விமானங்களின் தந்தை எனப்பட்ட அப்பாஸ் இப்னு ஃபிர்ன்னாஸ் (810-887) – Father of Avionics.

by Mohamed Anas

இப்னு ஃபிர்னாஸ் ஒரு பல்துறை வித்தகர் , கணித மேதை, விண்ணியல் சாஸ்திரங்களை அறிந்தவர், வைரம் போன்ற கடினமான படிமங்களை அறுத்தெடுக்க தெரிந்தவர்,  நீர்க்கடிகை எனும் நீர்க்கடிகாரத்தை தயாரித்தவர், பௌதீகவியல் ஞானி, அரபு இசை வித்தகர்  என்பதனைத்தையும் விட ஒரு தன்னைத்தானே ஒரு விமானமாக பறக்கவிட்டவர். எந்தவித இயந்திரப்பொறியும் இன்றி எந்தவித தொழில்நுட்பமும் இன்றி பறவையை கண்டு பறக்க துணிந்த ஒரு அசகாய சூரன் ஆவார்.

அபுல் காஸிம் அப்பாஸ் இப்னு ஃபிர்னாஸ் என்கிற பெயருடைய இவரை லத்தீனில் அர்மான் ஃபிர்மன் என அழைக்கிறார்கள். தற்போதைய ஸ்பெயின் நாட்டின் ரோன்டா பகுதி அப்போது அன்துலேஷியா எனப்பட்டது. ஸ்பெயின்,கிப்ரால்ட்டர், போர்த்துகீஸ் ஆகிய பிராந்திய பகுதிகளை உள்ளடக்கிய நிலங்கள் ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் அந்துலேஷியா எனப்பட்டது. பெர்பர் பழங்குடியை சேர்ந்த அவரது வாழ்க்கை முழுவதும் ஸ்பெயின் நாட்டை சுற்றியதாகவே இருந்தது.

ஃபிர்னாஸின் கண்டுபிடிப்புகளில் முக்கியமானவையாக கருதப்படுவது கண்களின் பார்வை துல்லியத்திற்காக அணியும் லென்ஸ்கள் ஆகும். மூக்கு கண்ணாடிகளுக்கு பதில் கண்ணக்குழி பகுதியில் சிறிய வட்டவடிவ லென்ஸ்களை தயாரித்தார். மணலை சூடாக்கி தயாரித்த கண்ணாடிகளைவிட , க்ரிஸ்டல்ஸ் மற்றும் குவார்ட்ஸ் போன்ற கடினமான அதே சமயம் கீழே விழுந்தால் உடைந்துபோகாத லென்ஸ்களையும், சமையல் பாத்திரங்களையும் தயாரித்தார் . படிமங்களை செதுக்கி கண்ணாடி உருளைகள் தயாரித்த இந்த தொழில்முறை ஸ்பெயினை தாண்டி எகிப்து வரை பரவியிருந்தது.

ஃபிர்னாஸ் தயாரித்த மற்றொரு முக்கியமான ஒன்றாக இருப்பது நீர்க்கடிகாரம். கண்ணாடி குடுவைகளில் பக , தண்ணீர் நிரப்பப்பட்டு, பக்கவாட்டில் துளைகள் இட்டு , சொட்டு சொட்டாக வடியும் நீரை வைத்தும், கீழுள்ள குடுவையில் ஒழுகும் நீர் சேகரமாவதை வைத்தும் அந்நாளில் நேரத்தை கணக்கிட்டனர்.  இது முந்தைய கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது தான் என்றாலும் கண்ணாடி குடுவைகளையும், அதில் எண் குறியீட்டையும் குறித்து மறு உருவம் கொடுத்தார் ஃபிர்னாஸ். இந்த நீர்க்கடிகாரத்தின் பெயர் “அல்மகதா” என பெயரிடப்பட்டிருந்தது.

