சீனா இந்திய பாரசீகம் ஆப்ரிக்கா உள்ளிட்ட வெப்பமண்டல நாடுகளில் இலந்தைப் பழம் கண்டறியப்பட்டு ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று இணையதளம் கூறுகிறது.
ஆனால் மனித குலத்தின் தந்தை ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் தந்த பரிசுகளில் இலந்தைப் பழமும் ஒன்று என்று வரலாற்றாளர் இமாம் தபரி குறிப்பிடுகிறார்.
இந்த பூமியில் ஆதம் (அலை) அவர்கள் உண்ட முதல் பழம் இலந்தைப் பழம் என்ற செய்தி யூத கிருத்துவ மக்களால் பேசப்படுகிறது.
ஏழாவது வானத்தில் இருக்கும் “ஸித்ரத்துல் முன்தஹா” என்ற இலந்தை மரம் குறித்து அல்குர்ஆனின் 53:14-18 வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இறந்துவிட்ட தனது மகளின் ஜனாஸாவை குளிப்பாட்டுகின்ற போது கொதிக்க வைக்கப்பட்ட இலந்தை இலையின் நீரில் குளிப்பாட்டுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் மிச்சம் சொச்சமாக அறிந்துதான் வைத்திருக்கின்றோம்.
நபி (ஸல்) அவர்களின் இந்த ஒரு வார்த்தையை பின்பற்றி உலக முழுவதும் முஸ்லிம் அடக்கஸ்தலங்களில் இலந்தை மரம் வளர்த்த வரலாறும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
தமிழகத்தில் கூட பாரம்பரியமான ஊர்களின் அடக்கஸ்தலங்களில் இலந்தை மரம் நிற்பதை இன்றும் காண்கின்றோம். நான் பிறந்த கிராமத்தில் ஏறக்குறைய 50 ஆண்டுகள் வயதுடைய இலந்தை மரம் கப்ருஸ்தானில் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.
ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு இலந்தை இலையை பயன்படுத்துங்கள் என்ற கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் ஒற்றை வார்த்தையில் நின்று இலந்தை மரத்தை ஆராய்ச்சி செய்த இடைக்காலத்தின் தாவரவியல் மற்றும் மருத்துவத் துறை முஸ்லிம் அறிஞர்கள்…,
இலந்தை மரத்தின் வேர் இலை பட்டை காய் பழம் என்று அதன் அனைத்து பொருட்களிலும் மனித பிணி போக்கும் அல்லாஹ்வின் மகத்துவமான மருந்துகள் நிரம்பியிருப்பதை பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கண்டறிந்தனர்.
இறந்துவிட்ட மனித உடலினுள், நோய்எதிர்ப்பு மண்டலங்கள் செயல்படாத நிலையில், திரளும் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து மற்ற மனிதர்களை பாதுகாக்கும் மிகச்சிறந்த கிருமி நாசினியாக இலந்தை இலை நீர் பயன்படுவதையும் கண்டறிந்தனர்.
அதனால் வரலாற்றின் இடைக்காலத்தில் ஆசிய கண்டத்தில் கோலோச்சியிருந்த யுனானி மருத்துவத்தில் இலந்தை இலை பொடி முக்கிய மூலப்பொருளாக கையாளப்பட்டது. இன்றும் கையாளப்பட்டு வருகிறது.
முஸ்லிம் மருத்துவ அறிஞர்கள் முன்னெடுத்த அந்த ஆராய்ச்சிகளை 19,20 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் கைவிட்டுவிட்டது.
இன்றைய நவீன தொழில்நுட்பங்களை கொண்டு இந்த ஆராய்ச்சிகளை முஸ்லிம்கள் தொடர்ந்து முன்னெடுத்திருந்தால் இப்போதைய கொரோனா வைரஸ் தாக்குதலை வெறும் இலந்தை இலையை கொண்டு ஊதி ஓரமாக தள்ளிவிட்டு சென்றிருப்போம்.
21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உயிரிவேதியியல் தொழில்நுட்பங்களை கொண்டு சீனாவும் மேற்கத்திய உலகமும் இலந்தை மரத்தை இப்போது அணுவணுவாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நைஜர் நாட்டில் சிறுதானியங்களின் தலைமகனான கேழ்வரகு மற்றும் கம்பு பயிரிடும் மானாவாரி நிலங்களில் ஊடு பயிராக இலந்தை மரத்தை நட்டு 40 சதவிகித விளைச்சல் பெருக்கத்தை நவீன ஆராய்ச்சிகள் மூலமாக கண்டறிந்துள்ளதை ICRISAT (The International Crops Research Institute for the Semi-Arid Tropics) என்ற சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது.
இலந்தைப் பழம் ஒன்று போதும் கீழைத்தேய நிலத்தில் வாழும் ஒரு மனிதனின் ஊட்டச்சத்துத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு என்று உலக பொருளாதார நிறுவனம் (WEF) தெரிவிக்கிறது.
சீன மரபு வைத்தியத்தில் (TCM) இலந்தை இலையை மனிதர்களின் மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும் அருமருந்தாக பயன்படுத்துகின்றனர்.
குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய பழங்களின் பட்டியலில் இலந்தைப் பழத்தை முதலிடத்தில் சீனா வைத்துள்ளது.
இன்றைய நடுத்தர வயதில் இருக்கும் நம்மில் அதிகமானவர்கள் பள்ளிக்கூட நாட்களில் இலந்தைப் பழம் வாங்கித்தின்ற நினைவுகள் நம்மை விட்டு மறைந்திருக்காது.
நினைவுத்திறனை அதிகரிப்பதில் இலந்தைப் பழத்திற்கு நிகரில்லை என்பதை அறிந்த உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடி பள்ளிக்கூட வாசலில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு உழக்கு காலணாவுக்கு கொடுக்கும் அறச்சிந்தனையை உலகில் வேறு எங்காவது காணமுடியுமா.
முஸ்லிம்களின் வாழ்வியல் துணையாக, அல்லாஹ்வுடைய அருளின் வடிவமாக கிடைக்கப் பெற்றிருக்கும் இலந்தை மரத்தை வளர்த்து பாதுகாத்து அதன் மருத்துவ குணங்களை….,
உலகம் அழிகின்ற காலம் வரை கண்டுபிடிக்கப்படும் உயிரிவேதியியல் தொழில்நுட்பங்கள் மூலமாக ஆராய்ச்சிக்குட்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
அதன் துவக்கமாக இடவசதி இருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய வீட்டிலும் பள்ளிவாசலிலும் மஹல்லாவிலும் ஒரு நாட்டு இலந்தை அல்லது சீமை இலந்தை மரத்தை நட்டு வளர்த்தெடுப்போம்.
அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் அபூர்வமான மருந்துகளை கொண்ட சொத்து அது.
– CMN SALEEM