இந்தியாவின் வன மனிதன் என்று அழைக்கப்படும் “ஜாதவ் பாயங்”…..

by Mohamed Anas

மனிதன் வாழ்வதற்கு இந்த பிரபஞ்சத்தில் இறைவன் படைத்த ஒரே இடம் இந்த பூமி. மனிதன் மட்டுமா! பல உயிரினங்களையும் இறைவன் படைத்து இந்த பூமியில் வாழ வைத்திருக்கிறான். இன்னும் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மனிதன் பிறப்பதற்கு முன்பே பல உயிரினங்கள் இந்த பூமியில் தோன்றி வாழ்ந்து வந்தன. ஆனால் இறைவன் இந்த பூமியில் உள்ள எந்த உயிரினத்துக்கும் இல்லாத சிறப்பை மனிதனுக்கு கொடுத்து மனிதனை உயர்த்தி வைத்தான். ஆனால் இந்த மானிடனோ மிகவும் சுயநலமாய் சிந்தித்து தனக்கு மட்டும்தான் இந்த பூமி என்று சொந்தம் கொண்டாடி கொண்டிருக்கின்றான்.

சுயநலமாய் தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள பல உயிரினங்களையும் அது வாழும் காடுகளையும் அழித்து கொண்டிருக்கும் இக்காலத்தில் ஒரு தனி மனிதன் பிற உயிரினங்களும் இந்த புவியில் வாழ சமஉரிமையை கொண்டிருக்கின்றது என்று என்னி ஒரு வனத்தையே உருவாக்கிய ஒரு இந்திய வனமகனின்  கதை இதோ…..!

அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில் தனிமனிதனாக எந்த விளம்பரமும் இல்லாமல் ஒரு காட்டையே உருவாக்கியவர் “ஜாதவ் பயேங்” இதற்காக இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாதவ் பயேங் அசாம் மாநிலத்தை சேர்ந்த மிஷின் பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர் அசாமில் ஜோஹட் மாவட்டத்தில் அருணாசபோரி என்ற இடத்தில் 1963 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கூட பிறந்தவர்கள் 13 பேர் எனவே இவருக்கு படிப்பதற்கு போதுமான வசதி இல்லை இருந்தாலும் மற்றவர்களின் உதவியால் பத்தாம் வகுப்பு வரை தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

தனது பள்ளி படிப்பை முடித்த பின்னர் ஜாதவ் பாயங் அவர் ஊருக்கு அருகிலுள்ள மஜூலி தீவை பார்க்க சென்றார். மஜூலி தீவு கடலில் இருக்கா என்றால் கடலில் இல்லை ஆற்றில் இருக்கு… உதாரணத்திற்கு நம்ம தமிழ்நாட்டில் காவிரி ஆறு இரண்டாய் பிரிந்து சேரும்போது ஸ்ரீரங்கம் என்கிற தீவு உருவாகிறது அதைப்போல் அசாமில் பெரிய ஆறு பிரம்மபுத்திரா அது 100 கிலோமீட்டர் பிரிந்து பிறகு சேர்வதில் மஜூலி  என்கிற தீவு உருவாகியுள்ளது. மஜூலி தீவு முழுவதும் வெறும் மணல் மட்டுமே இருக்கும் ஒரு செடி மரம் புல் பூண்டு கூட கிடையாது. பாலைவனம் போல் தோற்றமளிக்கும் அந்த மஜூலி தீவுக்கு ஜாதவ் பாயங் 1978இல் சென்று பார்த்தார் அப்போது ஒரு பெரிய வெள்ளம் தாக்கியதால் பலவகை பாம்புகள் அந்த மஜூலி தீவு நிலப்பரப்பின் மேல் இறந்து கிடந்ததை கண்டார்.