உலகின் முதல் Planetariumத்தை உருவாக்கிய பெருமைக்குறியவர். கிரக சஞ்சாரங்களை துல்லியமாக அறிய முதல்முதலில் கண்ணாடியிலான கோள வடிவ சுழலும் கிரகங்களை சங்கிலியால் இணைத்து நிஜமான கிரக சஞ்சாரம் விண்வெளியில் நிகழ்வது அதே போன்றதான மாடல் ஒன்றை தயாரித்திருந்தார். (Tomb Rider – படத்தில் இறுதியில் சுழலும் ஒரு கிரக சஞ்சார மெக்கானிசத்தை கண்டிருப்பீர்கள், அதே போன்றதானது ).

இராக்கிய இசைமேதை ஸிர்யாபின் விசிறியாக இருந்தார் , எனவே அந்துலேஷிய இசையினையும் அரபு இசையினையும் கற்று, அரபு மொழி கவிதைகளை பாடல்களாக்கி, அந்துலேஷிய இசைத்துறைக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். ஸிர்யாப் நடத்திவந்த கர்தோபான் இசைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார் ஃபிர்னாஸ்.

ஃபிர்னாஸ் அவர்களின் வாழ்க்கை யாரைக்கொண்டும் ஆவணப்படுத்தப்படாத காரணத்தால் மேலும் தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் அல்ஜீரிய வரலாற்றாய்வாளர் முகமது அல் மக்காரி என்பவர், ஃபிர்னாஸ் இறந்து ஏழு நூற்றாண்டுகளுக்கு பிறகு அவரது சாதனைகளை அவரது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஃபிர்னாஸ் தன்னை தானே ஒரு விமானமாக நினைத்து முதன்முதலாக உலகிற்கு பறந்து காட்டியவர் எனவும், இந்த நிகழ்வினை நம்பத்தகுந்த பல வரலாற்றாய்வாளர்களும் ஒருசேர ஒரே மாதிரி பதிவிட்டுள்ளார்கள் என்கிறார்.

கிபி.886ம் ஆண்டு கர்தோபாவின் கலிபா முதலாம் முஹம்மது காலத்தில் அவரது அவையில் இருந்த கவிஞர் முஹ்மின் இப்னு சையது என்பவரால் ஃபிர்னாஸ் பற்றிய பாடல் ஒன்று இப்படி எழுதப்பட்டு இருந்தது, ” கழுகின் இறக்கைகளை அணிந்துகொண்ட ஃபிர்னாஸ் பினிக்ஸ் பறவையைவிட வேகமாக பறந்தார்” என அரபில் அமைந்து அந்த பாடல் ஃபிர்னாஸ் ஒரு விமானம் கண்டறிய முற்பட்ட விஞ்ஞானி என்பதை உணர்த்துகிறது.

பறவைகளை பற்றி அதிகம் தெரிந்து வைத்திருந்த ஃபிர்னாஸ் ஒருமுறை தாமும் பறக்க நினைத்தார். அதற்காக அவர் பறக்கும் வித்தையை படிக்க பறவைகளை கூர்ந்து கவனித்தார். முதன்முதலாக மூங்கில் கழிகளை இறக்கைகள் போல கட்டி அதில் தம் உடலையும் கட்டிக்கொண்டு கர்தோபா நகரின் கிரான்ட் மாஸ்க் பள்ளிவாசலின் மினாரத்திலிருந்து குதித்து பறக்க முற்பட்டார். இது நிகழ்ந்தது கிபி. 852ல் ஆகும்.

பறப்பதற்கு படித்த ஃபிர்னாஸ், தரையிறங்க தெரியாமல் கீழே விழுந்தார், உடல் முழுக்க காநங்களுடன் மக்களின் கேலிக்கு ஆளானார். ஆனால் மனம் தளரவில்லை…பறவையின் இறக்கை தவிர அதன் நீண்ட வாலும் அவை பாதுகாப்பாக தரையிறங்க உதவுகிறது என்பதை உணர்ந்தார். எனவே பலநாட்களாக சேகரித்த கழுகின் உதிர்ந்த இறக்கைகளையும் , மிக மெல்லிய பட்டு நூலில் தைத்து , எடை குறைந்த இறக்கைகளையும் வால்பகுதிக்கு காலில் சில துணிகளையும் கட்டிக்கொண்டு மீண்டும் தமது 70வது வயதில் ஜபல் அல் அரூஸ் எனும் மலையில் இருந்து குதித்து ,தொடர்ந்து 10 நிமிடங்கள் பறந்து காட்டினார்.

