இலங்கை முஸ்லிம்களின் கல்வியும் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பும் என்ற தலைப்பில் வாமி நிறுவனம் ஜூலை 2011 இல் கொழும்பில் ஒரு நாள் மாநாடொன்றை நடாத்தியது. இம்மாநாட்டில் ஜாமியா நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் ஆற்றிய உரை இங்கே தரப்படுகிறது.
………………………………………………………………………..
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்.
அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா அஷ்ரபில் அன்பியாஇ முர்ஸலீன். ஸையிதினா முஹம்மதின் வஅலா ஆலிஹி வஸஹ்பிஹ் வமன் தபிஅஹுஉம் பி இஹ்ஸானின் இலா யவ்மித்தீன்.
இன்றைய இந்த அமர்வுக்குத் தலைமை வகிக்கும் வாமி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி ஹாரிஸ் அவர்களே, ஜாமியா நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷைய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்களே, பேரன்புக்குரிய சகோதர, சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
இன்று நடைபெறுகின்ற இந்தச் செயலமர்விலே ”இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாறு” என்ற தொனிப்பொருளிலே சில கருத்துக்களை தெரிவிக்கும் படி நான் கேட்கப்பட்டேன். அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே! எந்த ஒரு பிரச்சினையையும் உரிய முறையில் விளங்குவதற்கும் புரிந்துகொள்வதற்கும் இனம் காண்பதற்கும் வரலாற்றுப் பின்னணி மிகவும் அவசியம் ஆகும். இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வித் துறையிலே பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது என்பதை நாம் அறிவோம். இந்தப் பிரச்சினைகள் சரியாக இனம் காணப்படவும் அவை தீர்க்கப்படவும் வரலாற்றுப் பின்னணி அவசியம் என்று நாம் கருதுகிறோம்.
அன்புக்குரிய சகோதரர்களே! இந்நாட்டு முஸ்லிம்களின் கல்வி வரலாற்றினை அவதானிப்போமாயின் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளை உள்ளடக்குகின்றது. இலங்கை முஸ்லிம் சமூகம் இந்நாட்டிலே 1000 ஆண்டுகளுக்கு மேலான மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. இச்சமூகம் வணிக சமூகமாக அறிமுகமாகிப் பரவலாகக் குடியேறி, பிரஜைகளாக தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு வரலாற்றிலே இடம்பிடித்தது. இலங்கை முஸ்லிம் சமூகம் நீண்ட காலமாக ஒரு வணிகச் சமூகமாக இருந்து வந்ததுடன் நாட்டின் தேசிய வாழ்வுக்கும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக உயர்ந்த பங்களிப்பை செய்துள்ளது. காலம் காலமாக இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு வணிக சமூகமாகத்தான் இனம் காணப்பட்டு வந்தது. அது ஒரு தவறான கருத்தல்ல என்று நான் நினைக்கிறேன். இலங்கை முஸ்லிம் சமூகம் கி.பி. 505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் வருகையோடும் 1658 ம் ஆண்டு ஒல்லாந்தரின் வருகையோடும் மிகச் சோதனை மிக்க கால கட்டத்தை எதிர்நோக்கியது.
இந்த வெளிநாட்டு சக்திகள் இந்நாட்டின் வணிகத்தை தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதுடன் அவர்களது மதத்தைப் பிரச்சாரம் செய்யவும் மும்முரமாக ஈடுபட்டார்கள். இவர்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் அதிகமான பிரச்சினைகளை எதிர்நோக்கினார்கள்.
போர்த்துக்கேயர், டச்சுக் காலப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட அவர்களின் பாடசாலைகளை முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை நோக்கும் போது, அவர்கள் குடியேறிய காலம்முதல், தாம் குடியேறிய பிரதேசங்களில் தங்களது கலாசார பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் மஸ்ஜிதுகளை அமைத்தார்கள். அந்த மஸ்ஜிதுகளை மையமாக வைத்து குத்தாப் என்று கூறக்கூடிய பாடசாலைகளை, குர்ஆன் மத்ரஸாக்களை அமைத்துக்கொண்டார்கள்.