அந்த மஜூலி பாலைவன மணலின் வெப்பம் தாங்கமுடியாமல் பாம்புகள் இறந்து கிடப்பதை உணர்ந்தார். மஜூலி தீவு முழுவதும் பாம்புகள் இறந்து கிடந்ததை கண்டு ஜாதவ் பயேங்  மனதில் மிகவும் கவலை அடைந்தார். தனக்குத் தெரிந்த பெரியவர்களிடம் சென்று கேட்டபோது அவர்கள் அதற்கு ஒரு மரம் இல்லை நிழல் இல்லை எனவே தான் வெப்பம் தாங்க முடியாமல் தான் இந்த பாம்புகள் இறந்து கிடக்கின்றன என்று கூறினார்கள்.

இந்த நிகழ்வை பலரும் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் ஜாத பாயங் ஆல் அதனை ஜீரணிக்க முடியவில்லை. இந்தப் பாம்புகள் இறந்தது போலவே நாமும் ஒருநாள் வெப்பத்தால் இறந்துவிடுவோமோ  என்று எண்ணினார். எனவே தனது 16ம் வயதில் தனது படிப்பை நிறுத்திவிட்டு மஜூலி  முழுவதும் மரம் வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்தை கையிலெடுத்தார்.

அப்போது தனக்கு தெரிந்த பெரியவர்களிடம் இந்த மண்ணில் மூங்கில் வளரும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். தினமும் மஜூலி தீவுக்கு வந்து மூங்கில் மரங்களை விதைத்துக் கொண்டே இருந்தார். இக்கட்டத்தில் 1979 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கமே சமூக காடு வளர்ப்பு திட்டத்தை கோகிலாமுக் என்கின்ற இடத்தில் தொடங்கியது. இது இவர் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருந்தது. எனவே அங்கு சென்று வேலையில் சேர்ந்து கொண்டு நன்றாக மரம் வளர்க்க கற்றுக் கொண்டார்.

இந்தத் திட்டம் நான்கு வருடங்கள் நடந்தன பிறகு அரசாங்கம் அதனை முடித்துக் கொண்டு கிளம்பியது. ஆனால் ஜாதவ் பாயங் விடவில்லை திரும்பவும் மஜூலி தீவுக்கு சென்றார் மறுபடியும் மரம் நட ஆரம்பித்தார் இப்போது மூங்கில் மட்டுமில்லாமல் எல்லா மரங்களையும் வளர்க்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் மற்ற மரங்கள் வளர வேண்டுமென்றால் மண்வளம் வேண்டும் என்று அறிந்து பல முயற்சிகளை மேற்கொண்டார். ஒருவகையான சிவப்பு எறும்பை கொண்டுவந்து விட்டால் மண்வளம்மாகிவிடும் என்று அத்தனையும் செய்தார்.

இப்பொழுது எல்லா மரங்களும் வளர ஆரம்பித்தது… ஒரு வருடம் இல்லை இரண்டு வருடம் இல்லை சுமார் 39 வருடமாய் வேலை செய்தார் இப்பொழுது ஒரு பெரிய காடாய் உருவாகியிருக்கிறது. அந்தக் காடு 1360 ஏக்கரில் பரந்து விரிந்து  இருக்கின்றது. அந்தக் காட்டிற்கு பலவகையான பறவைகள், கூட்டம் கூட்டமாக மான்கள்,அந்த மான்களை வேட்டையாடுகின்ற புலிகள், கூட்டம் கூட்டமாக யானைகள் அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இப்படியாக எல்லா வகையான உயிரினங்களும் அங்கு வந்து சேர்ந்தது.

அந்த பகுதி மக்கள் அந்த காட்டை முலாய் காடு என்று அழைத்தனர். முலாய் என்பது ஜாதவ் பாயங் உடைய செல்லப்பெயராகும்.

