இன்றைய சர்வதேச சட்டங்களிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் பிரிவுச் சட்டங்களிலும் நீதி பலவீனமாகவும் பக்கச்சார்பாகவும் இருப்பதை பரவலாக காணமுடிகிறது.
ஐரோப்பாவில் கி.மு. கி.பி.யில் நிலைபெற்றிருந்த ரோமப் பேரரசின் சட்டங்களைப் பின்பற்றி 13 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்ட மேக்னா கார்டா (Magna Carta ) போன்ற ஒப்பந்தங்களின் பின்புலத்தில்…..
…….மத்தியகால மன்னராட்சியில் ஐரோப்பியர்களின் இயல்பிற்கும் வாழ்க்கை முறைக்கும் பொருந்திப் போகும் வகையில் உண்டாக்கிக் கொண்ட ஒழுங்குமுறைகள், ஒப்பந்தங்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட தனிமனித உரிமைகள், இவைதான் இன்றைய பிரிட்டிஷ் பொதுச் சட்டம் (Common Law) மற்றும் ஃபிரெஞ்சு சட்டம் (Law of France) என்று அழைக்கப்படுகின்றன.
இந்த சட்டங்கள் மற்றும் நீதியியல் பரிபாலன முறைகள் ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட இன்றைய பதிப்பு தான் தற்போது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் உள்ளவை.மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் உள்ளிட்ட ஏறக்குறைய உலக நாடுகள் அனைத்திலும் கூடுதலாகவோ குறைவாகவோ இந்த சட்டங்கள் தான் ஆட்சி செலுத்துகின்றன.
தத்துவங்கள் (Philosophy) மரபு வாழ்வியல் (Customs) இவற்றிலிருந்து தான் சமூகத்திற்கு பெரும்பாலான சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.இவை இரண்டும் தான் சட்ட மூலாதாரங்கள்.
ஐரோப்பிய தத்துவங்கள் பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ ஆதிக்க மனநிலை கொண்டவை. அவர்களின் வாழ்வியல் முறை பெரும்பாலும் உலகின் பிற மக்களை துன்புறுத்தி அவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டு சொகுசாக வாழும் வாழ்க்கைமுறை என்பதை உலக வரலாறும் நிகழ்கால சம்பவங்களும் சாட்சி கூறுகின்றன.
இப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்கு சொந்தமானவர்கள் உருவாக்கும் சட்டங்கள் ஒப்பந்தங்கள் ஒழுங்குமுறைகள் உள்ளடக்கிய இவர்களின் கல்விமுறை போன்றவற்றில் உயர்வான நீதி இருக்கும் அது மனித இனத்தை சமநிலையோடு அணுகும் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்.
இன்றைய எதாரத்த சூழலில் இவர்களுடைய சட்ட முறைமைகளை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்பது ஏற்றுக்கொள்ள கூடியது தான்.ஆனால் அதுதான் சரியானது அல்லது அதுமட்டுமே சரியானது என்ற சிந்தனைப் போக்கு உருவாவது மிகப்பெரிய பாவம்.
குறிப்பாக முஸ்லிம்களிடம் இந்த சிந்தனைப் போக்கு ஏற்படுவது மிகவும் ஆபத்தானது.இம்மை மறுமை வாழ்விற்கு ஊறு விளைவிக்கக் கூடியது.
உலகில் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு குற்றங்கள் அதிகரித்து வருவதற்கும், பெரும்பாலான மக்களுக்கு நீதித்துறையாலேயே அநீதி இழைக்கப்படுவதற்கும் ஐரோப்பிய சட்ட மூலாதாரங்களில் காணப்படும் சமநிலையற்ற தரம் குறைந்த நீதி தான் காரணமாக இருக்கிறது.
நமது வாழ்க்கைக்கும் நாட்டிற்கும் தேவையான சட்டங்கள் எதிலிருந்து யாரிடமிருந்து எடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தத்துவத்தில் உண்மையும் நேர்மையும் சமூகநீதியும் இல்லையென்றால்,சட்ட மூலாதாரங்களில் (Source of Law) நீதியின் தரம் குறைவாக இருந்ததென்றால் மனித சமூகத்தில் நீதியை எப்படி நிலைநிறுத்த முடியும்.குற்றங்கள் எப்படி குறையும்.