எனவே இந்த நாட்டின் முதலாவது முஸ்லிம் கல்வி நிறுவனமாக குத்தாபை நாங்கள் கருதலாம். இந்த நாட்டிலே கண்டுபிடிக்கப்பட்ட அரபு சிராசனமொன்றினை அவதானிக்கும் போது, அப்பாஸிய காலப்பிரிவிலே இந்நாட்டு வாழ் முஸ்லிம்கள் அப்பாஸிய கலீபாவிற்கு தங்களுடைய சன்மார்க்க கடமைகள் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக, அதற்கான வழிமுறை தொடர்பான ஒரு மார்க்க அறிவுரையை அனுப்பும்படி கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றது. அந்த அறிஞர் அபூ அல் பகாயா என்றும் அந்த சிராசனம் குறிப்பிடுகின்றது. எனவே, அக் காலப்பிரிவிலே முஸ்லிம்கள் கொழும்பில் குத்தாபுகளை வைத்திருந்தார்கள் என்பது இத்தகைய வரலாற்றுக் குறிப்புகளால் தெளிவாகின்றது. ஆங்கிலேயர் காலத்திலே 1796ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் அவர்களினால்; மிஷனரிப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. இந்த மிஷனரிப் பாடசாலைகளின் நோக்கம் ஆங்கிலக் கல்வியை வழங்குவதும், இதன் மூலம் கிறிஸ்தவ மதத்தைப் பிரச்சாரம் செய்வதுமாக இருந்தது. எனவேதான் இந்தப் பாடசாலைகள் மிஷனரி பாடசாலைகள் என்று அழைக்கப்பட்டன.
முஸ்லிம்கள் இந்த மிஷனரி பாடசாலைகளிலே வழங்கப்பட்ட நவீன கல்வியை அதாவது ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தார்கள். ஏனென்றால், இத்தகைய மிஷனரி பாடசாலைகளின் நோக்கம் நவீன கல்வி மட்டுமல்ல கிறிஸ்தவ மதப் பிரசாரமும் கூட என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். எனவே இந்த ஆங்கிலக் கல்வியையும் நவீன கல்வியையும் முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள். 1781ஆம் ஆண்டு முதல் இத்தகைய குத்தாபுகள் மூலமாக முஸ்லிம் சமூகத்திலே எழுத வாசிக்க தெரிந்தவர்களை உருவாக்கினார்கள். ஆனால் நவீன கல்வியை அவர்கள் பெற்றிருக்கவில்லை. 1881 முதன் முதல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை புள்ளிவிபரவியல் கணிப்பீட்டின் படி முஸ்லிம் சமூகத்தில் ஆண்கள் 32%, பெண்கள் 2% என்ற அடிப்படையில் எழுத வாசிக்கத் தெரிந்திருந்தனர். 1921ஆம் ஆண்டு கணிப்பீட்டின் படி ஆண்கள் 47%, பெண்கள் 6% என்ற அடிப்படையில் எழுத்தறிவு பெற்றிருந்தனர். இந்த எழுத்தறிவோடு முஸ்லிம்களின் கல்வி முடிவடைந்துவிட்டது.
19ஆம் நூற்றாண்டின் கடைசி சகாப்தத்தில் இந்த நாட்டின் முஸ்லிம் தலைவர்கள் நவீன கல்வியின் முக்கியத்துவத்தையும் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தார்கள். ஏககாலப் பிரிவிலேயே சிங்களச் சமூகமும் தமிழ் சமூகமும் இதனை உணர்ந்தது. சிங்கள சமூகத்திலே ஆங்கிலக் கல்வியைப் பௌத்த சூழலிலே வழங்குவதற்காக ஆனந்தா கல்லூரி நிறுவப்பட்டது. தமிழ் சமூகத்திலே ஆறுமுகநாவலர் போன்றவர்கள் சைவ சூழலின் அடிப்படையிலே ஆங்கிலக் கல்வியை வழங்குவதற்கான நிறுவனங்களை உருவாக்கினார்கள். இக்காலப் பிரிவிலேயே முஸ்லிம் தலைவர்களும் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். ஆங்கிலக் கல்வியை முஸ்லிம்கள் புறக்கணித்தால் நிச்சயமாக இந் நாட்டின் தேசிய வாழ்விலே இருந்து அவர்கள் ஒதுக்கப்படுவார்கள் என்ற உணர்வை அவர்கள் பெற்றார்கள்.
