தடைகளை தகர்த்த லோயி அல்பஸ்யூனி.

by Mohamed Anas

அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் செவ்வாய் கோளின் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் (Perseverance) என்ற ரோபோவில் இணைக்கப்பட்டிருந்த இன்ஜினியுட்டி (Ingenuity) என்ற சிறிய ரக வானூர்தியின் உந்துவிசை அமைப்பை வடிவமைத்த குழுவில் லோயி அல்பஸ்யூனி என்ற இளைஞரும் இடம்பெற்றுள்ளார்.

மின் பொறியாளரான லோயி அல்பஸ்யூனி பூமியின் நரகமாக மாற்றப்பட்டுள்ள பாலஸ்தீன் நாட்டின் காசா பிராந்தியத்தில் பெய்த் ஹனூன் என்ற பகுதியில் பிறந்தவர்.

அமெரிக்காவின் கென்டகி பல்கலைக்கழகத்தில் அல்பஸ்யூனி மின் பொறியியல் படிக்கின்ற போது பாலஸ்தீனில் இவரது குடும்பத்திற்கு வருவாய் தந்து கொண்டிருந்த பழத்தோட்டத்தை இஸ்ரேலிய இராணுவம் அழித்துவிட்டது.

படிப்பிற்கு கட்டணம் செலுத்த இயலாத சூழலில் தெருவோர தேனீர் கடையில் பணியாற்றிக் கொண்டே படித்தவர்.

6 ஆண்டுகள் நாசாவிற்காக பணியாற்றி இந்த இன்ஜினியுட்டி வானூர்தியை வடிவமைத்தோம்.
நாங்கள் வடிவமைத்த வானூர்தி செவ்வாய் கோளில் பரந்த செய்தி நடுஇரவில் எனக்கு கிடைத்த போது மகிழ்ச்சியில் நான் எழுப்பிய ஆரவாரத்தில் நான் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவரும் விழித்தெழ வேண்டிய நிலை ஏற்பட்டது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தந்தது என்று அல்பஸ்யூனி கூறுகிறார்.
 உயர்கல்வி ஆராய்ச்சி என்று எந்த வாய்ப்புகளும் இல்லாமல் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் பாலஸ்தீனியர்கள், இதுபோன்று மண்ணின் மைந்தர்கள் சிலருடைய சாதனை செய்திகள் வருகின்றபோது அதை அசாதாரணமாக கொண்டாடுகின்றனர்.

வரலாற்றின் இடைக்காலத்தில் அரபுலக முஸ்லிம்கள் கோலோச்சியிருந்த வானியல் ஆராய்ச்சி மரபுகளை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு துனீசியாவின் முஹம்மது ஆபித் பாலஸ்தீனின் அல்பஸ்யூனி போன்ற இளையத் தலைமுறையின் வருகை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

– CMN சலீம்

Related Posts