இப்னு சீனா எனும் அவிசீனா

by Mohamed Anas

அலி அபுசீனா, புர்சீனா , ஷரஃப் அல் முல்க், ஹுஜ்ஜத் அல் ஹக், ஷேய்க் அல் ரயீஸ் மற்றும் இப்னு சீனா என பலவகை பெயர்களால் அறியப்படும் இஸ்லாமிய விஞ்ஞானி நவீன மருத்துவயியலின் தந்தை சுருக்கமாக இப்னு சீனா அல்லது அவிசீனா  எனப்படுகிறார். இவர் கிபி 980 – 1037 வரையிலான ஆண்டுகளுள் வாழ்ந்தவர், தற்போதைய உஸ்பெகிஸ்தான் நாட்டின் புக்காரா பகுதியில் அஃப்ஷொனா கிராமத்தில் பிறந்தார்.

அப்போது கிர்கிஸ்தான்  உஸ்பெக், துர்க்மெனிஸ்தான், ஆப்கான், தஜகிஸ்தான், ஆப்கான், பாகிஸ்தான் மற்றும் கஸகஸ்த்தான் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய பெரும்பகுதியை ஆண்ட சமானித் பேரரசின் கீழ் இருந்தது அப்பிரதேசம்.

லத்தீன் மொழியில் அவிசீனா என சுருக்கமாக அழைக்கப்படும் அவரது முழுப்பெயர் “அபு அலி அல் ஹுசைன் பின் அப்துல்லாஹ் இப்னு அல்ஹஸன் பின் அலி இப்னு சீனா” என்பதாகும். அவருடைய முப்பாட்டனார் ஒருவருடைய பெயர் சீனா என்பதால் இவரை இப்னு சீனா என கிரேக்க அறிஞர்கள் அழைத்துள்ளனர்.

இவர் முஸ்லிமாக இருந்தபோதும் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில் அவர்களுடைய  உலக தத்துவங்கள் மீது அதீத ஈடுபாடு உடையவர் என்பதால் இவரை Peripatetic philosopher என்று ஐரோப்பாவில் அழைப்பார்கள்.

பல்துறை வித்தகரான இவர் மொத்தம் 450 புத்தகங்கள் எழுதியுள்ளதாகவும், அதில் 240 மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றில் 150 புத்தகங்கள் தத்துவார்த்த ரீதியிலானது மற்ற 40 புத்தகங்களும் மருத்துவம் சார்ந்தது, ஆகவே தான் இவரை நவீன மருத்துவத்தின் தந்தை என ஐரோப்பியர்கள் அழைக்கிறார்கள் என சஜ்ஜாத் ரிஸ்வி எனும் வரலாற்றரிஞர் கூறுகிறார்.

இவரது இரண்டு ஆக்கத்தொகுப்புகள் The book of Healing (கிதாப் அல்’ஷிஃபா) , The canon of medicine (கானூன் ஏ தர் தப்- 1025ல் எழுதி முடிக்கப்பட்டது) எனப்படுகிறது.

கானூன் என்றால் விதிகள் எனப்பொருள் ஆகும்..கிரேக்கோ-ரோமன் மருத்துவம், இந்திய – சீன மருத்துவம் மற்றும் பாரசீக இயற்கை மருத்துவத்தை அடிப்படையாக கொண்டு எழுதபட்ட  மருத்துவ நூலாக உள்ளது. இது தற்போது இரானின் ஹம்தன் மாகாண நினைவாலயத்தில் வைத்து பாதுக்காப்படுகிறது.

மேலதிகமாக யுனானி மருந்துவத்தை உள்ளடக்கிய இந்த  புத்தகம் தான் கிபி.18ம் நூற்றாண்டு வரையில் ஐரோப்பியர்களின் மருத்துவக்கையேடாக இருந்தது .

மொத்தம் ஐந்து தொகுப்புகளாக உள்ள இந்த புத்தகத்தின் 

முதல் பாகத்தில் அடிப்படை உடலியல், உடற்கூறியல், நோய்களுக்கான பத்தியம் (கட்டுப்பாடான உணவு,உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் எடுத்தல்) போன்றவையும், 

இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு நோய்க்குமான மருந்துகள், அவை தயாரிக்கும் முறையுடன் அகரமுதலியாக வரிசைப்படுத்தி எழுதப்பட்ட முதல் மருத்துவ என்சைக்ளோபிடியா என கருதப்படுகிறது.

