பெண் ஆணின் விலா எலும்பினால் படைக்கப்பட்டவளா?

by Mohamed Anas

ஆண் பெண் இருவரும் மனித இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இருவரினதும் இயல்பு மிகவும் மாறுபட்டதாகும். இம்மாறுபட்ட இயல்புடந்தான் அவர்கள் குடும்ப வாழ்வில் இணைகின்றார்கள். எனவே ஒருவர் அடுத்தவரின் இயல்பைப் புரிந்து நடக்கவில்லையெனில் அங்கு முரண்பாடுகள், மனக்கசப்புகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. 

மனித வாழ்வின் ஓர் முக்கிய அம்சமாக குடும்ப வாழ்வை இஸ்லாம் கருதுகின்றது. அதனைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அனைத்து வழிகாட்டலையும் மிகவும் தெளிவாக  வழங்கியுள்ளது.  அவற்றில் நபி ஸல் அவர்கள் வழங்கிய  ஒரு முக்கிய வழிகாட்டலைத்தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

இக்கட்டுரையில் பின்வரும் இரண்டு அம்சங்களை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

1. பெண் விலா எலும்பினால் படைக்கப்படவில்லை  விலா எலும்பு போல் படைக்கப்பட்டிருக்கின்றாள்.

உண்மையில் பெண் விலா எழும்பினால் படைக்கப்பட்டாள் என்று சொல்லப்படும் போதெல்லாம் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் ஏதோ தவறுள்ளது என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. இப்படி இருக்கும் போதுதன் அப்துல் ஹலீம் அபூ ஷுக்கா எழுதிய தஹ்ரீருல் மர்ஆ பீ அஸ்ரிர் ரிஸாலா என்ற புத்தகம்  கிடைத்தது.  அதனைத் தொடர்ந்து இது சம்பந்தமாக இன்னும் சில ஆக்கங்களை வாசிக்கக் கிடைத்தது. அப்போதுதான் இந்த ஹதீஸ் பெண்ணின் படைப்பு குறித்துப் பேசவில்லை. பெண்ணின் இயல்பு குறித்துப் பேசுகின்றது  என்பதைப் புரிந்து கொண்டேன். என் சந்தேகத்திற்கான பதிலையும் பெற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்.

2. ஆண்கள் பெண்களின் இயல்பைப் புரிந்து அவர்களுடன் மிக அழகிய முறையில் நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லையெனில் அது மண முறிவிற்கு இட்டுச்செல்லும்.

இந்த ஆக்கத்தை எழுதுவதற்கு துணை நின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ். அத்தோடு இவ்வாக்கத்தை வாசித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து, இதனை செம்மைப்படுத்திய சகோதரர்களுக்கு என்னுடைய  ஆழ்ந்த நன்றிகள். 

பெண் எதனால் படைக்கப்பட்டாள் என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் ஆதம் அலை அவர்களின் விலா எலும்பினால் படைக்கப்பட்டாள் என்றுதான்.

இதற்கான காரணம் பின்வரும் ஹதீஸ்.

إنَّ المَرْأَةَ خُلِقَتْ مِن ضِلَعٍ

الراوي:أبو هريرة المحدث:مسلم المصدر:صحيح مسلم الجزء أو الصفحة:1468 حكم المحدث:[صحيح]

“நிச்சயமாகப் பெண் விலா எலும்பினால் படைக்கப்பட்டுள்ளாள்.” புகாரி, முஸ்லிம்.

இக்கருத்தை பொதுவாக முஸ்லிம் சமூகத்தில் அதிகமானவர்கள் எவ்வித விமர்சனப்பார்வையுமின்றி அவ்வாறே ஏற்றிருக்கின்றார்கள். இதனை அவர்கள் கேள்விகுற்படுத்தவில்லை. எவ்வாறு விலா எலும்பிலிருந்து ஓர் இனம் படைக்கப்படமுடியும் என சிந்திக்கவில்லை.  இதற்கு பின்வரும் ஐந்து காரணங்களை அடையாளப்படுத்த விரும்புகின்றேன்.

1. மார்க்கத்தில் அதாவது இஸ்லாமிய மூலாதாரங்களையும், வழிகாட்டலையும் புரிந்து கொள்வதில்  மனித அறிவை பிரயோகிக்கக்கூடாது என்ற சிந்தனை. மார்க்கத்தில் மனித அறிவை பிரயோகித்தலைப் பொருத்தவரை இஸ்லாம் அதனை வரவேற்கின்றது. அதனை கட்டாயப்படுத்தியுமுள்ளது. அதே நேரம் மனித அறிவின் பலகீனத்தை அறிந்து அதற்கு சில வரையறைகளை இட்டுள்ளது. சில கட்டுப்பாடுகளை இட்டுள்ளது.

