இஸ்லாமிய பொற்கால உலகின் தலைசிறந்த மருத்துவ விஞ்ஞானி, முதன்முதலில் மனநோய்களுக்கான மனோதத்துவவியலை உலகிற்கு அறிமுகம் செய்தவர்.
பாரசீக பிராந்தியத்தில் பால்க் மாகாணத்திலுள்ள சிறிய கிராமமான சமஸ்த்தியனில் கிபி.849-850ல் ( ஹிஜ்ரி 235) பிறந்தார். அதாவது தற்போதைய ஆப்கானிஸ்தான் தான் அப்போது பால்க் என அழைக்கப்பட்டது.
இதனாலேயே அவரது பெயரிலும் பால்கி எனும் சொல் ஒட்டிக்கொண்டது தமது தகப்பனாரிடம் ஆரம்பகல்வியை பெற்றுக்கொண்ட பால்கி, இளமைக்காலத்தில் அறிவியலிலும் கலைநுட்ப பிரிவுகளிலும் தனது அறிவினை வளர்த்துக்கொண்டார். சிறுவயது முதல் கூச்ச சுபாவமும் அதே சமயம் மனதினை ஒருமுகப்படுத்தும் தியானத்தையும் கடைபிடித்தார்.
கலை மற்றும் அறிவியல் பாடங்கள் போக புவியியல்,தத்துவம், மருத்துவம், அரசியல், கவிதை, இலக்கியம், சமூகவியல், கலாச்சாரம் மற்றும் மதங்கள், மொழிகளுக்கான இலக்கணம் என அனைத்து பிரிவுகளிலும் தம்முடைய அறிவினை விரிவுபடுத்துக்கொண்டார். இதனால் இவருக்கு பல்துறை வித்தகர் என்கிற சிறப்புப்பெயரும் உண்டு.
இவர் இயற்றிய 60க்கும் மேற்பட்ட நூல்கள் காலத்தால் அழிந்துபோயின எனினும் சிற்சில தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கான நிலவரைபடங்கள் வரைய கற்றுத்தரும் ஒரு பள்ளியையும் இவர் நடத்தியுள்ளார். அது Bhalki School of Mapping என வரலாற்று ஏடுகளில் குறிக்கப்பட்டுள்ளது.
இவர் இயற்றிய குறிப்பிடத்தகுந்த மற்றும் சர்ச்சைக்குறிய புத்தகம் உடல் – ஆன்மா இவற்றின் வாழ்வாதாரம் பற்றி எழுதப்பட்ட “மஸாலி அல் அப்தன் வ’அல் அல்ஃபஸ்” கிதாபில் புற உடல் மற்றும் அதன் ஆரோக்கியம் பற்றி விரிவாக எழுதியும் பிறகு தேகத்திற்குள் இருக்கும் ஆன்ம இயக்கத்தை பற்றி எழுதினார். இது இவரது கைப்பிரதி நூலாகும்.
சமநிலை ஆன்மா நம் குணாதிசயங்களுடன் இணைந்து எப்படி நம் மூளையை இயக்குகிறது என்பதனை பற்றிய மனோதத்துவ கட்டுரைகள் பல அதில் அடங்கியிருந்தன. மனோதத்துவம் மற்றும் உளவியல் சார்ந்த சமகாலத்து மக்களையும் இத்தனை நூற்றாண்டு கடந்தும் நவீனமயமான இந்த காலகட்டத்திலும் கூட பால்கி அவர்களின் உளவியல் கருத்தியல்கள் வெகஜன மக்களால் பெரிதும் ஈர்க்கப்படுகிறது
மனிதனின் உள்மனம் அதாவது இதனை “நஃப்ஸ்” என்ற சொல் கொண்டு குறிப்பிடுகிறார்., ஆங்கிலத்தில் இதனை Psyce என்ற வார்த்தையை கொண்டு விளக்குகின்றனர். “யாரிடத்தில் அவரது நஃப்ஸ் நோய்வாய்ப்பட்டுள்ளதோ அவரது உடலும் அதேசமயத்தில் சுறுசுறுப்பற்றதாகவும் புறதேகத்தால் இயங்கவியலாத நிலையையும் அடைகிறது” என்கிறார் அவர்.
