கள்ளர் மறவர் அகமுடையார் ஆகிய மூன்று பிரிவினரும் உள்ளடங்கிய முக்குலத்தோர் சமுதாய மக்கள் தங்களின் குடும்ப சமூக விழாக்கள் அனைத்திலும் முதல்மரியாதை செய்யவேண்டியது முஸ்லிம்களுக்குத் தான்.
தமிழகத்தில் இந்த மூன்று பிரிவினரின் வாழ்வோடும் வரலாற்றோடும் பின்னிப்பிணைந்த ஒரு சமூகம் முஸ்லிம்கள் மட்டும் தான்.முஸ்லிம்கள் மட்டும் தான் அவர்களுக்கு இரத்த உறவுகளாகவும் இன உறவுகளாகவும் இருக்கின்றனர்.
உங்களது குடும்ப சமூக விழாக்கள் அனைத்திலும் எங்களைத் தான் முதலில் கண்ணியப்படுத்த வேண்டும் நாங்கள் தான் உங்களின் இனப் பங்காளிகள் என்று இந்த மூன்று சமூகத்தவரிடமும் கேட்கும் வரலாற்று உரிமை இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
மறவர் சமூகத்தின் சேதுபதி மன்னர்களுக்கும் வீரத்தாய் வேலுநாச்சியாருக்கும் தூணாகவும் துணையாகவும் நின்று உயிர்த்தியாகம் செய்ததில் முஸ்லிம்களைத் தாண்டி ஒரு சமூகம் இந்த நாட்டில் கிடையாது என்பதை இராமநாதபுரம் சிவகங்கை அரண்மனைகளின் பதிவேடுகளும் திண்டுக்கல் கோட்டையும் பறைசாற்றுவதை யாராலும் மறைக்க இயலாது.
பாரம்பரியமான அந்த இனத் தொடர்ச்சியின் பின்புலத்தில் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் வரலாற்றையும் வாசிக்க வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தின் பண்ணையாரான மறவர் சமூகத்தின் உக்கிரபாண்டித் தேவர் அவர்கள் இந்த குடும்ப சமூக வரலாற்றுத் தொடர்புகளை நன்கு அறிந்தவர்.தாயில்லாமல் தவிக்கும் தன்பிள்ளை முத்துராமலிங்கத்திற்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு இஸ்லாமிய பெண்மணியான ஆயிஷா பீவியை தேர்வு செய்ததில் ஆயிரம் பண்பாட்டு காரணிகள் இருக்கின்றன.
கிராமங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இதை கையாளுவார்கள்.
தாய்ப்பால் என்பது வெறும் உணவு மட்டுமல்ல.ஆயிஷா பீவி இரத்தத்தில் சுமந்து கொண்டிருந்த மகத்தான பண்பாட்டின் உயிர் விதை அது.
பிற்காலத்தில் முத்துராமலிங்கத் தேவர் நாடறிந்த சமூக அரசியல் தலைவராக உயர்ந்து நின்றதற்கு ஆயிஷா பீவி தன் பாலோடு புகட்டிய இஸ்லாமிய பண்பாடும் வீரமுமே அடிப்படையாக இருந்ததை மறுக்க முடியாது.
நாடு பிரிவினையின் போதும் காந்தியை கொலை செய்துவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்ட போதும் சங்கிகளை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் முன்வரிசையில் நின்றதற்கு ஆயிஷா பீவி ஊட்டிய உணர்வே அடிப்படையாக இருந்தது.
தேவர் குருபூஜை கொண்டாடும் முக்குலத்து சமுதாய மக்கள் தங்கள் இனத்தின் தொடர்ச்சியாகவும் இரத்த உறவுகளாகவும் இருக்கும் முஸ்லிம்களுக்குத் தான் முதல் மரியாதையை செய்ய வேண்டும் என்பது பங்காளிகளின் உரிமை தொடர்பான கோரிக்கை.
வரலாற்று உண்மைகளை திரித்து சமூகங்களுக்கிடையே வெறுப்புகளை விதைப்பதை சங்கிகள் முழுநேர தொழிலாக செய்வதால் மக்களின் நினைவுகளில் உண்மை செய்திகளை மீள்பதிவு செய்யவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
பசும்பொன் முதுகுளத்தூர் கமுதி அபிராமம் போன்ற பகுதிகளை சேர்ந்த வரலாற்று மாணவர்கள் முத்துராமலிங்கத் தேவருக்கும் முஸ்லிம்களுக்குமான குடும்ப பண்பாட்டு சமூக உறவுகளை ஆதாரங்களோடு ஆவணப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல கள்ளர் சமூகம் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு சுன்னத் என்ற விருத்த சேதனம் செய்வதையும் அந்த சமூகத்தின் மகத்தான தலைவர் மூக்கையாத் தேவர் அவர்களுடனான முஸ்லிம்களின் உறவுகள் குறித்தும் உசிலம்பட்டி ஆண்டிப்பட்டி பெரியகுளம் பகுதி முஸ்லிம்கள் உடனான கள்ளர் சமூகத்தின் இனத் தொடர்புகள் குறித்துமான சமூகவியல் ஆய்வுகள் இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது.
அதேபோல அகமுடையார் சமூகத்தின் வீர அடையாளமாகத் திகழும் மருது சகோதர்களின் படைத் தளபதியாக அரண்போல காத்து நின்று வீரப்போர் புரிந்து பின்னாட்களில் பினாங்கு தீவில் பட்டினியால் சாகடிக்கப்பட்ட ஷேக் ஹுசைன் அவர்களின் வரலாற்றை காளையார் கோவில் வரலாற்றிலிருந்து பிரித்துவிட முடியாது.
நமது கவனங்கள் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஆக்கப்பூர்வமான பாதைக்கு திரும்பட்டும்.
எழுத்தாளர் :- CMN Saleem