அறிவுதான் இறைவழிபாட்டின் நுழைவு வாயில் என்பதால் கல்வி கற்பதற்கும் கற்றுக் கொடுப்பதற்கும் இந்த பூமியில் தகுதியான இடம் பள்ளிவாசல் தான் என்பது இறைத்தூதர் (ஸல்) காட்டிய வழி. அதை அப்படியே பின்பற்றி உலக முஸ்லிம்கள் தங்களது வாழிடங்களில் பள்ளிவாசல்களை கட்டும் போது அதனுள் கல்வி நிறுவனத்தையும் அமைத்துக் கொண்டனர்.
8 ஆம் நூற்றாண்டு துவங்கி அரபு நிலங்களிலும் அல் அந்தலூஸ் என்ற இஸ்லாமிக் ஸ்பெயினிலும் முஸ்லிம்கள் நிறுவிய ஜாமியா என்ற பல்கலைக் கழகங்களைத் தேடி மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் வாழ்த்த கிருத்துவ உயர்குடி மாணவர்கள் மற்றும் மதபோதகர்கள் அதிகமானோர் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்வதற்கு வருகை தந்தனர்.
முஸ்லிம்கள் கட்டமைத்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருப்பதை அவர்கள் கண்டனர்.மட்டுமல்ல இஸ்லாமிய மார்க்கக் கல்வி பயின்ற உலமாக்கள் உலக கலைகளிலும் தேர்ச்சி பெற்ற அறிஞர்களாக அந்த பல்கலைக் கழகங்களை தலைமை ஏற்று நடத்தும் வேந்தர்களாக பொறுப்பு வகிப்பதை கண்டனர். பள்ளிவாசலின் தலைமை இமாமும் பல்கலைக் கழகத்தின் வேந்தரும் ஒருவராக இருப்பதை கண்டனர்.
மூன்று நூற்றாண்டுகள் கடந்தன.11 ஆம் நூற்றாண்டில் சிலுவை யுத்தங்கள் துவங்கின. சிலுவை யுத்தத்தில் பங்கெடுத்த ஐரோப்பியர்களும் அரபுலகத்தின் அறிவுத்துறை வளர்ச்சியை கண்டு பிரமித்துப்போய் நின்றனர்.அரபு பல்கலைக் கழகங்களில் பயின்ற ஐரோப்பிய மாணவர்களும் சிலுவை யுத்தத்தில் கலந்து கொண்டவர்களும் ஐரோப்பா திரும்பிச் சென்று ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கினர்.
முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்தியிருந்த அதே முறையை அவர்கள் பின்பற்றி தேவாலயங்களை அமைத்து அதனுள் கல்வி நிறுவனத்தை நிறுவினர். மட்டுமல்ல பாதிரியார் தான் தேவாலயத்தில் வழிபாடுகளையும் நடத்தினார் கல்வி நிறுவனத்தின் முதல்வராகவும் பொறுப்பு வகித்தார். இரண்டுக்கும் ஒருவரே தலைவர்.அல்லது இரண்டு பொறுப்பிற்கும் கல்வித்தகுதி ஒன்றுதான்.
ஐரோப்பாவின் முதல் பல்கலைக்கழகம் இத்தாலியின் போலோக்னா பல்கலை (AD – 1088) இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலை (AD -1096) கேம்பிட்ரிஜ் (AD -1209) பாரிஸ் பல்கலை (AD -1150) இப்படி இன்றைய உலகின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் அனைத்தும் 11 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவாக்கப் பட்டவையே. முஸ்லிம்கள் உருவாக்கிய பல்கலைக் கழகங்களை முன்மாதிரியாக கொண்டுதான் இவை அனைத்தும் உருவாக்கப்பட்டன. பாடப் புத்தகங்கள் கூட முஸ்லிம்களிடம் இருந்து பெறப்பட்டவை என்பது தனி செய்தி.
11 ஆம் நூற்றாண்டில் துவங்கிய இந்த வழக்கத்தை இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை உலகம் முழுவதும் திருச்சபைகள் பின்பற்றி வருகின்றன.
நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இந்த பாரம்பரியத்தை கிருத்துவ சகோதரர்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டு முஸ்லிம்களாகிய நாம் இன்று ஏறக்குறைய மறந்தே போய்விட்டோம். அந்தப் பாதையிலிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். இதுதான் இன்றைய முஸ்லிம் உம்மத்தின் இவ்வளவு பெரிய பின்னடைவிற்கான காரணம். தமிழகத்தில் பெருவாரியான முஸ்லிம் பிள்ளைகள் பள்ளிவாசல் இல்லாத பள்ளிக்கூடத்தில் தான் கல்வி கற்கின்றனர். அதை விட துயரம் முஸ்லிம்களால் நடத்தப்படும் பெரும்பாலான கல்வி நிறுவனங்களின் முதல்வர் பொறுப்பில் மார்க்கம் படித்த உலமாக்கள் இல்லை. அத்தகைய உயர் பொறுப்புகளை சுமக்கும் கல்வித் தகுதி மற்றும் நிர்வாகத் திறனுடைய உலமாக்களை உருவாக்கிடும் இலக்கும் முஸ்லிம்களிடம் இல்லை.
கடந்த 200 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு சமூக அரசியல் சம்பவங்களினால் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இழந்த நமது கல்விப் பாரம்பரியத்தை மீட்டெடுப்பது தான் உம்மத்தின் எழுச்சிக்கான முதன்மையான பணி.இன்று சகல வசதிகளோடு வாழும் நாம் இந்த வேலையைச் செய்யவில்லை யென்றால் வரலாற்றில் இன்றைய முஸ்லிம் சமூகம் குறித்து மிக வருந்தத்தக்க செய்திகள் இடம்பெற்று விடும் என்பதை மறுக்க இயலாது.
– CMN Saleem