*உளவியல் நோய் மற்றும் மன உளைச்சலை இயல்பாக்குதல்
இன்று மேற்கத்திய உலகில் பயிற்சி பெறும் உளவியலாளர்களுக்கான முக்கிய ஆரம்ப இலக்குகளில் ஒன்று பெரும்பாலும் நோயை இயல்பாக்குவது தான் அதனை ஆங்கிலத்தில் Normalization என்கின்றனர் . உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளில் (பொருள் அறிவியலின் அடிப்படையில்) கூட, களங்கம் கற்பிக்கப்படுதலின் மூலம் அவமானத்தின் மூலமும் தான் பெரும்பாலும் உளவியல் நோய்களால் மனிதர்கள் பீடிக்கப்படுகின்றனர்.
முஸ்லீம் நாடுகளில் இன்றளவும் பல பகுதிகளில் மிகவும் ஆழமாகப் பதியப்பட்ட களங்கங்களும் வேண்டுமென்றே அபாண்டம் சுமத்தப்பட்ட நிலையிலும் தான் ஒருவர் மனநோயாளியாகிறார் , உளவியல் நோயையும் மனவழுத்த நோயினையும் ஒரு வெட்கக்கேடான விஷயமாகவும் ஒரு குடும்பத்தின் மீது அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனையாகவும் இவ்வுலகம் பார்க்கிறது. அல்லது மத ரீதியான நம்பிக்கையின்மையின் கூலியாக அது கருதப்படுகிறது. ஆனால் இவற்றிற்கு முதற்கட்ட தீர்வாக அல்லது ஆரம்பநிலை சிகிச்சையாக பால்கி கற்பித்தது,
“மன நோயை இயல்பாக்குவது என்பது அதற்கு சிகிச்சையளிப்பதைவிட முக்கியமானது, ஏனென்றால் உளவியல் நோயை உடையவர் நம்மிலிருந்து அசாதாரணமானவர்களாகவும், இயல்பிற்கு மீறிய செயல்பாடுகளை உடையவராகவும் அடையாளங்காணப்படுகிறார். மன நோயுடையவரை இயல்பாக்குவதன் மூலம், அவரை மேற்குறிப்பிட்டவற்றில் இருந்து மீட்டு நோயுடையவர் என்கிற அடையாளத்தை நீக்க முயற்சியெடுக்க வேண்டும்
அதாவது அவரது தோற்றத்தையும் மனநிலையையும் முதற்கட்டமாக மாற்றுவதன் மூலம் அவர் மனநோயாளி என்கிற களங்கத்தை துடைத்தெடுக்க வேண்டும் ” என, ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பால்கி தனது மாணாக்கர்களுக்கு உளவியல் பாடம் எடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறியது,
மனம்-உடல் இணைப்பு (“உளவியல் வலி உடல் நோய்க்கு வழிவகுக்கும்”.)
நவீனமயமான இந்த காலத்தில் , மனதுக்கும் உடலுக்கும் இடையில் ஒரு பிரிக்கவியலாத இணைப்பு உண்டென்பதை மென்டல்-பிசிக் சயின்ஸ் மூலம் பகுப்பாய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே.. உடலும் ஆன்மாவும் இணைந்து இயங்காவிடில் மனித மூளை வேலை செய்யாது என்பதனை தமது புத்தக குறிப்புகளில் பால்கி குறிப்பிட்டுள்ளார், புற உடலுக்கு எதுவும் நோய் எனில் நம்முடைய உடல் சோர்வுற்றாலும் நமது அன்றாட பணிகள் எதுவும் தடைபடுவதில்லை..
ஆனால் நமது ஆன்மா பலகீனமடையும் போது ,மனம் நோவினைப்படும்போது நமது உடலும் அதனுடன் சேர்ந்து சோர்வடைவதோடு அன்றாட பணிகள் அனைத்தும் தடைபட்டுப்போய் விடுகிறது என குறிப்பிடுகிறார். இதே போன்றதான கருத்தினை பாரசீக மருத்துவரான அப்பாஸ் ஹாலி கூறும்பொழுது “ஆன்மா துன்பப்படும்போது உடல் இன்பத்தை அனுபவிக்கும் இயல்பான திறனை இழந்து அதன் வாழ்க்கை துன்பமாகவும் தொந்தரவாகவும் காணப்படும்” , என இவர்கள் குறிப்பிடுகின்றனர். சிக்மண்ட் பிராய்ட் கண்டறிந்து கூறிய பல மனோதத்துவ கருத்துக்களை ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே பால்கி கூறிவிட்டு சென்றுள்ளார்.