அறிவை பயன்படுத்தாதவர்களினால் இம்மார்க்கத்தை மிகச்சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகும். மார்க்கம் என்ற பெயரில் மார்க்கத்திற்கு முரணான பல விடயங்களில் ஈடுபடுவார்கள். மார்க்கத்தின் அசல் தன்மையை சிதைத்துவிடுவார்கள். அதே போல் மனித அறிவின் வரையறை, அதன் பலகீனத்தை அறியாமல் இஸ்லாம் அதற்கு விதித்த வரையறைகளை, கட்டுப்பாடுகளை மீறி மார்க்கத்தில் மனித அறிவை பிரயோகிப்பவர்களும் மார்க்கத்தை சிதைத்துவிடுவார்கள். இந்த இரண்டு தீவிரங்களுக்கும் இடையில் நடுநிலமை பேணுவதுதான் மார்க்கத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் துணைபுரியும்.

2. இறை சக்தி மீதுள்ள நம்பிக்கை. அதாவது அல்லாஹ் எதனையும் எவ்வாறும் ஆக்குவதற்கு சக்திபெற்றவன். அவன் ஒன்றை ஆக்க “ஆகு” என்ற வார்த்தை போதுமானது.

உண்மையில் இறைபண்பில் இந்நம்பிக்கை மிக அடிப்படையானது. படைப்பினங்கள் அனைத்தும் இல்லாமையில் இருக்கும் போது “ஆகு” என்ற வார்த்தை மூலம்தான் படைக்கப்படுகின்றது. ஆனால் இப்பிரபஞ்ஞத்தில் உள்ள படைப்பினங்களை அல்லாஹ் அற்புதத்தினால் ஆக்கவில்லை. மாறாக மனித அறிவினால் விளங்கிக்கொள்ளும் விதத்தில், அறிவாராய்ச்சியில் ஈடுபடும் விதத்தில்தான் படைத்திருக்கின்றான். அதற்கான அடிப்படைக்காரணம் மனிதன் உலகில் அல்லாஹ்வை விளங்கிக்கொள்ளவேண்டும் எனில், அவனை நம்பிக்கை கொள்ளவேண்டுமெனில் அவனது படைப்பினங்கள் குறித்த அறிவு மிக அவசியம். பெளதீக உலகுடன் ஒருவன் அறிவுரீதியாக எவ்வளவு ஆழமாக தொடர்புபடுகின்றானோ அவ்வளவு தூரம் அவன் அல்லாஹ்வை உணர்ந்து கொள்வான்.

[அல்லாஹ் இப்பிரபஞ்ஞத்தைப் படைக்க ஆறு யுகங்களை அதாவது எமது காலக் கணிப்பீட்டின் படி கோடிக்கனக்கான வருடங்களை எடுத்துக்கொண்டான். ஏன் அவ்வளவு காலம். ஒரு நொடிப்பொழுது அவனுக்கு போதுமானது. ஆனால் அவன் அவ்வாறு செய்யவில்லை. ]

எனவே விலா எலும்பினால் பெண் படைக்கப்பட்டாள் என்று சொல்லப்படும்போது அது எவ்வாறு சாத்தியம்?, அறிவுக்கு புறம்பாக இருக்கின்றதே? என்று சிந்தினை மிக அவசியம்.  அதுதான் அவனை முன்னோக்கி நகர்த்தவும், சரியான விளக்கத்தை அறிந்து கொள்ளவும் துணைபுரியும்.

3. சுன்னாவை அணுகுவதில் விடுகின்ற தவறு.

சுன்னாவை அணுகும் போது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சம், குறிப்பிட்ட ஒரு விடயம் குறித்து முடிவுக்கு வரும்போது ஒரு ஹதீசை மாத்திரம் வைத்து முடிவுக்கு வராமல் அது தொடர்பாக வேறு ஹதீஸ்கள் காணப்படுகின்றதா எனப் பார்க்க வேண்டும். அவ்வாறு காணப்படும் பட்சத்தில் அவை அனைத்தையும் இணைத்துப் பார்த்தே முடிவுக்கு வரவேண்டும்.

அந்த வகையில் பெண் விலா எலும்பினால் படைக்கப்பட்டவள் என்ற விடயம் சம்பந்தமாக வேறு ஹதீஸ்கள் காணப்படுகின்றதா என்று பார்க்கும் போது   பின்வரும் ஹதீஸை கண்டுகொள்ள முடிந்தது.

المَرْأَةُ كالضِّلَعِ،.

الراوي:أبو هريرة المحدث:البخاري المصدر:صحيح البخاري الجزء أو الصفحة:5184 حكم المحدث:[صحيح]

الراوي:أبو هريرة المحدث:مسلم المصدر:صحيح مسلم الجزء أو الصفحة:1468 حكم المحدث:[صحيح]

“பெண் விலா எலும்பு போன்றவள்”. புகாரி, முஸ்லிம்.

