இந்தியாவில் யோகா பயின்று சவூதி அரேபியா முழுவதும் பயிற்சி மையங்களை சட்ட ரீதியாக அமைத்து வருகிறார் ஜித்தாவைச் சேர்ந்த ” ஆச்சார்யா நவுஃப் அல் மர்வாய் ” என்ற சவூதி பெண்மணி.
சவூதிகளின் அறிவு ஆன்மா உடல் இந்த மூன்றையும் யோகாவின் மூலம் செழுமையாக்க முடியும் என்று கூறுகிறார்.
யோகாவிற்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தந்து சாதனை செய்துள்ளதாக பிரதமர் மோடியை ஆச்சார்யா நவுஃப் அல் மர்வாய் வெகுவாக புகழ்கிறார்.
இவருக்கு இந்திய அரசு 2018 இல் ” பத்மஸ்ரீ ” விருது வழங்கி கவுரவித்துள்ளது.
அல் மர்வாய் அவர்களை நிறுவனராக கொண்டு இயங்கும் அரபு யோகா ஃபவுண்டேஷன் (Arab Yoga Foundation) என்ற அமைப்பின் மூலம் ஏறக்குறைய 400 முழுநேர பயிற்சியாளர்கள் சவூதி அரேபியாவின் மக்கா மதீனா தாயிப் தம்மாம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர்.
மேற்கத்திய கலாச்சார ஈர்ப்பின் காரணமாக சவூதிகளிடையே அதிகரித்து வரும் உடல்பருமன் நீரழிவுநோய் மனஅழுத்தம் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட சிக்கல்களுக்கு மருந்து மாத்திரை இல்லாமல் யோகக்கலையின் மூலம் தீர்வளிக்க முடியும் என்று அல் மர்வாய் கூறுகிறார். குறிப்பாக சவூதி பெண்களிடம் யோகாவிற்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக கூறுகிறார்.
இந்த செய்தியை படிக்கின்ற போது இந்த உம்மத் செல்லும் பாதையையும் அதன் தேவைகளையும் இன்னும் முஸ்லிம் அறிவுத்துறை வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள கலாச்சார மாற்றங்களையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
யோகக்கலை பலநூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது என்பதிலும் அதன் பிறப்பிடம் சித்த மருத்துவம் என்பதிலும் அது மனித உடலையும் மனதையும் சமநிலைப்படுத்தும் ஒரு உடற்பயிற்சி கலை என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.
ஆனால் யோகாவின் இன்றைய உலகளாவிய விரிவாக்கத்தின் பின்னணியில் இந்துத்துவ அரசியல் ஒளிந்துள்ளது என்பதையும் யாராலும் மறுக்க இயலாது.
சரி இதற்கு என்ன செய்வது….? யோகா போன்ற உடற்பயிற்சி கலைகளை முஸ்லிம்கள் எப்படி கையாள வேண்டும்….?
யோகாவை இஸ்லாமியப்படுத்த வேண்டும்.
திக்ர் (இறைவனை துதித்தால்), இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு வேண்டுதல்) அல்தா’முல் ( சிந்தனை) போன்ற உள்ளத்தை சுத்திகரிக்கும் (குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் கூடிய) ஆன்மிகப் பயிற்சிகளுடன்…..
…….மனித நினைவுத்திறனை அதிகரித்தல், மனஅழுத்தம் நீக்குதல், உடல்பருமனை குறைத்தல், உள்ளிட்ட நவீனகால சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் சில யோகாசனங்களையும் இணைத்து ஒரு முழுமையான இஸ்லாமிய உடற்பயிற்சி கலையை உருவாக்க வேண்டும்.
ஒவ்வொரு காலத்திலும் வாழும் முஸ்லிம்களின் இஸ்லாமிய வாழ்வுக்கு அவசியமான வழிமுறைகளை ஷரீஅத்தில் வலுவாக நின்று பிராந்திய கலாச்சாரத்தின் தன்மைக்கேற்ப நெகிழ்வாகவும் மக்கள் பின்பற்றுவதற்கு இலகுவாகவும் வடிமைத்துக் கொடுக்க வேண்டிய பெருங்கடமை அந்தந்த மண்ணில் வாழும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் மருத்துவர்களின் பொறுப்பாகிறது.
9 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அப்பாஸிய கிலாஃபத்தின் தலைநகர் பாக்தாத்தில் அமைக்கப்பட்ட பைத்துல் ஹிக்மா என்ற அறிவு இல்லத்தில் வைத்து கிரேக்க மருத்துவ குறிப்புகளையும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஸுஸ்ருதாவின் ஆயுர்வேத சமஸ்கிருத நூல்களையும் இஸ்லாமியப்படுத்தி அரபியில் மொழிபெயர்த்து அரபுலகம் முழுவதுமுள்ள மதரஸாக்களில் மருத்துவ பாடமாக வைத்தனர்.
இந்த முன்னுதாரணத்தை உலகின் இறுதிநாள் வரை முஸ்லிம்கள் தொடரவேண்டும்.
உலகின் எந்த ஒரு பயனுள்ள மனித அறிவும் முஸ்லிம் உம்மத்தால் ஏற்கப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய அறிவுத் துறையின் விதி.அது இஸ்லாமயமாக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
யோகாவை இஸ்லாமியப்படுத்த வேண்டும்.
எழுத்தாளர்:- CMN Saleem