அறிவாற்றல் தீர்வுகள் மற்றும் அறிவாற்றல் சிகிச்சை
அல்-பால்கியின் மனநோய் சிகிச்சை முறையின் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சம் என்பது நோயுடையவரை அமர்த்தி அவரோடு நளினமான பேச்சில் ஈடுபடுவது. அழகான வார்த்தைகள் அல்லது அவருக்கு விருப்பமான வார்த்தைகளை கொண்டு அவரோடு மனம்விட்டு பேசி முதற்கட்டமாக அவர்களை வாழும் சூழலுக்கு ஏற்றவர்களாக மனதின் எண்ணங்களை மாற்றி கொண்டுவருதல் ஆகும். இதன் விளைவாக அவர்களின் நடத்தையில் விரும்பிய முன்னேற்றத்தை கொண்டுவர இயலும் என குறிப்பிடுகிறார்.
இந்த அறிவாற்றல் சிகிச்சையின் ஆரம்பகட்ட முன்னோடி வடிவத்தை பால்கிக்கு முன் யாரும் பயன்படுத்தியிருக்கவில்லை, மனச்சோர்வுக்கு அவர் பரிந்துரைத்த சிகிச்சை உளவியல் சிகிச்சையின் கருத்துக்களை எதிரொலிப்பதாக இருந்தது,
இசை சிகிச்சை மற்றும் ஒரு நபரின் உளவியல் நிலையை கவரக்கூடிய மென்மையான ஊக்கமளிக்கும் பேச்சு இவை இரண்டும் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதில் மிகவும் பயங்கரநிலையில் முரண்டுபிடிக்கும் நபர்களை கையாளும் போது சிகிச்சையளிப்பவர் தமக்கு தாமே பலமுறை பேசி, அவரை சரிக்கட்டுவதற்கான பயிற்சியை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடுகிறார்.
அந்த நபரின் மனநிலையின் தீவிரத்தை தணிப்பதை முதல் குறிக்கோளாக மருத்துவர் Self-talking எனும் நிலையை கையிலெடுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் . சிகிச்சையின்போது நோயாளியின் நண்பர் அல்லது நம்பிக்கைக்குரியவருடன் அமர்ந்து விவாதிக்க வேண்டும் எனவும் வெறித்தனமான எண்ணங்களையுடைய ஒரு நோயாளியை பிசாசு தீண்டி இருந்தாலும் அதற்கான சிகிச்சை பூமியிலேயே உண்டு என்றும் , ஒருவரின் தீய எண்ணங்களையே அவர் பிசாசு என்று குறிப்பிட்டு அந்த தீய எண்ணங்களுக்கான தீர்வினை அறிவாற்றலை கொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார்.
விளக்கங்களின் துல்லியம்
அல்-பால்கியின் காலத்திற்கு முன்பே கிரேக்கர்களால் மனச்சோர்வு அதாவது Depression பற்றிய பாதிப்புகள் அறியப்பட்டது, எழுதப்பட்டது. ஆனால்
அல்-பால்கியின் விளக்கங்களில் ஈர்க்கக்கூடிய விஷயம் என்னவென்றால், சுற்றுச்சூழல் -சூழ்நிலை காரணிகளால் ( Environmental – Circumstantial Factors) ஏற்படும் மனச்சோர்வு மற்றும் உள் உயிர்-வேதியியல் (Internal Biochemical factors) காரணிகளின் விளைவாக ஏற்படும் மனச்சோர்வு ஆகியவற்றை அப்போதைய காலகட்டத்தில் பகுபாய்வுகளுக்குட்படுத்தி ஆய்வு செய்துள்ளார். தற்போது இவற்றை ஆர்கானிக் டிப்ரஷன் என்கிற பெயரில் அழைக்கிறார்கள்.
அவர் எழுதிய ,விளக்க அளவுகோல்கள், மூர்க்கத்தனமான கட்டாயத்தில், மனநல கோளாறுகளின் நோயறிதல் (தன்மை மற்றும் வீரியத்துடன் ) மற்றும் புள்ளிவிவர கையேடு தற்போதைய தியரிகளோடு குறிப்பாக மனநல மற்றும் உளவியல் நோய்களின் பைபிள் எனப்படும் Diagnostic and statistical manual of Mental Disorders
(டி.எஸ்.எம்-வி ) ஆய்வறிக்கைகளோடு மறுக்கவியலாதபடி முழுதும் ஒத்துப்போகிறது.