மூன்றாம் பாகத்தில் உடலின் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் உருவாகும் நோய்கள் மற்றும் அதனை சிகிச்சிக்கும் முறைகள்

நான்காம் பாகத்தில் ஒரே நேரத்தில் பல உறுப்புகளை தாக்கி பாதிப்பிற்குள்ளாக்கும் தொற்று மற்றும் பரம்பரை நோய்கள் குறித்த ஆய்வுக்கட்டுரைகளும்

ஐந்தாம் பாகத்தில் மருந்து தயாரிக்கும் ஃபார்முலாக்களும் தொகுக்கப்பட்டுள்ளது. இவரது இந்த மருத்துவ நூல் தொகுப்பினை ஜெரார்டு ஆஃப் க்ரிமோனா என்பவர் லத்தீனில் மொழிப்பெயர்த்தார். அதேபோல ஜெரார்டு டி சாப்லோநேட்டா என்பவரும் கிபி.13ம் நூற்றாண்டில் லத்தீனில் மொழிப்பெயர்த்துக்கொண்டார். கிரேக்க ஞானி கேலனின் மருத்துவக்குறிப்புகளும் அரிஸ்டாட்டிலின் தத்துவங்களும் அடங்கிய புத்தகம் என்பதால் ஐரோப்பியர்கள் இதனை போற்றிப்புகழ்ந்து ஏற்றுக்கொண்டனர்.

கிபி 13,14ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக இருந்த அவிசீனாவின் மருத்துவ நூல்கள் பின்னர் கனடாவிலுள்ள ஒன்டாரியோவில் இருக்கும் ஆகா கான் மியூசியத்திற்கும் எடுத்துச்செல்லப்பட்டது.கிபி.1650 வரையிலும் மங்கா புகழ் பெற்ற அவிசீனாவின் மருத்துவ முறைகள் தான் 

இன்றளவும் ஐரோப்பியர்களால் தத்தெடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது. 

அவற்றில் அறுவை சிகிச்சை, ஊசி மூலம் மருந்து செலுத்துதல், நரம்பியல் நோய்களுக்கான வைத்தியமுறைகள் ஆகியவற்றோடு நுண்ணுயிரியிலும் ( Microbiology) அடங்கும். அவ்வாறு நுண்ணியிரி தாக்கத்தின் மூலம் மனிதருக்கு மனிதர் தொடுதல் தொடர்பு மூலம் தொற்றும் வியாதிகளுக்கு அவர் கண்டறிந்த ஒரு மருந்தில்லா சிகிச்சை தான் Al’arbainia எனப்பட்டது.  இதுபற்றி அவர், அவரது The canon of Medicine (ஆங்கிலத்தில்) எனும் ஐந்து பாகங்களையுடைய மருத்துவ என்சைக்ளோபீடியாவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மருத்துவர் என்பதையும் தாண்டி ஒரு  கணிதமேதையாக, வானியல் சாஸ்த்திரியாக, ரசவாதம் தெரிந்தவராக, இஸ்லாமிய மெய்யியல் ஞானியாக, மண்ணியலும் பௌதீகமும் அறிந்தவராக, மனோதத்துவமும் கவிதைகளும் இயற்றுபவராக இருந்தார். பெர்ஷியாவில் அப்போதிருந்த பால்க், குவாரஸம், கொர்கான், ராய் மற்றும் இஸ்ஃபஹானில் இருந்த பெரிய நூலகங்களை தமது அறிவினை வளர்க்க பயன்படுத்தினார்.

அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த கணித மேதை அரூஸி சமர்கந்தி, வானவியலறிஞர் அல்பிரூணி, மற்றொரு கவிஞரும் கட்டுரையாளருமான அபு நஸ்ர் இராக்கி, மருத்துவரான அபு அல்’ஃகைர் கம்மார் மற்றும் அபு சஹல் மசீஹி ஆகியோருடன் நேரில் சந்தித்து பல கருத்து அளவலாவல்களை நடத்தியுள்ளார்.

