இந்தியாவிற்கான முதல் காற்றலைவரிசை சேவை கிபி. 1936ல் தொடங்கப்பட்டது என்றபோதும் ஒருங்கிணைக்கப்பட்ட அகில இந்திய வானொலி நிலையத்தின் ஆகாஷவாணி சேவையானது அலுவல் ரீதியாக 1957ல் தான் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் டெல்லி மற்றும் லக்னோ போன்ற இடங்களில் இருந்து மட்டும் பிராந்திய செய்திகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.
1930களில் உலகளவில் அறிவியல் முன்னேற்றம் பெறும் ஒரு நாட்டின் வளர்ச்சிப்படிகளுள் ஒன்றாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்பட்டது ரேடியோ சேவைகள் என்றால் அது மிகையில்லை. ஓரிடத்தில் நடக்கும் சம்பவங்களை சேகரித்து, செய்தி வாசிப்பின் மூலம் தகவல் எட்டாத பிற பகுதிகளுக்கு அறிவிப்பதில் வானொலியின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.
குறிப்பாக உலகப்போர் சமயங்களில் எந்தெந்த நாட்டில் என்னென்ன போர் நிலவரம் என்பதை மக்களுக்கு துல்லியமாக அறிவித்துக்கொண்டிருந்ததன் பங்கு வானொலியையே சேரும். உலகச்செய்திகள் மட்டுமல்லாது சுதந்திரப்போராட்ட நேரங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த கிளர்ச்சிகள் குறித்தும் அந்தந்த பகுதிகளில் தலைவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட மேடைப்பிரச்சாரங்கள் மற்றும் போராட்டக்களங்கள் குறித்த தகவல்களையும் செய்தி வாசிப்பின் வாயிலாக அறிவித்துக்கொண்டிருந்தனர்.
எந்தவொரு தொழில்துறையானாலும் அல்லது அரசு உத்யோகங்களானாலும் முழுக்க முழுக்க ஆண்களால் மட்டும் நிறப்பப்பட்டுக்கொண்டிருந்த வாய்ப்புகளை அவ்வப்போது சில பெண்கள் முன்னோடிகளும் கைப்பற்றி தங்களது தடங்களை பதித்துவிட்டு போகாமல் இல்லை. அவ்வாறு சுதந்திரகால இந்தியாவில் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டாலும் ஆணாதிக்க சமூகத்தால் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாக கல்வியும் பொருளாதார தேடலும் முற்றாக மறுக்கப்பட்டு அடிமையாக்கப்பட்ட இந்திய பெண் சமூகத்தில் அதிலும் பழமைவாதம் புரையோடிக்கிடந்த வட இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் விடிவெள்ளியாக தோன்றியவர் தான் சயீதா பானு அவர்கள்.
1920ல் லக்னோவில் பிறந்த சயூதா பானு… வளர்த்ததும், உருது மீடியத்தில் படித்தது அனைத்தும் லக்னோவில் தான். தம்முடைய 17வது வயதில் , அப்பாஸ் ரஸா என்ற லக்னோ நீதிமன்ற நீதிபதிக்கு திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டார். 1947ம் ஆண்டு அவர்களுக்கு விவாகரத்தும் நடந்துவிட்டது. திருமணத்தின் மூலம் அவருக்கு இரு குழந்தைகளும் பிறந்து, விவாகரத்தான நிலையில், அவர் குழந்தைகளுடன் டெல்லிக்கு குடிப்பெயர்ந்தார்.
தன்னுடைய வாழ்க்கையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் கருதி அவர் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். முன்னதாக லக்னோவில் ஒரு தனியார் வானொலி நிலையத்தில் உருது செய்தி வாசிப்பாளராக இருந்த அனுபவத்தைக்கொண்டு, டெல்லி வானொலி நிலையத்திற்கு பணிக்கான மனுவை எழுதிப்போட்டிருந்தார். அங்கிருந்து பதில் கிடைக்காத நிலையில் பண்டித ஜவஹர்லால் நேருவின் தங்கையும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை அமைக்க துணையாக இருந்த அரசியல் ஆளுமையுமான விஜயலட்சுமி பண்டிட் அவர்களுக்கு நேரடியாக மனு அனுப்பி தமக்கு பணி நியமனம் கேட்டிருந்தார் சயீதா பானு.