குறிப்பாக சித்திலெப்பை, ஐ.எல்.எம் அப்துல் அஸீஸ் போன்றவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார்கள். தூரநோக்கோடு செயற்பட்ட மர்ஹும் சித்திலெப்பை அவர்கள் ”முஸ்லிம் நேசம்”; என்று ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அந்தப் பத்திரிகை மூலம் முஸ்லிம்கள் நவீன கல்வியைப் பெறுவதன் அவசியத்தையும் ஆங்கில அறிவைப் பெறுவதன் அவசியத்தையும் மிக ஆழமாக வலியுறுத்தினார். இக்காலப்பிரிவில் எகிப்திலே இருந்து இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்ட அராபி பாஷாவின் பேரன்பும் ஆதரவும் சித்தி லெப்பைக்கு கிடைத்தது. இவர்களுடைய முயற்சியின் காரணமாக 1891ம் ஆண்டு கண்டியில் ஒரு பாடசாலை நிறுவப்பட்டது. 1892ம் ஆண்டு மருதானை முஹம்மத் ஆண் பாடசாலை என்ற பெயரில் மருதானை முஹம்மதிய ஆண் பாடசாலை நிறுவப்பட்டது. 1903ம் ஆண்டு 7 முஹம்மதிய ஆண் பாடசாலைகள் நிறுவப்பட்டன. முஸ்லிம் பாடசாலை என்பதற்கு முஹம்மதியன் பாடசாலை என்ற பெயரைத்தான் கொடுத்தார்கள். இஸ்லாம், அரபு ஆகிய இரண்டு பாடங்களையும் போதிக்கும் பாடசாலைகள் முஹம்மதிய ஆண் பாடசாலை, முஹம்மதிய பாடசாலைகள் என்று அழைக்கப் பட்டன.
பாடசாலைகளில் ஸாஹிரா மட்டுமே கால வளர்ச்சியில் முன்னேறியது. மருதானை முஹமத்திய ஆங்கில பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பாடசாலை 1913ம் ஆண்டு ஸாஹிரா கல்லூரி என பெயர் சூட்டப்பட்டது. எறக்குறைய 108 ஆண்டுகள் ஸாஹிராவின் கல்விப் பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்தப் பின்னணியை நாம் பார்க்கும் போது தொடர்ச்சியாக இலங்கை முஸ்லிம் கல்வி வளர்ச்சியில் மூன்று முப்பெரும் காலகட்டங்களை நாம் இனங்கான முடிகின்றது. முதலாவதாக கன்னங்கரவுடைய காலப்பிரிவு ஆகும். டொனமூர் அரசியல் யாப்பின் கீழ் நிறுவப்பட்ட அரச சபையின் கல்விக் குழுவிற்கு தலைவராக இருந்த சீ.டபில்யு.டபில்யு. கன்னங்கர அவர்கள் 1931ம் ஆண்டிற்கும் 1947ம் ஆண்டிற்குமிடையில் இந்தப் பொறுப்பை வகித்தார். சீ.டபில்யு.டபில்யு. கன்னங்கர இந்நாட்டின் கல்வி வளர்ச்சியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியவர். அவரது காலப் பிரிவில்தான் இலவசக் கல்வி வழங்கப்பட்டது. Central School என்ற பெயரிலே மத்திய பாடசாலைகள் நிறுவப்பட்டன.