பறவைகளின் மீதான முஸ்லிம்களின் பொறுப்புகள்

by Mohamed Anas

” மலைகளின் மீது தானியங்களை தூவுங்கள். முஸ்லிம்கள் வாழும் நிலங்களில் பறவைகள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினமும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது”

உமையா கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) (AD 682 -720) அவர்களின் உத்தரவு.

அனைத்து உயிர்களையும் நேசியுங்கள் என்று போதிக்கும் அல் குர்ஆன். பறவைகள் கால்நடைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்கள் மீதும் அன்பும் நீதியும் செலுத்திய பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வழிகாட்டுதல்கள்.

இந்த இரண்டையும் பிசிறில்லாமல் பின்பற்றிய உமையா பேரரசின் ஜனாதிபதியும் இஸ்லாமிய வரலாற்றின் முதல் புரட்சியாளருமான (முஜத்தீத்) உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் முஸ்லிம்களுக்கு பிறப்பித்த உத்தரவு இது.

உயிரினங்கள் அனைத்திற்கும் உணவளித்து நீதி செலுத்தும் வகையில் உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினார்கள்.

இந்த உத்தரவு இஸ்லாமிய பாரம்பரிய கல்வியில் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்பட்டு முஸ்லிம் சமூகம் கட்டியெழுப்பப் பட்டது.

மனித உள்ளங்களில் அன்பையும் கருணையையும் நிலைபெறச் செய்யும் இந்த ஒரு அழகிய உயிர்மநேய உத்தரவு காரணமாக அது முஸ்லிம்களின் பண்பாடாகவே மாறிப்போனது.

இதன் காரணமாக வேளாண்மை மூலம் உற்பத்தியாகும் தானியங்கள் மனிதர்களுக்கு மட்டும்  உரித்தானது அல்ல. கண்ணுக்குத் தெரிந்த தெரியாத கோடானகோடி உயிர்களுக்கும் அதில் உரிமையுள்ளது என்ற ஆன்மிக சிந்தனை அன்றைய முஸ்லிம் விவசாயிகளிடம் மிகைத்திருந்தது.

இன்றைய சடவாத முதலாளித்துவ கல்விமுறை மற்றும் வாழ்க்கை முறைக்குள் சிக்குண்ட முஸ்லிம் சமூகத்தில் கூட அன்றைய அந்த பண்பாட்டு அடையாளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறது.

இன்றும் துருக்கியின் மலைப்பிரதேசங்களில் பனிமுகடுகள் சூழ்ந்த பகுதிகளில் பறவைகளுக்கு கோதுமை மணிகளை கொட்டி உணவளிப்பதை மக்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

மலைகளில் மட்டுமல்ல அனைத்து பள்ளிவாசல்களின் முகப்பிலும் புறாக்களுக்கு உணவளிக்கும் வழக்கம் இன்றும் பண்பாடாக பின்பற்றப்படுகிறது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க பகுதிகளில்       

புறாக்களின் எச்சங்கள் மிகச்சிறந்த இயற்கை உரமாக பயன்படுத்தப்பட்டதால் வேளாண் நிலங்களில் பெரிய அளவில் கூடுகளை கட்டி ஆயிரக்கணக்கான புறாக்களை வளர்த்து வந்தனர்.

பாரசீகத்திலிருந்தும் மத்திய ஆசியாவிலிருந்தும் வட இந்தியாவிற்கு இஸ்லாம் அறிமுகமானதால் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் பாரம்பரிய கட்டிடக்கலையில் கட்டப்பட்ட எல்லா பள்ளிவாசல்களின் உச்சியிலும் அதன் சுற்றுவட்டப் பகுதியில் புறாக்கள் தங்குவதற்கான அமைப்புகள் கட்டப்பட்டிருப்பதை காணலாம்.

அதுபோன்ற பாரம்பரிய பள்ளிவாசல்களின் முகப்பில் தொழுகையாளிகளும் பிள்ளைகளும் புறாக்களுக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் உணவளித்து மகிழ்வதை இன்றும் காணமுடிகிறது.

பரிதாபம் இன்றைய முஸ்லிம்களின் சடவாத உள்ளங்களில் காணப்படும் ஆன்மிக வறட்சி போல நாம் கட்டும் அல்ட்ரா மாடர்ன் பள்ளிவாசல்களிலும் அந்த உயிர்மநேய வறட்சி எதிரொலிக்கிறது.

அல்லாஹ்வின் அழகிய படைப்புகளான பறவைகளின் குரல்கள் இன்றைய பெரும்பாலான பள்ளிவாசல்களில் கேட்பதில்லை.மாறாக குளிர்சாதன இயந்திரங்களின் கோரமான ஓசைகள் தான் கேட்கின்றன.

ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் முஸ்லிம்களுக்கு பிறப்பித்த உத்தரவு என்பது இன்றைய நமது பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டிய அடிப்படையான பண்புகளில் ஒன்றாக கருதப்பட வேண்டும்.

இன்றைய நர்சரி பிரைமரி பள்ளிக்கூடங்களில் போதிக்கப்பட வேண்டிய உயர்வான பண்பாட்டுக் கல்வி அது.

பறவைகளுக்கும் கால்நடைகளுக்கும் தாவரங்களுக்கும் உணவளித்தல் என்பது வெறும் கல்வி மட்டுமல்ல அது மனிதர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் அற்புதமான இயற்கை சிகிச்சை முறை.

அது ஏற்படுத்தும் ஆன்மிக உணர்ச்சிமிக்க ஆனந்தத்தை இன்றைய சடவாத உளவியல் நிபுணர்கள் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.

வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படித்து நம் பிள்ளைகள் கல் நெஞ்சக்காரர்களாக மாறிவிடாமல் பாதுகாப்பதற்கும் ; பணத்திற்காக பறவைகள் கால்நடைகள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களையும் வதைத்து உற்பத்தி செய்யும் முதலாளித்துவ நிறுவனங்கள் கையில் சிக்கி நம் பிள்ளைகள் சீரழிந்து விடாமல் தடுப்பதற்கும்; உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் உத்தரவைத் தாண்டிய ஒரு அறிவார்ந்த பண்பாட்டுக் கல்வி வேறு எதுவும் இருக்க இயலாது.

– CMN SALEEM

Related Posts