இஸ்லாமிய பொற்காலத்தில் வாழ்ந்த ஓர் வரலாற்றாய்வாளரும் புவியியலாளருமான அபுல்’ஹஸனலி அல் மஸூதி. (896 – 956 )

by Mohamed Anas

அரபுகளின் ஹெரடோடஸ் என்றழைத்து பெருமைப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்று ஆவணக்காப்பாளரும் , ரசவாதவியல் பயின்ற ஒரு விஞ்ஞானியுமான இவர் பல நாடுகள் பிரியாணித்த யாத்ரீகரும் புவியியலாளரும் ஆவார்.

அபுல்ஹஸன் தம்மை ஒரு வரலாற்று ஆசிரியராக மட்டுமே முன்னிலைப்படுத்திக்கொண்டாலும் அவர் பல்துறை வித்தகராக இருந்துள்ளார். வரலாறும் புவியியலும் தவிர தம்முடைய பயணக்கட்டுரைகள் வாயிலாக தாம் பிரயாணித்த பல தேசங்களின் வரலாறுகளை அதன் புவியமைப்பு அம்சங்களை, அவர்களது வாழ்வியல் மற்றும் இறையியல் தத்துவங்களை அங்கு நிலவிய இயற்கை விஞ்ஞானங்களை நீக்கமற அறிந்து அவற்றை மிகத்தெளிவாக எழுதி ஆவணப்படுத்தியுள்ளார்.

இஸ்லாமிய பொற்காலத்து சமயத்தில் இஸ்லாமிய ராஜ்யங்களுடன் அண்டியிருந்த பல தேசங்களின் கலாச்சார பண்பாடுகளை எழுதி வைத்த காரணத்தால் அனைவரும் அவரை கிரேக்க வரலாற்று மேதையும் நாகரீக வரலாறுகளின் தந்தை என போற்றப்படும் ஹெரடோடஸின் பெயரால் அவரை அழைத்து கௌரவப்படுத்தினார்.

அபுல்ஹஸன் அவர்களின் இருபது பெரும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு Muruj adh-dhahab wa ma’adin al-jawhar எனப்படுகிறது. இதுவே அவரது படைப்புகளின் மாஸ்டர்பீஸ் எனப்படுகிறது. அபுல்ஹஸன் அவர்களின் வரலாற்று தொகுப்பினை ஐரோப்பியர்கள் ஒட்டுமொத்த உலக ஆவணங்களின் மேக்னம் ஓபஸ் (தலைசிறந்த தகவல் களஞ்சியம்) என்றழைக்கின்றனர்.

அவரது படைப்புகள் அத்தனையும் பல பாகங்களாக , பல பதிப்புகளில் ஆங்கிலத்தில் ‘The Meadows of Gold and Mines of Gems’ என்கிற பெயரில் வெளியாகியது.

அபுல்ஹஸன் , பக்தாதில் கி.பி.896ல் பிறந்தவர் , தாம் ஹிஜ்ரி 282-283 ஆகிய ஆண்டுகளுள் பிறந்ததாகவும் தமது பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு மஸூத் (அபு அப்துர்ரஹ்மான்,  594 – 653) , நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் இருந்த சஹாபா ஆவார். சஹாமாக்களில் பெரும் பணக்காரர், அத்தர் எனும் வாசனை திரவிய வியாபாரம் செய்தவர்.

வெகுதூரத்தில் இருந்து வரும்பொழுதே அவரது அத்தர் மணத்தை நுகர்ந்த ரசூலுல்லாஹ் , “இதோ அப்துர்ரஹ்மான் நம்மிடையே வருகிறார் ” என கணித்து விடுவார்களாம். அப்துர்ரஹ்மான் இறந்த போது அவரது அப்போதைய சொத்து மதிப்பு 90,000 திர்ஹங்கள். இது தவிர அபுல்ஹஸன் அவர்கள் பற்றிய குறிப்புகளை அவர் பெரிதும் எழுதி வைக்கவில்லை.