சரி.அப்படியென்றால் நீதி என்ற உயிர் கருத்தியலை முழுமைப்படுத்தும் உயர்தரமான சட்ட மூலாதாரம் எது?
உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும், உயிரற்ற இயற்கை அமைப்புக்கும் ஒருசிறு பிசிறு இல்லாத சமநிலையான நீதி என்பது இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களிலிருந்து மட்டுமே எடுக்க முடியும்.
காரணம் நீதியின் மீதுதான் இஸ்லாமிய மார்க்கம் நிறுவப்பட்டுள்ளது.இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் உயிர்கள் அனைத்தையும் படைத்த இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்டவை. அவை ஐரோப்பிய சட்டங்கள் போல மனிதர்களில் ஆளும் வர்க்கத்தாலும் சீமான்களாலும் உண்டாக்கப்பட்ட சட்டங்கள் அல்ல.
இப்படி சொல்லுகின்றபோது முஸ்லிம் அல்லாத மக்கள் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறை வாழ்க்கையில் நிரூபிக்க சொல்வார்கள்.சமீபகால முன்மாதிரியை காட்டச் சொல்லுவார்கள்.அந்த சட்டங்கள் சமூகத்தில் உண்டாக்கும் விளைவுகளை சங்கிலித்தொடராக விவரிக்க சொல்லுவார்கள். அறிஞர்கள் அவையில் இஸ்லாமிய சட்டங்களை விரிவாக விவாதிக்க அழைப்பார்கள்.
வேதனை என்னவென்றால் நீதிக்குத் தலைவன் இஸ்லாம் மட்டுமே என்று நிரூபிக்கும் அறிவுப்பூர்வமான தகுதிநிலை முஸ்லிம்களிடம் வலிமையிழந்து போய் 200 ஆண்டுகள் ஆகிவிட்டன.அதனால் தான் தகுதியற்ற சட்டங்கள் எல்லாம் அரியணை ஏறி நம் தலைமேல் அமர்ந்துள்ளன.
இன்றைய சட்டக்கல்லூரி முஸ்லிம் மாணவர்களுக்கு கூட இஸ்லாமிய சட்ட மூலாதாரங்கள் குறித்தும் அவற்றை இன்றைய ஐரோப்பிய சட்டங்களோடு ஒப்பீடு செய்து புரிந்துகொள்ளும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்படும் சூழல் இல்லை.
நீதி குறைபாடுடைய ஐரோப்பிய சட்டங்களையும் அவற்றை தழுவி வகுக்கப்பட்ட இந்திய சட்டங்களையும் மட்டுமே நமது பிள்ளைகளை படிக்க வைத்து அதில் வல்லுனர்களாக உருவாவது எப்படி என்ற பயிற்சி மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களை பயிலும் மதரஸா மாணவர்களுக்கு இந்த உம்மத்தின் மீது இப்போது நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐரோப்பியரின் நீதி குறைபாடுடைய சட்டங்கள் குறித்த பயிற்சியும் விழிப்புணர்வும் வழங்கப்படுவதும் இல்லை.
200 ஆண்டுகளுக்கு முந்தைய மதரஸா கல்விமுறையில் இஸ்லாமிய சட்டங்களை படிக்கும் மாணவர்கள் அனைவரும் உலக சட்டங்களை ஒப்பீட்டு முறையில் கற்றனர்.அதனால் உலக சட்டங்களில் காணப்பட்ட குறைபாடுகளுக்கு மிகச்சரியான இஸ்லாமிய சட்டங்களை முன்வைக்கும் திறன் பெற்றிருந்தனர்.உலக சட்டங்களை நீதியை கொண்டு சுத்தப்படுத்தி எடுத்தனர்.
இன்று நம்மில் எத்தனையோ சிந்தனைப் பிரிவுகள் இஸ்லாத்தின் மேன்மைக்காக இயங்குகின்றன.ஆனால் எல்லா சிந்தனைப்பிரிவும் அநீதியான இந்த ஐரோப்பிய சட்டங்களில் திருப்தியடைந்து விட்டதை விதி என்று தான் சொல்ல வேண்டும்.
அறிவுசார் துறையில் இன்றைய முஸ்லிம் சமூகம் ஆற்ற வேண்டிய பொறுப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பட்டியலை படித்தால் நமது உள்ளம் நம்மை உறங்க விடாது.
-CMN SALEEM