உம்மத்தின் பாதுகாப்பிற்கு அரணாக இருப்பதும் உம்மத்திற்குள்ளிலும் வெளியிலும் அமைதியை நிலை நிறுத்துவதும் தான் ஒரு உண்மையான இஸ்லாமிய செயற்பாட்டாளனின் பொறுப்பு.
மகிழ்ச்சிகரமான இந்த ரபீவுல் அவ்வல் மாதத்தில் முஸ்லிம் வீடுகளிலும் மஹல்லாக்களிலும் சுற்றிவாழும் சமூகத்திலும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் விழாக்களை சமூக செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்க வேண்டும்.
மன அமைதியுடைய மனிதர்கள் வாழும் சமூகத்தில் மட்டுமே ஆன்மிக பண்பாட்டு பொருளாதார அபிவிருத்திகள் செழுமையடையும்.
உம்மத்திற்குள் அமைதி நிலவவில்லையென்றால் வெளியிலிருந்து வரும் ஆபத்துக்களை யாராலும் தடுக்க இயலாது.அது உம்மத்தை வசமாக பதம் பார்த்து விடும். வடக்கே அது தான் நடக்கிறது.
உம்மத்தின் அமைதி என்பது தனிப்பட்ட முஸ்லிமுடைய மன அமைதியிலிருந்து துவங்குகிறது. இந்த உலகத்தில் மனித உள்ளங்களுக்கு அமைதியை தரும் சித்தாந்தங்களில் இஸ்லாமிய மார்க்கம் முதல் நிலையில் நிற்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் தமிழக முஸ்லிம் குடும்பங்களில், அவர்களுக்கு மத்தியிலான உறவாடல்களில்,சமூக அமைப்புகளின் இயங்குதலில் எங்கும் எதிலும் யாரிடமும் அமைதி இல்லாத சூழலை கவலையோடு பார்க்கின்றோம்.
இதற்கான காரணங்களை ஆராய கடமைப் பட்டுள்ளோம்.
உறுதியான இறைநம்பிக்கையும் ஆழமான ஆன்மிகத் தேடல்களும் உளமார்ந்த வணக்க வழிபாடுகளும் மன அமைதிக்கான நுழைவு வாயில் மட்டும் தான். இவை மட்டுமே முழுமையான மன அமைதியை தந்துவிடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கருத்து.
கரடுமுரடாக மாறிவரும் உம்மத்தில் உள்ளங்களை மென்மைப்படுத்தும் பயிற்றுவிப்புகளையும் கலாச்சார விழாக்களையும் மீளெழுச்சி பெற வைப்பதிலிருந்து துவங்குவது தான் இதற்கு சரியான தீர்வாக அமையும்.
முஸ்லிம்களின் சிறப்பிற்குரிய நாட்களில் மாதங்களில் ஷரீஅத்திற்கு உட்பட்ட கொண்டாட்டங்களை மஹல்லா மக்களிடம் தூண்ட வேண்டிய பொறுப்பு விசால சிந்தனையுடைய ஆலிம்களுக்கும் மொழி கலாச்சாரம் போன்ற பண்பாட்டுத் தளங்களில் இயங்கும் அறிஞர்களுக்கும் இருக்கிறது.
கலை இலக்கியம் மொழி விளையாட்டுகள் உள்ளிட்ட பண்பாட்டு கூறுகள் மனிதனிடம் காணப்படும் பகட்டு வாழ்வை அகற்றி மனித மனங்களை பஞ்சு போல மென்மையாக்கித் தந்திடும் அல்லாஹ்வின் அருட்கொடைகள்.
உலகின் ஞான ஆசானாக திகழும் உத்தம தூதர் பிறந்த ரபீவுல் அவ்வல் மாதத்தை நம்மோடு வாழும் அனைத்து மக்களோடும் இணக்கமாக கொண்டாடி மகிழ்வதற்கு அனுமதிக்கப்பட்ட கொண்டாட்ட முறைகளை ஆலிம்கள் வகுத்துத்தர வேண்டும்.
ரபீவுல் அவ்வல் மதம் முழுவதும் அனைத்து சமூகத்தின் ஏழைகளுக்கும் பள்ளிவாசல்களில் அன்னதானம் செய்வது, விவசாயிகளுக்கு விதைநெல் உரங்கள் போன்றவற்றை பெருமானாரின் பெயரில் அன்பளிப்பாக வழங்குவது,
இஸ்லாமிய வாழ்வியல் குறித்த சிறுகதை கவிதை கட்டுரைப் போட்டி போன்ற இலக்கியப் போட்டிகள் நடத்துவது,ஷரீஅத் வாழ்க்கை முறை குறித்த ஆய்வரங்கம் ஏற்பாடு செய்வது, இஸ்லாமிய நாகரிகம் குறித்த கண்காட்சிகள் அமைப்பது,
மரம் நடுவது, மழைநீர் பாதுகாப்பு,சுற்றுச்சூழல் மேம்பாடு, மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளை நலம் விசாரிப்பது, அணைத்து சமுதாய ஏழைப் பெண்களுக்கும் கூட்டுத் திருமணம் ஏற்பாடு செய்வது, குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்றித் தருவது என இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களின் நேசத்திற்குரிய செயல் தானே.
இன்னும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம்களின் உணவு திருவிழாக்களை நடத்தி நமது பாரம்பரிய உணவு பதார்த்தங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துதல், பெண்கள் பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், இளைஞர்களுக்கான கபடி வாலிபால் பேட்மிட்டன் நீச்சல் தொடர் போட்டிகள் இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
இதையெல்லாம் யாராவது தூண்ட வேண்டும். தூண்டாமல் சமூகத்தில் நடைபெறாது.விழாக்கள் என்ற பெயரில் ஷரீஅத்தின் எல்லையை மீறும் போது கண்டிக்கும் பொறுப்பை சுமக்கும் அறிஞர்கள் மற்றும் சிந்தனைப் பிரிவு அமைப்புகள் நல்லதையும் தூண்ட வேண்டும்.
நான் குறிப்பிட்டுள்ள அத்துனை சேவைகளையும் கேரள முஸ்லிம்கள் தொடர்ந்து மஹல்லா ஜமாஅத் சார்பாக அங்கே செய்து வருகின்றனர்.அதனால் கேரள முஸ்லிம்களிடம் பண்பாட்டு கூறுகள் அதிகமாக இருக்கின்றன.உறவுகளின் சங்கமங்கள் அதிகமாக நடக்கின்றன. ஊர்புறங்களில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கியிருக்கிறது.
தொடர்ந்து அரசியல் போராட்டங்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான செய்திகள் என்று சமுதாயத்தை உணர்ச்சி கொதிநிலையிலேயே வைத்திருப்பது தான் எதிரிகளின் ஆகப்பெரும் சூழ்ச்சி அதை ஆன்மிகம் மற்றும் நமது பண்பாட்டு விழாக்கள் மூலம் முறியடிப்போம்.
அதற்கு ரபீவுல் அவ்வல் மாதம் மிகப்பொருத்தமான அருள் நிறைந்த மாதமாக இருக்கிறது.
எழுத்தாளர் :- CMN Saleem