மலர்கள் பெண்களுக்கான அருட்கொடைகள்

by Mohamed Anas

மலர்களின் அழகுக்கும் அதன் நறுமணத்திற்கும் மயங்காத மனித உள்ளமும் மலர்களின் மருத்துவ சிகிச்சைக்குள் வராத உடல் உறுப்புகளும் இந்த பூமியில் படைக்கப்படவில்லை.

பெண்களின் மனதிற்கு நெருக்கமான, உடலுக்கு ஒத்திசைவான, ஒரு படைப்பு இந்த பூமியில் உள்ளதென்றால் அது மலர்கள் தான். மலர்களை தவிர்த்த பெண்களின் வாழ்வு வறண்ட நிலத்திற்கு சமமாக இயற்கைக்கு எதிரானதாக மாறிவிடுகிறது.

கட்டிய கணவன் தன் மீது வைத்துள்ள அன்பையும் அரவணைப்பையும் அவன் வாங்கி வரும் பூமாலையின் அளவோடும் அதன் தரத்தோடும் அளவீடு செய்யும் தனிகுணம் தமிழ் நிலத்து பெண்களிடம் இருக்கிறது.

இந்த அளவீட்டில் பெரும்பாலான கணவன்மார்கள் தோற்றுப்போவதும் எதார்த்தமான நிகழ்வுதான்.

அதேபோல தன் மகளை மணமுடித்தவன் ஊதாரியாக இருந்தால் அதை சலிப்புடன் சொல்லிக் காட்டும் போது கூட “ஒரு முழம் பூ வாங்கித் தருவதற்கு கூட வக்கில்லாத வெறும்பய ” என்ற சுடும்சொற்களை தாய்க்குலம் பயன்படுத்துவதையும் பார்த்திருக்கின்றோம். வசைச் சொற்களுக்கும் கூட பூக்கள் தான் இங்கே அளவீடு.

அந்த அளவிற்கு மலர்கள் பெண்களின் மனதோடும் வாழ்வோடும் ஒன்றிப்போன ஒரு படைப்பாக இருக்கிறது. பூக்களுக்கும் மலர் மலைகளுக்கும் மதம் சாதி நிறம் நாடு பிராந்தியம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.

கடந்த 20 ஆண்டுகளில் தலையில் மலர் சூடிக்கொள்ளும் வழக்கம் படித்த பெண்களிடம் அந்நியப்பட்டு நிற்பதை பார்க்கின்றோம். வாழ்க்கையை அழகாக அனுபவித்து வாழ்வதற்கான எந்த தத்துவமும் இல்லாத வறண்டுபோன இன்றைய கல்விமுறையே இதற்கு காரணம்.

திருமணங்களில் மணமக்கள் மலர்மாலை சூடுவது மலர்ச்செண்டு வைத்துக்கொள்வது உள்ளிட்ட வழக்கங்கள் தமிழக முஸ்லிம்களிடம் ஆழமாக வேரூன்றியிருந்தது. அதுஒரு அழகிய காலம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு வகையான மலர்மாலை அடையாளமாக இருந்தன.

இடைப்பட்ட காலத்தில் சில இடங்களில் மணமகனுக்கு மாலை சூட்டுவதற்கென்று சில சடங்குகள் உண்டாகின.அதற்கென்றே அன்பளிப்புச் செலவுகள் பெண் வீட்டாருக்கு அதிகரித்தன. மாலைசூடும் நேரங்களில் மணமகனுடைய நண்பர்களின் வரம்புமீறல்கள் அதிகரித்தன.

இவை அனைத்தையும் ஷரீஅத் வழியில் நின்று முறைப்படுத்தும் நேர்மறையான வழிகாட்டுதல் வழங்கப்படுவதற்கு பதிலாக இவையெல்லாம் அந்நிய கலாச்சாரம் என்ற கடும்போக்குத் தனமான விமர்சனங்கள் வந்து விழுந்தன.அதன் காரணமாக ஓட்டு மொத்தமாக மாலை சூடிக்கொள்ளும் வழக்கமே வழக்கொழிந்து போகும் நிலை சமுதாயத்தில் உண்டாகிவிட்டது.

திருமணங்கள் அதன் அழகையும் உணர்ச்சிகளையும் இழந்து வெறும் உணவு உண்ணும் விழாவாக மாறிவிட்டன.

இந்த பாதிப்புகள் அப்படியே சமூகத்தில் விரிவடைந்து சாதாரணமாக தலையில் பூச்சூடிக் கொள்ளும் வழக்கத்தையும் கூட விரும்பாத நிலைக்கு பெண்கள் வந்துவிட்டனர்.

ரோஜா,மல்லிகை,சந்தனமுல்லை,சாமந்தி,கனகாம்பரம்,மரிக்கொழுந்து,செம்பருத்தி,உள்ளிட்ட பூக்களின் குணங்களை சற்று ஆராய்ச்சி செய்து பார்க்கச் சொல்லி அல்குர்ஆனில் அல்லாஹ் நம்மை தூண்டுகிறான்.

அது பெண்களுக்கென்றே தனித்துவமாக, அவர்களின் மன உடல் வியாதிகள் அனைத்திற்கும் தீர்வளிக்கும் அற்புத மருத்துவ குணத்தோடு படைக்கப்பட்டுள்ளதை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

மலர் மருத்துவம் என்றே தனியான ஒரு சிகிச்சை முறை தமிழர் மரபில் இருக்கிறது.

எந்த மண்ணில் என்ன விளைவிக்கப்படுகிறதோ அது அந்த மக்களின் வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் இரண்டற கலந்திருக்கும்.அந்த மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடை அது .

அரபுலகத்தில் மலர்கள் உற்பத்தியும் பயன்படும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அமோகமாக நடைபெற்று வருகிறது.மலர்மாலை சூடுவது அந்நிய கலாச்சாரம் என்ற கடும்போக்குத்தனம் அங்கே எந்த அறிஞர்களாலும் பரப்புரை செய்யப்படுவதில்லை.

காரணம் அது வழிபாடு அல்ல.
அது மண் சார்ந்த அழகிய கலாச்சாரம்.

– CMN Saleem

Related Posts

Leave a Comment