அவிசீனா அவர்களது தந்தை தற்போதைய ஆப்கான் நாட்டிலுள்ள பால்க் எனும் ஊரை சேர்ந்த ஒரு ஆசிரியர் என்பதும் அவரது பெயர் அப்துல்லாஹ் எனவும், அவரது தாய், புகாராவை சேர்ந்த சித்தாரா என்றும் , அவிசீனா அவரது பத்தாம் வயதிற்குள்ளாக முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்துவிட்டதாகவும் அவரது சுயசரிதை நூலில் எழுதியுள்ளார்.

அதன் பிறகு  மஹ்மூத் மஸாஹி என்பவரிடம் இந்திய கணிதமுறையை கற்றுக்கொண்டதாகவும் , இஸ்லாமிய ஹனஃபி அறிஞரான இஸ்மாயில் அல்’ஸஹீத் என்பவரிடம் இஸ்லாமிய ஃபிக் சட்டங்கள் பயின்றதாகவும் பிறகு யூக்ளிடின் எலிமண்ட் ஃபிலாசஃபியும், தாலமியின் அல்கமஸ்ட் என்ற பாடபிரிவினை அபு அப்துல்லாஹ் நத்தேலி என்பவரிடம் பயின்றதாகவும் கூறியுள்ளார்.

அரிஸ்டாடில் வகுத்த மெட்டாஃபிசிக்ஸ் தத்துவங்களை அல்’ஃபராபியின் பொழிப்பெயர்ப்பு மூலம் கற்றரிந்த அவிசீனா தமக்கு அடிக்கடி பாடங்கள் ஏதும் புரியாத போது, புத்தகங்களை கொண்டு பள்ளிவாசலில் போட்டுவிட்டு தொழுகையில் ஈடுபடுவாராம் , பிறகு இரவு முழுக்க அப்பாடங்களை சுமார் 40 முறை திரும்ப திரும்ப படித்து புரிந்துகொள்வாராம் இதனால் தன்னுடைய 18வது வயதில் அவர் ஒரு முழு மருத்துவராக பரிணமித்தாராம்.

மிக சீக்கிரத்தில் கைராசி மருத்துவர் என்ற பெயரையும் அடைந்துகொண்டார். 

அப்போது நோயாளிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை செய்த அவரை தேடி கிபி.997ல் மன்னரின் அழைப்பு வந்தது, ஸமானித் அரசர் இரண்டாம் நூஹ் அவர்களுக்கு ஏற்பட்ட நோயினை குணப்படுத்திய காரணத்திற்காக அரசவை மருத்துவராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் அவிசீனா மீது பொறாமை கொண்டிருந்த அரசவை உறுப்பினர்கள் அவரை அரசரிடமிருந்து தனிமைப்படுத்த திட்டமிட்டிருந்தனர். சமானித் அரசின் ராயல் லைப்ரரி எனும் பரந்துவிரிந்த நூலகத்தின் பொறுப்பையும் அவிசீனா ஏற்றிருந்தார், உலகம் முழுவதுமுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அறிஞர்களுக்கும் அவர்களது திறமைகளுக்கேற்ப ஊக்கத்தொகை கொடுத்து உற்சாகப்படுத்தும் வேலைகளும் அவிசீனா வசம் கொடுக்கப்பட்டிருந்தது, ஒருநாள் பயங்கர தீவிபத்தில் சிக்கிய அப்பெரும் நூலகத்தின் அழிவிற்கு அவிசீனாவே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டது.

அதன்பிறகு அவரது 22வது வயதில் அவரது தந்தையை இழந்து வாடிய போது மறுபுறம் ஸமானிய அரசும் (கிபி.1004) முடிவுக்கு வந்துவிட்டது. 

தந்தையின் மரணத்திற்கு பின் அவர் ஓரிடத்தில் நிலையாய் வாழாமல் துர்க்மெனிஸ்தானில் இருக்கும் உர்கன்ஞ் நகருக்கும் பிறகு நிஷாப்பூர், கொரசான் ஆகிய நகரங்களுக்கும் பயணம் மேற்கொண்டு, ஆங்காங்கு கல்வி வளர்க்கும் சாலைகளில் ஆசிரியராக பொறுப்பேற்று பணியாற்றினார்.

