அபுரய்யான் அல்பிருணி

by Mohamed Anas

ஒளியின் வேகத்தை கண்டறிந்த விஞ்ஞானி, இந்தியா துணைக்கண்டத்தை பற்றி கற்றறிந்து , இந்த் என வழங்கப்படும் இந்த நிலப்பிராந்தியத்தில் நிகழ்ந்தது கொண்டிருந்த ஆட்சிமுறை, பாரம்பரிய பழக்கவழக்கங்கள், கலாச்சார நாகரீகம், தெய்வ வழிபாட்டுமுறை மற்றும் சாமானிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கைமுறையினை உலகிற்கு அறிவித்த முதல் அரபுலக அறிஞர் ஆவார்.

இந்தியா மீதான இவரது பற்றுதல் மற்றும் ஆர்வம் காரணமாக பல்வேறு கலாச்சார வேறுபாடுகளுடன் குடியமர்ந்த அக்காலத்திய இந்திய நிலப்பரப்பு மக்களை பற்றிய ஆய்வுகளில் பெரிதும் ஈடுபட்ட காரணத்தால் , பண்டைய கிரேக்காலஜி, எகிப்தாலஜி போல “இந்தாலஜி” என்கிற புதிய துறையை உருவாக காரணமாக இருந்தவர்.

கிபி.973ல் குவாரஸம் நாட்டில் ( தற்போதைய உஸ்பெகிஸ்தான் ) , கத் எனும் ஊரில் பிறந்தவர் அல்பிரூணி,அப்போது அவரது நாட்டில் அஃப்ரிகித் பரம்பரையினர் ஆண்டுவந்துகொண்டிருந்தனர் .  அறிவுத்தேடலில் தனது குருமார்களாக அரிஸ்டாட்டில், தாலமி ஆகிய பண்டைய அறிஞர்களையும், ஆரியபட்டர், பிரம்மகுப்தர் ஆகிய இந்திய அறிஞர்களையும் இஸ்லாமிய குருக்களாக அபு ஹனீபா , தினாவரி மற்றும் அல்ராயிஸ் ஆகியோரை மானசீக ஆசிரியர்களாக ஏற்றுக்கொண்டவர். அல்ஸிஜ்ஜி, இரான் ஸஹ்ரி, அபு’நஸ்ர் மன்சூர், அவிசீனா,அல்பதானி மற்றும் அத்’தமிமி ஆகிய சமகாலத்து அறிஞர்களுடன் நல்ல நட்புறவுடனும் தமது பணிகளை செய்து வந்தார்.

இஸ்லாமிய பொற்காலத்து விஞ்ஞானிகள் மற்றும் அறிஞர்பெருமக்கள் அனைவராலும் “உஸ்தாத்” ( The Master ) என அழைக்கப்பட்ட அல்பிரூணி நிச்சயமாக எல்லா துறைகளிலும் தமது பங்களிப்பினை செவ்வனே செய்த ஒரு தலைசிறந்த ஆசானாக போற்றப்பட வேண்டியவர். 

வரலாறு – புவியியல் மட்டுமல்லாது மண்ணியல், பௌதீகம், வேதியியல், குடிமையியல்,சமூகவியல்,கணிதம், மருத்துவம்,வம்சாவளிகள்,உலக அரசியல்,மனோதத்துவம், தத்துவவியல், விண்ணியல் மற்றும் ஜோதிட சாஸ்த்திரம் மீதான ஆர்வம் காரணமாக அதை பற்றியும் ஒரு ஆய்வு என அவரது ஞானத்திற்கு எல்லையே இல்லை என்கிற அளவிற்கு அவரது பங்களிப்பு மிகவும் அளப்பறியதாக இருந்துள்ளது.

அல்ஸிஜ்ஜி,அவிசீனா,ஓமர் கய்யாம், அல் காசினி, ஸக்கரியா அல்கஸ்வினி ஆகிய சமகால இஸ்லாமிய மற்றும் பாரசீக கல்வியியல் அறிஞர்களுக்கும் ஆசானாக இருந்த அல்பிரூணி இஸ்லாம் போதித்த அறிவியல் மற்றும் இஸ்லாமிய தத்துவார்த்த போதகங்களை பற்றிய புத்தகங்கள் பல இயற்றியவர். பன்மொழி வித்தகர் என கூறும் அளவிற்கு ஒன்றிற்கு ஒன்று தொடர்பில்லாத தூரதேச பகுதிகளின் கடினமான மொழிகள் பலவும் கற்றவர்.

