பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை.

by Mohamed Anas

மரபணு மாற்றம் செய்யப்பட பன்றியின் சிறுநீரகத்தை மூளைச்சாவு அடைந்த பெண்ணின் காலில் பொருத்தும் முயற்சி (Xenotransplantation) வெற்றி பெற்றுள்ளதாக அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் இது போன்ற முயற்சிகள் புதிது அல்ல.ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ராம் பரூவா என்பவர் பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தும் முயற்சியில் வெற்றி பெற்றார்.ஆனால் அதற்காக அவர் அப்போது கைது செய்யப்பட்டார்.

அதேபோல பன்றியின் திசுக்களில் தயாரிக்கப்பட்ட இதய இரத்த வால்வுகளை மனிதர்களுக்கு பொருத்துவது இப்போது மேலைநாடுகளிலும் இந்தியாவிலும் சாதாரணமாக நடந்து வருகிற நிகழ்வுதான்

மேற்கத்திய நாடுகள் உயிரியல் ரீதியான ஆராய்ச்சிகள் எல்லாவற்றிலும் பன்றியை முதன்மைப் படுத்துவது ஏன் என்பதையும் இதுபோன்ற நவீனகால விவகாரங்களை முஸ்லிம்கள் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்தும் எனது கருத்தை இங்கே முன்வைத்துள்ளேன்.

பொதுவாக மனிதர்கள் தங்கள் வாழும் சூழலுக்கேற்ப தங்களோடு நெருக்கமாக உறவாடும் உயிரினங்களில் அவர்களுக்கு எது விருப்பமானதாக இருக்கிறதோ அதைத்தான் எல்லாவற்றிலும் பயன்படுத்துவார்கள்.

கடற்கரையோரம் வாழும் மக்கள் மீன் இறால் கருவாடு மாசி போன்ற கடல் உயிர்களை தங்களது முக்கியமான உணவுகள் அனைத்திலும் பயன்படுத்துவார்கள். சிப்பி முத்து சங்கு பாசி போன்ற கடல் பொருட்களை தங்களது வழிபாடுகள் வசிப்பிடங்கள் உடை ஆபரணங்கள் உள்ளிட்டவைகளை கலாச்சாரமாக பயன்படுத்துவார்கள்.

காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் பறவைகளின் இறக்கைகள் மரங்கள் இலைகள் மட்டைகள் மலர்கள் செடிகொடிகளை தங்களது உணவு மருந்து விழாக்கள் குடியிருப்புகள் போர்கருவிகள் போன்றவற்றுக்கு முதன்மை பொருட்களாக பயன்படுத்துவார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளின் பாலைவனப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஒட்டகம் குதிரை வெள்ளாடு உடும்பு பருந்து போன்ற விலங்குகளை தங்களது வாழ்க்கை உறவுகளாக கொண்டாடுவார்கள். இவைகள் தான் அவர்களது உணவு மருந்து வசிப்பிடம் வேளாண்மை வணிகம் போர் உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவை.

அமெரிக்க ஐரோப்பிய நஸராணிகளும் சீனர்களும் பெரும்பாலும் வெள்ளைப் பன்றியின் மீது அளப்பரிய விருப்பமுடையவர்களாக இருக்கின்றனர்.பன்றியே அவர்களது வாழ்வின் பிரதான விலங்கு.பன்றியே அவர்களது பண்பாட்டின் அடையாளம்.

உலகின் பன்றி உற்பத்தியில் சீனா அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் முதல்நிலை வகிக்கின்றன. மருந்தியல் துறை (Pharma Industry) உலக மக்களை சுற்றிவளைத்து சுரண்டி வரும் இன்றைய சூழலில் பன்றியே அவர்களின் முதன்மை மூலதனமாக விளங்குகிறது.

மேலும் இன்றைய அமெரிக்க ஐரோப்பிய அரசுகளும் சமூகமும் அறிவியல் தொழிநுட்ப ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதை தங்களது வாழ்வின் பெருமைக்குரிய இலக்காக கருதுகின்றனர்.அதில் உணவு மருந்து தாவரங்கள் விலங்குகள் உள்ளிட்ட உயிரியல் பிரிவு ஆராய்ச்சிகள் அனைத்திற்கும் தங்களது விருப்பத்திற்குறிய விலங்கான பன்றியையே முதன்மையாக முன்னிறுத்துகின்றனர்.

பாக்கெட்டில் அடைக்கப்பட உணவுப் பொருட்கள், அழகுசாதன பொருட்கள், மரபணு மாற்றத்திற்கான மூலப்பொருள்,மருந்துகள் என்று வகைபடுத்த முடியாத அளவிற்கும், அதை எளிதாக யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கும் பன்றி அவர்களின் ஆன்மாவாக இருக்கிறது.

மருத்துவத்தில் பன்றியின் பயன்பாடுகள் குறித்து சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.சிலர் அதை உயிர்காக்கும் மருந்தாக கருதி “அது ஆகுமானது தான்” என்றும் இன்னும் சிலர் பன்றி அசுத்தமானது அதனால் “அது கூடாது” என்றும் மார்க்க ரீதியான ஆராய்ச்சி முடிவுகளை முன்வைக்கின்றனர்.

பன்றி உள்ளிட்ட விலங்குகளின் திசுக்களின் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள், மனிதனுக்கான உடல் உறுப்புக்கள், சர்வதேச மருத்துவ சந்தையில் இப்போது கோடிகளை குவிக்கும் துறையாக உருவெடுத்து வருகிறது.

