அஷ்ஷெய்க் உமர் முக்தார் அல் செனூசி.

by Mohamed Anas

செப் .16.1931.உமர் முக்தார் அவர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்.

வரலாற்றுச் சம்பவங்களை அல்லது வரலாற்றில் பதிவை ஏற்படுத்திய புரட்சி வீரர்களை வாசிக்கின்ற போது இரண்டு வகையான அனுபவங்களை பெற்றுக் கொள்கிறோம்.

முதலாவது : மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பெருமூச்சு விட்டு சோகத்துடன் ” உச்” கொட்டி கடந்து செல்வது. இரண்டாவது : மனிதன் என்ற முறையில் உணர்ச்சி வசப்பட்டாலும் அந்த சம்பவங்களில் இருந்து நமது எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான படிப்பினைகளை பெற்றுக் கொள்வது.

நம்மில் அதிகப்படியானவர்கள் முதல் வகையை சார்ந்தவர்கள் தான்.அது தவறல்ல.ஆனால் இரண்டாவது  நிலையை நோக்கி பக்குவமாக முதிர்ச்சியடைய வேண்டும் என்பது மிக முக்கியம்.

வரலாற்றுச் சம்பவங்களை,வரலாற்றில் வாழ்ந்தவர்களை விருப்பு வெறுப்பின்றி விமர்சன கண்ணோட்டத்துடன் (Critical Thinking) அணுகும் முறையால் மட்டும் தான் நமது வாழ்க்கைக்கான படிப்பினைகளை பெற முடியும். 

வட ஆப்ரிக்காவில் அமைந்துள்ள லிபியா நாட்டின் பாலைவன குக்கிராமத்தில் 1858 லிருந்து செப்.16 1931 வரை வாழ்ந்த அரபு இனத்தில் பிறந்த குர்ஆன் பாடசாலை ஆசிரியர் மற்றும் செனூசி தரீக்கத்தின் ஆன்மிகத் தந்தை உமர் முக்தார் அவர்கள் உயிர் தியாகியாக உயர்ந்து உலக மக்களால் போற்றப் படுபவராக மாறிய வரலாற்றை வாசித்தால், Lion of Desert திரைப்படத்தை பார்த்தல் நிச்சயம் உணர்ச்சி வசப்பட்டு உடல் சிலிர்த்து தான் போவோம்.

தூக்கிலிடப்படும் இறுதிக்காட்சியில் பார்ப்பவர்களின் கண்களில் நீர்பெருகுவதை யாராலும் தடுக்க இயலாது தான்.

ஆனால் முறையான இராணுவப் பயிற்சி இல்லாத உமர் முக்தார் அவர்களின் ஒரு சிறிய குழு இவ்வளவு வலிமை பொருந்திய இத்தாலிய பாசிச இராணுவத்தை எதிர்த்து ஏன் போரிட வேண்டும் ? இந்த கொரில்லா போரில் உமர் முக்தார் தோற்றதற்கான காரணங்கள் என்ன? அதன் மூலம் இந்த உம்மத்திற்கு கிடைக்கும் படிப்பினைகள் என்ன? என்று,  வரலாற்றுச் சம்பவங்களுக்கு அல்குர்ஆன் வகுத்துத் தரும் இலக்கணத்தின் நிழலில் நின்று ஆராய்ந்தால் நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கும்.

18 ஆம் நூற்றாண்டு வரை இந்த உலகின் பெரும்பகுதி நிலங்களை ஆட்சி செய்த முஸ்லிம் பேரரசுகள் அடுத்து வந்த 200 ஆண்டுகளில் பலவீனப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக சீட்டுக் கட்டுகள் போல சரிந்து விழுந்ததை வரலாறு நமக்கு வெளிச்சமாக்குகிறது.