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய முஸ்லிம் தலைவர்களாக விளங்கிய ஏ.ஆர்.ஏ. ராஸிக் (ராஸிக் பரீத்) டீ.பி. ஜாயா ஆகிய இருவரும் நாடு முழுவதும் பயணம் செய்து கல்வியின் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமூகத்திற்கு விளக்கினார்கள். சேர் ராஸிக் அவர்கள் பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஏதாவதொரு கட்டிடத்தை வாங்கி அதனை முஸ்லிம் பாடசாலையாக மாற்றினார். இவ்வாறு 250க்கு மேற்பட்ட பாடசாலைகள் நிறுவப்பட்டன. இக் காலப்பிரிவில் முஸ்லிம் பிரதேசங்களில் 200 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கன்னங்கரவின் காலப் பிரிவில் சகல மாவட்டங்களிலும் எல்லா வசதிகளும் கொண்ட மத்திய கல்லூரிகள் அமைக்கப்பட்டன. உண்மையில் சீ.டபில்யு. கன்னங்கர இந்த நாட்டில் பொது மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு பெரும் முயற்சியாக இதனை நாம் கருதலாம். சகல மாவட்டங்களிலும் எல்லா வசதிகளையும் கொண்ட இந்த மத்திய கல்லூரிகள் மூலமாக நிறைய மாணவர்கள் பல்கலைக் கழகப் பிரவேசம் பெறவும் எதிர்காலத்தில் மிக உயர்ந்த பதவிகள் பெறவும் வாய்ப்பு ஏற்பட்டன. மாணவர்கள் 54 மத்திய கல்லூரிகள் மூலம் 1950ம் ஆண்டு முதல் பல்கலைக்கழக பிரவேசம் பெற்றார்கள். முஸ்லிம் மாணவர்களின் நலன் கருதி காத்தான்குடி, எருக்களம்பிட்டி, அளுத்கம ஆகிய இடங்களில் மத்திய கல்லூரிகள் நிறுவப்பட்டன.
இக்காலப்பிரிவில்தான் முஸ்லிம்கள் மத்தியில் பயிற்றப்பட்ட ஆசிரியர் பரம்பரை ஒன்று உருவாகியது. அட்டாளச்சேனை, அளுத்கம ஆசிரிய கலாசாலைகள் தமிழ் மொழி மூலம் பாடபோதனை புகட்டும் ஆசிரிய கலாசாலைகளாக நிறுவப்பட்டன. இக்காலப்பிரிவில் அட்டாளைச்சேனை ஆண்கள் ஆசிரியர் பயிற்சி கலாசாலையாகவும் தர்கா நகர் (அளுத்கம) பெண்கள் ஆசிரியர் பயிற்சி கலாசாலையாகவும் மாறியது. 1939ம் ஆண்டு இலவசக் கல்விச் சட்டம் சமய கல்வியை ஊக்குவித்தது. இக்காலப்பிரிவில்தான் மத்ரஸாவின் சான்றுதல் அங்கீகாரம் பெற்றது. முஸ்லிம் பாடசாலைகளில் அரபு, இஸ்லாமிய பாட போதனைக்காக மௌலவி ஆசிரியர்கள் நியமனம் பெற்றார்கள்.