இந்த முறை அவர், தமது நண்பர்களை அழைத்துச்சென்று இந்த சாதனையை நிகழ்த்தினார். விமானம் தயாரிப்பதற்கு முன் கிளைடார் ஓட்டிக்காட்டிய விஞ்ஞானி கொடுத்த குறிப்புகள் தான் ஆயிரம் ஆண்டுகள் கழித்து, 1903ல் ரைட் சகோதரர்கள் விமானம் தயாரிக்க உறுதுணையாக அமைந்தது.

ஃபிர்னாஸிற்கு முன்னரும் சீனாவில் கிமு.470-391 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த மொஸி  எனும் தத்துவஞானி முதன்முதலில் காற்றில் பறக்கும் காகித பட்டத்தை தயாரித்தார் , பிறகு கிபி.6ம் நூற்றாண்டில் மனிதனை சுமந்து பறக்க கூடிய ராட்சத பட்டத்தை வடிவமைத்து யுவான் ஹோங்டு எனும் இளவரசன், சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயற்சித்த காரணத்தால் சீனாவில் அதன்பின் சில காலங்களுக்கு பட்டம் தயாரிப்பதே தடை செய்யப்பட்டதாக ஆனது,  கிரேக்கத்திலும் கூட கிமுவில் சிலர் பறவைகள் போல பறக்க எத்தனித்து அதற்கான சூத்திரங்களை எழுதி வைத்திருந்தனர். ஆனால் தம்மையே பறக்கும் மாடலாக ஆக்கி, மக்கள் முன் பறந்துகாட்டியது இப்னு ஃபிர்னாஸ் மட்டுமே.

அறிவியல் சார்ந்தும், கணிதம், விண்வெளி சாஸ்த்திரம் , பௌதிகம் சார்ந்த பல புத்தகங்களை எழுதிய ஃபிர்னாஸ், இயந்திரவியல் மற்றும் பறக்கும் விதிகள் பற்றி எழுதிய குறிப்புகள் பல அல் அந்துலேஷிய பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டது.பின்னாளில் லியானார்டோ டா வின்சி அவரது ஆர்னிதாப்டர் எனும் கிளைடார் ரக விமானம் தயாரிப்பதற்கும் உறுதுணையாக இருந்தது.

இப்னு ஃபிர்னாஸின் ஆராய்ச்சி மற்றும் இயந்திரவியலை அங்கிகரித்த The planetary systems of Nomenclature எனும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு , 1979ல் கண்டறியப்பட்ட நிலவின் பள்ளம் பகுதிக்கு இப்னு ஃபிர்னாஸ் பள்ளம் என பெயரிட்டு பெருமை சேர்த்தது. கர்தோபாவில் உள்ள குவாடல்கிவிர் எனும் ஆற்றின் பாலத்திற்கு ஃபிர்னாஸ் பெயர் சூட்டப்பட்டது. லிபியா அரசு அவருக்காக தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. இராக்கின் பாக்தாத் விமானநிலையத்தின் பெயர் இப்னு ஃபிர்னாஸ் பெயரால் அழைக்கப்படுகிறது, அங்கே அவருக்கு சிலையும் உண்டு.

மனித விமானமாக தம்மையே பறக்கவிட்டு விமானத்திற்கு முன்னோட்டம் பார்த்த ஃபிர்னாஸ், இரண்டாவது பறக்கும் முயற்சிக்கு பிறகு அடுத்த பறக்கும் செயல்முறை முயற்சியை தொடரவில்லை காரணம் வயது மூப்பு மற்றும் முந்தைய முயற்சிகளில் அவர் அடைந்த காயங்கள் அவரது செயல்பாடுகளை குறைத்திருந்த்து என்றாலும் தமது இசை ஆசிரியர் பணியினையும், அரபுக்கவிதைகள் எழுதுவமையும் நிறைவாக செய்துவந்தவர் கிபி.887ல் மரணமடைந்தார்.

நன்றி:- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)

Related Posts