புகழ்பெற்ற கல்வியாளரும், அல்-அமீன் கல்விச் சங்கத்தின் (Al-Ameen Educational Society) நிறுவனருமான Dr.மும்தாஜ் அஹ்மது கான் அவர்களை பற்றி அறிந்து கொள்வது கல்விப்பணியில் தன்னை ஈடுபத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அனுபவப்பாடமாக இருக்கும். சமூகத்தின் தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் நவீன கல்வியை ஊக்குவிப்பதிலும், அதற்கான கல்வி நிறுவனங்களைக் கட்டுவதிலும், Dr.அஹ்மது கான் அவர்கள், தன் வாழ்நாளின் கிட்டத்தட்ட 55 ஆண்டுகளை அர்ப்பணித்தார்கள். கல்வித் தந்தை என்று அறியப்படும், Dr.அஹ்மது கான் அவர்களால் 1966-இல், தனது 31ஆவது வயதில், அல்-அமீன் கல்விச்சங்கம் தொடங்கப்பட்டது. இதன் வழிகாட்டலின் கீழ், கர்நாடகாவிலும், இந்தியாவிலும் கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கல்விநிறுவனங்கள் இன்று இயங்கி வருகிறது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர், ஸலார் எனும் உருது தினநாளிதழின் நிறுவனர், கிட்டதட்ட 175 கல்வி நிறுவனங்களில் தலைவர், நிறுவனர், கெளரவ செயலாளர், அறங்காவலர் என பல பொறுப்புகளில் இருந்த Dr.அஹ்மது கான் அவர்கள் அடிப்படையில் ஒரு மருத்துவர், தமிழ்நாட்டை சேர்ந்தவர். திருச்சியில் செப்டம்பர் 6, 1935-இல் பிறந்தவர். இவரது பெற்றோர்களான இஸ்மாயில் கான் மற்றும் சததுன்னிசா இருவரும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்கள். இவர்கள் இருவரும் அலிகர் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் அஹ்மது கான் அவர்களின் கல்விக்கனவின் மீது அதிக ஈர்ப்பு கொண்டிருந்தவர்கள். Dr.அஹ்மது கான் அவர்களின் பாட்டனார், திருச்சியில் பரந்த பல எஸ்டேட்டுகளுக்கு சொந்தகாரராக இருந்தார். இவர் அழகிய ஆற்றங்கரையில் அமைந்திருந்த, பிரிட்டிஷ் இராணுவ அதிகாரிக்கு சொந்தமான ஒரு பங்களாவை விலைக்கு வாங்கி, அதில் வசித்து வந்தார்.
இத்தகைய பின்புலத்தை கொண்ட, Dr.அஹ்மது கான் அவர்கள் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் தன் மருத்துவப் படிப்பை (MBBS) முடித்துவிட்டு, சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், தன் மருத்துவ மேற்படிப்பிற்காக (MS) சேர்ந்தார்கள். 1965-இல் பெங்களூருவின் வணிக குடும்பத்தில் திருமணமானதால், தன் மேற்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்கள். இதுவே இவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.
