அதிக தூக்கம் ஆபத்தானது

by Mohamed Anas

தூக்கம் மனித வாழ்வுக்கு இன்றியமையாதது; அது ஒரு மாபெரும் அருள்; ஓர் அமலும் கூட ஆயினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள் அல்லவா? அதேபோல அதிக தூக்கமும் ஆபத்தானது.

𝐎𝐯𝐞𝐫 𝐒𝐥𝐞𝐞𝐩𝐢𝐧𝐠-அதிக தூக்கம்  உடல் ஆரோக்கியத்திற்கும் ஆன்மாவுக்கும் பல பயங்கரமான ஆபத்துக்களை விளைவிக்கின்றது.

🔵 மிகக் குறைவான தூக்கம், அதிக தூக்கம் இரண்டுமே நம் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பவை.

🔵 குறைவாகத் தூங்குபவர்களுக்கு நீரிழிவு ஆபத்து அதிகம்; அதே போன்று அதிகமாகத் தூங்குபவர்களுக்கும் நீரிழிவு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

🔵 குறைவாகத் தூங்குவது போலவே அதிகமாகத் தூங்கினாலும் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புண்டு. உடல் பருமனுக்கும் தூக்கத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்பு உண்டு என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

🔵 தலைவலி, முதுகு வலி முதலான உபாதைகளுக்கும் அதிக தூக்கம் காரணமாக அமையலாம்.

🔵 இதயம் சார்ந்த நோய்களுக்கும் குறைந்த தூக்கத்துக்கும் தொடர்பு உண்டு. அதே போன்று அதிக நேரம் தூங்குவதற்கும் இருதய நோய்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

🔵 இவற்றோடு அதிக தூக்கம் சோம்பலையும் மனச்சோர்வையும் ஏற்படுத்துகின்றது.

🔵 அளவுக்கதிகமான தூக்கம் மன அழுத்தத்தின் ஓர் அறிகுறியாகவும் கொள்ளப்படுகின்றது.

🔵 ஒருவர் தொடர்ந்தும் அதிக நேரம் தூங்கும் பழக்கமுடையவராக இருந்தால் அவரது ஆயுளும் குறைவடைய வாய்ப்புகள் உண்டு.

🔵 அதிக தூக்கம் உடலை மட்டுமல்ல அது ஆன்மாவையும் ஆன்மீக வாழ்வையும் கடுமையாகப் பாதிக்கக் கூடியது.

நமது ஆரம்ப கால இமாம்கள் அதிக தூக்கத்தினால் விளையும் ஆன்மீக ரீதியிலான பாதிப்புக்களை விளக்கி, அதிக தூக்கத்தையிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

புழைல் இப்னு இயாழ் (றஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:

“இரண்டு தன்மைகள் உள்ளத்தின் மென்மையைப்போக்கி அதனை வன்மையாக்கிவிடும். அவையாவன: அதிக தூக்கமும் மிதமிஞ்சிய உணவுமாகும்.”

உள்ளத்தை நாசப்படுத்தும் ஐந்து அம்சங்களை விளக்கியுள்ள இமாம் இப்னுல் கையிம் (றஹ்) அவர்கள் அவற்றுள் ஒன்றாக அதிக தூக்கத்தைக் குறிப்பிட்டு,

▪️அது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்;

▪️உடலில் சோர்வை உண்டாக்கும்;

▪️நேரம் வீணாகக் காரணமாக அமையும்;

▪️’கப்லா’ எனும் மறதி நிலையை-அலட்சியப் போக்கையும் சோம்பலையும் உருவாக்கும் என்றும் விளக்குகின்றார்கள்:

இமாம் அல் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் அதிக தூக்கத்தின் ஆபத்தை பின்வருமாறு விளக்குகின்றார்கள்:

“அதிக தூக்கம் ஆயுளை வீணாக்கிவிடும்; இரவுத் தொழுகையை பாழ்படுத்திவிடும்; மந்த நிலையும் இறுகிய உள்ளமும் உருவாகக் காரணமாக அமையும். ஆயுள் மிகவும் பெறுமதியான ஒரு ரத்தினம்; ஒருவரின் மூலதனம் ஆயுள்தான். அதனை தூக்கத்தில் வீணாக்கலாமா? அதிக தூக்கம் ஆயுளைக் குறைத்து விடும்…” இப்படி சொல்லிக்கொண்டு செல்கின்றார்கள் இமாம் அவர்கள்.

