கீழ்திசை அறிதல் மரபிற்கும் மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

by Mohamed Anas

ஒரு நிகழ்வை கோட்பாட்டை அல்லது சட்டத்தை மேற்குலக மக்களின் புரிதலுக்கும் பின்பற்றுதலுக்கும் கீழ்திசை மக்களாகிய நாம் புரிந்து பின்பற்றுவதிலும் வேறுபட்ட  இயல்புகள் உள்ளன. வாழ்க்கை முறையின் பின்புலத்தில் அமைந்துள்ள இந்த அறிதல் மரபிற்கு ஏற்றவாறுதான் மனித சமூகங்கள்  வினையாற்றும்.  

உதாரணத்திற்கு :

வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்வதிலும் அதை தலைமுறைகளுக்கு கடத்துவதிலும் ஐரோப்பியர்களின் அறிதல் மரபு அவர்களின் வாழ்க்கை முறையின் பின்புலத்தில் அமைந்திருப்பதை பார்க்கலாம்.

தங்களுடைய  கிருத்துவ நாட்காட்டி கணக்கின்படி நடைபெற்ற சம்பவங்கள் நேரம் நாள் தேதி ஆண்டு சம்பவத்திற்கான காரணங்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவம் ஏற்படுத்திய விளைவுகள் இறுதியாக அந்த சம்பவத்தை பதிவுசெய்த நபரின் கருத்தோட்டம் ஆகியவற்றை படிநிலைகளாக தொகுப்பது தான் மேற்குலகத்தின் வரலாற்றுத் துறை சார்ந்த அறிதல் மரபு.

போர்ச்சமூகமான ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் படையெடுத்து சென்று அடுத்தவர் நிலங்களை ஆக்கிரமித்து சொத்துக்களை சூறையாடி சொகுசு வாழ்க்கை நடத்தும் இயல்பைக் கொண்டவர்கள்.இந்த வாழ்வியல் முறைக்கு உதவிடுவது போல அவரகள் தங்களுக்கான வரலாற்று அறிதல் மரபை வகைபடுத்தி வைத்துள்ளனர்.

போரில் வெற்றி பெற்றால் அந்த தினத்தை ஆண்டுதோறும் மறக்காமல் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு இந்த வகையான வரலாற்று பதிவு மற்றும் அறிதல் மரபு அவர்களுக்கு பெரிதும் உதவி செய்கிறது.தோல்வி ஏற்பட்ட சம்பவங்களை மறக்காமல் நினைவில் வைத்திருந்து விடாமல் முயற்சி செய்வதற்கும் மக்களை ஆண்டுதோறும் தூண்டி அதே சிந்தனையில் வைத்திருப்பதற்கும் தக்க காலம் நேரம் பார்த்து பழி  தீர்ப்பதற்கும் இத்தகைய வரலாற்று அறிதல் மரபு அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

பெரும்பாலான ஐரோப்பிய இனங்களின் வாழ்க்கை முறையும் ஐரோப்பாவிலிருந்து கடல் தாண்டிச் சென்று  அமெரிக்க தீபகற்பத்தை சூறையாடி அங்கே குடிகொண்டிருக்கும் இன்றைய அமெரிக்கர்களின் (ஐரோப்பியர்களின்) வாழ்வியல் இயல்பும்  இப்படியே வந்திருக்கிறது.

அறிவியல் தொழிநுட்ப ஆயுதங்களுடன் இன்றும் கூட அதே வகையான வாழ்க்கை முறையில் உழலுவதை உலக வரலாற்றுப் பதிவுகளும் நிகழ்வுகளும் நமக்கு பாடம் நடத்துகின்றன.

ஐரோப்பியர்களின் இந்த வரலாற்று அறிதல் மரபை கீழ்த்திசை நாடுகளின் மக்களாகிய நமது மூளையில் திட்டமிட்டு திணிக்கப்பட்டுள்ளது. அவைமட்டுமே  ஆதாரப்பூர்வமானது மிகச்சரியானது என்று முழுமையாக நம்புகிறோம். கடந்த 70 ஆண்டுகால நமது கல்வி முறையிலும் இந்த ஐரோப்பிய அறிதல் மரபு  மட்டுமே சரியானது என்று திரும்ப திரும்ப சிந்தனையில் பதிய வைக்கப்படுகிறது.

அனைத்து துறைகளிலும் கீழ்திசை மக்களாகிய நம் அறிதல் மரபு ஐரோப்பிய  அறிதல் மரபிலிருந்து மாறுபட்டது. அதிலும் குறிப்பாக தமிழினத்தின் வரலாற்றுப் பதிவும் அறிதல் மரபும் முற்றிலும் மாறுபட்டது. 

