளைகளாகத்தான் அன்பு பாசத்தை பரிமாறுகிறோம், மதம் சார்ந்து வேற்றுமை காட்டுவதில்லை என்கிறார்.
பகத்சிங்கின் வரலாற்றுக்குறிப்புகளில் மௌலானா அவர்களது பங்களிப்போ, மௌலானா அவர்களது குறிப்புகளில் பகத்சிங் அவர்களை இணைத்தோ நீங்கள் இணையங்களில்தகவலை பெற முடியாது…காரணம் ஆங்கிலேயர்கள் செய்த ஆவணச்சதி அப்படி. மௌலானா அவர்களது பரம்பரையினர் செய்த எந்தவொரு தியாகத்தையும் குறிப்புகளில் ஏற்றாமல், அக்பர் காலத்தில் சண்டைக்கு வந்து செத்துப்போன கோழைகள் என்று மட்டும் தான் எழுதி வைத்துள்ளனர். குறிப்பாக சீக்கிய பழங்குடிகளின் கிளைப்பெயர்கள் எதனையும் அவர்கள் கணக்கெடுப்பில் சேர்க்கவே இல்லை.
ராய் அகமது கான் கரல் எனும் டெல்லியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கண்டெடுத்த சரித்திரக்குறிப்புகள் இவை. இந்திய பஞ்சாப் பகுதியின் லூதியானாவில் நஸீம் உள்ளாடையகம் நடத்தி வரும் பல்தேவ் ராஜ் வர்மா என்பவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இவை தேடியெடுக்கப்பட்டவை, இவருடைய தந்தை ஹன்ஸ்ராஜ் வர்மா, 1919ல் ஜப்பான் கப்பல் “கொமகட்டா மாரு”வில் ஏறி கனடாவுக்கு தப்பிச்சென்றவர்கள் ஹன்ஸ்ராஜும் ஒருவர், அப்போது அங்கு அனுமதியளிக்கப்படாமல் போகவே மீண்டும் இந்தியாவுக்கு வந்து கதார் பார்ட்டியை தொடங்கி சுதந்திர போராட்டத்தில் களமிறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌலானா அவர்களுக்கு “ரயீஸுல் அஹ்ரார்” என்ற பட்டமும் உண்டு. கிபி.1857 முதல் கிபி.1947 வரை இந்திய தேச விடுதலைக்காக போராடிய ஒரே குடும்பம் என்கிற பெருமையும் இவர்களுக்கு உண்டு. 1955ல் நேரு அவர்களது தலைமையில் அமைந்த இந்திய அரசினை காண வந்த சவூதி மன்னர் வாரணாஸி வந்த போதும், சவூதி மன்னர் கடகவாசலாவில் இருக்கும் இந்திய இராணுவத்தை பார்வையிட்டு தங்கவாள் பரிசளித்த போதும் மௌலானா அவர்களுடன் இருந்தார்கள்.
நன்றி:- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)
Sources for the above article :
Freedom fighter’s kin rue govt apathy – Indian Express
http://archive.indianexpress.com/news/freedom-fighter-s-kin-rue-govt-apathy/484457/
An Arain freedom fighter
http://apnaorg.com/articles/news-33/
An Arain freedom fighter
https://www.thenews.com.pk/archive/print/85466-an-arain-freedom-fighter
Heritage Times – Maulana Habib-ur-Rehman Ludhianvi :- A Great Freedom Fighter who fought against the British Empire.
http://heritagetimes.in/habib-ur-rehman-ludhianvi/Attachments area