காரைக்காலில் 1880ம் ஆண்டு மு.தம்பிசாயபு மரைக்காயர், மு.முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர், மு.முஹம்மது காதர், முஹையதீன் மரைக்காயர் என்ற சகோதரர்கள் இணைந்து ஒரு கூட்டுவியாபார ஸ்தாபனத்தை உருவாக்கினார்கள்,
அதற்கு மு.தம்பிசாயபு மரைக்காயர் &பிரதர்ஸ் என பெயரிட்டு சிங்கப்பூரில் வைர வியாபாரத்தை தொடங்கினார்கள், சில காலங்களில் வியாபாரத்தில் பெரும் இழப்பு ஏற்படவும் மீண்டும் தாயகம் திரும்பினார்கள்,
சில காலத்திற்கு பிறகு இந்த வைர வியாபாரத்திற்கு ஏற்ற நாடு எது என்பதை நன்கு ஆராய்ந்து தாய்லாந்தின் தலைநகர் பேங்காக் நகரில் மீண்டும் தொழிலை தொடங்கினார்கள் வியாபாரம் கை கொடுத்தது பல வகையில் லாபம் கிட்டியது.
வியாபார ஸ்தாபனத்தின் பெயரிலேயே ஒரு அறக்கட்டளையை துவக்கி வியாபாரத்தில் வரும் லாபத்தில் 10% சதவீதத்தை அறக்கட்டளை நிதியாக ஒதுக்கினார்கள். 1923ம் ஆண்டு பழைய தரங்கம்பாடி வீதியில்(காமராஜர் சாலை) தொழுகை பள்ளியும் அதை சார்ந்த இடத்தில் அரபி பாடசாலையும் அமைத்தார்கள், அப்பள்ளிக்கு கப்படா பள்ளி என பெயரிடப்பட்டது, அப்பள்ளியை இது நாள் வரையில் செவ்வனமே பராமரித்து நிர்வாகம் செய்து வருகிறார்கள்.
அறக்கட்டளை சார்பாக ஆண்டுக்கு இரண்டு முறை சமுதாய மக்களுக்கு பொது விருந்து வைப்பார்கள், அக்குடும்பத்தில் உள்ளவர்கள் ஊரில் உள்ள அனைவருக்கும் நேரடியாக சென்று அழைப்பு கொடுப்பார்கள், அவ்விருந்தில் நாகூர், நாகப்பட்டிணம், பொறையார், தரங்கம்பாடி, சங்கரன் பந்தல் ஊர்களிலிருந்தும் வந்து கலந்து கொள்வார்கள்,
இலங்கை தலைநகர் கொழும்பு நகரிலிருந்து உலமா பெருமக்கள் வந்து கலந்துக்கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள், பொது விருந்து ஆண்டு தோறும் சிறப்பாக நடந்து வருகிறது, 130 ஆண்டுகளாக பொது விருந்து நடத்தி வரும் ஒரே அறக்கட்டளை
பிரஞ்சுகாரர்கள் காரைக்காலில் ஒரு தெருவுக்கு “ஹாஜி. மு.தம்பிசாயபு மரைக்காயர் வீதி என பெயரிட்டுள்ளனர், தாய்லாந்து நகர் பேங்காக் நகர் சியாம் பகுதியில் ” ஹாஜி. மு.தம்பிசாயபு மரைக்காயர் லேன் என அந்நாடு பெயரிட்டுள்ளது.
இவர்களது ஆளுகையில் இருந்த இடங்கள் நேரு நகர், வட்டார வளர்ச்சி அலுவலக இடம், அண்ணா கலைக்கல்லூரி இடம், பீச் ரோடு லே கபே, PRTC இடம், BSNL இடம் இன்று அரசிடம் உள்ளது.
“பொது சேவையே புகழ் என் கொள்வோம்” என பணியாற்றி வரும் அஞ்சுமன் இஸ்லாமியா சங்கத்திற்கு அறக்கட்டளை சார்பாக ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கப்பட்டது, தனியார் ஆம்புலன்ஸ் இல்லாத நிலையில் இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் உதவியாக இருந்து வந்தது.
பாரம்பரியமாக இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அரசு டவுன் காஜியாராக இருந்து வருகிறார்கள், மேலும் அரசு கெளரவ பதவிகளிலும், அரசு பதவிகளிலும் இருந்துள்ளார்கள், புதுவை அரசின் முதல் வக்ஃபு வாரியத்தலைவராக பதவி வகித்த M.G.ஜெகபர் மரைக்காயர் இக்குடும்பத்தை சார்ந்தவர்.