ஃபிக்ஹ் மற்றும் உஸூல் பிக்ஹின் தோற்றமும் வளர்ச்சியும்

by Mohamed Anas

الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، وعلى آله وأصحابه أجمعين، وعلى من تبعهم بإحسانٍ إلى يوم الدين، أما بعدُ:

முன்னுரை

        ஃபிக்ஹ் என்பது அகராதியிலே ஒரு விஷயத்தை அறிந்து கொள்வதற்கு கூறப்படும். ஷரீஅத்தின் விளக்கத்தில் ஷரீஅத்தில் ஏற்படும் உட்பிரிவு சட்டங்களை தெளிவான ஆதாரங்களை கொண்டு அறிவதற்கு ஃபிக்ஹ் என்று சொல்லப்படும்.

ஃபிக்ஹ் பெயர் காரணம்

ஃபிக்ஹ் பெயர் வந்ததற்குக் காரணம் குர்ஆனிலும் ஹதீஸிலும் அந்த வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது :

وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِيَنْفِرُوْا كَآفَّةً‌ فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآٮِٕفَةٌ لِّيَـتَفَقَّهُوْا فِى الدِّيْنِ

மார்க்க விஷயங்களை அறிந்துகொள்ள(க் கருதினாலும் அதற்காக) உங்களில் ஒவ்வொரு கூட்டத்தில் இருந்தும் சிலர் மாத்திரம் புறப்பட்டால் போதாதா?  (அல்குர்ஆன் : 9:122)

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ، يَفْقَهُوْا قَوْلِیْ ‏

     என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு, என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்ளும்படிச்செய். (அல்குர்ஆன் : 20:27,28)

        இப்னு அப்பாஸ் ரலி அவர்களுக்கு நபி ஸல் அவர்கள்இப்படி துவாச் செய்தார்கள்:

اللهم فقهه في الدين

யா அல்லாஹ் அவருக்கு மார்க்க ஞானத்தை தந்தருள்வாயாக.!

من يرد الله به خيرا يفقهه في الدين

அல்லாஹ் நலவை நாடுபவர்களுக்கு மார்க்க விளக்கத்தை தருகின்றான்.

  பிக்ஹ் எனும் வார்த்தையின் விளக்கம்

        அறபு மொழியில் பிக்ஹ் எனும் வார்த்தை ஒரு விஷயத்தை விளங்கிக் கொள்ளுதல் என்று பொருள்படும். அது மறைவானதொரு விஷயமாகவோ, வெளிப்படையானதொரு விஷயமாகவோ இருக்கலாம். எனினும், சில அறிஞர்கள் நுணக்கமானதொரு விஷயத்தை விளங்கிக் கொள்வதற்கு மாத்திரமே “பிக்ஹ்” எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பர். இவ்விரண்டாவது கருத்திலேயே அல்-குர்ஆன் இப்பதத்தைக் கையாண்டுள்ளது.

      “பிக்ஹ்” என்ற வார்த்தை பொதுவாக இஸ்லாமிய ஷரீஅத்தின் சட்டக் கலையைக் குறிக்கின்றது. ஆரம்பத்தில் இஸ்லாமிய வரலாற்றில் இக்கலையானது, ஷரீஅத்தின் ஏனைய கலைகளைப் போலவே தனியானதொரு கலையாக இருக்கவில்லை. இஸ்லாமிய உலகத்தில் கல்வி வளர்ச்சிக்கேற்ப இத்துறையும் வளர்ச்சி கண்டுள்ளது.      

இஸ்லாமிய சட்டத்தின் தனித்துவம் இரண்டு

١. جامعية

٢. ابدية

        முதலாவது ஜாமியா என்பது அனைத்து நிலைமைகளுக்கும் காலங்களில் அனைத்து வேறுபாட்டிற்கும் உலகின் வேறு பட்ட அனைத்து இடங்களுக்கும் ஏற்றார்போல் சட்டம் இருக்கும். உதாரணமாக: பகல் இல்லாத இடத்தில் வாழும் மனிதர்களுக்கும் சட்டம் இருக்கும் வேற்றுக்கிரகத்தில் வசிக்கும் மக்களுக்கும் சட்டம் இருக்கும் பல நிறம் இனம் தன்மை குறையுள்ள ஆண்-பெண் அரவாணி கடல்கன்னி எல்லாத்தரப்பு படைப்புக்கும் சட்டம் இருக்கும்.

