இந்தியாவில் சுகாதாரமிகு நகரங்களை உருவாக்க நேஷனல் சொசைட்டி ஆஃப் க்ளீன் சிட்டீஸ் (NSCC) எனும் அமைப்பினை முதன்முதலில் தொடங்கிய ஒரு பெண் சமூகப்போராளி தான் ஸஹ்ரா அலி. இவர் மஹாராஷ்டிரா மாநில முன்னாள் ஆளுநரான அலி யாவர் ஜங் அவர்களின் மனைவி ஆவார்.
மும்பை மற்றும் பாந்திரா நகர் குழந்தைகளுக்கு கல்வியும், சுகாதாரமான மற்றும் ஊட்டச்சத்து மிகு உணவும் சுத்தமான குடிநீரும் பெற்றுத்தர வேண்டி, ஒரு சுய முதலீட்டு, அரசு சாரா நிறுவனத்தை தொடங்கி சமூக சேவை செய்வதில் தொடங்கியது இவரது சீர்மிகு பணி.
இந்திய அளவில் ஏழை குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களது கல்வி மற்றும் சுகாதாரத்துடனும் சத்துணவுடனும் கூடிய வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது..போதிய மருத்துவ உதவிகள் மற்றும் வாழ்விழந்தோருக்காக மறுவாழ்வு மையங்கள் உருவாக்கித்தருவது போன்ற குறிக்கோள்களை உள்ளடக்கி NSCC அமைப்பினை ஏற்படுத்தினார், அந்த குறிக்கோள்களை பலரது உதவியுடன் அடையவும் செய்தார். இவரது சீர்மிகு சமூகப்பணிகளை பாராட்டி 1973ல் இவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த விருதான பத்மவிபூஷன் கொடுத்து பாராட்டப்பட்டது.
அதுபோக ஸஹ்ரா அலி அவர்களின் சேவைகளை அங்கீகரித்து எகிப்து அதிபர் அப்துல் நாஸர் அவர்களுடைய அழைப்பின் பெயரில் கெய்ரோவில் அதிபரோடு விருந்து கொடுக்கப்பட்ட, அரசியல் சாராத ஒரே இந்தியப்பெண் என்ற அடையாளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளார் ஸஹ்ரா அலி.
இவரை குறித்து இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரான குஷ்வந்த் சிங் அவர்கள் எழுதிய கட்டுரையான Truth,Love and a Little malice இவரது பெருமையை பரைசாற்ற போதுமானதாக உள்ளது.
ஸஹ்ரா அலியின் கணவரான நவாப் அலி யாவர் ஜங் பஹதூர், ஹைதராபாத்தில் ஒரு நல்ல மதிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர், அவரது குடும்பத்தவர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவும், கல்வியாளர்களாகவும், அரசு அலுவலகப்பணிகளில் இருப்பவர்களாகவும் இருந்தனர். இங்கிலாந்திலுள்ள ஆக்ஃபோர்டில் குவின்ஸ் கல்லூரியில் வரலாற்றுத்துறை பட்டம் பெற்றவர் அலி யாவர் ஜங்.
முதலில் உஸ்மானிய பல்கலையின் துணை வேந்தராகவும், பிறகு அலிகர் பல்கலையின் துணைவேந்தராகவும் பணியாற்றிய அலி யாவர் அவர்கள், அதன் பிறகு எகிப்து, யுகஸ்லாவியா,அர்ஜென்டினா, க்ரீ்ஸ், பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இந்திய தூதராக செயல்பட்ட ராஜதந்திரி ஆவார். பின்னாளில் மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக பதவியேற்று, பதவியில் இருந்த நிலையிலேயே ராஜ் பவனில் இறப்பெய்தினார் அலி யாவர் ஜங்.
அவருக்கு பத்மபூஷண் மற்றும் பத்மவிபூஷண் விருதுகளை கொடுத்து பெருமை சேர்த்த இந்திய அரசு, மும்பையின் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் சாலைக்கும், தேசிய செவித்திறன் குறைபாடு சிகிச்சை பெறும் நிலையத்திற்கும் இவரது பெயரை சூட்டி மரியாதை செய்தது.
ஆலீஸ் இஃப்ரிங் என்ற பிரைஞ்சுப்பெண்ணினை திருமணம் முடித்த அவருக்கு பில்கீஸ் என்ற மகள் பிறந்த கையோடு விவாகரத்தும் நடந்துவிட்டது. அதன் பிறகு இரண்டாம் முறையாக ஸஹ்ரா அலியை திருமணம் முடித்தார் அலி யாவர். பில்கீஸின் கணவர் இத்ரீஸ் ஹஸன் லத்தீஃப் , இந்திய விமானப்படையின் பத்தாவது ஏர் மார்ஷலாக மதிப்புமிகு பணியில் இருந்தவர். ஸஹ்ரா அலிக்கு குழந்தைகள் இல்லை.
இந்தியாவின் சிப்கோ போராளி என அறியப்பட்ட காந்தியவாதி – சுந்தர்லால் பஹுகுணா அவர்களோடு (வடநாட்டு நம்மாழ்வார் எனலாம்) சேர்ந்து “பேட் பச்சாவோ” அமைப்பில் இறங்கி மரங்களை பாதுகாக்க போராடியவர் ஸஹ்ரா. புதிய நகரங்களை உருவாக்க வன அழிப்புத்திட்டத்திற்கு எதிராகவும், சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கவும் , காட்டுவாழ் ஆதிவாசி கிராம மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் , மரங்களை வெட்ட விடாமல் மிசோரத்தில் தொடங்கிய போராட்டத்தை உலகளவில் அஹிம்ஸை முறையில் முன்னெடுத்து பிரபலப்படுத்திய சுந்தர்லால் அவர்களோடு சேர்ந்து 1987ல் மும்பையில் Save Tree March நடத்திய பெருமை ஸஹ்ரா அலி அவர்களுக்கு உண்டு.
1920ல் பிறந்த ஸஹ்ரா , 2010ல் இறப்பெய்தினார்
எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)