சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 5.5 இலட்சம் வழக்குகளும், அதன் மதுரை கிளையில் 1.5 இலட்சம் வழக்குகளும்,தமிழக கீழ் நீதிமன்றங்களில் சுமார் 12 இலட்சம் வழக்குகளும் தற்சமயம் நிலுவையில் உள்ளன.
ஆதிக்க வர்க்கத்தின் சிந்தனையிலேயே அநீதிகள் நிரம்பியிருக்கும் (சாதீய சமூக பொருளாதார அடக்குமுறைகள்) நம் நாட்டில்,அநீதி இழைக்கப்பட்டவர்கள், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கை நீதித்துறை மட்டும் தான்.
நீதி தாமதமாவதால் வழக்கு செலவுகளுக்காக மக்களின் பொருளாதாரங்கள் சீரழிகின்றன.நீதிமன்ற வாசல்களில் நாள்முழுவதும் காத்துக்கிடக்கும் அநீதம் இழைக்கப்பட்ட ஒவ்வொருவரும் வயிறெரிந்து சாபமிடாமல் அந்த இடத்தை விட்டு விலகுவதில்லை.
இயற்கைப் பேரழிவுகள், விபத்துகள்,கோரமான மரணங்கள் இவைகள் அதிகரிப்பதற்கு இதுஒரு முக்கிய காரணம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
நீதித்துறை அறம்சார்ந்தும் விரைவாகவும் இயங்கும் வகையில் தமிழக அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு அதை சீரமைக்க வேண்டும்.
உலமாக்கள் அமைப்பு மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக அரசுக்கு முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளின் முதன்மை இடத்தை நீதித்துறை சீரமைப்பு வகிக்கிறது.
அது வெறுமனே கோரிக்கையாக இல்லாமல் ஓய்வுபெற்ற முஸ்லிம் நீதிபதிகள் கொண்ட குழு பரிந்துரைக்கும் நீதித்துறை சீரமைப்பு பரிந்துரைகளுடன் தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட வேண்டும்.
உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர் சேர்ந்து எழுதிய இந்திய நீதித்துறை (The Indian Judiciary) என்ற நூலில் இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சியில் தான் நீதி தாமதமில்லாமல் செலவில்லாமல் மக்களுக்கு கிடைத்தது என்ற கருத்தை பதிவு செய்துள்ளனர்.
நீதித்துறையை சீரமைக்கும் தகுதியில் மற்ற யாரைக் காட்டிலும் கொள்கைத்தகுதி முஸ்லிம்களுக்கே கூடுதலாக இருக்கிறது என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்ப வேண்டும்.
– CMN SALEEM