கன்னங்கரவின் காலத்தைத் தொடர்ந்து தஹநாயக்க அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலம் மிக முக்கியமானது. கல்வி அமைச்சராக இருந்த டப்ளியூ. தஹநாயக்க அவர்கள் 1956ம் ஆண்டுக்கும் 1959ம் இடையில் பாரிய முன்னேற்றத்தை கல்வித் துறையில் ஏற்படுத்தினார். இக் காலப்பிரிவில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகத் தூண்டுதலாக அமைந்தார். டப்ளியூ. தஹநாயக்க அவர்கள காலத்தில்; G.C.E. சாதாரண தரத்தில் குறிப்பிட்ட தகைமையுடன் சித்தியடைந்தவர்கள் ஆசிரிய நியமனம் பெற்றார்கள். பெருந்தொகையான பெண்கள் ஆசிரியர்களாக நியமனம் பெற்றார்கள். 5 பாடங்கள் சித்தியடைந்த பெண்கள் கூட ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
1946ம் ஆண்டு சோல்பரி அறிக்கை கல்வியில் பின்தங்கிய சமூகங்களாக மலைநாட்டுச் சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் குறிப்பிட்டது. இக்குறையை நிவர்த்தி செய்யவே கன்னங்கர, தஹநாயக்க, பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் இச்சமூகங்களுக்கு கல்வித்துறையில் பல- சலுகைகளை வழங்கினார்கள். தஹநாயக்கவின் காலப் பிரிவிலே முஸ்லிம் பாடசாலை என்ற தனிப்பிரிவு கொண்ட பாடசாலை தோற்றம் பெற்றது. 51% முஸ்லிம் மாணவர்கள் கல்வி பெறும் பாடசாலைகளாக முஸ்லிம் பாடசாலைகள் இனங்காணப்பட்டன. இது முஸ்லிம்களின் கல்வித்துறையிலே மிகவும் முக்கியமான நிகழ்வாகும். முஸ்லிம் பாடசாலைகள் என்ற தனிப்பட்ட பாடசாலைகள் தஹநாயக்கவின் காலப்பிரிவில் தோற்றம்பெற்றது. இந்த பாடசாலைகளில் முஸ்லிம்களுக்குரிய விஷேட சீருடை, தனிப்பட்ட விடுமுறை அமைப்பு ஆகியன அறிமுகப்படுத்தப்பட்டன. இக்காலப் பிரிவிலே அதாவது தஹநாயக்கவின் காலப்பிரிவிலேயே பெருந்தொகையான முஸ்லிம் மகா வித்தியாலங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
அடுத்ததாக, முஸ்லிம் கல்வித் துறையில் மிக முக்கியமான காலகட்டம் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் கல்வி அமைச்சராக பணிபுரிந்த காலப்பிரிவு ஆகும். பதியுதீன் மஹ்மூத் அவர்கள் 1960க்கும் 1963க்குமிடையிலும் 1970க்கும் 77க்குமிடையிலும் 10 ஆண்டுகள் கல்வி அமைச்சராக பணிபுரிந்தார்கள். இந்நாட்டில் மிக அதிக காலம் கல்வி அமைச்சராக பணிபுரிந்த பெருமை கலாநிதி பதியுதீன் அவர்களையும் சாரும். அவர்களுடைய காலப் பிரிவிலே முஸ்லிம் கல்வி மகத்தான ஒரு வளர்ச்சியைக் கண்டது.
ஆசிரிய நியமனத்திலே விகிதாசார முறையை கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்கள் அறிமுகப்படுத்தினர்கள். சிங்களவர்கள் 80%, தமிழர்கள் 12%, முஸ்லிம்கள் 8% என்ற அடிப்படையில் விகிதாசாரப்படி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அட்டாளைச்சேனை, அளுத்கம ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. இஸ்லாமிய இலக்கியம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் தமிழ் இலக்கியம் என்ற பாடத்திலே இந்துக்களுடைய மதம் சார்ந்த இலக்கிய நூல்கள்தான் அதிகமாக காணப்பட்டன. கலாநிதி பதியுதீன் மஹ்மூதுடைய காலப்பிரிவிலேயே தமிழ் இலக்கியத்தை ”அ”, ”ஆ” என இரண்டாகப் பிரித்து ”ஆ” பிரிவிலே இஸ்லாமிய இலக்கியம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் ஆகிய பாடங்கள் உயர்தரப் பரீட்சைக்குரிய பாடங்களாக இக்காலப்பிரிவிலே அங்கீகரிக்கப்பட்டது. அல் ஆலிம் பரீட்சையை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். முஸ்லிம் பாடசாலைகளின் வளங்கள் அதிகரிக்கப்பட்டன. பெண்களின் கல்வி முன்னேற்றத்தில் மிகக் கரிசணை காட்டப்பட்டது.