எனவே குறிப்பிட்ட தலைப்பு சம்பந்தமாக வந்துள்ள வேறு ஹதீஸ்களை நாம் திரட்டிப் பார்க்கும்போது பெண் விலா எலும்பினால் படைக்கப்படவில்லை. மாற்றமாக விலா எலும்பு போல் படைக்கப்பட்டுள்ளாள் என்ற உண்மையை விளங்கிக்கொள்ளலாம். இந்த ஹதீஸ் பெண்ணின் படைப்பு குறித்துப் பேசவில்லை. மாற்றமாக பெண்ணின் இயல்புகுறித்துப் பேசுகின்றது. இது குறித்து பின்னால் விரிவாகப் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்.

4. குறிப்பிட்ட அந்த ஹதீஸை புரிந்துகொண்டதில் ஏற்பட்ட சிக்கல். 

அதாவது உவமானமாகச் சொல்லப்பட்ட ஒன்றை உண்மையாகக் கருதியதால் ஏற்பட்ட சிக்கல்.  

பொதுவாக ஒருவரின் இயல்பை வர்ணிக்கும்போது குறிப்பிட்ட அப்பொருளாகவே குறிப்பிடுவதுண்டு. உதாரணமாக நீ ஒரு சிங்கம் என்று ஒருவரின் வீரத்தைக் குறிக்க குறிப்பிடுவோம். அதற்காக அவர் உண்மையில் சிங்கம் ஆகிவிடுவதில்லை. 

இதனை ஓர் ஹதீஸினூடாகப் பார்ப்போம்.

كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ في سَفَرٍ، وكانَ معهُ غُلَامٌ له أسْوَدُ يُقَالُ له أنْجَشَةُ، يَحْدُو، فَقَالَ له رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: ويْحَكَ يا أنْجَشَةُ رُوَيْدَكَ بالقَوَارِيرِ.

الراوي:أنس بن مالك المحدث:البخاري المصدر:صحيح البخاري الجزء أو الصفحة:6161 حكم المحدث:[صحيح]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களுடைய கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டுப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து)கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!’ என்று கூறினார்கள். புகாரி.

இந்த ஹதீஸில் நாபி ஸல் அவர்கள் பெண்களை கண்ணாடிக் குடுவை என்று குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். இங்கு நபி ஸல் அவர்கள் பெண்களின் மென்மையை, அவர்களின் பலகீனத்தை கவனத்திற்கொண்டு, அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாடினார்களே தவிர பெண்கள் கண்ணாடிக் குடுவைகள் என்று சொல்லவில்லை என்பது தெளிவு.

அதுபோல்தான் இங்கும். அதாவது பெண்கள் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கின்றாள் என்றால் அதன் பொருள் உண்மையில் அவள் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கின்றாள் என்பதல்ல மாற்றமாக அவள் விலா எலும்புபோல் படைக்கப்பட்டிருக்கின்றாள் என்பதே அதன் பொருளாகும். 

5. இஸ்ராயீலிய்யத்தின் செல்வாக்கு. 

இஸ்ராயீலிய்யத் என்பது தவ்ராத் மற்றும் இன்ஜீல் ஆகிய கிரந்தங்களில் காணப்படும் கதைகள்.செய்திகள். அன்று  யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதை நாம் அறிவோம்.  அவர்கள் குர் ஆனை வாசிக்கும்போது அதில் வரும் கதைகள், சம்பவங்களுக்கு விளக்கமாக அவர்கள் ஏற்கனவே தவ்ராத் மற்றும் இன் ஜீலில் சொல்லப்பட்ட கதைகளைக் கூறினர். வேதம் கொடுக்கப்பட்டோர் கூறும் அவ்வாறான மார்க்கம் தொடர்பான கதைகளே இஸ்ராயீலிய்யத் என அழைக்கப்படுகின்றது.

ஹவ்வா அலை அவர்கள் ஆதம் அலை அவர்களின் விலா எலும்பினால் படைக்கப்பட்டார்கள் என்பதும் ஓர் இஸ்ராயீலிய்யத்தே. அக்கதை பைபிளில் பின்வருமாறு சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் படைக்கப்பட்டான்: ஆதியாகமம் 2: 21-22 „கர்த்தராகிய ஆண்டவர் மனிதனுக்கு ஆழ்ந்த தூக்கத்தைக் கொண்டுவந்தார்; அவர் தூங்கியபோது, ​​அவர் தனது விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தை மாம்சத்தால் மூடினார். கர்த்தராகிய ஆண்டவர் ஒரு ஆணிலிருந்து எடுக்கப்பட்ட விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்து, ஒரு ஆணிடம் கொண்டுவந்தார்“.

ஆதியாகமம் 3:20″ 

ஆதாம் தன் மனைவியின் பெயரை அழைத்தாள் – ஏவாள், ஏனென்றால் அவள் எல்லா ஜீவன்களுக்கும் தாயானாள்“. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆதாமைத் தவிர மற்ற அனைவரும் ஏவாளின் சந்ததியினர், அவர் முதல் பெண்.