மனநோயாளிகள் , தங்களது மனநலனை பாதிக்கும் தொடர்ச்சியான அதே சமயம் தேவையற்ற எண்ணங்களை தூண்டும் ஒரே மாதிரியான சிந்தனையில் இருக்கும்போது தான் அவர்களுடைய மூளை மற்ற விஷயங்களில் கவனயிழப்பு செய்கிறது.
சோகம் ,கவலை, இழப்பு ஆகியவற்றிலிருந்து மீண்டெழுந்து வராமல் அதே சிந்தனையில் சோர்ந்து அமரும் போது தான் முதல்காரணியான சூழலாலும் சூழ்ந்திருப்பவர்களாலும் நாம் மனநோயாளியாக்கப்படிகிறோம். அதற்கு இடங்கொடா வகையில் அன்றாட பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாலே அது கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கும் நமது மூளை என்கிறார் .
ஒருவர் தமக்கு தாமே எரிச்சலூட்டும் அல்லது தங்களது மனநிலையை வேறு வேலைகளில் ஈடுபடச் செய்யாமல் தடுக்கும் எண்ணங்களையும் தவிர்த்துவிட்டாலே தம்முடைய மனநலத்தை பெரிதும் பேணிக்கொள்ள இயலும் . அதுவல்லாது நமக்கே விவாகரமாக இருக்கும் எண்ணங்களை சுமந்துகொண்டு வலுகட்டாயமாக வேறு வேலைகளில் நாம் ஈடுபடும் போது அது மூளையிலும் உடலின் மற்ற பாகங்களிலும் தேவையற்ற ரசாயன சுரப்புகளை சுரக்கவிட்டு அது ரத்தம் வழியாக மூளைக்கு கடத்திவிடுகிறது.
வேண்டப்படாத சுரப்புகள் மூளையின் சுரப்போடு வினைபுரியும் போது அசாதாரணமான அல்லது இயற்கைக்கு மிகவும் மாற்றமான செயல்களில் அவர்கள் தங்களை அறியாமலே ஈடுபடுகின்றனர். பெண்களுக்கு பேய்பிடித்து ஆட்டுவதில் தொடங்கி மனிதர்கள் இயல்பிற்கு மீறி சில செயல்களை செய்ய தொடங்கி பைத்தியம் என்கிற பெயரை பெற்றுக்கொள்கின்கனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பெரும்பாலும் ஆழ்ந்த நித்திரையை தூண்டும் உறக்க மருந்துகளும் அவர்களது நரம்புகளின் வீரியத்தை குறைக்கும் வலிக்கொல்லி எனப்படும் பெயின்கில்லர்களுமே ஆகும்.
இந்த முடிவு அவர்களை எதார்த்த மனித வாழ்க்கையில் இருந்து அகற்றி…ஏதோ ஒரு குறைபாடு அடையாளமுள்ளவர்களாக அந்த நோய் சித்தரித்து விடுகிறது , நம்மை போல இன்பங்களையும் சுகங்களையும் அனுப்பவிப்பதில் இருந்து அவர்களை தூரமாக்கி விடுகிறது என்றும் கூறியுள்ளார். இவை அனைத்தும் இந்த காலத்திற்கும் பொறுந்திப்போகிறது தான் ஆச்சரியம்.
முடிவு
அல்-பால்கியின் பணி சந்தேகத்திற்கு இடமின்றி பல நூற்றாண்டுகள் (ஒரு முழு மில்லினியம்) முன்னதாகவே மனச்சோர்வின் வகைகள் அவற்றின் இடையில் இருக்கும் வேறுபடுகள் ஆகியவற்றை தெளிவாக வகைப்படுத்திய ஒரு மனோதத்துவ நூலாக தற்காலத்து உளவியல் நிபுணர்களால் அடையாளங்காட்டப்படுகிறது.
அல்-பால்கி தன்னை உளவியல் ரீதியாக ஈர்க்கக்கூடிய எல்லா வகையான விபரங்களை பற்றியும் நிபுணத்துவம் பெற்ற அறிக்கைகளாக தயார்படுத்தி வைத்திருந்தார்.