பெங்களூர் நகரத்தில் பல பள்ளிவாசல்கள் இருந்தன, ஆனால் பெயர் சொல்லும் அளவுக்கு மதிப்புமிக்க முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லை. சமூகம் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார மற்றும் கல்வி பிரச்சினைகள் பற்றி விவாதிப்பதற்கு எந்த இடமுமில்லை. பள்ளிவாசல்களோ வழிபாட்டிற்கு அப்பாற்பட்ட எதையும் அனுமதிப்பதாக இல்லை. அன்றைய முஸ்லிம்கள் தங்களது கல்விக்கு அங்கிருந்த கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சமூகங்களால் நடத்தப்படும் நிறுவனங்களைச் சார்ந்து இருந்த அவல நிலை குறித்து Dr.அஹ்மது கான் அவர்கள் அதிருப்தியடைந்தார்கள்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல மாதகால கலந்துரையாடல்களால், 1966 இல் அல்-அமீன் கல்விச் சங்கம் (Al-Ameen Educational Society) தோன்றியது. பேகம் அப்பாசியா மெச்சி அவர்கள் அல்-அமீன் கல்விச் சங்கத்தின் முதல் தலைவராக பொறுப்பு வகித்தார். இவர் பிற்காலத்தில் மைசூரின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கல்விச்சங்கம், நகரின் கலாசிபாளையம் பகுதியில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து, தனது அல்-அமீன் கல்லூரியை 1967-இல் தொடங்கியது. இது வரலாற்று சிறப்புமிக்க மாவீரன் திப்புசுல்தானின் கோடைக்கால அரண்மனைக்கு அருகில் அமைந்திருந்தது. முதல் ஆண்டு, ஆண்கள் பெண்கள் உட்பட எண்ணிக்கையில் 30 ஆக இருந்த மாணவர் சேர்க்கை, அடுத்த ஆண்டில் பத்து மடங்காக உயர்ந்தது.
மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்திற்கும், ஊழியர்களின் சம்பளம், வாடகை மற்றும் இதர செலவுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்தது. விரிவுரையாளர்கள் நேர்மையற்றவர்களாக, பண-நோக்கம் கொண்டவர்களாக இருந்தனர் மற்றும் சம்பளம் வழங்குவதில் தொடர் தாமதங்கள் ஏற்பட்டது. இது அவர்களை நிர்வாகத்திற்கு எதிராக கலகம் செய்யக்கூடியவர்களாககூட மாற்றியிருக்கும். நவீன கல்வி நிலையங்களை நிறுவுதல் எனும் Dr.அஹ்மது கான் அவர்களின் பணியின் எதிரிகளுடன் சேருவதைகூட, அவ்விரிவுரையாளர்கள் தவிர்த்திருக்க மாட்டார்கள். இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், 1967 வாக்கில் லால்பாக் எதிரில், மாநில வக்ப் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட சில வக்ப் நிலங்களை, சமூகவிரோத சக்திகள் சில ஆக்கிரமித்திருந்தார்கள். அதை எதிர்த்து இவர் சட்டப்போராட்டம் மேற்கொண்டார். இதனால் இவர்மீது எதிரிகள் சில FIRகளை பதிவு செய்ததால், இவரும் வழக்குகளை சந்திக்க நேரிட்டது. 1980-இல் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் இந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்தது.
சூழ்ச்சிகளுக்கும் சோதனைகளுக்கும் நடுவில்தான் Dr.அஹ்மது கான் அவர்களின் பயணம் அமைந்திருந்தது. அவருடைய துயரங்களுக்கு முடிவே இல்லை. நிதி சேகரிப்பு அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில், நகரத்தின் உயரந்தஸ்து மக்கள், Dr.அஹ்மது கான் அவர்களை ஒரு கல்லூரி நிறுவனராக அல்லாமல் நன்கொடை சேகரிப்பவராக மட்டுமே அடையாளங்கண்டனர். அதில் ஒரு சிலரே தங்களது பணப்பை முடிச்சுகளை தளர்த்தினர். 1968-இல் பெங்களூரு பல்கலைகழகத்தோடு இணைவதற்காக அல்-அமீன் கல்லூரி கட்டணமாக ரூ.2000க்கான காசோலையோடு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்திருந்ததது. ஆனால் கல்லூரி வங்கிக்கணக்கில் போதிய நிதியில்லாததால், காசோலை திருப்பிதரப்படவே, கல்லூரியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது கடுமையான பின்னடைவாக அமைந்தது. அடுத்த ஆண்டு, பல்கலைகழக இணைவு ஏற்பாடுகள் மிகவும் கவனமாக கையாளப்பட்டதால், கல்லூரி பல்கலைக்கழகத்தோடு இணைப்பது சாத்தியமானது. 1970-க்குள், கல்லூரி விரிவுரையாளர்களின் சம்பளத்திற்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டது.