       இரண்டாவது அபதிய்யா என்பது உலக அழிவு நாள் வரை எத்தனை காலங்கள் நிலைமைகள் மாறினாலும் சட்டங்கள் இதற்கு இல்லை என ஆகிவிடாது உலக முடிவு நாள் வரை எக்காலமும் இருக்கும்.

        குர்ஆனில் கூறப்பட்ட மார்க்க சட்டத்தின் வசனங்கள் நூருல் அன்வார் என்ற கிதாபில் எழுதப்பட்டுள்ளது:

          மார்க்கச் சட்டங்களை விவரிக்கும் வசனங்கள் மொத்தம்  500. இவைதான் ஷரீஅத்தின் அசல் வேர்கள். இவற்றிலிருந்தே அனைத்து மார்க்க சட்டங்களும் பிரிகிறது. குர்ஆனில் மீதமுள்ள வசனங்கள் வரலாறுகள், சொர்க்கம் நரகம் பற்றிய விவரங்கள் ஆகும்.

ஃபிக்ஹ் சட்டம் உருவாகும் இடம்

1.குர்ஆன்

2.ஹதீஸ்

3.இஜ்மா

4.கியாஸ்

         அல்லாமா சுயூத்தி (ரஹ்) அவர்கள் தங்களது அல்அஷ்பாஹு வந்நளாயிர் என்ற கிதாபில் கூறுகிறார்கள்:

إن الفقه معقولٌ عن منقولٍ

          திருக்குர்ஆன் ஹதீஸிலே உள்ளடங்கிய பல கருத்துக்களை வெளியில் ஆய்வுகள் செய்து கொண்டு வருவதற்கு ஃபிக்ஹ் சட்டம் எனக் கூறப்படும் திருக்குர்ஆனில் மறைந்துள்ள விஷயத்தை ஹதீஸ் வெளிப்படுத்தும். குர்ஆன் ஹதீஸிலே மறைந்துள்ள விஷயத்தை இஜ்மா கியாஸ் வெளிப்படுத்தும். இதற்கு ஃபிக்ஹ் எனப்படும் பொதுவாக அல்லாஹ் இரு முறைகளில் சட்டங்களை விவரிப்பான்.

1.காயிதா குல்லியா” என்ற மொத்தமான அனைத்தையும் உள்ளடக்கும் படியான ஒரு சட்டத்தை கூறுவான் அது அனைத்து உட்பிரிவு சட்டங்களையும் எடுத்துக்கொள்ளும்.

2.காயிதா ஜுஜ்யிய்யா” என்ற உட்பிரிவு சட்டத்தை கூறி அதன் அனைத்து சட்டங்களையும் (குல்லியாவை) நாடுவது என அல்லாஹ் இருமுறைகளிலும் விவரித்துள்ளான்‌‌. உதாரணமாக:

حرّمت عليكم أمهاتكم وبناتكم

உங்களின் மீது உங்களின் தாய்மார்கள், பெண் பிள்ளைகள் அனைவரும் ஹராமாக்கப் பட்டுள்ளார்கள்.

இந்த வசனத்தில் தாய்மார்கள் என்பதில் தாய் தாயின் தாய் அவர்களின் தாய் என அனைத்தும்.  பெண் பிள்ளைகள் என கூறியதில் மகள் பேத்தி என கீழ் உள்ள வரை எடுத்துக்கொள்ளும். அதுமட்டுமல்ல இந்த வசனம் ஆண்களைப் பார்த்து கூறப்பட்டது. பெண்களைப் பார்த்து தனியாக வசனம் கூறப்படவில்லை.

      அதாவது பெண்களுக்கு உங்களின் தந்தைமார்கள் ஆண்மகன்கள் ஹராம் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இதே வசனத்தின் மூலம் அறிய முடிகிறது. ஆக இந்த வசனத்தில் காயிதா ஜுஜ்யிய்யாقاعدة دزئية உட்பிரிவு சட்டத்தை கூறி காயிதா குல்லிய்யா அனைத்து மொத்த சட்டத்தையும் விவரிக்கிறான்.

