டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது.இந்த கருத்தினுள் ஆழமான சமூக அக்கறையும் கூடவே கொஞ்சம் அரசியலும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை
மதுக்கடைகளை மூடு என்று மற்றவர்கள் குரல் கொடுப்பதற்கும் முஸ்லிம்கள் குரல்கொடுப்பதற்கும் தனித்துவமான வேறுபாடுகள் இருக்கின்றன. கட்டாயம் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் டாஸ்மாக் விற்பனை நிலையங்கள் உள்ளன.அதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பெரிய வணிக உத்திகள், திட்டமிடுதல்,நிர்வாகத்திறன் உள்ளிட்ட எந்தத் தேவையுமின்றி அரசுக்கு ஆண்டு வருவாயாக சுமார் 32 ஆயிரம் கோடியை ஈட்டித்தரும் வளமான நிறுவனமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
மொலாசஸ் போன்ற இரசாயன கழிவுகளை மூலப்பொருளாக கொண்ட, கொள்ளை இலாபம் ஈட்டும் சுமார் 20 க்கும் மேற்பட்ட மதுபான தொழிற்சாலைகள் டாஸ்மாக்கிற்காக உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்தும், அரசியல் கட்சிகளின் முக்கியப் புள்ளிகளுக்கும் சாதி சங்கங்களின் பெருந்தலைகளுக்கும் சொந்தமானவையாக இருக்கின்றன. இவர்கள் தான் தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளுடைய நிதியாதாரங்களாக இருகின்றனர்.
50 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரும் அவமானமாக கருதப்பட்ட மது இன்று ” மச்சான் சரக்கடிக்க போகலாமா” என்று சாதாரணமாக கேட்கும் நிலையை உண்டாக்கியது திரைப்படங்கள் தான். பெரும்பாலான திரைப்படத் தயாரிப்பளார்களும் இந்த மதுபான உற்பத்தி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
அவசரகால சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில், காந்திய வழி தேசிய கட்சியின் குடும்பத்து வாரிசுகள் பங்குதாரர்களாக இருக்கின்றனர். அந்த நிறுவனம் மருத்துவ உபகரணங்களுடன் சேர்த்து ஒரு பெரிய மதுபான ஆலையையும் நடத்துகிறது.
மதுபான ஆலைகளுக்கு எல்லா வங்கிகளும் கணக்கு வழக்கின்றி கடன் வழங்குகின்றன. மது வட்டி மருத்துவம் அரசியல்கட்சிகள் அரசுநிர்வாகம் சாதிய அமைப்புகள் என அனைத்தும் கைகோர்த்து பயணிப்பதை கூர்ந்து கவனிக்க கடமைப்பட்டுள்ளோம்.
தெருவுக்குத்தெரு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள போதும் தமிழகத்தில் தனிநபர்கள் சாராயம் காய்ச்சும் தொழில் நடந்து கொண்டுதானிருக்கிறது. ஆதிக்கச் சாதிகளின் பல பெரும்புள்ளிகள் தான் இந்த தொழிலை செய்கின்றனர். கிராமங்களில் அவர்களைத் தாண்டி வேறு யாரும் இந்த தொழிலை செய்துவிட முடியாது.
மதுவிற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனத்தை நிர்வகிக்கும் அமைச்சகத்தின் பெயர் ” மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சகம்” என்பதை வைத்தே தமிழகத்தில் மதுவின் ஆழம் அகலத்தை புரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் மொத்த மது விற்பனையில் 15 விழுக்காட்டை தமிழக மக்கள் குடித்துத் தீர்க்கின்றனர். குடியில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது. குடிகாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 விழுக்காடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.சாலை விபத்துக்களில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இந்த விபத்துக்களில் 82 விழுக்காடு மதுவினால் ஏற்படுகிறது என்பது அரசின் அறிக்கை.
சாதிமத வேறுபாடு இல்லாமல் இளைஞர்களுக்கு ஆண்மை இழப்பு, மனநோய், இளம்வயது மரணங்கள், இளம் விதவைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் இவை அனைத்தின் எண்ணிக்கையளவும் எகிறிக் கொண்டிருக்கிறது.
மானுடத்தை நேசிக்கும் ஒருசில தலைவர்களும் சித்தாந்த ரீதியாக இயங்கும் சில அமைப்புகளையும் தவிர்த்து மற்ற அனைவருடைய டாஸ்மாக்கை திறக்கக்கூடாது என்ற கோரிக்கையும் அரசியல் நாடகமே அன்றி வேறில்லை.
இறையச்சம் இல்லாத சமூக அக்கறை ஒருபோதும் நிலையான தீர்வைத் தராது.
டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கைக்கு முன்பாக அதற்கு மாற்றுத்தீர்வை முன்வைக்க வேண்டிய கடமை முஸ்லிம்களில் அறிவுடையோருக்கு இருக்கிறது.
அரேபிய தீபகற்பத்தில் முழுக்க முழுக்க பழங்கள் தானியங்கள் இவற்றால் உண்டாக்கப்பட்ட மதுவை ஒழிப்பதற்கு நபித்துவ காலம் முழுவதும் படிப்படியான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
மதுவின் தீமைகள் குறித்து மக்களுக்கு ஆழமாக பயிற்றுவிக்கப்பட்டு மனமாற்றம் ஏற்படுத்திய பிறகுதான் மதுதொடர்பான தண்டனைச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
மதீனாவில் நண்பர்கள் கூடி நடத்திய ஒரு தோப்புசாப்பாட்டு விருந்தில் மது அருந்தியதால் ஒரு முஹாஜிருக்கும் அன்சாரிக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பில் முஹாஜிருடைய மூக்கு உடைக்கப்பட்டது. இதனால் உருவான பஞ்சாயத்திற்கு தீர்வாக மது குறித்த (5:90) வசனம் இறங்கியது.பிறகு சிறிது சிறிதாக மது முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இந்த முன்மாதிரியை இன்னும் ஆழமாக ஆய்வு செய்து அதனடிப்படையில் தமிழகத்தில் மதுவிலகிற்கான தீர்வை முஸ்லிம்கள் முன்வைக்க வேண்டும்.
கொரோனவை விட கொடியதாக மதுவை கருதும் மனநிலை மக்களிடம் உருவாக வேண்டும்.பள்ளி கல்லூரிகள் மத வழிபாட்டுத்தலங்கள் ஊடகங்கள் என அனைத்திலும் மதுவின் தீமைகள் குறித்து அரசின் சார்பில் பரப்புரை செய்வதும்…,
ஆண்டிற்கு ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை வைப்பதும்….,,
கூடவே ஆண்டிற்கு ஐந்தாயிரம் கோடிரூபாய்க்கான வருவாய் இழப்பிற்கு மாற்று வழியை சொல்வதும் முஸ்லிம் அறிவுஜீவிகளின் தலைவர்களின் அமைப்புகளின் பொறுப்பாக இருக்கிறது.
ஏற்கிறார்களோ இல்லையோ சரியானதை நாம் முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதுவே இஸ்லாமிய வழிமுறையும் தீர்வாகவும் இருக்கும்.
– CMN SALEEM