பதியுதீன் மஹ்மூத் அவர்களின் காலப் பிரிவிலேயே கல்விச்சேவையில் முஸ்லிம்கள் தமது உரிய இடத்தைப் பெற்றனர். அதற்கு முன்னர் இலங்கை கல்விச் சேவையில் முஸ்லிம்களுக்கு உரிய இடம் அழிக்கப்படவில்லை. பெருமளவு பட்டதாரிகள் கல்வி அதிகாரிகளாக இவருடைய காலத்திலேயே நியமனம் பெற்றார்கள். பல்கலைக்கழகக் கல்வியை நாங்கள் அவதானிக்கும் போது, 1942—-1985 வரையிலான பல்கலைக்கழக அனுமதி புள்ளி விபரங்கள், முஸ்லிம்கள் உயர்கல்வித் துறையில் பின்தங்கியிருப்பதை காட்டுகின்றது. 1970–1980 வரை பல்கலைக்கழக அனுமதியை நோக்கும் போது, இதே நிலையை நாம் அவதானிக்க முடிகின்றது. இக்காலப்பிரிவில் தான் 1981ம் ஆண்டு இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் தோற்றம் பெற்றது. மர்ஹூம் அல் ஹாஜ் நழீம் அவர்கள் இந்த இயக்கத்தை எங்களது ஆலோசனையின் பெயரில் ஆரம்பித்து வைத்தார்கள்.
இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் எனும் போது கல்வியின் மூலமாக முஸ்லிம் சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது இதன் அடிப்படை நோக்கமாக அமைந்தது. ”கல்வியின் மூலம் சமூக மறுமலர்ச்சி” என்பதே அதன் கோசமாக அமைந்தது. முஸ்லிம் மாணவர்கள் உயர்கல்வித் துறையில் பல்கலைக்கழகப் பிரவேசத்தில் பின்னடைவதற்கு காரணங்களை இவ்வியக்கம் இனங்கண்டது. முஸ்லிம் பாடசாலைகளில் உயர் கல்விக்கான, குறிப்பாக விஞ்ஞானக் கல்விக்கான வசதிகள் காணப்படாமை, விஞ்ஞான ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஆய்வு கூட வசதியின்மை வசதியற்ற நிலை காரணமாக உயர் கல்வியைத் தொடர முடியாத மாணவர்கள் ஆகிய பிரச்சினைகள் முஸ்லிம்களின் உயர் கல்வியைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகளாகக் காணப்பட்டன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பின்வரும் செயற்பாடுகள் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம் உயர் கல்வியைப் பொறுத்தவரையில் முஸ்லிம் பாடசாலைகளில், குறிப்பாக விஞ்ஞானப் பாடங்கள் அனைத்தையும் ஏக காலத்தில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் இருக்கவில்லை. ஒரு பாடசாலையில் பௌதீகம் கற்பிக்கும் ஆசிரியர் இருப்பார் அதேவேளை இன்னொரு பாடசாலையில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் இருப்பார். இப்படியாக விஞ்ஞான ஆசிரியர்கள் சிதறுண்டு இருந்தார்கள். ஒரே பாடசாலையிலே எல்லா விஞ்ஞானப் பாடங்களையும் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் இருக்கவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம், ஒரு திட்டத்தை வகுத்தது.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஆசிரிய வளங்களை ஒன்று திரட்டி அத்தனை விஞ்ஞான ஆசிரிய வளங்களையும் ஒன்று திரட்டி, வார இறுதி வகுப்புகளை நடத்துவது. அத்துடன் அந்த வார இறுதி வகுப்புகளிலே மாணவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த ஆசிரியர்களுடைய வளங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானக் கல்வியை வழங்குவது என்பனவாகும். இச்செயற்பாடு இலங்கையில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது.