ஹதீஸ் குர்ஆனின் ஃபிக்ஹ் ஆகும்

    ஃபிக்ஹ் சட்டம் என்பது ஒரு ஆணின் வெளிரங்க கருத்தல்ல, அதன் விளக்கம், தெளிவுதான் ஃபிக்ஹ் சட்டமாகும். குர்ஆனில் உள்ளடங்கியுள்ள பல முத்துக்களை வெளிக் கொண்டு வருவதற்குப் பெயர் தான் ஃபிக்ஹ் ஆகும்.இந்த வேலையை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல் அவர்கள் முதலில் செய்தார்கள் எனவே ஹதீசும் குர்ஆனி ஃபிக்ஹ் ஆகும்.

உதாரணம்: وامهاتكم التي ارضعنكم واخواتكم من الرضاعه

பால் குடித்த விஷயத்தில் யாரெல்லாம் திருமணம் முடிக்க தடை ஆனவர்கள் என்கிறபோது உங்களுக்கு பால் புகட்டிய தாய்மார்கள் உங்களுடன் இணைந்து பால் குடித்த சகோதரிகள் என்று இரண்டு பேரையும் மட்டும் அல்லாஹ் சொல்கிறான். ஆனால் நபி ஸல் அவர்கள் இந்த வசனத்தின் விளக்கத்தில்

يحرم من الرضاعه ما يحرم من النسب

        இரத்த பந்த உறவில் இருந்து ஹராமாகும் அவர்கள் அனைவரும் பால் குடியிலிருந்து ஹராமாகுவார்கள் எனக் கூறியுள்ளார்கள். இரத்த பந்தத்தில் 7 பேர் ஹராமாகுவார்கள். அதேபோல் பால் குடியிலும் 7 பேர் ஹராம் ஆவார்கள். இந்த விஷயத்தை நபி ஸல் அவர்கள் கூறியிருக்காவிட்டால் இச்சட்டத்தை அறிந்திருக்க முடியாது. அதுமட்டுமல்ல நபி ஸல் அவர்களை தவிர வேறு எவரும் இதை கூறியிருக்கவும் முடியாது.

        நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்தின் உள்ரங்க வெளிரங்க கருத்தின் பரிபூரணத்தை அல்லாஹ் தந்திருந்தான். . உதாரணமாக:

  اقيموا الصلاه ‘தொழுகையை நிலை நாட்டுங்கள்” என்ற வசனத்திற்கு 2 ஆயிரம் ஹதீஸ்களும் واتوا الزكاه ‘ ஸகாத்தைக் கொடுங்கள் ” என்ற வசனத்திற்கு 500 ஹதீஸ்களும் கூறப் பட்டுள்ளது

يحل لهم الطيبات ويحرم عليهم الخبائث  அல்லாஹ் அவர்களுக்கு அனைத்து நல்லவைகளையும் ஹலால் ஆக்கி வைத்துள்ளான். என்ற இந்த வசனம் இறங்கிய போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அனைத்து நல்லவைகளும் அசுத்தங்களும் என்னென்ன என்பதை அறிவித்தான் அதை நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்கள் மூலம் நமக்கு அறிவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறை

         நபி (ஸல்) அவர்களின் நடை, உடை, பாவனை, சொல், செயல், அங்கீகாரம் இவற்றின் மூலமே நமக்கு அல்லாஹ் மார்க்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளான்.

       நபி (ஸல்) அவர்கள் வாழும் காலமே ஃபிக்ஹ் சட்டம் உருவாகும் காலம் ஆகும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஃபிக்ஹ் சட்ட நடைமுறை பலமுறைகளில் இருந்தது.

1. வஹீ குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்தது.

2.மக்களின் சூழலுக்கு தகுந்தாற்போல் அல்லாஹுத்தஆலா சட்டங்களை இறக்கினான். உதாரணம்: மது பல சூழ்நிலைகளில் மூன்று படித்தரங்களில் ஹராமாக்கபட்டது.