பல நாடுகளுக்கும் பல அரசர்களுக்கும் தோழராய் இருந்த அவருக்கு இறுதியாக கக்காயித் அரசர் முஹம்மது இப்னு ருஷ்தம் துஸ்மானியஷியார் என்பவரோடு நட்பு ஏற்பட்டு அங்கேயே தங்கிவிட்டார். அங்கு அவருக்கு அறிவியல் ஆலோசகர், மருத்துவர், கல்விப்பணிகளும் கொடுக்கப்பட்டன, பயணக்களைப்பு, அயர்ச்சி, மன உளைச்சல் காரணமாக நோயுற்ற அவர் , ஒரு ரமலான் மாதம், கிபி.1937ல் தம்முடைய 56வது வயதில் இயற்கை எய்தியானர்,

இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் தம்முடைய பணியாட்களை விடுவித்த, தொடர்ந்து குர்ஆன் ஓதிக்கொண்டே இருந்தார்,  அவருடைய உடல் இரான் நாட்டிலுள்ள ஹமதான் நகரில் அடக்கப்பட்டது. 

அவிசீனா அவர்களுடைய மருத்துவத்துறை கண்டுபிடிப்புகள் ஒருபுறம் தனி அடையாளத்துடன் விளங்குகிறது எனில் அவருடைய கடவுள் இருப்பிற்கான (existence of God)  வாதங்களும் மிக மதிப்பு வாய்ந்தவையாக போற்றப்படுகிறது. அவருடைய புர்ஃகான் அல் ஸித்தீக் (proof of the truthful) என்கிற கருதுகோள் கூறும் தத்துவம் “நிச்சயமாக ஒரு படைப்பாளன் இருக்க வேண்டும், அவன் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும்” என்பதாகும்.

அதனை தற்போதைய தத்துவயியல் அறிஞரான பீட்டர் ஸ்காட் ஆடம்ஸன் எனும் அமெரிக்க இஸ்லாமிய மெய்யியல் மற்றும் தொல்லியல் வரலாற்றறிஞர் கூறுகையில் “வேறு யாரும் முன்வைக்காத வகையில் அவிசீனாவின் கடவுள் இருப்பு தத்துவம் ஆழமானதாகவும் அதேசமயம் ஆணித்தரமாகவும் இருக்கிறது என்கிறார். இன்றுவரை அவரது கூற்றுகளை உடைக்கும் எந்தவொரு அறிவியல் தரவும் அதற்கு மறுப்பாக கூறப்படவில்லையாம். 

ஜோதிட சாஸ்திரத்திற்கு எதிரான அவிசீனாவின் கருத்தும் இங்கே முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது. அண்டவெளி கிரகங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பூமியோடு தொடர்புடையது, அவற்றின் ஈர்ப்பு சக்தி மூலம் பூமியில் மாற்றங்கள் நிகழலாம், அது தனியொரு மனிதனின் உடல்நிலையில் மனநிலையில் பிரபதிக்கலாம் காரணம் பூமி இயங்குவதை கொண்டே மனிதன் இயங்குவான்,  அதற்காக அந்த சாஸ்திரத்தை வைத்து எதிர்காலத்தை கணித்து ஆருடம் கூறுவதை வலுவாக எதிர்த்தார்.

ஜோசியர்களோடு அவருக்கு எப்போதும் ஒரு மோதல் போக்கு இருந்து கொண்டேயிருந்தது. எதிர்காலத்தை அறிவதாக எண்ணி ஜோதிடர்களை அனுமதிப்பவர்களுக்கான குர்ஆன் எச்சரிக்கைகளை அடிக்கடி கூறி விழிப்புணர்வு செய்வார். 

வானவியல் சாஸ்திரத்தில் அதீத ஈடுபாடுடைய அவர், எல்லா கோளங்களும் சூரியனிடமிருந்து ஒளியை பெறுகிறது என்கிற அரிஸ்டாட்டிலின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார், ஒவ்வொரு கோளுக்கும் சுய ஒளிரும் தன்மை உண்டு என்றார். 