அதெல்லாம் சரி நாம் ஒரே ஒரு செடியை நட்டு அதை புகைப்படம் எடுத்து மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்! என்று ஷேர் செய்வோம். ஆனால் 1,360 ஏக்கர் காட்டை உருவாக்கிய ஜாதவ் பயேங்  எதையும் செய்யவில்லை அவருடைய அந்த சாதனை வெளி உலகிற்கே  தெரியவில்லை. பிறகு 2008ஆம் ஆண்டு பக்கத்து காட்டில் இருந்து 115 யானைகள் முலாய் காட்டிற்கு வந்தது.

இந்த யானைகளை தேடிக்கொண்டு வனத்துறையினர் வந்தார்கள் அப்போது அவர்களுக்கு மிகவும் ஆச்சரியம் ஏனென்றால் இப்படி ஒரு காடு இருப்பது அவர்களுக்கே தெரியாது அவர்கள் வைத்திருக்கும் இந்திய வரைபடத்திலே இல்லை.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜாதவ் பயேங்  வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பத்திரிக்கை நிருபர் ஜிட்டு கலிதா அசாம் பத்திரிக்கையில் இவரைப் பற்றி எழுதினார் பிறகு மிகவும் பிரபலமாய் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பிறகு 2012ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவ் பாயங்  இருக்கு “இந்தியாவின் வன மனிதன்” என்ற பட்டத்தை கொடுத்தது.

நம் மண்ணின் மைந்தர் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்கள் அவரை பாராட்டி பத பரிசையும் கொடுத்தார். இன்னும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள் ஜாதவ் பாயங்கிருக்கு “பத்மஸ்ரீ” விருது கொடுத்தார். இவரது பெருமை இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா பள்ளி ஒன்றில் தனது பாடத்திட்டத்தில் இவரைப்பற்றி சேர்த்து இவருக்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்த அளவிற்கு புகழ் கிடைத்ததும் பலபேர் மாறி விடுவார்கள் ஆனால் ஜாதோவ் பாயங் இன்னும் மரம் விதைத்துக் கொண்டே இருக்கிறார். இன்னும் அவர் காலில் செருப்பு இல்லை, ஆடம்பர உடைகள் இல்லை ஆனால் அவர் தான் உயர்ந்த மனிதன்.

இப்போது  ஜாதவ் பாயங் இருக்கு 59 வயது ஆகிறது இன்னும் கையில் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு புதிது புதிதாய் மரங்களை நட்டு கொண்டே இருக்கின்றார். நன்றாய் படித்த மேதைகள் மரம் வளர்ப்போம் என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்கின்றார்கள் ஆனால் ஜாதவ் பாயங் களத்தில் இறங்கி ஒரு மரம் இல்லை ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது அழிக்காமல் இருப்போம். ஜாதவ் பாயங் செய்ததில் ஆயிரத்தில் ஒரு பங்காவது நாம் செய்ய முயற்சி செய்வோம்….

பத்திரிக்கையாளர்கள் ஜாதவ் பயேங்  பேட்டி எடுக்கும்போது ஜாதவ் அரசுக்கு வலியுறுத்திய விஷயங்களை காண்போம். சரி இயற்கையைகாக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, “ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போது,” என்கிறார்.

அவர், “அரசு எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அழிவைத்தான் விதைக்கிறது. பிரம்மபுத்திராவை பாருங்கள், அதன் சீர்கேட்டுக்கு யார் காரணம்? அரசுதானே அதனால்தான் சொல்கிறேன், அது ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்.” என்கிறார்.

“உண்மையில் அரசு ஏதாவது செய்ய விரும்பினால், நம் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். நம் உள்ளூர் காடுகள், விலங்குகள், காடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விரிவான செய்திகளுடன் பாட புத்தகத்தை மாற்ற வேண்டும்,” என்று ஜாதவ் பயேங் வலியுறுத்துகிறார்.

“இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் ” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் வளர்த்த காடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக வரத்துவங்கியது மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் இக்காடு வர ஆரம்பித்துள்ளது.

எழுத்தாளர் :- அப்துல் பாசித், நெறியாளர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்

Email:- bazsmart105@gmail.com

Source:

Related Posts