3.ஸஹாபாக்களுக்கு மத்தியில் புதிதாக ஒரு விஷயம் உண்டு ஆனாலும் நபி ஸல் அவர்கள் ஹயாத்தாக இருந்ததால் “முராஜஅத்’ எனும் மீளுதல் இருந்தது நபி (ஸல்) அவர்கள் அதை வஹியின் மூலம் தெளிவு படுத்தி விடுவார்கள்.

        சில நேரங்களில் பயணங்களில் ஏற்பட்ட சில நிகழ்வுகளையும் பயணம் முடிந்து வந்த பின் நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுக் கொள்வார்கள் உதாரணம்:

      ஒரு தடவை உமர் (ரலி) அவர்களும் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களும் ஒரு பயணத்தில் இருந்த போது இருவரும் குளிப்பு கடமையாகி விட்டார்கள். அப்போது உமர் (ரலி) குளிப்புக் கடமையானதிற்கு தயம்மம் கிடையாது, ஒளு இல்லா விட்டால் தான் தயம்மம் என நினைத்து தொழுகையை களா செய்து கொண்டார்கள்.

      அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள் ஒளூவுக்கு தயம்மம் இரண்டு கை, முகம் என்றால் குளிப்புக்கு உடல் முழுவதும் என நினைத்து உடல் முழுக்க மண் படும்படி புரண்டு எழுந்திருத்து தொழுது விட்டார்கள். பிறகு இருவரும் நபி (ஸல்) அவர்கள் இடத்தில் வந்து சரியானது என்ன? என்பதை கேட்டுக் கொண்டார்கள்.

       ஆக, இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஃபிக்ஹின் நடைமுறை இருந்தது. பொதுவாக நபி (ஸல்) அவர்கள் பர்ளூ, வாஜிப், சுன்னத், மக்ரூஹ் என்று விவரம் இட்டு கூறவில்லை.

صلوا كما رايتموني اصلي

நான் எப்படி தொழுகிறேனோ அவ்வாறு தொழுங்கள் என்றார்கள். சில நேரத்தில் காரணத்தைக் சொல்லாமலும் சொல்லியிருக்கிறார்கள்‌.‌‍

قم صل فانك لم تصل

அவசர அவசரமாக தொழுத ஒரு ஸஹாபியை பார்த்து நீங்கள் திரும்ப தொழுங்கள் நீங்கள் தொழுத தொழுகை கூடவில்லை.

சில நேரத்தில் காரணத்துடனும் சொல்லி இருக்கிறார்கள். உதாரணம் : பூனையின் எச்சில் சுத்தம் என கூறுகிறபோது

فانها من الطوافين والطوافات عليكم

நிச்சயமாக பூனை உங்களுடன் சுற்றித்திரியும் பிராணி தான் எனவே அதன் எச்சில் அசுத்தம் இல்லை என்றார்கள்.

சஹாபாக்கள் காலத்தில் நடைமுறை

     சஹாபாக்கள் என்பவர்கள் நபி (ஸல்) அவர்களின மாணவர்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பதிவுசெய்தார்கள்..

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

اصحابي  كالنجوم فبأيهم اقتديتم اهتديتم  (மிஷ்காத் 554)

எனது தோழர்கள் ஒவ்வொரும் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் அவர்களை யார் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள்.

       அது மட்டுமின்றி சஹாபாக்கள் காலத்திலும் ‘முராஜஅத்” என்னும் மீளுதல் உறுதிப்படுத்திக் கொள்ளல் என்ற முறை இருந்தது. இரண்டு ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஒரு விஷயம் சந்தேகம் ஏற்பட்டால் வேறு பெரும் சஹாபிகள் இடத்தில் வந்து கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

     பதாவா ஷாமீ ” என்ற கிதாபில் முன்னுரையில் எழுதப்பட்டுள்ளது ஹஸ்ரத் இமாம் மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அனைத்து சஹாபாக்களின் இல்மும் ஆறு நபர்கள் இடத்தில் ஒன்று சேர்ந்ததுز