க.பொ.த. (உ.த) வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக் கள் 46 மத்திய நிலையங்களில் நடத்தப்பட்டன. இச் செயற்பாடு 1983ம் ஆண்டு முதல் முஸ்லிம் மாணவர்களின் உயர் கல்வியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வகுப்புக்களைத் தொடர்ந்து பல்கலைக்கழப் பிரவேசம் அதிகரித்தது. 1983ம் ஆண்டு 46 உயர்தர வகுப்புக்கள் இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தினால் நடத்தப்பட்டன. 1983ம் ஆண்டு வரை பல்கலைக்கழகத்துக்கு பிரவேசம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3.7 ஆக இருந்தது. 1984இல் 5.5 ஆக அதிகரித்தது. இந்த அதிகரிப்பிற்கு பெறும் பங்களிப்புச் செய்தது இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கம் மாவட்டங்கள் தோரும் நடாத்திய விஞ்ஞான வகுப்புக்கள் ஆகும். 1983ம் ஆண்டு அம்பாறை, மட்டக்களப்பு, கண்டி, கேகாலை, மன்னார், மாத்தளை, புத்தளம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வகுப்புக்கள் நடைபெற்றன. 1984ம் ஆண்டு மாத்தளை, குருநாகலை, களுத்துறை, காலி, கம்பஹா, கொழும்பு, பதுளை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது.
இவ்வகுப்புக்கள் 1987ம் ஆண்டு வரை தொடர்ந்தது. 1987 முதல் 1988ம் ஆண்டு வரை 514 முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழகங்ளில் பல்வேறு கற்கை நெறிக்கு பிரவேசம் பெற்றது மட்டுமன்றி முதல் தடைவையாக முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை அவர்களுடைய இன விகிதாசாரத்தில் அதிகமாக அமைந்தது. முஸ்லிம்களின் இன விகிதாசாரம் 7.14 ஆக இருக்க 8.7 விகிதாசார அடிப்படையில் அவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றார்கள். வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம்களுடைய சனத்தொகையில் விகிதாசாரத்திற்கு அதிகமாக அவர்களது பல்கலைக்கழக அனுமதி இருந்தது. இதற்கு மறுமலர்ச்சி இயக்கத்தின் பங்களிப்பு மிகக்காத்திரமானது. அதுமட்டுமன்றி வசதியற்ற மாணாக்களின் கல்வி மேம்பாட்டிற்காக, புலமைப்பரிசில் திட்டத்தை 1981ம் ஆண்டு மறுமலர்ச்சி இயக்கம் அறிமுகப்படுத்தியது. மறுமலர்ச்சி இயக்கத்தின் வாராந்த வகுப்புக்களும் புலமைப்பரிசில் திட்டமும் முஸ்லிம்களின் உயர்கல்வியில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்தன.
மற்றும் இந்நாட்டு முஸ்லிம்களுடைய கல்வி வரலாற்றிலேயே முக்கியமான நிகழ்வு, 1992ம் ஆண்டு, இக்ரா தொழில் நுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசம் பெறாத மாணவர்கள், மிகவும் தடுமாற்ற நிலையில் இருந்தார்கள். சிலர் அவர்களுடைய கல்வியையே இடையில் விட்டுவிட்டார்கள். சிலர் ஜேர்மன் தொழிநுட்பக் கல்லூரி போன்ற தொழிநுட்பக் கல்லூரிகளுக்கும் தேசிய தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கும் பிரவேசம் பெற முயன்றார்கள். மிகவும் சொற்ப அளவினர்களே அந்த தொழில்நுட்பக் கல்லூரிகளிற்கு அனுமதி பெற்றார்கள். இந்நிலைமையிலே முஸ்லிம்களுக்கு தொழிநுட்பக் கல்வித் துறையில் ஒரு தூண்டுதலையும் அதற்கான வசதிகளையும் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜித்தாவிலே உள்ள ஜம்மிய்யதுல் இக்ரா ஹைரிய்யா இக்ரா Charitable Society நிறுவனத்தின் ஒத்துழைப்போடு 1992ம் ஆண்டு “இக்ரா’ தொழிநுட்பக் கல்லூரி இந்த நாட்டில் நிறுவப்பட்டது. உண்மையில் இந்த இக்ரா தொழில்நுட்பக் கல்லூரியினால் பெரும்பான்மையான மாணவர்கள் பலன் பெற்று இன்று வெளிநாடுகளில் தொழில் புரிவதோடு பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களின் பொருளாதார நிலையின்; வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பைச் செய்கின்றது.