ரசவாதம் படித்த அவிசீனா தான், பூக்களில் இருந்து வாசனை திரவியம் எடுக்க முடியும் என்பதை கண்டறிந்தார், ரோஜா மலரில் இருந்து எண்ணெய் எடுத்து அதனை வாசனையாக பயன்படுத்தினார், அதே முறையை பயன்படுத்தி இதய நோய்க்கு அளிக்கப்படும் வாசனை சிகிச்சையாக Auromatherapeutic முறையை கண்டறிந்து நோயாளிகளுக்கு பயன்படுத்தினார். இறுதியாக அவரது ரசவாத கண்டுபிடிப்பில் சுமார் 760 விதமான மாத்திரைமருந்துகளை தயாரித்து வைத்திருந்தார் அவிசீனா.

தான் ரசித்த உலக விஷயங்கள் அத்தனையும் தனது கவித்துவ வார்த்தைகளால் கவிதையாக்கினார், அவிசீனாவின் கவிதைகள் பல உமர் கய்யாமின் கவிதைகள் என்றே பின்னாளில் பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய நாடுகளும் தத்தமது பல்கலைக்கழகங்களிலும் அரசு கட்டடங்களிலும் மாமேதை அவிசீனாவுக்கு சிலைகள் வைத்து நினைவு கூறுகின்றன, நாடுகள் தங்களது தபால்தலைகளில் அவரை வெளியிட்டு மதிப்படைகின்றன. அவர்களது நாணயங்களும் ரூபாய் தாள்களும் அவிசீனாவின் உருவத்தை பதித்து பெருமை கொள்கின்றன.

இஸ்லாமிய பொற்காலத்தின் விஞ்ஞானி அவிசீனா —கொரனா தொற்றுக்கு அளித்த அருட்கொடை

# நோய் நேரத்தில் தனித்திருத்தல்

——————————————————————

உலகம் முழுக்க இந்த கொரனா பீதி காரணமாக நாம் அதிகம் அறியாத ஒரு வார்த்தையான Quarantine என்ற சொல்லினை அதிகம் கேட்கிறோம். அதற்கு அர்த்தம் தனித்திருத்தல். 

Isolation — Quarantine இரண்டிற்குமுள்ள வித்தியாசம் என்பது, நோயில்லாத ஒருவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வது குவாரண்டைன் எனவும், நோயுற்ற ஒருவரை பிறரிடமிருந்து தனிமைப்படுத்தி வைப்பது ஐசோலேஷன் எனவும் புரிந்துகொள்ளப்படுகிறது.

நோயுற்ற மனிதரை அவரது நன்மைக்காகவும் பிறரது நன்மைக்காகவும் தனிமைப்படுத்தி வைத்தல் மற்றும் பிறரிடமிருந்து தனக்கு நோய் தொற்றாமல் தனிமைபடுதல் இரண்டுமே நவீன மருத்துவ அறிவியல் துறையில் கையாளப்படும் சிகிச்சையின் ஒரு பகுதி என்றாலும் இதனை முதன்முதலில் உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த சூபிய ஞானிகளும் அவர்களது மாணவர்களான இஸ்லாமிய பொற்காலத்தின் சீர்மிகு விஞ்ஞானிகளும் தான். 

இதில் குறிப்படும்படியானவர் மருத்துவ விஞ்ஞானியான இப்னு சீனா எனப்படும் அவிச்சீனா ஆவார்.

அர்பைன் என்பது அரபு மொழியில் நாற்பது எனும் எண்ணிக்கையின் சொல்லாகும். Arbaien – Fortieth. அதாவது எந்தவொரு நோய் என்றாலும் நோயுற்றவரை ஒரு நாற்பது நாளைக்கு தனித்திருக்க வைத்து சிகிச்சை செய்வது. இவ்வாறு தனித்திருப்பவர்களுக்கு மன ரீதியாக எழும் நெருக்கடியை போக்கி,  மருந்துகளோடு சேர்த்து திக்ரு பயிற்சிகளும் கொடுக்கப்படும். இந்த அல்’அர்பைன் எனும் சிகிச்சை முறையை தழுவிய ஐரோப்பிய வணிகர் கூட்டம், அவர்களின் பிராந்தியங்களில் இதை கடத்தினர் . அவர்களுடைய குவாரண்டைன் என்பது மொத்தமாக 21 நாட்கள் மட்டுமே. இப்பொதைய நவீன மருத்துவ முறைகளிலும் இது பின்பற்றப்படுகிறது. 