1) உமர் (ரலி) அவர்கள்

2) அலி (ரலி) அவர்கள்

3) உபை இப்னு கஃபு (ரலி) அவர்கள்

4) சைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்

5) அபூதர்தா (ரலி) அவர்கள்

6) இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்

இந்த ஆறு பேரின் இல்மும் இரண்டு பேரின் பக்கம் ஒன்று சேர்ந்தது

1) அலி (ரலி) அவர்கள்

2) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள்

      இவர்கள் மட்டுமின்றி ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களும் இருந்தார்கள் அதனால் அதிகமான மக்களும் தெளிவு பெற்றுக் கொண்டார்கள் பெரும் கருத்து வேறுபாடுகளும் ஏற்படவில்லை.

ஃபிக்ஹ் சட்டம் ஏன் தேவை

      நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் அப்போதே சிலர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள் அந்த நேரத்தில் ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள.

وما محمد الا رسول قد خلت من قبله الرسل

1. முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு ரசூல் ஆகவே தவிரவேறு இல்லை இதற்கு முன்பு வந்த நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டார்கள்.

2. வஹி குர்ஆன் இறங்குவது துண்டிக்கப்பட்டு விட்டது

3. இஸ்லாமிய நாடுகள் பெருகியது ரோம் பாரசீகம் போன்ற அரபி அல்லாத நாடுகளும் வெற்றிகொள்ளப்பட்டது தாருல் இஸ்லாம் உருவானது.

4. புதுப்புது நிகழ்வுகள் மஸாயில்கள் பெருகியது. உதாரணம்: ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் காலத்தில் ஜக்காத் கொடுக்க மறுத்தார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் : اينقص الدين وانا حي  நான் உயிருடன் இருக்கும்போதே தீனில் குறைவு ஏற்படுவதா? என்று.

5. சஹாபாக்கள் ஓரிடத்தில் இல்லாமல் பல நாடுகளுக்கு பிரிந்து பிரிந்து ஹிஜ்ரத் செய்ய ஆரம்பித்தார்கள்.

6. கருத்து வேறுபாடுகள் அதிகமாக ஆரம்பித்தது. உதாரணம்: சிப்பீன் போர் , ஜமல் போர் நடைபெற்றது. இப்போதுதான் இஜ்மா ,கியாஸின் அவசியம் தேவைஏற்பட்டது. இதற்கு முன்பு வரை குர்ஆன் ஹதீசேபோதுமானதாக இருந்தது ஆனால் இப்போது ஃபிக்ஹ்ன்தேவை அவசியமாகிவிட்டது.

ஃபிக்ஹ் தொகுப்பின் ஆரம்பம்

      சஹாபாக்கள் பல நாடுகளுக்குச் சென்ற நேரத்தில் ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 20ல் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்களை கூபா நாட்டுக்கு கவர்னராக அனுப்பி வைத்தார்கள். நீண்ட காலம் கவர்னராக இருந்த போது அங்கு மற்ற இடங்களை விட அதிகமான முஹத்திஸீன்கள், ஃபுகஹாக்களை உருவாக்கினார்கள். பின்னர் அலி (ரலி) அவர்கள் கூபாவுக்கு சென்றபோது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மாணவர்களின் பெருங்கூட்டம் ஹஜரத் அலீ (ரலி) அவர்களை வரவேற்றனர் அதை பார்த்து சொன்னார்கள்.

رحم الله ام عبد قد ملا هذه القريه علما

(அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அவர்களின் புனைப்பெயர் உம்மி அப்து)உம்மு அப்தின் மகனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக இந்த ஊரை கல்வியால் நிரப்பி விட்டார்கள் என்று சொல்லி புகழ்ந்தார்கள். பின்னர் அலி (ரலி) அவர்களும் கூபாவில் தங்கிவிட்டார்கள். அலி (ரலி) அவர்களைப் பற்றி கூறத் தேவையில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

أنا مدينة العلم وعلي بابها   நான் கல்வியின் நகரம் என்றால் அதன் வாசல் அலி (ரலி) அவர்கள் ஆவார்கள். ஹஸரத் அலி (ரலி) அவர்கள் இருவரும் நகரத்தில் இணைந்த போது கூபா நகரம் பெரும் கல்விக்களஞ்சியம் ஆக ஆனது. எந்த அளவு என்றால் அக்காலத்து மக்கள் கூறுவார்கள்.