இலங்கை முஸ்லிம் கல்வி, பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றது. முஸ்லிம் கல்வியில் காணப்படுகின்ற குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கல்வி அமைச்சு 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி ஒரு குழுவை நியமித்தது. முன்னாள் தென்கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் ஏ.ஜீ. ஹுஸைன் இஸ்மாயில், கல்விமான் எஸ்.எச்.எம். ஜமீல், அதிபர் திருமதி ஜெஸீமா இஸ்மாயில் ஆகிய மூவர்களையும் உள்ளடக்கிய இக்குழு, தமது அறிக்கையைச் சமர்ப்பித்தது. முஸ்லிம் பாடசாலைக் கல்வியை துரித கதியில் முன்னேற்றுவதற்கு 40 விதந்துரைகள் இந்த அறிக்கையில் செய்யப்பட்டுள்ளன. Report of the Issues related to lunation of the Muslim Community of Sri Lanka என்ற பெயரில் அமைந்துள்ள இந்த அறிக்கை, இப்போது, கல்வி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த அறிக்கை, மிகவும் பயனுள்ள ஆய்வுகளைக் கொண்டுள்ளது. முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்குகின்ற கல்விப் பிரச்சினைகளை இனங்கண்டுள்ளது. அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வையும் முன்வைத்துள்ளது. இங்கு ஜனாப் பாவா அவர்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம் கல்வி மகா நாட்டின் செயலாளர். இவர்களெல்லாம் முயன்று இந்த அறிக்கையை சிறப்பாக சமர்ப்பித்துள்ளார்கள்.
ஆனால் இங்கு நாங்கள் முஸ்லிம் சமுகத்தின் கல்வி வரலாறு பற்றித்தான் பேசினோம். ஏனென்றால் இந்தப் பின்னணி எங்களுக்கு மிகவும் முக்கியம். நாங்கள் எப்படி எங்களுடைய வரலாறு ஆரம்பமாகியது. ஆரம்பித்த கல்வி எப்படி குத்தாபுகளோடு நாங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எப்படி முஸ்லிம் பாடசாலைகள் அமைப்புத் தோன்றியது. இந்த முஸ்லிம் பாடசாலை என்ற அமைப்பு எப்படித் தனிப்பட்ட சிறப்பம்சங்களைக் கொண்டு தனிப்பட்ட பாடசாலையாக காலஓட்டத்தில் வளர்ச்சியடைந்தது? எவ்வாறு கால வளர்ச்சியால் வந்த முக்கியமான அமைச்சர்கள் எந்த அளவுக்கு முஸ்லிம் கல்வியின் கல்வி வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள். இக் கல்வி வளர்ச்சியிலே சில முக்கியமான காலகட்டங்களை நாங்கள் பார்த்தோம்.
இறுதியாக முஸ்லிம்களுடைய கல்வி வரலாற்றில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுதான் அண்மையில் ஜனாதிபதி அவர்கள் நியமித்த இந்தக் கல்விக் குழு, Report of the issues என்ற பெயரில் 40 விதந்துரைகளை இந்த அறிக்கை கொண்டுள்ளது. ஆனால் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவது, அந்தப் பிரச்சினைகளின் வரலாறு பற்றி விளக்குவது என்பன பிரச்சினைகளை இனங்காணும் என்று நான் நினைக்கிறேன்.
நன்றி :- WAMY – SRILANKA முகநூல் பக்கம்
Source :- https://www.facebook.com/218826518199744/photos/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/597301017018957/