அவருடைய பிராயணங்களில் அவர் சென்றடைந்த பகுதிகளின் நிலப்பரப்பு மிக நீண்டதாக கருதப்படுகிறது, இவருக்கு முந்தைய வரலாற்று யாத்ரீகர்கள் யாரும் அத்தனை நீண்ட தூரத்தை சுற்றிவரவில்லை. அபுல்ஹஸன் , பாரசீகத்தை முழுமையாக ஆராய்ந்தவர் , அதுபோக தற்போதைய ஜார்ஜியா,அர்மேனியா மற்றும் காஸ்பியன் கடல் பகுதிகளையும் எகிப்து,சிரியா மற்றும் அராபிய தேசங்களையும் சுற்றிவந்த வந்த அவர் இறுதியாக சிந்து சமவெளியையும் வந்தடைந்தார். சிந்துவிற்கு வந்த அவர் இந்தியாவின் மேற்கு கடற்கரை முழுவதையும் சுற்றுப்பயணத்தில் இணைத்திருந்தார். மத்திய தரைக்கடல், செங்கடல் மற்றும் இந்து மகா சமுத்திரத்தில் கடல் பிராயணங்களும் மேற்கொண்டார்.

அபுல்ஹஸன் அவர்களின் பிராயணத்தில் இலங்கையும் சீனாவும் கூட இடம்பெற்றிருந்தது, லியோ ஆப் திரிபோலி என்கிற ரோம பேரரசின் காலாட்படை தளபதியாக இருந்து பின்னாளில் துரோகி என பட்டங்கட்டப்பட்டு விரட்டப்பட்டவரும் , சிரியாவில் தங்கியிருந்து இஸ்லாத்தை ஏற்றவருமான ஒரு படைவீரன் கொடுத்த தகவல்களை வைத்து அவருக்கு சீனா போவதற்கு ஆர்வம் பிறந்ததாக பயணக்குறிப்பில் கூறுகிறார்.

எகிப்தில் தங்கியிருந்த போது தெற்கு ஸ்பெயினின் அந்தூலேசிய பகுதி பாதிரியார் ஒருவர் எழுதிய பிராங்கிஷ் வம்சத்தினரின் வரலாற்று புத்தகம் ஒன்றை கண்டெடுத்து அதனையும் தம் குறிப்புகளோடு ஆவணப்படுத்தினார். தூர தேசங்களுக்கு பிராயணித்த கையோடு மற்ற இஸ்லாமிய அறிஞர்களை போல தமது வாழ்வாதாரத்திற்காக வணிபத்தில் ஈடுபட்டதும் அவரது குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது.

பல நிறங்களுடைய முத்துக்களை வாங்கி அதனை கழுத்தில் அணியும் மாலையாக கோர்த்து , அவற்றை பெட்டகங்களில் வைத்து பாதுகாக்க  குறிப்பிட்ட வீரர்களை நியமித்து நாங்க கிழக்கிலும் மேற்கிலுமான கடலில் பிரயாணித்தோம் எங்களிடம் சுத்தமான இஸ்லாமிய ஈமான் மட்டுமே இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

அபுல்ஹஸன் அல்’மஸூதி அவர்கள் வாழ்ந்த காலத்தில் காகித தயாரிப்பு தொழிற்சாலைகள் அதிகமாகியிருந்தன, அப்பாஸிய கிலாபத்தின் ஆரம்பகாலத்தில் சீனாவிலிருந்து பிடித்துவரப்பட்ட அடிமைகளை கொண்டு காகிதம் தயாரிக்கும் முறையை இஸ்லாமிய பொற்காலத்தின் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தியிருந்தனர்.

நிறைய புத்தகங்கள் மலிவாக கிடைக்கப்பெற்ற காலகட்டமாகியதால் ஒவ்வொரு அறிஞரும் தத்தமது அறிவு தேடத்திலில் கிடைத்த புத்தகங்களை திரட்டி அவரவருக்கென தனியாக ஒரு நூலகத்தை தங்களது இல்லங்களில் அமைத்துக்கொண்டனர். அவ்வகையில் அல்’மஸூதி அவர்களின் நண்பரான அஸ்’ஸூலி என்பவருக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான நூற்களை கொண்ட இரண்டிற்கும் மேற்பட்ட நூலகங்கள் இருந்தன.

இதுபற்றி தகவல் கூறும் போது அபுல்ஹஸன் கூறுகிறார் தமது புத்தகங்களை விரும்பி படிக்க வரும் பிற அறிஞர் பெருமக்களை பற்றிய குறிப்புகளை கொடுத்துள்ளார்.