ஹவ்வா (அலை) அவர்கள் ஆதம் அலை அவர்களின் விலா எலும்பினால் படைக்கப்பட்டார்கள் என்பதற்கான அடிப்படை பைபிளில்தான் இருக்கின்றதே தவிர குர் ஆனிலோ, சுன்னாவிலோ இல்லை. ஆனால் இக்கருத்தின் பாதிப்பு அதிகமான இஸ்லாமிய அறிஞர்களிடம், தப்ஸீர் ஆசிரியர்களிடம் காணப்பட்டிருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை.  

இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு  பெண் மனித இனத்தைச் சேர்ந்தவள் இல்லை, அவள் ஆன்மா இல்லாத வேறொரு படைப்பினம். அவள் அழுக்கானவள், நஜீசானவள் போன்ற பெண் குறித்த இரண்டாம் தர அபிப்ராயங்கள் காணப்பட்டன. பெண் பிள்ளைகள் உயிருடன் புதைக்கப்படும் அளவு அதன் தாக்கம் காணப்பட்டது. பெண் மனித இனத்தைச் சார்ந்தவள் என்றோ, அவளுக்கு சம அந்தஸ்த்து, உரிமை என்பன இருக்கின்றது என்றோ அன்று கருதப்படவில்லை. மொத்தத்தில் அவர்கள் பெண்களை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. 

இப்பின்னணியில்தான் அல்லாஹ் இக்கருத்துக்கள் அனைத்தையும் வலுவிழக்கச் செய்யும் விதத்தில் பெண்ணின் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், அவளின் உரிமைகளை பாதுகாத்திடும் விதத்தில் பின்வருமாறு ஆயத்தை இறக்கினான்.

{يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا} [النساء: 1]،

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அதிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (1)

அதாவது ஆதம் அலை அவர்கள் எப்படி படைக்கப்பட்டார்களோ அதே போன்றுதான் ஹவ்வா அலை அவர்களும் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆதம் அலை எந்த இனத்தைச் சேர்ந்தவரோ அதே இனத்தைச் சேர்ந்தவர்தான் ஹவ்வா அலை அவர்களும். ஆதம் அலைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதே ஆன்மாதான் ஹவ்வா அலை அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆதம் அலை அவர்களுக்கு எந்த வித்தத்திலும் குறைந்தவரல்ல ஹவ்வா அலை அவர்கள். இருவரும் சரி சமமானவர்கள். இருவருக்கும் உரிமைகள், கடமைகள் கானப்படுகின்றன.  இருவரும் அல்லாஹ்விடம் பதில் கூறியாக வேண்டும் என்ற பேருண்மையை அல்குர் ஆன் முன்வைத்து பெண் குறித்து நிலவிய முன்னைய தப்பான கருத்தியல்களை இல்லாமலாக்கியது அல்குர் ஆன்.

ஆதம் அலை அவர்கள் மன்னால் படைக்கப்பட்டது போல்தான் ஹவ்வா அலை அவர்களும் மன்னால் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆதம் அலைக்கு வழங்கப்பட்ட அதே ஆன்மாதான் ஹவ்வா அலை அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஹவ்வா அலை அவர்கள் ஆதம் அலை போன்று ஆரம்பத்திலே மன்னால் படைக்கப்பட்டு ஆன்மா கொடுக்கப்பட்டார்களா அல்லது ஆதம் அலை அவர்களின் இந்திரியத்திலிருந்து படைக்கப்பட்டார்களா?  என்பது குர் ஆனிலோ, சுன்னாவிலோ தெளிவாகச் சொல்லப்படவில்லை.   அதற்காக ஹவ்வா அலை அவர்கள் ஆதம் அலை அவர்களின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்று சொல்வது அடிப்படையற்ற  கருத்தாகும்.

இந்த கருத்தை மறுக்க வேண்டியதன் முக்கிய காரணம் அல்குர் ஆன் எந்த கருத்தியலை இல்லாமல்செய்ய முனைந்ததோ அதே கருத்தியலை மீண்டும் உயிர்பிப்பிக்க முனைவதுதான். ஆணாதிக்க சிந்தனைக்கு வலு சேர்க்க துணை புரியும் விதத்தில் இக்கருத்து அமைந்திருப்பதுதான். 

ஆணுக்காகத்தான் பெண் படைக்கப்பட்டிருக்கின்றாள் என்ற கருத்து இங்கு மறைமுகமாகத் தொணிக்கின்றது. ஆனால் உண்மையில் ஆணுக்காகப் பெண் படைக்கப்படவில்லை. மாற்றமாக ஆணுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒருவருக்கொருவர் இணையாகவும், துணையாகவும் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். 