அதில் அவரது தாய்மொழியான குவாரிஸ்மைன் போக அரபு,பாரசீகம், கிரேக்கம், ஹீப்ரு, சிரியக் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவை அடங்கும். எந்தெந்த மொழி கிளைமொழிகளுக்கு தாய்மொழி / முதல்மொழி என அறியப்படுகிறதோ அம்மொழியினை தெளிவாக கற்ற பிறகே அந்த மொழியில் எழுதப்பட்ட நூற்களஞ்சியங்களை ஆராய தொடங்குவார்

தம்முடைய வாழ்நாளின் பெரும்பகுதியை கஸ்னி (கஸ்னாவித் பரம்பரையினர் ஆண்டு வந்த தற்போதைய ஆப்கானிஸ்தான்) நகரிலேயே கழித்த அவருக்கு நமது “இந்த்” ( Hind) நாட்டின் மீது தனியான அக்கறையும் விருப்பமும் இருந்தது. இந்து புராணங்களில் கூறப்பட்ட அறிவியலை வெளிக்கொணர பெரிதும் பாடுபட்ட அவரால் தான் இந்தாலஜி என்கிற துறையே உருவானது. ஆகவே அவரை The Father of Indology என்றே மேற்குலகத்தினர் அழைக்கின்றனர். 

கிபி.1017ம் ஆண்டுவாக்கில் தெற்காசிய நாடுகளை பற்றி அறிவதற்காக அவர் எடுத்த பெரிய பிராயணத்தின் விளைவாக இந்து கலாச்சாரம் பரவியிருந்த இந்திய, சாகவம்,சுமத்திரை,மலேய மற்றும் கொரிய நாடுகளை பற்றிய குறிப்புகள் அடங்கிய புத்தகமாக “தஹ்கீக் மா லில் ஹிந்த்” ( Tahqiq ma li-l Hind)  வெளியானது . இதில் ஆரியபட்டர் கையாண்ட இந்திய கணித முறைகள் பற்றிய நிறைய குறிப்புகள் உண்டு.

சமகாலத்து விஞ்ஞானிகள் மற்றும் மார்க்க அறிஞர்களால் உஸ்தாத் என அழைக்கப்பட்ட அல்பிரூணி , எல்லோருடைய ஒத்துழைப்புடனும் சுமார் 147 புத்தகங்களை தொகுத்து வைத்தார். அதில் 95 புத்தகங்கள் அவருடைய கைகளால் இயற்றப்பட்டது. இயற்பியல் கணிதம் மற்றும் புவியியல் கணிதம் என இரு புதிய அறிவியல் கணிதப் பிரிவுகளை உருவாக்கிய பெருமை அல்பிரூணிக்கு உண்டு.

அதை கொண்டு நிலவின் பன்மைத்தன்மையுடைய நிலைகளை வரைபடமாக வரைந்து உலகிற்கு அளித்தார். இஸ்லாம் கூறும் குர்ஆனின் வழிமுறையில் விண்ணியலை பகுப்பாய்வு செய்த முதல் விஞ்ஞானி எனவும் பெயர் பெற்றார். பூமி சூழலும் வேகம், ஒளியின் வேகம் மற்றும் திசைகாட்டும் கருவிகளை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. முஸ்லிம்கள் தொழுகைக்காக நோக்கும் கிப்லா திசையை இருந்த இடத்தில் இருந்தே அறிய நில அளவை  கணக்கீடுகள் மூலம் அஸ்த்ரோலாப் தயாரித்தார்.

அரிஸ்டாட்டில் பகுப்பாய்வு செய்த விண் கோளங்களின் அடிப்படையை வைத்து கிரணங்களை கணக்கீடு செய்யும் முறையை கண்டறிந்தார். அவரது ஆராய்ச்சியின்  எழுத்துவடிவங்கள் மஸூத் கனான் எனப்பட்டது. நிலத்தாதுக்கள் மற்றும் உலோகங்களை வைத்து அந்த நிலத்தின் கனிம வளங்கேஐ கண்டறியும் மினராலஜியை வடிவமைத்தார். அவரது காலத்தில் புழக்கத்தில் இருந்து மருந்து மற்றும் காய வகைகளை வரிசைப்படுத்தி முதன்முதலில் மெடிக்கல் டிக்ஸ்னரி ஒன்றை தயாரித்தார்.