சராசரி ஆயுளைப் பெற்ற ஒருவர் தனது முழு ஆயுளில் மூன்றில் ஒன்றை தூக்கத்தில் கழிக்கின்றார்; சில ஆண்டுகள் குழந்தைப்பருவத்தில் கழிகின்றது.

குளியல் அறையிலும் உண்பதிலும் குடிப்பதிலும் மற்றும் சில ஆண்டுகளைக் கழிக்கின்றார்.

அடுத்தவர்களுடன் உறவாடுவதிலும் உரையாடுவதிலும் இன்னும் பல ஆண்டுகளை செலவு செய்கின்றார்.

இந்த நிலையில்,  அவர் அதிகம் தூங்கும் பழக்கமுடையவராக இருந்தால் அவரது ஆயுளில் உருப்படியாக எதையாவது சாதிக்க முடியுமாக இருக்குமா?

வாழ்க்கையை நுகர்ந்து முடிப்பதால் என்ன பலன்? வாழ்க்கையை உச்ச நிலையில் முதலீடு செய்யவல்லவா முயற்சிக்க வேண்டும்!

ஒருவர் தனது ஆயுளை கூட்டிக்கொள்ள விரும்பினால் அதற்கான சாத்தியமான ஒரு வழி நாளாந்தம் தூங்கும் நேர அளவைக் குறைப்பதுதான்.

பகலில் தூங்குவதைத் தவிர்த்து பயனுள்ள காரியங்களில் உற்சாகமாகவும் சுருசுருப்புடனும் ஈடுபட வேண்டும்.

இரவில் தூக்கத்தைக் குறைத்து, குறிப்பாக இரவின் முற்பகுதியில் தூங்கி, பிற்பகுதியில் கண்விழித்து அமல் – இபாதத்களில், வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.

அல்குர்ஆன் இறைவிசுவாசிகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

 تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا…

 “அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.”

உண்மையான இறையச்சம் உடைய முத்தகீன்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

   كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏ 

“இரவில் குறைவாகவே அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.”

   وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏ 

“இரவின் கடைசி நேரங்களில் அவர்கள் பாவமன்னிப்பும் தேடுவார்கள்.”

“நரகத்தை விட்டும் விரண்டோடுபவன் தூங்கிக் கொண்டிருப்பானா?

சுவனத்தைத் தேடுபவன் தூங்கிக் கொண்டிருபானா?” என்று ஆச்சரியத்தோடு நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

ஒரு தாபிஈ ஆன தாவூஸ் (றஹ்) அவர்கள்,

தூங்குவதற்காக தனது படுக்கையை விரிப்பார்கள்; சாய்வார்கள்; சற்று நேரம் புரளுவார்கள். பின்னர் துள்ளிக்குதித்து எழுந்து தொழ ஆரம்பித்து விடுவார்கள்; ஸுப்ஹு வரை தொழுவார்கள். “நரகத்தின் நினைவு தூக்கத்தை பறக்க வைக்கின்றது” என்பார்கள்.

இதே போல நரகம் பற்றிய நினைவு தம்மை தூங்க விடாமல் தடுப்பதாகவும் அதனாலேயே இரவில் தூக்கம் கலைந்து விடுவதாகவும் தாங்கள் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் ஷத்தாத் இப்னு அவ்ஸ், ஸப்வான் இப்னு மிஹ்றஸ், அற்றபீஃ இப்னு கைஸம், ஸுப்யானுஸ் ஸௌரி போன்ற மற்றும் பல முன்னோர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

எழுத்தாளர்:- அஷ்ஷைஃக் அகார் முஹம்மது – இலங்கை

Related Posts

Leave a Comment