இஸ்லாமிய பொற்காலம் என்றே தமது காலகட்டத்தை குறிப்பிட்டு எழுதியுள்ள அவர், கிரேக்க தத்துவங்களும், பாரசீக இலக்கியமும், இந்திய கணிதமும்  அறிவுதேடும் அறிஞர்களாலும் அவர்தம் மாணவர் குழுக்களாலும் முழுக்க செழித்து வளர்ந்த அந்த நேரத்தில் ஐரோப்பாவானது ஆங்கிலோ சாக்ஸன்களின் வரலாற்றை ( Anglo Saxon Chronicles ) மட்டுமே பெரிதாக இயற்றி வந்தது. 

அல்’ஸஜ்ஜாஜ், இப்னு துரைத் நிஃப்தவியா, இப்னு அன்பரி மற்றும் சிரியாவின் அலப்போவை சேர்ந்த  மகா கவிஞருமான கஷாஜீம் ஆகியவரின் மாணவராக இருந்த அபுல்ஹஸன் அவர்கள் அல்கிந்தி, அல்ராஸி, அல் ஃபராபி, அரிஸ்டாட்டில் மற்றும்  பிளாட்டோவின் தத்துவங்களையும் நீக்கமற கற்றவர். அல்ராஸி மற்றும் அல்ஃபராபி ஆகியோரை ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்துள்ளார்.

மருத்துவம், சட்டம் ஆகியவற்றோடு அவர் பண்டைய எகிப்து, அசிரிய,பாபிலோனிய நாகரீக எச்சங்களை வைத்தும் வரலாறு எழுதியவர். பாரசீக வரலாற்று ஆவணங்களில் அரசி செமிராமிஸ் மற்றும் அர்மேனிய அரசி “அழகி அரா” பற்றியும் மேலதிக தகவல்களை கொடுத்துள்ளார்.

அவருடைய பிராயணத்தில் இந்திய பெருங்கடலில் மடகாஸ்கர் அருகே இருக்கும் கொமரோஸ் தீவு பற்றி குறிப்பிட்டவர் அதனை வாசனைத்தீவு எனவும் அங்குள்ள வனிலா மற்றும் இலாங் இலாங் செடியில் இருந்தும் காற்றில் பரவும் வாசம் அந்த தீவு முழுக்க நல்ல நறுமணத்தை பரப்பிவிடும் என எழுதியுள்ளார்.

இஸ்லாமிய வணிகர்கள் அந்த இரு செடிகளில் கிடைக்கும் மலர்களை கொண்டு வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிலில் இருந்தனர் என்பது அவர் கொடுத்த கூடுதல் தகவல். அபுல்ஹஸன் அவர்கள் சுற்றிய தேசங்களை தோராயமாக வைத்து அவர் தயாரித்த உலக வரைபடம் ஒன்று தற்போதைய நவீன வரைபடத்தை ஏறக்குறைய அதேபோல பிரதிபலிப்பதாக உள்ளது என அவரை பற்றி தகவல் திரட்டிய அஹமது ஷோபல் எனும் வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.

இஸ்லாமிய தேசங்களை விட ரோமானிய தேசங்களையும் முஸ்லிமல்லாத நாடுகளையும் பற்றி நிறைய தகவல் திரட்டுகளை அவர் தயாரித்திருப்பதாகவும் அப்போதைய கிறுஸ்தவர்கள், அரபி கலிக்கிரபி எழுத்துக்களை எழுதிவதில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளதையும் குறிப்பிடுகிறார். உலகில் நிலவிய பல்வேறு கலாச்சாரங்களும் பண்டைய நாகரீகங்களும் பற்றிய விரிவான கருத்துக்களை தரும் அபுல்ஹஸன் அவர்களது ஏட்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய பெரும் தேசங்களுக்கான தேடல் பெரியளவில் இருந்துள்ளது என்பது அவற்றை பற்றி அவர் எழுதியுள்ள விரிவான குறிப்புகளை வைத்து அறிய முடிகிறது. 

அபுல்ஹஸன் இறுதியாக ரசவாதம் செய்வதிலும் தனது திறமையை நிரூபித்திருந்தார். Vitriol எனப்படும் ஒருவகை சல்பேட் /துத்தத்தை வைத்து அவற்றில் நிறைய நிறப்பிரிகையை உருவாக்கினார். வர்ணப்பூச்சிகளில் பலவித நிறங்களை உருவாக்கியதும் இவரே. இவருடைய புத்தகங்களை கி.பி.இருபதாம் நூற்றாண்டு வாக்கில் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்த்தவர் பர்பைர் டி மெனார்டு ஆவார்.