அவரது எழுத்தினூடே திருகுர்ஆனில் 2:10 ல் அறிவிக்கப்பட்டுள்ள மனோதத்துவம் சார்ந்த வாசகமான “.அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது” எனும் வசனத்தை சுட்டிக்காட்டி மனிதரின் உடலில் காய்ச்சல் , தலைவலி போன்ற சிற்சிறிய நோய்கள் அவ்வப்போது உண்டாவது போல மனித மனங்களிலும் தனிநபர் சார்ந்த போட்டி,பொறாமை சமூகம் சார்ந்த அவலங்கள், சீரழிவுகள் மற்றும் அவருக்கு அவரே பெருமை,ஆணவம் கொள்ளுதல் போன்ற நோய்கள் உண்டாகிறது என்பதனையும் அவற்றிலிருந்து உடனக்குடன் மீண்டெழுந்து உலக இன்பங்களில் கவனம் செலுத்தினால் மனநோயில் இருந்து பூரணமாக மீளலாம் எனவும் குறிப்பிட்ட அல்’பால்கி மனதில் உண்டான நோயை வெளிப்படுத்த தெரியாமல் அல்லது வேண்டுமென்றே சிலர் பேய்,பிசாசு,ஜின்களின் சேட்டை என்று கூறுவதையல்லாம் அபத்தம் என்றும் தெளிவாக வலியுறுத்துகிறார்.
தங்களால் செய்யவியலாத காரியங்களை அமானுஷ்யங்களின் துணையிருப்பதாக கூறி பிறரை பயமுறுத்தி அவர்களை அடக்கியாளவோ அல்லது தன்மார்த்த காரியங்களை சாதித்துக்கொள்ளவோ செய்கின்றனர். இது முற்றிலும் இயற்கை மற்றும் இஸ்லாத்திற்கு புறம்பானது என ஆயிரமாண்டுகள் முன்பே எழுதி வைத்தார் இந்த மனோதத்துவ விஞ்ஞானி.
அதுபோல மனோதத்துவ நிபுணர்கள் பற்றிய குறிப்பில் அவர்களால் அகக்கண் கொண்டு ஒருவரின் வலியின் உச்சத்தையும் மனநிலையின் ஆழத்தையும் வெகு சுலபமாக கண்டறிந்துகொள்ள இயலும். ஒருவரது பார்வையின் ஊடாக பயணித்து அவர்களது எண்ண ஓட்டங்களை அறிந்துகொள்ள இயலும் என்றும் சிறப்பித்துக்கூறுகிறார்.
உளவியல் நிபுணர் அல்லது நரம்பியில் (நியூரோ சயின்டிஸ்ட்) எனப்படுவோர் சிறந்த அறிவாற்றல் உடையவர்கள் என்றும் அவர்களது கருத்தில் பிறக்கும் அறிவுரைகள் நிச்சயமாக ஒரு நல்ல தீர்வினை அளிக்க கூடியது என்றும் கூறி முடிக்கிறார். உலகை ஆளும் ஒரு தலைசிறந்த அறிவாற்றல் மனோதத்துவம் தான் இது சமயவேறுபாடில்லாத ஒரு பொது அறிவியல் என்று கூறி முடிக்கிறார்.
இவர் கிபி.934ல் இயற்கை எய்தியதாக இஸ்லாமிய வரலாற்றாய்வாளரான இப்னு அல்’ நதீம் கூறுகிறார். மனோதத்துவவியல் போக இவருக்கு சோதிட சாஸ்த்திரம் மற்றும் அது தொடர்பான காலநிலை மாற்றங்கள் (Climate) பற்றியும் விரிவான ” சுவர் அல்’அகலிம்” எனும் நூலையும் இயற்றியுள்ளார் என அல்’நதீம் தெரிவிக்கிறார். அல்’பால்கியுடைய கருத்துக்கள் அத்தனையும் குர்ஆன் வசனங்களை பகுப்பாய்வு செய்தும் இமாம் புகாரி மற்றும் இமாம் ஹம்பலி ஆகியோரது ஹதீஸ் விளக்கங்களையும் அடிப்படையாக கொண்டது என்பது அவரது புத்தகத்தின் இடையிடையே அவர் குறிப்பிட்டுள்ள வாசகங்களை வைத்து அறிய முடிகிறது.
இஸ்லாமிய உலகம் தனது பொற்காலத்தின் போது கிடைக்கப்பெற்ற அரியபெரிய பொக்கஷங்களை போன்றதான அறிவிற்சிறந்த விஞ்ஞானிகளையும் அறிஞர்கர் பெருமக்களையும் , குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் வழியில் பயின்ற மண்ணுலக-விண்ணுலக பாடங்களையும், அவர்தம் சிந்தையில் பிறந்த சீர்மிகு கருத்துக்களை கொண்டு இயற்றிய ஞான நூல்களையும் சுமந்து என்றும் தலை நிமிர்ந்தே நிற்கிறது.
எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)