இதன் பலனாக அவருக்கு உடனடியாக வேலை கிடைத்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு அதாவது 13-8-1947 அன்று அவருக்கு உருது செய்தி வாசிப்பு பிரிவில் வேலை கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் அகில இந்திய அளவில் வானொலி நிலைய அறிவிப்பாளராக பணிநியமனம் பெற்ற முதல் இந்தியப்பெண் என்கிற பெருமைமிகு அங்கீகாரத்தை பெற்றார் சயீதா பானு. நாடு சுதந்திரமடைந்த செய்தியை உருதுவில் அறிவித்தவரும் இவரே.
பிறகு செய்தி வாசிப்பாளர் என்கிற பொறுப்புடன், மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சித்தொகுப்பாளர் என்கிற கூடுதல் பொறுப்பும் சயீதா பானுவிற்கு கொடுக்கப்பட்டது. இந்தி சினிமாவின் பிரபல கஸல் பாடகியும்,மூத்த நடிகைகளில் ஒருவருமான பேகம் அக்தார் எனப்படும் அக்தரி பாய் ஃபைஸாபாதி அவர்களுடைய நெருங்கிய தோழி சயீதா பானு என்பது பிற்காலத்தில் அனைவருக்கும் தெரியவந்தது.
நடிகை பேகம் அக்தர் “சங்கீத் நாயக் அகாடமி”, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளை பெற்றவர், (1962 இந்தோ சீனா போருக்காக நிதி திரட்ட லக்னோவில் பெரிய மேடைப்பாட்டுக்கச்சேரி அரங்கேற்றம் செய்து அதன் தொகையை அப்படியே பிரதமர் நேருவிடம் வழங்கினார் பேகம் அக்தர்) .
பாரிஸ்டர் இஷ்தியாக் அஹமது அப்பாஸி உடன் பேகம் அக்தருக்கு மணமுடிக்கப்பட பெரும் காரணமாக இருந்தவர் சயீதா பானு. அப்போது வானொலி நிலையங்களுக்கு நேரடியாக வந்து கஸல், தும்ரி மற்றும் இந்துஸ்தானி இசைப்பாடல்களை பாடுவது வழக்கமாக இருந்தது, இதனை முதன்முதலில் ஏற்பாடு செய்தவரும் சயீதா பானு அவர்களே ஆவார்.
பிறகு சயீதா பானு அவர்களும் வழக்குறைஞர் நூருத்தீன் அஹமது அவர்களுடன் இரண்டாவது திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள். அதன்பின் நூருத்தீன் அஹமது அவர்கள் மூன்று முறை டெல்லியின் மேயராக இருந்து பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சயீதா பானு தன்னுடைய வானொலி நிலைய ஒலிப்பரப்பாளர் பணியின் போது தொடர்ந்து தம்மை பாகிஸ்தானுக்கு போகும்படி கடிதங்கள் வந்தவண்ணம் இருந்ததாகவும், தமது பெயரில் வந்து குவியும் அனைத்து கடிதங்களையும் பிரித்துப்படிக்க தமக்கு நேரமே இருந்ததில்லை எனவும் கூறினார். தாம் பணியில் இருந்து ஓய்வு பெரும் வரையிலும் ,முஸ்லிம் பெண் இப்படி பொது சமூகத்திற்கு வரலாமா ? என்கிற கேள்வியுடனேயே பல கடிதங்கள் வரப்பெற்றதாக நினைவு கூர்கிறார்.
சயீதா பானு அவர்கள் ,தம்முடைய வாழ்க்கை குறிப்புகளடங்கிய ஒரு உருது புத்தகத்தை எழுதி வெளியிட்டிருந்தார். 1994ல் தகர் சே ஹட் கர் (off the beaten track) என்ற பெயருடன் வெளியான அப்புத்தகம் டெல்லி உருது அகாடமியால் சிறந்த புத்தகம் என தெரிவு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரமடைந்த காலத்தில் பெண்களுக்கான முன்னுரிமைகள் என பெரிதாக எதுவும் கொடுக்கப்படாத நிலையில், தனக்கான வாழ்வியல் முறையை தாமே அமைத்துக்கொண்டு, அதற்காக அயராது பாடுபட்டு, கணவனால் கைவிடப்பட்ட நிலையிலும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கும்மிருட்டு காலத்தில் களமிறங்கிய ஒரு சமூகப்போராளியாகவும், இந்திய இஸ்லாமிய பெண்கள் மத்தியில் ஒரு முன்னோடியாகவும் திகழும் சயீதா பானு அவர்கள் பெண்களுக்கான ஒரு உதாரணமாக வாழ்கிறார் என்பது நமக்கு பெருமையே.
எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)