இந்த நோய்க்கு இந்த மருந்து இத்தனை அளவு இத்தனை நாள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு எழுதப்பட்ட அவரது கிதாப் அல் சைதலா ஃபி அல் தீப் எனும் புத்தகம் பின்னாளில் ஐரோப்பியர்களால் ஃபார்மகாலஜி என்கிற பெயரில் தத்தெடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவ நூலை சிரியக், பார்சி, கிரேக்கம், பலூச்சி,அப்கானி,அரபு, குர்திஷ் மற்றும் இந்திய மொழிகளிலும் எழுதி வைத்தார்.

மதங்களை பற்றிய தம்முடைய ஆய்வு மிக விரிவானது என்பதை உலகிற்கு அறிவிக்கும் விதமாக ஜோரோஸ்ட்ரியம், கிறுஸ்தவம், பௌத்தம், ஜைனம் மற்றும் இந்துயிசம் ( சிலை வழிபாடு) ஆகிய அனைத்து மதங்கள் பற்றிய பெரிய பகுப்பாய்வினை செய்து வைத்திருந்த அவர் இந்துயிசம் பற்றி குறிப்பிடும் போது சமூகத்தில் உயர் வகுப்பில் இருப்போர் ஒரே கடவுள் கொள்கையை கொண்டவர்களாகவும் கற்றறிந்தவர்களாகவும் இருந்ததாகவும் , கல்வியறிவற்றவர்கள் பல கடவுள் வழிபாட்டையும் மிருகங்கள், மரங்கள் ஆகியவற்றை கைக்கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமஸ்கிருதம் படித்ததன் விளைவாக அவரால் இந்து புராணங்களை படித்து புரிந்துகொள்ள முடிந்தது. இந்தியாவில் நிலவிய பல்தரப்பு கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து வரலாற்றில் முதன்முறையாக இந்தியா பற்றிய படிப்பை இந்தாலஜி என்கிற பிரிவின் கீழ் கொண்டுவந்தவர் அல்பிரூணி.

இவரது சாகசங்களையும் சரித்திரப் புகழ் வாய்ந்த செயல்பாடுகளையும் அடுக்கிக்கொண்டே போகலாம் அந்தளவிற்கு இருக்கும் எல்லா துறையிலும் தனது செம்மையான பங்களிப்பினை செய்துவிட்டு சென்றுள்ளார். இவருக்கு முன் வந்தவர்களிலும் இவருக்கு பின் வரப்போகிறவர்களிலும் அஷ்டமகா ஞானி என்கிற பெயரை எடுத்த அல்பிரூணி ஒரு அறிவுக்கடல் ஆவார்.

இவரது தலைசிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக நிலவின் ஒரு முகட்டிற்கு அல்பிரூணி என்றும் , விண்ணில் உலாவும் ஒரு எரிகல்லுக்கு 9936 அல்பிரூணி என்கிற பெயரையும் சூட்டியுள்ளனர். 1974ல் அல்ரைகான் பிரூணி என்கிற பெயரில் ஒரு சாகச திரைப்படத்தை சோவியத் யூனியன், ரஷ்ய மொழியில் வெளியிட்டார்கள். வியன்னாவிலுள்ள இன்டர்நேஷனல் சென்டரில் , ஸ்காலர்ஸ் பெவிலியனில் இருக்கும் நான்கு முக்கிய இஸ்லாமிய விஞ்ஞானிகளில் அல்பிரூணி சிலையும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. மற்ற மூவராவன அல்ராஸி, அவிசீனா மற்றும் ஒமர் அல் கய்யாம் ஆவர்.

அபு ரைய்யான் முஹம்மது இப்னு அஹ்மது அல்பிரூணி என்கிற அவரது பெயர் இறுதிவரை சுருக்கமாக அல்பிரூணி என்றே அறியப்பட்டது. கிபி.1050 ல் ஆப்கானின் கஸ்னாவித் பரம்பரையினர் ஆண்டிருந்த பகுதியில் இருந்து தமது 77 வது வயதில் மரணமடைந்த அவரை ரே எனுமிடத்தில் அடக்கம் செய்தனர். ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் தான் அதிசீக்கிரமானது என்பதை முதன்முதலில் கண்டறிந்த மாமேதை அல்பிரூணி இன்றளவும் ரஷ்யா நாடுகளில் பெரிதும் போற்றப்படுகிறார்.

எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)

Related Posts