மந்தி உணவகங்கள். பெருகும் புதிய தொழில் வாய்ப்புகள்

by Mohamed Anas

மனிதர்களின் ஆசைகளும் ரசனைகளும் மாறிக்கொண்டே இருக்கும்.

கடந்த 40 ஆண்டுகளில் தமிழக முஸ்லிம்களின் வாழ்க்கைமுறை குடும்பவியல் உணவு உடை தொழில் முறைகள் உள்ளிட்ட கலாச்சாரம் மற்றும் பொருளீட்டலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை பார்க்கமுடிகிறது.

அரபுலகம் சென்று பொருளீட்டும் நடவடிக்கைகள்   அதிகரிக்கத் துவங்கிய பிறகு நமக்கு பிடித்தமான ஏராளமான விஷயங்களை அரபுகளிடமிருந்து இறக்குமதி செய்து நமது வாழ்க்கை முறைக்குள் அங்கப்படுத்திக் கொண்டு வருகிறோம்.

குறிப்பாக நமது உணவு முறைகளில் அரபுலக இறக்குமதி ஐட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

ஷவர்மா சுட்டக்கோழி மந்தி கப்ஸா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பாரம்பரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் உணவகங்கள் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம் ஊர்களில் பெருகி வருகின்றன.

தமிழகத்தில் அது ஒரு பெரிய வணிக சந்தையாக வளர்ந்து வருவதையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பெரும்பாலும் சகனில் கூட்டாக அமர்ந்து உண்ணும் கலாச்சாரத்தை இந்த வகை உணவுகள்  முன்னிறுத்துவதால் முஸ்லிம்கள் தான் இதை அதிகமாக உண்ணுகின்றனர். உணவகங்களையும் முஸ்லிம்கள் தான் அதிகமாக நடத்துகின்றனர்.

அரபுலக தொடர்புடைய பிற சமூக மக்களிடம் இப்போது தான் இவை விரும்பப்பட்டு இளைஞர்களிடம் இந்த உணவு கலாச்சாரம் அதிகரித்து வருகின்றன.

இந்த உணவகங்களை நடத்தி வருவோரும் புதிதாக துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளோரும் ஒரு அமைப்பாக ஒன்றிணைந்து ஒரு தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு நமது மார்க்கத்திற்கும் மண்ணிற்கும் ஏற்ற உணவு நெறிமுறைகளை கூட்டாக வகுத்துக் கொண்டு இயங்கினால் அடுத்த சில ஆண்டுகளில் இந்த துறையில் நூற்றுக்கணக்கான உபதொழில்களை வளர்த்தெடுக்க முடியும்.

விவசாயம்,கால்நடை,தீவன உற்பத்தி,மசாலா தயாரிப்பு,போன்றவற்றில் நூற்றுக்கணக்கான புதிய தொழில்களும் புதிய முதலாளிகளும் சமூகத்தில் உருவாகும் வாய்ப்புள்ளது.

ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிட முடியும்.குறிப்பாக கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியை கொண்டுவர இயலும்.

எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தின் முன்னெடுப்பாக மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே அதற்கு பாதுகாப்பு கிடைக்கும். அதன் பலன் பரவலாக இருக்கும்.அது காலங்களை கடந்து பல தலைமுறைகளுக்கு நீடித்து நிற்கும்.

வளர்ந்து வரும் இந்த தொழிலில் தொடர்ச்சியான ஆராய்ச்சி திட்டமிடல் மேம்படுத்துதல்  ஆகியவற்றை மேற்கொண்டு வந்தால் அடுத்த பத்தாண்டுகளில் ஒரு மகத்தான வணிக கட்டமைப்பாக இதை உருவாக்கி விடலாம்.

ஒவ்வொரு புள்ளியிலும் தூரநோக்கோடு மிக ஆழமாக சிந்தித்து வளர்த்தெடுக்க வேண்டிய இலாபகரமான தொழில்.

எழுத்தாளர் :- CMN Saleem

Related Posts