கிரேக்கச் சொல்லான குவாரண்டின என்பது 40 என்ற எண்ணின் அடைப்படைச் சொல் ஆகும், ஆங்கிலத்தில் ஒன்றில் நான்கினை 1/4 – குவாட்டர் என்பதும், நான்கு மடங்கு என்பது குவாட்ரபிள் என்பதும் இந்த குவாரண்டினா என்ற சொல்லில் இருந்து பிரிந்தது தான். அதற்கு அடிப்படை இஸ்லாமிய விஞ்ஞானி அவிச்சீனா அறிமுகம் செய்த நாற்பது நாள் சிகிச்சை தான் . முஸ்லிம்கள் திருமணம், இறப்பு, குழந்தை பிறப்பு ஆகியவற்றுக்கு கூட நாற்பது கொண்டாடும் பழக்கமுடையவர்களாக இருப்பதன் பிண்ணனியும் இது தான்.

திருமணத்தின் நாற்பதாவது நாள் தாலி பிரித்து போடுதல், குழந்தை பிறந்தால் நாற்பதாம் நாள் மொட்டையடித்து, பெயர் வைத்தல், இறப்பு என்றால் நாற்பதாம் நாள் ஃபாத்தியா ஓதுதல் இதல்லாம் இந்த அல்’அரபைனுக்கு தொடர்புடையவை. இதிலிருக்கும் உளவியல் என்னவென்றால்…, திருமணமாகி நாற்பது நாள் சண்டை சச்சரவின்றி இருக்கும் தம்பதிகள் ,தங்களுக்குண்டான பிரச்சனையை இனிவரும் காலங்களில் தாங்களாகவே தீர்த்துக்கொள்ள தகுதி படைத்தவர்,

குழந்தை பிறந்து,தாய்ப்பால் அருந்தி  நாற்பது நாளுக்கு நோயின்றி பிழைத்துவிட்டால் பிறகு என்ன வியாதி வந்தாலும் அந்த குழந்தை தப்பி பிழைத்துவிடும்..அதனாலே குறைந்தபட்சமாக பிறந்த குழந்தைக்கு ஒரு நாற்பது நாள் வரையிலாவது தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கப்படுகிறது.

அதேபோல இறந்த ஒரு நபரின் உறவினர்… ஒரு நாற்பது நாளுக்குள் தனக்கான சகஜநிலைக்கு திரும்பிவிட்டால் அவர் மனதார யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டார் , இழப்பு கொடுக்கும் மனநோயிலிருந்து விடுபட்டுவிட்டார் என்ற அர்த்தமாகிறது. இப்படி முஸ்லிம்களின் வாழ்வியலில் இந்த நாற்பது நாள் பயிற்சி முறை எல்லாவற்றோடும் தொடர்பில் வருகிறது.

சூஃபிய ஞானிகள் தங்களுக்கு மன அமைதி வேண்டும் போது, இறைவனை நினைத்து தியானிக்கும் அந்த நிலையை அரபியில் தஜ்ரித் என்கிறார்கள். அதாவது தனித்திருப்பது, தியானித்திருப்பது, திக்ரு செய்வது என்ற மூன்று நிலையை கடைபிடிப்பார்கள். இதில் உணவும் தண்ணீரும் கூட விலக்கிவைக்கப்படும். உலகத்தொடர்பில் இருந்து துண்டித்துக்கொண்டிருப்பார்கள்.

அவரவர் சக்திக்கு ஏற்ப தஜ்ரித் காலம் மூன்று நாள் முதல் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஓரேடியாக நோன்பிருக்க இயலாதவர்கள், இடையிடையே நோன்பிருப்பார்கள். இந்த முறையை அவர்கள் தங்களுக்கான சுய வைத்தியமாகவும் எடுத்துக்கொண்டனர். பல ஊர்களுக்கு கால அளவின்றி பிராயணம் செய்யும் அவர்களுக்கு இது அவசியப்பட்டது. இதையே இப்போது நாம் Self Isolation என்கிறோம்.