فقه كوفي وعباده مصريه

ஃபிக்ஹ் என்றாலே கூபா வாசிகள்தான் இன்றும் இபாதத் அதிகம் செய்பவர்கள் என்றால் மிஸ்ர்” வாசிகள் தான் எனக் கூறும் வழக்கம் இருந்தது.

       அல்லாமா இப்னு ஜவ்ஜி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கூபா எட்டு கலீபாக்களின் தலை நகரமாக திகழ்ந்தது 120 சஹாபாக்கள் அங்கு தங்கி இருந்தார்கள். அல்லாஹ் தனது குர்ஆன் ஹதீஸை பாதுகாக்க சஹாபாக்களின் சக்திவாய்ந்த படையை உருவாக்கினான் அந்த படையின் இறுதிக் காலம் வரும்போது ஹஸரத் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் தனிச்சிறப்பு மிக்க மாணவரான அல்கமா (ரலி) அவர்களுக்கு இந்த கல்வியை மாற்ற செய்தான். ஹஸ்ரத் அல்கமா (ரலி) அவர்கள் தங்களின்வாழ்நாளிலேயே அவர்களின் சகோதரியின் மகன் இப்ராஹிம் நகயீ (ரஹ்) அவர்களை உருவாக்கி விட்டு சென்றார்கள்.

       ஹஜ்ரத் இப்ராஹிம் நகயீ (ரஹ்) அவர்களிடத்தில் கூபாவின் பெரும் ஆலிமான ஹம்மாத் இப்னு முஸ்லிம் (ரஹ்) அவர்கள் மாணவராக இருந்து கல்வி கற்றார்கள். ஹம்மாத் (ரஹ்) அவர்களின் மாணவர்தான் இமாமுல் ஆலம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 120 மரணித்தார்கள். மூதாதையர்கள் விட்டு சென்ற சொத்தான கல்விக்கு மிகப்பெரும் சொந்தக்காரராக இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் திகழ்ந்தார்கள். இதுதான் ஃபிக்ஹ் சட்டங்களைத் தொகுத்தவர்கள் வரிசையும் ஹனபி மத்ஹபின் ஸனது வரிசையும் எனக் கூறலாம்.

       இந்த கல்விமான்களின் களப்பணியை வளர்ச்சிப் பணியை இப்படி உதாரணமாகச் சொல்வார்கள் :

        الفقه زرعه ابن مسعود رضي الله عنه وساقه علقمة رحمه الله وحصده البراهيم النخي رحمه الله وداسه حماد رحمه الله وطحنه ابو حنيفه رحمه الله وعجنه يعقوب رحمه الله وخبزه محمد رحمه الله فسائر الناس ياكلون من خبزه.

       ஹஸரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் சட்டத்தை விதை விதைத்தார். அல்கமா (ரஹ்) அவர்கள் அதற்கு நீர் புகட்டினார். இப்ராஹிம் நகயீ (ரஹ்) அவர்கள் அறுவடை செய்தார். ஹம்மாத் (ரஹ்) அவர்கள் ஜலித்து சுத்தம் செய்தார். அபூஹனீபா (ரஹ்) அவர்கள் அரைத்தார்கள், அபூ யூசுப் (ரஹ்) அதை பிசைந்தார்கள் முஹம்மது (ரஹ்) அவர்கள் அதை ரொட்டியாக சுட்டார்கள். மக்கள் அனைவரும் இப்போது அந்த ரொட்டியில் இருந்து சாப்பிடுகிறார்கள்.