இதுவரை நாம் பெண் ஆணின் விலா எலும்பினால் படைக்கப்படவில்லை. விலா எலும்பு போல் படைக்கப்பட்டிருக்கின்றாள் என்ற கருத்தைப் பார்த்தோம். இப்போது நாம் நபி ஸல் அவர்கள் இந்த ஹதீஸின் மூலம் எமக்கு என்ன போதித்தார்கள் என்பதைப் பார்ப்போம். 

புகாரி, மற்றும் முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் பின்வருமாறு ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.

إنَّ المَرْأَةَ خُلِقَتْ مِن ضِلَعٍ لَنْ تَسْتَقِيمَ لكَ علَى طَرِيقَةٍ، فَإِنِ اسْتَمْتَعْتَ بهَا اسْتَمْتَعْتَ بهَا وَبِهَا عِوَجٌ، وإنْ ذَهَبْتَ تُقِيمُهَا، كَسَرْتَهَا وَكَسْرُهَا طَلَاقُهَا.

الراوي:أبو هريرة المحدث:مسلم المصدر:صحيح مسلم الجزء أو الصفحة:1468 حكم المحدث:[صحيح]

பெண் விலா எலும்பினால் படைக்கப்பட்டிருக்கின்றாள்.  எந்த விதத்திலும் உன்னால் அதனை நேராக்க முடியாது. எனவே அதே கோனலுடன் அவளுடன் நீ சந்தோசமாக குடும்பம் நடத்த விரும்பினால் சந்தோசமாக குடும்பம் நடத்தலாம். மாறாக அதனை நீ நேராக்க  முயற்சித்தால்  உடைத்துவிடுவாய். அதாவது மனமுறிவு[தலாக்] ஏற்பட்டுவிடும். முஸ்லிம்.

مَن كانَ يُؤْمِنُ باللَّهِ وَالْيَومِ الآخِرِ، فَإِذَا شَهِدَ أَمْرًا فَلْيَتَكَلَّمْ بخَيْرٍ، أَوْ لِيَسْكُتْ، وَاسْتَوْصُوا بالنِّسَاءِ، فإنَّ المَرْأَةَ خُلِقَتْ مِن ضِلَعٍ، وإنَّ أَعْوَجَ شيءٍ في الضِّلَعِ أَعْلَاهُ، إنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وإنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، اسْتَوْصُوا بالنِّسَاءِ خَيْرًا.ஜ்

الراوي:أبو هريرة المحدث:مسلم المصدر:صحيح مسلم الجزء أو الصفحة:1468 حكم المحدث:[صحيح]

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் ஏதேனும் பிரச்சினையில் பங்கெடுத்தால் ஒன்று, நல்லதையே பேசட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும். பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.) ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அதை நீ உடைத்தே விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே,பெண்களுக்கு நன்மையே நாடுங்கள்.

இந்த ஹதீஸின் மூலம் நபி ஸல் அவர்கள் பெண்களின் ஓர் முக்கியமான இயல்பைக் குறிப்பிட்டு, பெண்களுடன் ஆண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு அழகிய வழிகாட்டலை வழங்குகின்றார்கள். இப்போது நாம் அதனை விரிவாகப் பார்ப்போம். 

மேலே கூறப்பட்டது போல் இந்த ஹதீஸில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன.

  1. பெண்ணின் இயல்பு.
  2. பெண்ணுடன் ஆண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.
  3. பெண்ணின் இயல்பை கவனத்திற்கொண்டு அவளுடன் நடந்து கொள்ளவில்லை எனில் அது எவ்வாறான விளைவைத் தோற்றுவிக்கும்.

பெண்ணின் இயல்பு:

இந்த ஹதீஸினூடாக நபி ஸல் அவர்கள் பெண்ணின் முக்கியமான ஓர் இயல்பைக் குறிப்பிடுகின்றார்கள். அதாவது பெண்ணிடம் விலா எலும்பின் மேற்பகுதியில் காணப்படும் கோணல் போல் ஒரு கோணல் இருக்கின்றது. ஆனால் நபி ஸல் அவர்கள் அது என்ன கோணல் எனச் சொல்லவில்லை. எனவே சிலர் அதற்கு பெண்கள் சூழ்ச்சி செய்யும், மோசடி செய்யும் இயல்பு கொண்டவர்கள் என்று கோணலை விளக்கினர். ஆனால் உண்மையில் இவ்விளக்கம் உண்மையான நியாயமான விளக்கம் கிடையாது. ஏனெனில் இக்குணங்கள் பெண்களின் இயல்பான குணங்களாக இருந்தால் வராலாற்றில் எத்தனையோ நல்ல பெண்கள் தோன்றியிருக்கின்றார்கள். அவ்வாரானவர்களை எமக்குக் காணக்கிடைத்திருக்காது. அதே நேரம் பிள்ளை வளர்ப்பு என்பது மிகவும் அடிப்படையான பாரிய பொறுப்பு. அது மோசமான இயல்பு கொண்டவர்களிடம் ஒப்படைத்தல் என்பது சாத்தியமில்லை.

