காவிரி ஆற்றின் நிலை.

by Mohamed Anas

சென்ற 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. நீரை வரவேற்று அப்பாவிகளான உழைக்கும் வேளாண்குடி பெண்கள் காவிரியாற்றில் விழுந்து வணங்கினர். 

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சுமார் 15 இலட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை பயன்படுத்தி வேளாண்மை செய்யப்படுகிறது. சுமார் ஒருகோடி மக்களின் குடிநீர் தேவையை காவிரிநீர் பூர்த்தி செய்கிறது.

தமிழக மக்களின் முதன்மையான நீராதாரமாக திகழும் காவிரியாற்றில், தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவின் 80 விழுக்காடு கழிவுநீர் சுத்தப்படுத்தப்படாமல் அப்படியே விடப்படுகிறது.

2014 இல் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவராஜ் டங்கடகி கர்நாடக சட்டமன்றத்தில் இதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இதை தடுக்க வேண்டும் என்று  கர்நாடக அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

2017 இல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆதரவோடு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கங்கையை காட்டிலும் 600 மடங்கு அதிகமான இரசாயன கழிவுகளை காவிரிநீர் சுமக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரிநீரை வணங்கும் உணர்ச்சிப்பூர்வமான இந்த படத்திற்கு பின்னால் நாம் எவ்வளவு அறியாமையில் இருக்கின்றோம் என்பதையும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தஞ்சையில் பன்னோக்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதற்கான ஒரு முக்கிய காரணம் இது.

தமிழக நீராதாரங்களை பாதுகாக்க வேண்டுமென்றால் நம் பிள்ளைகளின் உயர்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

உயிரிவேதியியல் (Biochemistry) நுண்ணுயிரியல் (Microbiology) தாவர உயிரியல்  (Plant Biology) நிலவியல் (Geology) இதில் ஏதாவது ஒரு படிப்பை தேர்வு செய்து மேற்படிப்பில் காவிரியை சுத்திகரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளுங்கள்.  

பெங்களூரு கழிவுநீரை தடுக்கும் சட்டப்பூர்வ முயற்சிகளை புதிய அரசு வேகமாக முன்னெடுக்க வேண்டும். ஆனால் முதலாளித்துவம் அவ்வளவு எளிதாக அதற்கு உடன்படாது. யார் செத்தாலும் எது அழிந்தாலும் முதலாளித்துவ சிந்தனைக்கு பணம் ஒன்றே குறிக்கோள்.

நம்மை தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளை நிரந்தர தீர்வாக நாம் முன்னெடுக்க வேண்டும். மிகக் குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் மீது  இஸ்லாம் வலியுறுத்தும் பொறுப்பாக இது இருக்கிறது. 

காவிரிநீரில் கலந்து வரும் இரசாயன கழிவுகளை சுத்திகரிக்கும் மூலிகை மரங்களை கண்டறிந்து  மேட்டூர் முக்கொம்பு கல்லணை ஆகிய இந்த மூன்று அணைகளின் ஓரங்களிலும் , தமிழகத்தின் பிலிகுண்டுலு – பூம்புகார்  400 கி.மீ நீர் வழித்தடத்திலும், காவிரி துணை ஆறுகள் மற்றும் பிரிவு கால்வாய் வழிநெடுகிலும் நடுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும்.

மனிதர்கள் கால்நடைகள் பறவைகள் தாவரங்கள் நுண்ணுயிரிகள் என்று கோடிக்கணக்கான உயிர்களை வாழவைக்கும் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மாணவர்கள் இறைவனின் நேசத்திற்குரியவர்களாக  மாறிப்போவார்கள் என்பது நிச்சயம். 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்லணையை கட்டிய கரிகால் பெருவளத்தானின் வரலாற்றைப் போல உலகம் அழிகின்ற காலம் வரை இந்த மாணவர்களின் வரலாறும் வாசிக்கப்படும்.  

இதற்குப்பெயர் தான் கல்வி.

–  CMN SALEEM

————————————

Source : https://timesofindia.indiatimes.com/…/arti…/62216019.cms

https://bangaloremirror.indiatimes.com/…/46738777.cms?

Related Posts