ஸபஃ எனும் நாட்டை ஆட்சி செய்து வந்த ஒரு பெண்ணைப் பற்றி அல்குர்ஆன் விபரிக்கின்றது. இறைத்தூதர் ஸுலைமான்(அலை) அவர்களுக்கும், ஸபஃ நாட்டை ஆட்சி செய்து வந்த அப்பெண்ணுக்கும் இடையில் நடைபெற்ற கடிதத் தொடர்பாடல், பின்னர் அவர்களுக்கிடையிலான சந்திப்பு மற்றும் நேரடி உரையாடல், அதன் பின் அப்பெண் ஸுலைமான் (அலை) அவர்களின் தூதினை ஏற்றுக் கொள்ளல் வரையில் ஸூரத்துந் நம்ல் பேசுகிறது..
ஸூரத்துந் நம்ல் விபரிக்கும் அச்சம்பவத்தினை பெண்கள் ஆட்சியாளர்களாக தெரிவு செய்யப்பட முடியும் என்பதற்கான ஆதாரமாக பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். ஏனெனில், அப்பெண் அவ்விடத்தில் எடுத்த சமயோஜிதமான தீர்மானத்தை அல்குர்ஆன் புகழ்ந்துரைக்கின்றது; அவளின் தீர்மானம் சரியானது என உறுதிப்படுத்துகிறது.
ஆனால், ஸபஃ நாட்டரசி பற்றி அல்குர்ஆன் விபரிக்கும் வசனங்களை கவனமாக வாசிக்கும் பொழுதும், அக்கால சூழமைவின் பின்னனியில் அப்பெண் எடுத்த தீர்மானத்தை வைத்து நோக்கும் போதும் வெறுமனே “பெண்கள் ஆட்சியாளர்களாக தெரிவு செய்யப்பட முடியும்” என்பதற்கான ஆதாரத்தைக் கடந்தும் அல்குர்ஆன் முக்கியமான ஒரு செய்தியினை அவ்வசனங்கள் வாயிலாக சொல்ல வருகிறது என்பதனை உணர முடியும். இவற்றினூடாக அல்குர்ஆனிய உலகக் கண்ணோட்டம் எமது பார்வைக் கோணத்தில் எத்தகைய மாற்றத்தினை விழைகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
அல்குர்ஆன் ஸபஃ நாட்டினை ஆட்சி செய்த அப்பெண்ணைப் பற்றி என்ன செய்தியினை சொல்ல வருகிறது?!
அதற்கு முதலாவதாக அப்பெண் வாழ்ந்த அல்லது அந்நிகழ்வுகள் நடைபெற்ற சூழமைவு சார்ந்த புரிதல் அவசியமானது. நாடுகளுக்கிடையிலான உறவின் அடிப்படையாக ‘யுத்தம்’ இருந்த கால கட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு இது. அதாவது, உலக வரலாற்றில் நீண்ட காலமாக நாடுகளுக்கிடையிலான உறவினை தீர்மானித்த முதன்மை விடயமாக யுத்தமே காணப்பட்டது. ஒரு பலமான ஆட்சியாளன் தனது எல்லையை தான் விரும்பிய அளவுக்கு விஸ்த்தரித்துச் செல்வதும், இன்னொரு நாடு அல்லது தேசத்தின் மீது படையெடுப்பதும் சட்ட ரீதியில் தடை செய்யப்பட்ட ஒரு விடயமாக கருதப்படவில்லை. தான் பலமாக உள்ளபோது தன்னைச் சூழ இருக்கும் நிலப் பரப்பினை ஆழ்பவர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியாது போனால், பின்னர் தான் பலவீனப்படும் போதோ அல்லது சூழ இருக்கும் நிலத்தின் ஆட்சியாளர்கள் தன்னை விட பலப்படும் போதோ தனது நிலத்தினை அவர்களிடம் இழக்க நேரிடும் நிர்ப்பந்த நிலையும் ஏற்படலாம் என்ற சூழ்நிலை காணப்பட்ட உலக ஒழுங்கு அது. யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கு என இது பொதுவில் அழைக்கப்படுகிறது..
இன்னொரு வகையில் சொல்வதென்றால், இன்றைய சர்தேச ஒழுங்கமைவுகளின் கீழ் இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் எல்லைக்குள் இன்னொரு நாடு உள்நுழைவது சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் தடைசெய்யப்பட்டதாகவும், அத்துமீறலாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இன்று நாடுகளுக்கிடையிலான உறவின் அடிப்படையாக ‘சமாதானமே’ காணப்படுகின்றது. சர்வதேச ஒழுங்கமைவுகளின் மூலமாகவும், ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் இன்றைய உலக ஒழுங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தத்தை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட உலக ஒழுங்கு சமாதானத்தை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கு என பொதுவில் அழைக்கப்படுகின்றன. (இதன் நடைமுறை வடிவம் இன்று எவ்வாறு இருந்தாலும், எந்தவொரு நாடும் சர்வதேச சட்டத்தின் இவ்வேற்பாட்டினை மறுத்துரைக்கவில்லை – அதாவது, கோட்பாட்டளவிலேனும் இவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன)..
நிற்க… விடயத்துக்கு வருவோம்!
யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கினுள் அதற்கு விதிவிலக்காக சிந்தித்த ஒரு ஆட்சியாளராக அப்பெண்ணினை அல்குர்ஆன் அறிமுகப்படுத்துகிறது. அப்பெண் வாழ்ந்த சூழமைவின் பின்னனியில் நோக்கினால், அப்பெண் ஆட்சியாளர் என்ற வகையில் மேற்கொண்ட தீர்மானம் எவ்வளவு முக்கியமானது, முன்மாதிரியானது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். அல்குர்ஆனும் அப்பெண்ணின் தீர்மானத்தை சரியானது என உறுதிப்படுத்துவது இப்பின்னனியிலானதாகவே இருக்க முடியும்.