எனவே அந்தவகையில் கோணல் என்பதன் மூலம் நபி ஸல அவர்கள் நாடியது வேறொரு விடயம் என்பது தெளிவாகின்றது. அதாவது சீரானது என்பதற்கு எதிரான கருத்துதான் கோணலாகும். உணர்வுகள் சமநிலையில், கட்டுக்கோப்பில் இருந்தால் அது சீரான நிலை எனக் கருதப்படும். அதே போல் உணர்வுகள் சமநிலை தவறி, கட்டுக்கோப்பாக இல்லையெனில் அது கோணல் எனக்கருதப்படும். உணர்வு மேலீட்டினால் பெண்கள் சமநிலை தவறுவதையும், கட்டுப்பாட்டை இழப்பதனையும்தான் நபி ஸல் அவர்கள் கோணல் என்பதன் மூலம் நாடியிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இந்த உணர்வு மேலீட்டின் மூலம் பெண்களின் செயல்களிலிருந்து, வார்த்தைகளிலிருந்து பொருத்தமில்லாத, அழகில்லாத விடயங்கள் வெளிப்படும். அது ஆண்களின் உள்ளத்தைப் பாதித்து அவர்களிடம் கோபத்தைக் கிளறி விடும்.

பெண்களின் இந்த இயல்பை, கோணலை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன. 

أُرِيتُ النَّارَ فَإِذَا أكْثَرُ أهْلِهَا النِّسَاءُ، يَكْفُرْنَ قيلَ: أيَكْفُرْنَ باللَّهِ؟ قالَ: يَكْفُرْنَ العَشِيرَ، ويَكْفُرْنَ الإحْسَانَ، لو أحْسَنْتَ إلى إحْدَاهُنَّ الدَّهْرَ، ثُمَّ رَأَتْ مِنْكَ شيئًا، قالَتْ: ما رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ.

الراوي:عبدالله بن عباس المحدث:البخاري المصدر:صحيح البخاري الجزء أو الصفحة:29 حكم المحدث:[صحيح]

பெண் தன் கணவனுடன் நன்றி மறந்தவளாக நடந்துகொள்கின்றாள். அவர்களில் ஒருத்திக்குக் காலமெல்லாம் நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை) ஒன்றை அவள் கண்டால், ‘உன்னிடமிருந்து எந்த நலனையும் நான் கண்ட தேயில்லை’ என்று சொல்லிவிடுவாள்”  

புகாரி29.

“நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள். புகாரி. 304.

قالَ: لأنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ، وَتَكْفُرْنَ العَشِيرَ

الراوي:جابر بن عبدالله المحدث:مسلم المصدر:صحيح مسلم الجزء أو الصفحة:885 حكم المحدث:[صحيح]

“நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள், முறைப்படுகின்றீர்கள், (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” முஸ்லிம்.

மேற்ச்சொன்ன ஹதீஸ்கள் பெண்களிடமிருந்து எவ்வாறான கோணலான வார்த்தைகள், அலங்கோலமான செயல்கள்  வெளிப்படும் என்பதனைத் தெளிவு படுத்துகின்றது. பெண்களை அறிவு மிகைப்பதை விடவும் உணர்வு மிகைப்பதுதான் இதற்கான காரணம். 

பெண்களிடம் உணர்வு மேலிடுதல் என்பது  பிள்ளை பெறுதல், பாலூட்டல், பிள்ளை வளர்த்தல் ஆகிய பாரிய பணிக்கு இருக்க வேண்டிய ஓர் அடிப்படைப் பண்பாகும். அவ்வாறில்லை எனில் அவளால் அப்பணியை திறம்படச் செய்ய முடியாமல் போகும்.  

பெண்கள் மாதவிடாய் காலத்தில், கருவுற்றிருக்கும் காலத்தில், பிள்ளை பெற்று பாலூட்டும் காலப்பகுதியில் இதனை வெகுவாகப் பார்க்கலாம். ஏனைய காலங்களை விடவும் இக்காலங்களில் பெண்கள் உணர்வு ரீதியாக சமநிலையற்றுக் காணப்படுவார்கள். தங்களுடைய உணர்வை அறிவு கொண்டு கட்டுப்படுத்துவதற்கான போதியளவு பலம் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே குறிப்பாக  இக்காலப்பகுதிகளிலும், ஏனைய காலங்களிலும் மேலே ஹதீஸில் குறிப்பிட்டது போன்ற வார்த்தைகள், செயல்கள் பெண்களிடமிருந்து வெளிப்படும். 