பிறகு பேவட் டி குர்டில் என்பவரும் மொழிப்பெயர்த்தார்.  எர்னஸ்ட் ரெனன் எனும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் அபுல்ஹஸன் அல்’மஸூதி அவர்களை கி.மு.இரண்டாம் நூற்றாண்டு கிரேக்க அறிஞரான பஸானியஸோடு ஒப்பிட்டு எழுதினார். மற்றையோர் இவரை முதலாம் பிளனியோடு ஒப்பிட்டனர். ஆனால் அனைத்து ஐரோப்பிய மொழிகளிலும் இவரது ஆக்கங்கள் மொழிப்பெயர்க்கப்பட்ட காரணத்தால் Herototus- The Father of World History என பெயர் பெற்றவரோடு ஒப்பிட்டே அனைத்து தரப்பினரும் அபுல்ஹஸன் அல்’மஸூதி அவர்களை பாராட்டி கொண்டாடுகின்றனர்.

வியன்னாவின் Naturhistoriches Museum ,த்தில் இவருக்கு சிலை வடிக்கப்பட்டுள்ளது.. இவரது மெய்யியல் தத்துவங்கள் ஷியாஸத்தை பிரதிபலிப்பதாக கூறி சன்னி மார்க்க அறிஞரான இப்னு ஹாஜர் ,  இவர் மீது வைத்த குற்றச்சாட்டுகளும் உண்டு. எனினும் இஸ்லாமிய வழியில் குர்ஆனை கற்று அதன் மூலம் பெற்ற ஞானத்தை கொண்டு வேதியியல், வரலாறு, புவியியல் மற்றும் சுற்றுப்பிரயாணங்களின் மூலம் வரைந்த பயணக்கட்டுரைகள் மூலம் இவரும் ஒரு சிறந்த கல்வி அறிஞராக அறியப்படுகிறார்.

கி.பி.956ல் எகிப்தின் கைரோவில் மரணமடைந்த இவரது இறுதி புத்தகமான (இறப்பிற்கு சிலநாட்களுக்கு முன் எழுத தொடங்கியது)  கித்தாப் அத்’தன்பி வல் இஷ்ராப் என்கிற ரோமானியர்கள் பற்றிய புத்தகம் வியன்னா மியூசியத்தில் பாதுகாக்கப்படுகிறது.

கிபி.1492ல் அட்லாண்டிக் கடலில் பயணித்து இந்தியாவை கண்டறிந்ததாக கூறிய கொலம்பஸ் உண்மையில் அமெரிக்காவின் அருகிலுள்ள மேற்கிந்திய தீவுகளை  சென்றடைந்தடைந்தார்.  அவருக்கு முன்பாகவே கிபி.956ல்,  தாம் வரைந்த உத்தேச உலக வரைபடத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து தூரக்கடல்களுக்கு அப்பால் ஒரு கண்டம் இருப்பதாக துல்லியமாக குறிப்பிட்டிருந்தார் அல்’மஸூதி. பின்னர் அது வட-தென் அமெரிக்க கண்டங்கள் என ஊர்ஜிதமானது.

கிபி.889ம் ஆண்டிலேயே இஸ்லாமிய வணிகர்கள் அமெரிக்கா எனும் மாபெரும் நிலத்தை கண்டுபிடித்து அங்கிருந்து வர்த்தகப்போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தனர்.  கிபி.1498ல் கொலம்பஸ் எழுதிய குறிப்புகளின்படி அமெரிக்காவின் தெற்கிலுள்ள கரீபியன் தீவுகளில் முஸ்லிம்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டது.

கிபி.1312ல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து அமைரிக்காவை வந்தடைந்திருந்த முஸ்லிம் வணிகர் குழு அங்கே தங்கியிருந்தமைக்கான அடையாளங்களாக  எழுத்துவடிவங்களையும் கலாச்சாரத்தையும் மிசிசிப்பி மற்றும் பிரேசில் பகுதிகளில் விட்டுச்சென்றிருந்தது. ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னரே கிபி.1513ல் உதுமானிய கிலாபத் ஆட்சியின் போது வரையப்பட்ட உலக வரைபடத்தில் தென்னமரிக்க நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடர் துல்லியமாக வரையப்பட்டிருந்தது. கிறுஸ்தவ மத போதகம் நடைபெறுவதற்கு முன்னரே அமெரிக்க மண்ணில் இஸ்லாமிய வணிகர்களின் ஆதிக்கம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)

Related Posts