தமிழினத்தின் ஆகப்பெரும்பான்மையான வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் பாடல்கள் கவிதைகள் இலக்கியங்கள் தெருக்கூத்து நாடகங்கள் வாய்வழிச் செய்திகள் என்ற வைகைப்பாடுகளில் பதிவாகியுள்ளதை நாம் பார்க்கிறோம். இவற்றில் காலத்தையும் நேரத்தையும் சரியாக கணக்கிட இயலாது.ஆனால் நடந்த சம்பவங்களின் மூலக்கரு உண்மையானது.  

ஐரோப்பியர்கள் போல அல்லாது உலகின் மூத்தகுடிகளான நாம் ஆற்றங்கரையோரங்களில் நிலையாக குடியமர்ந்து இயற்கையோடு கால்நடைகளோடு இரண்டறக் கலந்து நீண்ட கால பயிர்களை விளைவித்து அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாமல் உழைத்துப் பகிர்ந்து உண்ணும் வாழ்க்கை முறையை கொண்டவர்கள்.அதை உயர்வாக கருதுபவர்கள். 

முத்தமிழ் என்ற இயல் இசை நாடகங்கள் மூலமாக நமது முன்னோர்களின் வாழ்வியலை வரலாற்று நிகழ்வுகளை அறிவதும் அதை நினைவில் வைத்துக் கொள்வதும் யாரையும் உசுப்பி விடுவதற்கோ பழிதீர்ப்பதற்கோ அல்ல. வரலாற்றின் சிறப்பான வீரமான நிகழ்வுகளை மகிழ்ச்சியாக ஆனந்த ராகத்தில் கொண்டாடி மகிழ்ந்தும்  தோல்விகளை இழப்புகளை வேதனையோடு ஒப்பாரி வைத்து அழுது புலம்பி ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இயல்பை கொண்டவர்கள்.

வேளாண் குடிகளான நாம் போர்களையும் அழிவுகளையும் பழிவாங்குதலையும் வெறுப்பவர்கள்.

மேற்கத்திய பாணி வரலாற்று அறிதல் மரபு விளைவுகளை உண்டாக்கும் இயல்புடையது. தமிழரின் வரலாற்று அறிதல் மரபு அமைதியையும் மன்னிப்பையும் விட்டுக்கொடுத்தலையும் தன்னைத்தானே ஆற்றுப் படுத்திக்கொள்வதையும் இயல்பாக கொண்டது.   

ஆனால் இன்று மேற்கத்திய பாணி வரலாற்று அறிதல் மரபு மட்டுமே அறிவியல் பூர்வமானது ஆதாரங்களைக் கொண்டது என்று நம்பவைக்கப்படுகிறோம். இருக்கலாம்.இருந்துவிட்டுப் போகட்டும்.அதற்காக கீழைத்தேய அறிதல் மரபை ஆதாரமற்றது உண்மை இல்லாதது என்று மறுக்கத் தேவையில்லை.

மேலும் இந்த மேற்கத்திய அறிதல் மரபினால் உந்தப்பட்டவர்கள் தான் வரலாற்றில் என்றோ நடந்த சம்பவத்திற்கு சிறிதும் தொடர்பு இல்லாத இப்போது  வாழும்  மக்களை பழிவாங்க துடிக்கின்றனர். இந்தியாவில் பல வரலாற்றுச் சின்னங்களை அழிக்கத் துடிக்கின்றனர். அமெரிக்க இரட்டை கோபுரம் இடிக்கப்பட்டவுடன் Modern Crusade என்ற வார்த்தையை புஷ் பயன்படுத்தினார். ரோமில் இன்றுள்ள  NATO இராணுவ கல்லூரியில் 12 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற சிலுவை யுத்தங்கள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

மேற்கத்தியர்களின் இந்த அறிதல் மரபு வரலாற்றுத் துறையில் மட்டுமல்ல அறிவுத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் புகுந்து விட்டது.அதன் காரணமாக பிறந்த மண்ணின் அறிவுசார் சொத்துக்கள் அனைத்தும் காலாவதியானவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாதவை என்று அந்த மக்களில் சிலரே  ஒதுக்கித்தள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அதில் மிக முக்கியமான ஒருதுறைதான் மருத்துவம்.

உளவியல் உடலியல் மருத்துவம் மருந்துகள் குறித்த மேற்கத்திய அறிதல் மரபின் மூலத்தை நாம் ஆய்வு செய்து அவற்றுக்கும் மருத்துவ துறை சார்ந்த இந்திய இஸ்லாமிய  அறிதல் மரபிற்குமான வேறுபாடுகளை கண்டறிய கடமைப்பட்டுள்ளோம்.  

– CMN SALEEM

Related Posts