பெண்ணுடன் ஆண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மற்றும் பெண்ணைப் புரிந்து அதன்படி நடக்காவிடின் ஏற்படும் விளைவு:

பெண்கள் இவ்வாறு உணர்வு மிகைத்தவர்களாக செயற்படுவதை ஒரு போதும் மாற்ற முடியாது. அவ்வாறு மாற்ற முனைந்தால் அப்பெண்ணுடன் ஓர் ஆணுக்கு இனைந்து வாழமுடியாமல் போகும். அதனால்தான் நபி ஸல் அவர்கள் உன்னால் வலைந்த விலா எலும்பை நேராக்கவே முடியாது. அவ்வாறு நீ செய்ய முயன்றால் உடைத்து விடுவாய் என்று சொன்னார்கள். எனவே ஆண்கள் செய்ய வேண்டியது பெண்களிடம் இப்படி ஓர் இயல்பு காணப்படுகின்றது என்பதை ஏற்றுக்கொண்டு, அவ்வியல்பின் காரணமாக அவளிடமிருந்து வெளிப்படும் சில விடயங்களை பொறுத்துக்கொள்வதுடன், அவற்றை கண்டும் கானாமல் விட்டு விடவேண்டும். அவளிடம் காணப்படும் ஏனைய நல்ல விடயங்களை நினைவு கூற வேண்டும்.

இதனை நபி ஸல் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.

لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إنْ كَرِهَ منها خُلُقًا رَضِيَ منها آخَرَ، أَوْ قالَ: غَيْرَهُ.

الراوي:أبو هريرة المحدث:مسلم المصدر:صحيح مسلم الجزء أو الصفحة:1469 حكم المحدث:[صحيح]

மனைவியை  ஒதுக்கிவிடுமளவுக்கு கணவன் அவளுடன் வெறுப்புக்கொள்ள  வேண்டாம். அவளின் ஒரு சில பண்புகள் அவள் மீது வெறுப்பை ஏற்படுத்தினாலும்,அவளை நேசிப்பதற்கு வேறு பல நல்ல பண்புகள் அவளிடம் காணப்படும். (முஸ்லிம்).

பெண்கள் வேண்டுமென்றே ஆணைக் காயப்படுத்துவதற்கோ அல்லது அவனை சஞ்சலப்படுத்துவதற்கோ இதனை செய்வதில்லை மாற்றமாக அவர்களின் அடிப்படைப் பணியை மேற்கொள்வதற்காக அதாவது கருத்தறித்து, பிள்ளை பெற்று பாலூட்டி வளர்ப்பதற்கு தேவையாக இருக்கின்ற ஓர் இயல்பின் காரணமாக வெளிப்படும் விடயங்கள்தான் இவை என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே அவளுடன் அன்பாகவும் அக்கறையாகவும், மிருதுவாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வியல்பின் காரணமாக வெளிப்படும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன் குற்றம் பிடிப்பவனாகவும், பெண்ணைத் தண்டிப்பவனாகவும்  இருந்தால் கண்டிப்பாக அவர்களால் சந்தோஷமாக குடும்பம் நடாத்த முடியாமல் போகும். இணைந்து வாழ முடியாமல் போகும். தினமும் குடும்பத்தில் சண்டையும், சச்சரவாகவுமே இருக்கும். இருவரும் மனதளவில் கொஞ்சம் கொஞ்சமாக தூரமாகி இறுதியில் நிரந்தரமாகப் பிரிந்து விடுவார்கள்.

 பெண்களின் சில தவறுகளை சுட்டிக்காட்ட ஓர் ஆண் விரும்பினால் பெண் சுத்தமாக இருக்கும் காலப்பகுதியில், கருத்தறிக்காத காலப்பகுதியில் அன்பாகவும், பக்குவமாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும். வெறுப்படைவதன் மூலமோ கோபப் படுவதன் மூலமோ, பலத்தைப் பிரயோகிப்பதன் மூலமோ பெண்ணிடம் மாற்றத்தைக் கொண்டுவரமுடியாது. அவ்வாறு செய்ய முயன்றால் அது தலாக்கில்தான் சென்று முடியும். குடும்ப வாழ்வில் இணையும் ஓர் ஆண் பொறுமையோடும், விட்டுக்கொடுப்போடும், சகிப்புத்தன்மையோடும் நடந்து கொள்வது குடும்ப வாழ்வை பிரச்சினையின்றி கொண்டுசெல்ல துணைபுரியும்.

இந்தப் புரிதல் மிக மிக அவசியம் என்பதனால்தான் நபி ஸல் அவர்கள் இந்த ஹதீஸின் ஆரம்பத்திலும், இறுதியிலும்  وَاسْتَوْصُوا بالنِّسَاءِ    என்ற வார்த்தையைப் பிரயோகித்திருக்கின்றார்கள். அதாவது பெண்களின் இந்த இயல்பு காரணமாக அவளிடம் வார்த்தை முந்திவிடும். அவளைத் திருமணம் செய்து, அவளுக்கு வீடு கட்டிக்கொடுத்து, ஆடை, அணிகலன்கள் வாங்கிக்கொடுத்து, இப்படி அவளுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்யும் போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எனக்காக இதுவரை நீங்கள் என்ன செய்திருக்கின்றீர்கள் என்று அவள் கேட்கும்போது கணவனுக்கு எவ்வளவு ஆத்திரமும், கோபமும், கவலையும் வரும். இச்சந்தர்ப்பந்தத்தில் அவனின் எதிர்வினை எவ்வளவு மூர்க்கமாக இருக்கும். அப்பெண்ணுடன் அவன் எவ்வளவு கோபமாக நடந்து கொள்வான். ஏசுவான், திட்டுவான், அடிப்பான், இறுதியில் வீட்டை விட்டு விரட்டி விடுவான் அல்லது அவன் வீட்டை விட்டு சென்று விடுவான்.