இப்போது Dr.அஹ்மது கான் அவர்களுக்கு சற்று மூச்சுவிடக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தாலும், பொருளாதார பிரச்சனைகள் முடிந்தபாடில்லை. ஒரு சமயத்தில், கல்லூரியில் கொஞ்சமும் நிதியில்லாமல் போனபோது, யாருக்கும் சம்பளம்கூட கொடுக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டதால் Dr.அஹ்மது கான் அவர்களும், சக ஊழியரும் ஒரு திரைக்கலைஞரை நன்கொடைக்காக சந்தித்தனர். பெங்களூரில் ஒரு முஸ்லிம் கல்லூரி வந்துள்ளதை அறிந்து அத்திரைக்கலைஞர் பரவசமடைந்ததோடு, ஒரு மாதத்திற்கு தேவையான மொத்த சம்பளப் பணத்தையும் கையோடு கொடுத்து மேலும் அடுத்தடுத்த மாதங்களில் நன்கொடை அளிப்பதாக வாக்குறுதியும் கொடுத்தார். Dr.அஹ்மது கான் அவர்கள் திருச்சியில் இருந்த தனது பரம்பரை சொத்தை விற்று, கல்லூரியின் கட்டமைப்பு பணிகளுக்காக செலவிட்டார்.
அன்றைய காலத்தில், ஆசிரியர்கள் தனக்கு ஒத்துழைக்கவில்லை எனவும், தனது பணியை தோற்கடிக்க முனையும் எதிரகளோடு உடன்பட்டிருந்தனர் எனவும், Dr.அஹ்மது கான் அவர்களே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்கள். ஆனால் அவர் சற்றும் மனந்தளராமல், தனது கனவின் மீது நம்பிக்கை கொண்டவர்களோடும், இரக்கமுள்ள நன்கொடையார்களோடும் தனது தொடர்பை பலப்படுத்திக் கொண்டிருந்தார். வனஸ்பதி உற்பத்தியாளரான, ஹாஜி அப்துல் லத்தீஃப் தயுப் போன்ற சில முன்னணி தொழிலதிபர்கள்; பட்டய கணக்காளரான (chartered accountant) K. ரஹ்மான் கான்; ஜான்சன் தரைவிரிப்புகள் நிறுவனத்திலிருந்து ஆஸம் ஜான்; மொஹமட் ஹசன் சைட்; வாராந்திர பத்திரிக்கையான நாஷேமனின் ஆசிரியர் உஸ்மான் ஆசாத்; சமூக சேவகர்களான இப்ராஹிம் கலீலுல்லா கான், மக்சூத் அலிகான் (எம்.பி., ராஜ்யசபா) போன்றவர்கள், Dr.அஹ்மது கான் அவர்களுக்கு உதவ முன்வந்தனர். அல்-அமீன் நிறுவனம் படிப்படியாக ஒளிர்விடத் தொடங்கியது.
இது பெங்களூருக்கு வெளியேவும் வளரத் தொடங்கியது. தொழிலதிபர் நபி ஷெரீப் அவர்கள், பெங்களூருவில் இருந்து 45 கிமீ தொலைவிலுள்ள ரமணகிராம் நகரத்தில், கவுசியா பொறியியல் கல்லூரியை (Ghousia College of Engineering) அமைக்கவும், பெங்களூரு நகரில், கவுசியா பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி (Ghousia Girls’ Polytechnic College) மற்றும் ஐடிஐ நிறுவனங்களை அமைக்கவும் நிலம் வழங்கினார்கள். பெங்களூருக்கு கிழக்கே 70 கிமீ தொலைவிலுள்ள கோலாரில் அமைந்திருக்கும் அல்-அமீன் டிகிரி கல்லூரியின் கீழ், நூல்பிடித்தார் போல் வரிசையாக பள்ளிக்கூடங்கள் உருவானது. கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளான பீதர் மற்றும் ஹும்னாபாத்திலும் அல்-அமீன் நிறுவனங்கள் முளைத்தன.
