காலை மாலை நேரங்களில் ஊதுபத்தி கொளுத்துவது, பெண்கள் தலைகுளித்து சாம்பிராணி புகை போடுவது, குந்திரிக்கம் சேர்த்து குழந்தைகளுக்கு புகை போடுவது, இவையெல்லாம் தமிழக முஸ்லிம்கள் பின்பற்றிய அழகிய வாழ்வியல் முறைகள்.
ஊது மரப்பட்டை,குந்திரிக்கம்,உயர்ரக சாம்பிராணி உள்ளிட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி தினமும் அரபுகளின் வீடுகளில் போடப்படும் “பஹுர் ” என்ற புகைபோடும் வழக்கம் அவர்கள் வாழ்வின் பின்னிப்பிணைந்த ஒன்று. ஒட்டகங்கள் உள்ளிட்ட அவர்களின் பிரியமான கால்நடைகளுக்கும் பஹுர் புகை போடுவார்கள்.
இயற்கை மணமூட்டிகள் அனைத்திற்கும் மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கும் அற்புத ஆற்றலை அல்லாஹ் படைத்துள்ளான்.
பெண்களின் மன அமைதிக்கும் இல்லற வாழ்க்கை சிறப்பதற்கும் ஆகச்சிறந்த மருந்தாகவும் வீடுகளுக்கு மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும் இது இருக்கிறது.
800 ஆண்டு காலம் இந்தியாவின் முதன்மை குடிமக்களாக முஸ்லிம்கள் வாழ்ந்த காரணத்தால் முஸ்லிம்களின் இந்த கலாச்சாரம் பிற சமூகத்தவரிடம் மிகப்பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
தொப்பி போட்ட பாய் வந்து கடைக்கு சாம்பிராணி போட்டால் மனதுக்கு இதமாக இருக்கும் என்றும், வியாபாரமும் சிறப்பாக நடக்கும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை சகோதர சமுதாயத்தவரிடம் ஊறிப்போய் இருந்தது.இன்றும் இருக்கிறது.வேறு யார் புகை போட்டாலும் அவர்களுக்கு பொருந்தாது.
சித்த ஆயுர்வேதம் யுனானி போன்ற இந்தியமுறை மருத்துவங்கள் அனைத்திலும் இந்த புகைபோடுதல் (Fumigation) மிகச்சிறந்த சிகிச்சை முறையாக பின்பற்றப்படுகிறது.
ஷரீஅத் ஆதாரம் இல்லாத சில சடங்குகளின் மஜ்லிஸ்களை தடபுடலாக அலங்கரிப்பதற்கு இந்த ஊதுபத்தியும் சாம்பிராணி புகை போடுதலும் துணை நின்றதால், அந்த சடங்குகளை கடுமையாக விமர்சிக்கப் போய், இல்லங்களுக்கும் மனித உள்ளங்களுக்கும் மகிழ்வூட்டும் மருத்துவ கலாச்சாரமாக பின்பற்றப்பட்டு வந்த இந்த புகை போடுதலையும் புறந்தள்ளும் நிலைக்கு சமூகம் வந்துவிட்டது.
இறைவழிபாடுகள் வேறு. முஸ்லிம்களின் நிலம், சூழல், உற்பத்தி பொருட்கள் மற்றும் உணர்ச்சிகள் சார்ந்த கலாச்சாரம் வேறு.
இந்த அழகிய மரபை விட்டுவிட்டு வீடுகளில் நவீனம் என்று இன்று நாம் பயன்படுத்தும் இரசாயன கலவையான Air Freshener களும் Body Spray களும் நம் உடலுக்கு சொறி சிரங்கு ஒவ்வாமையைத் தவிர வேறு எதை தந்துவிடப் போகிறது.
நமது உடலை, வீடுகளை, பள்ளிவாசல்களை, வர்த்தக நிறுவனங்களை, நமது மரபு முறைகளால் மணமூட்டி கலாச்சாரத்தை பாதுகாப்போம். இந்த கலாச்சார மீட்சி தனித்துவமான பல தொழில் வாய்ப்புகளை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
மனிதர்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் அழகூட்டி மகிழ்வூட்டுபவர்கள் தான் முஸ்லிம்கள் .
– CMN Saleem