இவ்வளவு மோசமான விளைவுகள் தோன்றும் என்பதனால்தான் நபி ஸல் அவர்கள் இந்த ஹதீஸை ஆரம்பிக்கும் போதும்  وَاسْتَوْصُوا بالنِّسَاءِ                                  என்றார்கள். முடிக்கும்போதும்   وَاسْتَوْصُوا بالنِّسَاءِ     என்றார்கள்.  அதாவது பெண்கள் விடயத்தில் நான் செய்திருக்கும் உபதேசங்களின் படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடாத்துங்கள். அவர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய இந்த இயல்பின் காரணமாக அவர்கள் விடும் தவரை பெரிதுபடுத்தி அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். கொடுமைப்படுத்தி விடாதீர்கள். அவளைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள் என்றார்கள். 

எனவே ஒரு ஆண் ஒரு பெண்ணின் இயல்பு குறித்து சரியாக புரிந்து வைத்திருப்பதும், அதற்கேற்றாற் போல் நடந்துகொள்வதும் குடும்ப வாழ்வை மனக்கசப்புகள், சண்டை சச்சரவுகள்,  இன்றி மகிழ்ச்சியாக கொண்டு செல்வதற்கு இன்றியமையாததாகும். 

 ஆண்களுக்கு பெண்ணின் இத்தவறுகளை ஏற்றுக் கொண்டு சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு உபதேசித்த நபி ஸல் அவர்கள். பெண்களுக்கும் பின்வருமாறு ஓர் உபதேசம் செய்தார்கள்

يا مَعْشَرَ النِّساءِ، تَصَدَّقْنَ وأَكْثِرْنَ الاسْتِغْفارَ، فإنِّي رَأَيْتُكُنَّ أكْثَرَ أهْلِ النَّارِ فَقالتِ امْرَأَةٌ منهنَّ جَزْلَةٌ: وما لنا يا رَسولَ اللهِ، أكْثَرُ أهْلِ النَّارِ؟ قالَ: تُكْثِرْنَ اللَّعْنَ، وتَكْفُرْنَ العَشِيرَ، 

الراوي:عبدالله بن عمر المحدث:مسلم المصدر:صحيح مسلم الجزء أو الصفحة:79 حكم المحدث:[صحيح]

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுகையில்), “பெண்கள் சமுதாயமே! தானதர்மங்கள் செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் கண்டேன்” என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, “நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் அதிகமாகச் சாபம் கொடுக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள். முஸ்லிம்.

இந்த ஹதீஸில் நபி ஸல் அவர்கள் பெண்களுக்கு செய்த உபதேசம் அதிகமாக இஸ்திஃபார் செய்யுங்கள், சதகா செய்யுங்கள் என்பதாகும். எனவே நபி ஸல் அவர்கள் பெண்களின் இந்த இயல்பின் காரணமாக ஏற்படும் தவறுகளை நியாயப்படுத்தவில்லை என்பது தெளிவாகின்றது. 

அதே நேரம்  இவ்வாறான தவறுகள் நடைபெறாமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று பெண்களைப் பார்த்து நபி ஸல் அவர்கள் சொல்லவில்லை என்பதையும் நாம் அவதானிக்க வேண்டும். ஏனெனில் அது முடியாத காரியம். பெண்களின் இயல்பு காரணமாக அது நடந்தேதான் தீரும். எனவேதான் நபி ஸல் அவர்கள் பெண்களே உங்களின் இந்த பண்பை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லாமல் அதிகமாக இஸ்திஃபார் செய்யுங்கள், சதகா செய்யுங்கள் என கட்டளையிட்டுள்ளார்கள். 

இவ்வாறு நபி ஸல் அவர்கள் குடும்ப வாழ்வு மிகச்சிறந்த முறையில் அமைவதற்கான தெய்வீக  வழிகாட்டலை காட்டித்தந்திருக்கின்றார்கள். இதன்படி குடும்ப வாழ்வில் இணைகின்ற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இவ்வழிகாட்டலை அறிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும்.  

கட்டுரையின் கருத்துக்களுக்கு எழுத்தாழரே பொறுப்பானவர்

எழுத்தாளர்: முஹம்மது அலி, இலங்கை

Related Posts