முன்னாள் கர்நாடக முதல்வரான திரு.ராமகிருஷ்ணா ஹெக்டே அவர்களின் ஆட்சி காலத்தில், அல்-அமீன் குழுவுக்கு பீஜாப்பூரில் அல்-அமீன் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டது, இது இன்று பல் மருத்துவம், நர்சிங் மற்றும் மருந்தியல் கல்லூரிகளைக் கொண்டுள்ளது.
பெங்களூருவில் அமைந்திருந்த அல்-அமீன் வளாகத்தில் சட்டம், மேலாண்மை, மருந்தகம், தகவல் அறிவியல், ஆசிரியர் பயிற்சி போன்ற படிப்புகளை வழங்கும் பல நிறுவனங்கள் சேர்க்கப்பட்டன. நகரின் மையப் பகுதியில் உள்ள அல்-அமீன் மருத்துவமனை, அல்-அமீன் மருத்துவ மற்றும் தொண்டு அறக்கட்டளையின் கீழ் வந்தது. அல்-அமீன் குடியிருப்பு பள்ளி (Al-Ameen Residential School) கோலார் செல்லும் சாலையில் நகரத்திற்கு கிழக்கே 30 கிமீ தொலைவில் உள்ள ஹோசகோட்டில் அமைக்கப்பட்டது. அல்-அமீன் கல்விச்சங்கம், தற்போது நாடு முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு 250க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
Dr.அஹ்மது கான் அவர்கள் கல்விக்கான கர்நாடக ராஜ்யோத்சவா விருது, கெம்பேகவுடா விருது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்களின் அமெரிக்க கூட்டமைப்பு விருது, ஜூனியர் ஜெயீஸ் விருது மற்றும் இந்திய மக்கள் தொடர்பு கழக விருது உட்பட பல விருதுகளால் கெளவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள். தனது மனைவி, மகன் மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்துவந்த Dr.அஹ்மது கான் அவர்கள், மே 27, 2021 அன்று மாலை, தனது 86-ஆவது வயதில் மறைந்தார்கள்.
தன் வாழ்நாளின் 55 ஆண்டுகளை முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்காக அர்பணித்திருக்கிறார்கள். Dr.அஹ்மது கான் அவர்கள் சமூகசேவையில் மிக உயர்ந்த பாரம்பரியத்தை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்கள். முஸ்லிம்களிடையே நல்லொழுக்கம் மற்றும் மார்க்க நெறிமுறைகள் பேணுதலோடு நவீன கல்வியை ஆர்வப்படுத்துவதில் அயராது உழைத்திட பல தலைமுறை இளைஞர்களை ஈர்த்துள்ளார்கள். சமூகங்களை வழிநடத்த அரசியல் தலைவர்கள்தான் வேண்டும் என்று அவசியமில்லை என்பதை தன் செயல்கள் மூலம் நிரூபித்த Dr.அஹ்மது கான் அவர்களின் மறைவால், இந்திய முஸ்லிம்கள் தன்னலமற்ற ஒரு தலைவரை இழந்துவிட்டனர். நவீன திறன்களையும், நாகரீகமாக நடந்து கொள்வதையும் போதிக்கும் கல்வி மட்டுமே சமூக மீள்எழுச்சியின் பாதையாக இருக்கும்.
தமிழில் தொகுப்பு:
V R அப்துர்ரஹ்மான், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
References:
- https://www.siasat.com/dr-mumtaz-ahmed-khan-lived-in-pursuit-of-a-vision-thankfully-he-could-see-the-change-2143508/
- https://www.theweek.in/news/india/2021/05/29/founder-of-al-ameen-institutions–dr-mumtaz-ahmed-khan–passes-a.html
- https://thecognate.com/dr-mumtaz-ahmed-khan-founder-of-al-ameen-educational-society-passes-away-at-86/
- https://en.wikipedia.org/wiki/Mumtaz_Ahmed_Khan_(humanitarian)