உதுமானிய பேரரசு முகலாயப் பேரரசு திப்பு சுல்தான் குறுநில நவாபுகள் வீரம் செறிந்த சில தரீக்காக்கள் உள்ளிட்ட அணைத்து தலைமகன்களும் வீழ்ந்து உம்மத்தை அனாதையாக தவிக்க விட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் ஆங்காங்கே வாழ்ந்த சிறு குழுக்கள் ஆயுதம் ஏந்திப் போராடி இறுதியில் அவர்களும் ஷகீதாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

உம்மத்தின் இவ்வளவு பெரிய உலகளாவிய வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. ஆனால் 14 -17 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி காலத்தையம் (European Renaissance) அதன் தொடர்ச்சியாக 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் (Industrial Revolution) தாக்கத்தையும் சரியாக கணிக்காததும், அவற்றின் முடிவில் ஐரோப்பியர்கள்  இராணுவ ரீதியாக அடைந்த அசுர வலிமையை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ளாததும் மிக முக்கியமான காரணங்கள்.

முஸ்லிம் பேரரசுகள் கலை இலக்கியத்தில், கட்டிடக் கலைகளில் காட்டிய ஆர்வத்தை செலவழித்த செல்வத்தை கல்வியிலும் அறிவியல் ஆராய்ச்சிகளிலும் ஆயுத உற்பத்தியிலும் காட்டியிருந்தால் ஒருவேளை வரலாறு மாறிப் போயிருக்கும் என்று சிந்திப்பது தான் நடந்து முடித்த சம்பவங்களில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் படிப்பினைகள்.

இத்தாலிய இராணுவம் நாடுபிடிப்பதற்கு 1911 இல்  லிபியாவின் கடற்கரை நகரங்களான திரிபோலி மற்றும் பெங்காசியை தாக்கியபோது தன் நிலத்தை பாதுகாக்க வேண்டிய உதுமானிய பேரரசின் இராணுவம் பலவீனமான நிலையில் பின்வாங்கி ஓடியது.

முன்னேறிய இத்தாலிய இராணுவம் பாலைவன கிராமங்களில் வாழ்ந்த பெண்கள் பிள்ளைகள் உள்ளிட்ட பொதுமக்களை கொன்று குவித்தது. மக்களின் பாதுகாப்பிற்கு எதிர்த்தாக்குதல் நடத்த வேண்டிய மார்க்கக் கடமையை சுமந்த முஸ்லிம்கள் உமர் முக்தார் அவர்களின் தலைமையில் செனூசி தரீக்கத்தின் கொரில்லா படையாக திரண்டனர்.

இரவு முழுவதும் தொழுகையிலும் திக்ரிலும் பாவமன்னிப்பு வேண்டியும் அல்லாஹ்விடம் அழுது மன்றாடிவிட்டு விடிந்ததும் பசியில் ஒட்டிப்போன வயிற்றுடன் ஓலமிடும் தன் மக்களை காக்க கையில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு எதிரிகளை தாக்கினர்.

பாசிச முசோலினியின் இத்தாலிய இராணுவம் அன்றைய கால நவீன போர் விமானங்கள் தானியங்கித் துப்பாக்கிகள் பிரம்மாண்ட பீரங்கி டாங்கிகள் கொண்டு தாக்கியபோது கொக்கு குருவி சுடும் உளுத்துப்போன துப்பாக்கிகளை கொண்டு உமர் முக்தாரின் கொரில்லா படை எதிர் தாக்குதல் நடத்தியது.இறுதியில் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பேரழிவாக முடிந்தது.

எந்த நேரமும் உங்களது ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருங்கள் என்ற இறை எச்சரிக்கை உதுமானிய,முகலாயப் பேரரசுகளின் நினைவில் இல்லாமல் போனதால் உம்மத்திற்கு இந்தப் பேரழிவுகள் ஏற்பட்டன.

உலகை முன்நகர்த்தும் முதன்மைச் சமூகமாக முஸ்லிம்களின் தகுதி இருக்க வேண்டும் அல்லது உலக மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன் இருக்க வேண்டும்.இந்த இரண்டு நிலைகளிலும் இல்லாமல் இருக்கும் முஸ்லிம்கள் அழிவுகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைத் தான் உமர் முக்தார் போன்ற உயிர் தியாகிகளின் வீர வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

ஆன்மிகமும் நவீன அறிவியலும் இருகண்கள் என்பதை அடிமனதில் ஆழமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஒன்றைவிட்டு ஒன்றை பிடித்தால் அது உம்மத்தின் உயிருக்கும் உடமைக்கும் உலைவைத்துவிடும்.

– CMN SALEEM

Related Posts

Leave a Comment