ஃபிக்ஹ் தொகுத்த முறை

         ஹஸ்ரத் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு பரவலாக இருக்கும் சிறிய சிறிய உட்பிரிவு மசாயீல்(சட்டங்)களை அதன் உசூல் களுடன் தொகுத்து ஒரு கிதாபை உருவாக்கிட நினைத்து இஸ்தின்பாத் , இஜ்திஹாத் எனும் ஆய்வு திறன் கொண்ட 40 பேர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார்கள். ஹிஜ்ரி 121 ல் இருந்து 150 வரை இப்பணி இமாம் அவர்களின் மேற்பார்வையிலேயே நடந்தது. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சபையில் ஒரு (மசாயீல்) சட்டங்கள் பல்வேறுபட்ட வடிவங்களில் பல்வேறுபட்ட பதில்களோடு வரும் அதில் எது மிக உறுதியான ஆதாரங்களை கொண்டு உள்ளதோ அதை இமாம் அவர்கள் முடிவாக சொல்வார்கள்.

        ஒரு குறிப்பிட்ட (மஸாயீல்களை) சட்டங்களை மூன்று நாட்கள் வரை விவாதம் செய்வார்கள் அந்த சபையில் யாரும் நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் கிடையாது முழு சுதந்திரம் பெற்று பேசுவார்கள்.

       அல்லாமா ஜுர்ஜானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு வாலிபர் இமாம் அவர்கள் இடத்தில் ஒரு கேள்வி கேட்டார் அதற்கு இமாம் பதில் சொன்னார்கள் உடனே அந்த வாலிபர் நீங்கள் தவறுதலாக சொல்லி விட்டீர்கள் என்றார். உடனே அங்கிருந்த மாணவர்கள் அந்த வாலிபரை கடுமையாக பேச ஆரம்பித்த போது இமாமவர்கள்

دعهم فاني دعوتهم ذالك من نفسي  “அவரை விட்டு விடுங்கள். இவ்வாறு கூறும் வழக்கத்தை நான் தான் ஏற்படுத்தி உள்ளேன் என்றார்கள்.

        ஒரு தடவை ஒரு (மஸாயில்) சட்டங்களை முடிவாக எழுதலாம் என வரும்போது அந்த சபையில் காஜி ஆபியத்துப்னு யஜீத் (ரஹ்) அவர்கள் இல்லை இமாம் அவர்கள் காஜி வந்தபின் அதை பார்த்து அங்கீகாரம் கொடுத்தால் எழுதுங்கள் என்றார்கள். அந்த மஜ்லிஸில் யாரும் பிடிவாதத்துடன் தனது பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கவில்லை. ஹஜ்ரத் அவர்கள் இந்த காட்சியை பார்த்து சந்தோஷத்துடன் கீழ் வரும் வசனத்தை ஓதுவார்கள்.

فَبَشِّرْ عِبَاديِ الَّذِيْنَ يَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَيَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ‌ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدٰٮهُمُ اللّٰهُ‌ وَاُولٰٓٮِٕكَ هُمْ اُولُواالْاَلْبَابِ‏

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், பேச்சை செவியுற்று, அதில் மிக அழகியதை (மட்டும்) பின்பற்றி நடக்கின்றனர். இத்தகையவர்களையே, அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகின்றான். இவர்கள்தாம் (உண்மையில்) அறிவுடையவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் : 39:18)

       கிட்டத்தட்ட 83 ஆயிரம் உசூல் மஸாயீல்களை தனித்தனி  தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டது. இமாம் அவர்கள் கூபாவிலிருந்து பக்தாதின் ஜெயிலில் அடைக்கப்பட்ட போது அங்கும் சட்டங்களை தொகுக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். கிட்டத்தட்ட 30 வருடத்தில் உசூல் ,புரூஃ என கிட்டத்தட்ட 50 லட்சம் மஸாயிகள்தொகுக்கப்பட்டது.

      அனைத்து மஸாயீல்களும் பல வடிவத்தில் பல தரப்பட்ட கோணத்தில் சிந்தித்து முடிவாக கியாமத் நாள் வரை ஏற்படக்கூடிய அனைத்து விஷயங்களையும் எழுதியுள்ளார்கள். இன்று நமக்கும் நம் சந்ததியிகளுக்கும் பலன் தந்து கொண்டிருக்கிறது. அல்லாஹுத்தஆலா அந்த அறிஞர்களுக்கு நல்லருள் புரிவானாக ஆமீன்.

தொகுப்பு; முனைவர் அப்துஸ் சமத் நத்வி
பேராசிரியர் கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி, வண்டலூர், சென்னை.

Related Posts