சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரையில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆய்வில் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம் கிடைத்துள்ள செய்தியை ” இந்தியாவிற்கு இஸ்லாத்தின் அறிமுகம் தென்னகம் ” என்ற வரலாற்று ஆய்விற்கு ஒரு வலுவான ஆதாரமாக பார்க்க வேண்டும்.
இந்த செய்தியை வெளியிட்ட விகடன் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அந்த செய்தியில் இந்த நாணயத்தை 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் மட்டும் சற்று திருத்தம் தேவை. படிக்கின்ற நாமும் அதை அப்படியே பரப்பிவிடாமல் சற்று ஆய்வு செய்து நமக்கு கிடைக்கும் தகவல்களுடன் அதை ஒழுங்குபடுத்தி வெளியிடுவது சிறந்தது.
நபி (ஸல்) அவர்கள் நபியாக்கப்பட்ட ஆண்டு கி.பி 610. ஹிஜ்ரத் செய்த ஆண்டு கி.பி. 623.நான்கு கலீஃபாக்களின் ஆட்சி கி.பி.661 வரை நடந்துள்ளது. உஸ்மான் (ரலி) ஆட்சி காலத்தில் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சில்வர் நாணயங்கள் பாரசீகத்தில் முதன்முதலாக அச்சடிக்கப்பட்டு சிறிய அளவில் புழக்கத்திற்கு வந்தன. இவை அனைத்தும் நடந்தது 7 ஆம் நூற்றாண்டில் தான்.
அதன் பிறகு சிரியாவை தலைநகராக கொண்ட உமையாக்கள் ஆட்சியில் கலீஃபா அப்துல் மாலிக் மர்வான் (685–705) அவர்கள் காலத்தில் தான் தங்கம் சில்வர் கண்ணாடி போன்றவற்றில் இஸ்லாமிய அரசின் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தன.
இப்போது இலந்தக்கரையில் கிடைத்துள்ள நாணயம் ஏறக்குறைய கலீஃபா அப்துல் மாலிக் மர்வான் காலத்தில் புழங்கிய நாணயம் போல தோன்றுகிறது. (யூகம் தான்). அதனால் இந்த நாணயம் 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்திருக்கலாம்.
மூவாயிரம் ஆண்டுகளாக தமிழகத்திற்கும் மத்தியகிழக்கு நிலத்திற்குமான கடல் வாணிபம் நடைபெற்று வந்ததால் பூம்புகார் தொண்டி அழகன்குளம் ஆதிச்சநல்லூர் கொற்கை போன்ற துறைமுக நகரங்களில் அகழாய்வுகள் திறந்த மனதுடன் மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரலாம்.
நம்மீதான காழ்புணர்ச்சிகளுக்கும் திரிபுகளுக்கும் எதிர்வினையாக உண்மை வரலாற்றை தேடிப்பிடித்து முன்வைக்கும் இன்றைய நமது மனநிலை மாறவேண்டும். நாட்டின் வரலாற்றை நாம் எழுதும் நிலைக்கு நமது பிள்ளைகளை உயர்த்த வேண்டும்.
-CMN Saleem