ஆங்கில மருத்துவ முறைகளில் அல்ஸைமர் எனும் மறதி வியாதியை குணப்படுத்த இந்த தஜ்ரித் மற்றும் intermittent Fasting எனப்படும் இடையிடையே நோன்பிருப்பது எனும் பழமையான சிகிச்சையை கொடுக்கின்றனர். இவை அனைத்தும் மருத்துவயியலின் தந்தை அறிஞர் அவிசீனா இவ்வுலகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களாகும். 

# சோப்பும் , சானடைஸரும்

————————————————-

இஸ்லாமிய விஞ்ஞானிகளில் அவீச்சீனாவின் பங்களிப்பு குவாரண்டைன் வழியாக பின்பற்றப்படுவது போல , ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த முகமது ஸக்கரியா அல்’ராஸி (854-925)

எனும் மருத்துவ மற்றும் ரசவாத விஞ்ஞானியின் கண்டுபிடிப்பான சோப்பும் , ரப்பிங் ஆல்கஹாலும் இந்த கொரனா பான்டமிக் காலத்தில் பெரிதும் உதவி வருகிறது. 

அல்’ராஸி கண்டறிவதற்கு முன் கிமு.2800 ஆண்டுவாக்கிலேயே எகிப்தியர்கள் சோப் எனும் பொருளை கண்டுபிடித்து குளியலுக்கு பயன்படுத்திவந்தனர். அது பாரோ மன்னர்களுக்கு மட்டுமானதாக இருந்தது, மேலும் சீனர்களும் மிருக கொழுப்பு மூலம் தயாரித்த சோப்புகளை குளியலுக்காக பயன்படுத்தினர்.

ஆனால் மருத்துவ துறையில் சோப்பின் பயன்பாட்டினை அறிமுகம் செய்தவர் அல்’ராஸி. நோயாளிகளை தொட்டு சிகிச்சை செய்த பின்பு ஒவ்வொரு முறையும் அவர் அல்கலி எனும் ரசவாதம்  மூலம் தயாரிக்கப்பட்ட ஆன்டிசெப்டிக் சோப்புகளை பயன்படுத்தினார். இதுவும் ஐரோப்பியர்களால் தழுவிக்கொள்ளப்பட்டது.

பிறகு சோப்பு எனும் ஒரு பொருளை உடல் சுத்தத்திற்காக அனைவரும் பயன்படுத்தும் முறை அறிமுகமானது. சிரியாவில் தான் வணிக ரீதியாக முதன்முறை சோப்புத்தயாரிப்பு பெரிய அளவில் செய்யப்பட்டு ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

அதுபோல ஆன்டிபயாடிக் மற்றும் ஆன்டிவைரல் ஆல்கஹாலை தயாரித்ததும் அல்’ராஸி என்பவர் தான். கிரேக்க நாகரீகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து ஆல்கஹால் தயாரிப்பும் , சிந்து சமவெளி நாகரீகத்தில் சோம பானத்தின் தயாரிப்பும் இருந்து வந்த நிலையில்…

ஆல்கஹாலை க்ளீனிக்கல் ரீதியாக உபயோகிக்க கற்றுத்தந்தவரும் அவரே ஆவார். எரி சாராயம், ரப்பிங் ஆல்கஹால் இவற்றுக்கான முதல் பயன்பாடு அல்’ராஸியால் உண்டானது. குறிப்பாக தொழுநோயாளிகளை தொட்டு சிகிச்சை செய்த பிறகு கைகளை சோப்பால் கழுவுதல் கட்டாயமாக்கப்பட்டது. தோல் நோய் உள்ளவர்களுக்கான மூலிகை சோப்புகள் இவரால் கண்டுபிடிக்கப்பட்டவையே…

சிகிச்சைக்கு பிறகு சானடைசர் கொண்டு கைகளை துடைத்துக்கொள்ளுதலும் , கிருமி நாசினி தெளித்து நோயாளி இருந்த இடத்தை சுத்தம் செய்வதும் கூட இஸ்லாமிய விஞ்ஞானிகளால் நவீன மருத்துவ உலகிற்கு பரிசளிக்கப்பட்டவையே.

நன்றி கூறுவோம் இஸ்லாமிய விஞ்ஞானிகளுக்கு.

எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)

Related Posts