எதிலெல்லாம் நோய்எதிர்ப்புத்திறன் இருக்கிறது என்று தேடித்திரியும் காலம் இது.இதற்காக எதையும் எவ்வளவு செலவானாலும் வாங்குவதற்கு தாயாராக இருக்கின்றோம்.
ஆனால் அல்லாஹ்வின் அன்பிலும் கருணையிலும் மனித உடலில் நோய்யெதிர்ப்புத் திறன் அளவில்லாமல் அதிகரிப்பதை பாருங்கள்.
கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்கின்றபோது. தனது நேசத்திற்குரிய துணையுடன் மகிழ்ச்சியாக நீண்டநேரம் உரையாடுகின்ற போது,அதன் நீட்சியாக நிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமைகின்ற போது…..
இருவரது உடலிலும் வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் அளவிற்கு எதிர்ப்புத்திறன் அதிகரிப்பதை நரம்பியல் உளவியல் துறை (Neuropsychology) ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.
அதை அல்லாஹ் திருமறையில் அற்புதமாக சொல்லிக் காட்டுகின்றான்.
” அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (ஸூரா: அல்-ரூம் 30:21).
திருமண ஒப்பந்தத்தில் இணையும் கணவன் மனைவியிடையே அன்பையும் கருணையையும் பெருகச்செய்யும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது என்று அடிக்கோடிட்டுக் காட்டுவதை நாம் எல்லா வடிவங்களிலும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்..
கணவன் தனது மனைவியை மகிழ்வுடன் வைத்துக் கொள்வதால் அவர்களுக்கு நீரழிவுநோய் மாரடைப்பு நுரையீரல் பாதிப்புகள் மற்றும் முதுமறதி (Alzheimer) உள்ளிட்ட நோய்களின் பாதிப்புகள் வெகுவாக குறைவதை இன்றைய நரம்பியல் உளவியல் துறை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
தாய் மனைவி மகள் என்று வீட்டிலுள்ள பெண்களிடம் அதிக நேரம் ஆண்கள் மனம்விட்டு பேசவேண்டும். இல்லையில்லை. அவர்கள் பேசுவதை நீங்கள் வாய்மூடி கவனமாக கேட்க வேண்டும்.நோய்கள் பெரும்பாலும் நெருங்காது.
ஆனால்…..
பெண்களை மனநிறைவு கொள்ளச் செய்வது எப்படி என்ற கேள்வி மட்டும் உலகம் அழிகின்ற காலம் வரை கேள்வியாகவே இருக்கும் போலத் தெரிகிறது.
– CMN SALEEM