அப்பெண் ஆட்சியாளர் என்ற வகையில் தன்னிடம் வந்த செய்தியினை இவ்வாறு திறம்பட எதிர்கொண்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது:
“(அரசி சொன்னாள்:) “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”.
நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது..
“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).
எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.”(27:29-32).
இவ்வாறு ஸபஃ நாட்டரசி தனது பிரமுகர்களைப் பார்த்து கூறிய போது, அவர்களின் எதிர்வினை இவ்வாறு இருந்தது. அவர்களின் எதிர்வினையில் அக்கால சூழமைவின் பின்னனி தெளிவாக வெளிப்படுகிறது. அதாவது, யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கினுள் வாழ்ந்தவர்கள் எவ்வாறு இன்னொரு நாட்டிலிருந்து வரும் செய்தியை எதிர்கொள்வார்களோ, அவ்வாறே அப்பிரமுகர்களும் எதிர்கொண்டார்கள்:.
“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.”(27:33).
தனது பிரமுகர்களின் கருத்தை தெரிந்து கொண்ட அவளின் பதில், மிகத் தெளிவாகவே அவள் வாழும் உலக ஒழுங்கு பற்றிய புரிதலில் இருந்து வெளிப்படுகிறது:
“அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்.” அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.”(27:34)..
இவ்வசனத்தின் இறுதிப் பகுதியும் அப்பெண்ணின் அவள் வாழும் உலக ஒழுங்கு பற்றிய புரிதல் சரியானது என்று உறுதிப்படுத்துகிறது: “அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.” என அல்குர்ஆன் அக்கருத்தினை ஏற்றுக் கொள்கிறது, மீள் உறுதிப்படுத்துகிறது..
எனவே, அப்பெண்ணின் முடிவு யுத்தத்தை தவிர்க்கும் வழிவகைகளை கண்டடைவது பற்றியதாக அமைகிறது. அவள் தான் யுத்தத்தை விரும்பவில்லை என்பதை அவளிடம் வந்த கடிதத்துக்கு அளிக்கும் பதிலின் மூலம் வெளிப்படுத்துகிறாள். அவள் தனது தீர்மானத்தை பிரமுகர்களிடம் இவ்வாறு தெரிவித்தாள்:.
“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.” (27:35)..
அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை ஸூரத்துந் நம்ல் விபரித்துச் செல்கிறது. ஒரு ஆட்சியாளர் என்ற வகையில் அப்பெண் மிகச் சரியான தீர்மானத்தையே ஒவ்வொரு கட்டத்திலும் எடுக்கிறாள். அதன் மூலம் யுத்தத்தைத் தவிர்த்தது மட்டுமன்றி தனது சமூகத்தை நேரான பாதையில் இட்டுச் செல்லவும் செய்கிறாள்..
“(இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.”(24:01).
எமது சமூகம் இன்று முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விவகாரத்தில் பெண்களை காழி நீதிபதிகளாகவும், விவாகப் பதிவாளர்களாகவும் நியமிக்க முடியுமா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் ஏன் பெண்களை இப்பதவிகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான (நிர்வாக ரீதியான தேவைகள் அல்லது) நியாயங்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலும்..
ஆட்சியோ அல்லது அதற்கடுத்த (காழி நீதிபதி, விவாகப் பதிவாளர் போன்ற) நிர்வாகப் பதவிகளோ ஒருவரின் திறமையிலும், தகைமையிலுமே தங்கியுள்ளவை; ஒருவர் ஆணா, பெண்ணா என்ற பால் வேறுபாட்டில் அல்ல. ஒருவர் குறித்த பதவிக்கு தேவையானவராகவும், தகுயானவராகவும், பொருத்தமானவராகவும் இருத்தலே அவர் அப்பதவியினை வகிக்கப் போதுமானது.
அடுத்து, இன்று ஆட்சியோ அல்லது அதற்கடுத்த நிர்வாகப் பதவிகளோ தனியொருவரில் தங்கியிருப்பதல்ல. இன்று ஆட்சி என்பது ஒரு இயந்திரம், பொறிமுறை அதில் (ஆணோ, பெண்ணோ) மேல் நிலையிலுள்ள ஒருவர் மட்டும் தனித்து எதனையும் தீர்மானிப்பதில்லை. அதாவது, இன்று ஒரு பெண் ஆட்சியாளராக இருக்க முடியுமா அல்லது நிர்வாகப் பதவிகளை வகிக்க முடியுமா என்ற வாதமே அர்த்தமற்றது, பயனற்றது.
அல்குர்ஆன் முன்வைக்கும் ஸபஃ நாட்டு அரசி (யுத்தத்தை அடிப்படையாகக் கொண்ட உலக ஒழுங்கில்) எடுத்த தீர்மானத்தின் நுணுக்கத்தை, முக்கியத்துவத்தைப் பார்க்கையில், (பெண்களின் இயல்பு மற்றும் அது சார்ந்த அனுபவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு,) பெண்களை ஆட்சியாளர்களாக நியமிப்பது உலகில் அமைதி நிலவுவதற்கு வழிகோலும் என்று சில ஆய்வுகள் கருத்துக் கொண்டிருப்பது ஒருவேளை உண்மைக்கு மிக நெருக்கமாக அமையுமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது! .
அல்லாஹூ அஃலம்!
நன்றி:- MANAZIR ZAROOK
Source :- https://wordsofmercy.org/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4/