மேற்கத்திய உலகத்தின் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் பரபரப்பாக வெளிவருகின்ற போது அவற்றுக்கு அல்குர்ஆன் ஹதீஸ்களில் இருந்து இஸ்லாமிய அங்கீகாரம் வழங்குவதைத் தான் இதுநாள் வரை நாம் வாடிக்கையாக வைத்திருக்கின்றோம். அதைத்தான் இஸ்லாத்தில் விஞ்ஞானம் என்று எழுதுகிறோம்.

இது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.

வரலாற்றில் 16 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இதுபோன்ற அறிவுத்துறை சோம்பேறித்தனம் உம்மத்தின் சிந்தனையில் ஊடுருவியிருக்கிறது. அதற்கு முன்பு அப்படியில்லை.

உயிர்கள் குறித்த அல்குர்ஆனின் கருத்திலிருந்து முஸ்லிம்கள் முன்னெடுத்த உயிரியல் ஆராய்ச்சிகளின் முடிவுகளை அன்றைய உலகம் வியந்து ஏற்றுக்கொண்ட காலம் அது.

இனிவரும் காலங்களில் உணவு மருந்து போன்ற பொருட்களில் பன்றியின் ஊடுருவலை தடுக்க வேண்டுமென்றால் நம் பிள்ளைகளை புதிய பாதையில் உயிரியல் ஆராய்ச்சிகளுக்கு தூண்ட வேண்டும்.

அதற்கான கருப்பொருளை அல்குர்ஆன் ஹதீஸிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பூமியின் ஒவ்வொரு நிலத்தில் வாழும் மக்களுக்கும் அந்தந்தப் பகுதியில் வாழும் ஆகுமாக்கப்பட்ட ஏதாவது ஒரு விலங்கின் உறுப்புகள் மனிதர்களுக்கு நிச்சயம் பொருந்திப் போகத்தான் செய்யும்.அதற்கான ஆராய்ச்சிகளில் நம் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும்.

2015 இல் சென்னையைச் சேர்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செரியன் மற்றும் அனந்தராமன் ஆகியோர் இந்தியாவிலயே முதன்முறையாக மாட்டின் திசுக்களில் தயாரிக்கப்பட்ட இதய இரத்த வால்வுகளை 81 வயது மூதாட்டிக்கு பொருத்தி சாதித்து காட்டினர்.

இதுபோன்ற மாற்று முயற்சிகளை எடுக்கும் சிந்தனை முஸ்லிம் மருத்துவர்களுக்கு வருவதில்லையே ஏன் என்பதுதான் என்னுடைய கேள்வி.

அதேபோல ஒட்டகத்திலிருந்து மனித உயிர்காக்கும் மருந்துகள் தயாரிப்பது குறித்த நுண்ணுயிரியல் ஆராய்ச்சிகள் சவுதி அரேபியாவின் உனைஸா மற்றும் அல் ஹஸ்ஸா பல்கலைக்கழகங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

அது ஆச்சரியமான சில முடிவுகளைத் தந்தது.ஆனால் அரசியல் காரணங்களுக்காக அப்படியே அது அமுக்கப்பட்டது. இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஒட்டகங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விலங்குகளிலேயே ஒட்டகம் ஒரு வியக்கத்தக்க படைப்பு. “ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா ” என்ற கேள்வியை அல்குர்ஆன் (88:17) முன்வைப்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் நம் பிள்ளைகளின் சிந்தனையை இப்படி கூர்தீட்டுவோம்.

BOTONY / ZOLOGY / MICROBILOGY / GENETICS / BIOTECHNOLOGY / BIOCHEMISTRY / SURGERY போன்ற துறைகளில் நவீன காலத்திற்கேற்ப செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELLIGENCE) அறிவுடன் ஆராய்ச்சி செய்யும் முஸ்லிம் மாணவர்கள் பன்றியை தவிர்த்து முஸ்லிம்களுக்கு (மனிதர்களுக்கு) ஆகுமாக்கப்பட்ட விலங்குகளின் உறுப்புக்கள் அல்லது திசுக்களிலிருந்து மனிதனுக்கான உறுப்புகளையும் மருந்துகளையும் தயாரிப்பது குறித்த ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

இதுதான் இன்றைய முஸ்லிம் அறிவுலகம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு.

எல்லாவற்றிலும் மேற்கத்திய உலகத்தை பின்பற்றுவதால் நாம் சிந்தனை ரீதியான அடிமைகளாக அவர்களையே பின்தொடர வேண்டிய இன்றைய நிலைதான் நீடிக்கும்.

உலகிற்கு வழிகாட்டும் இடத்திற்கு மீண்டும் உயர முயல்வதே உம்மத்தின் மீட்சிக்கான வழி. இதை உங்கள் பிள்ளைகளின் உள்ளங்களில் ஆழமாக விதைக்க வேண்டும்.

ஒட்டகம் ஆடு பசு தேனீ உள்ளிட்ட எல்லா படைப்புகளையும் ஆராய்ச்சி செய்யும் அல்குர்ஆனின் கல்வித்திட்டத்திற்கு முஸ்லிம்கள் விரைந்து திரும்பினாலே போதும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு மனிதர்களின் உடல்நல வீழ்ச்சியையும் இந்த உலகத்தின் அழிவையும் ஓரளவிற்கு தள்ளிப்போட முடியும்.

ஆராய்ச்சி படிப்புக்கு போகவே மாட்டேன் என்று வம்படியாக நின்றால் பிறகு அருவருக்கத்தக்க விலங்கான பன்றிகளோடு ஒன்று கலந்துவிட்ட சீன அமெரிக்கா ஐரோப்பிய காரர்களை தலைசிறந்து விஞ்ஞானிகள் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதைத் தவிர வேறுவழி இல்லாமல் போகும்.

-CMN Saleem

Related Posts