அறிவை இஸ்லாமியப் படுத்துதல் (ISLAMIZATION OF KNOWLEDGE)

by Mohamed Anas

மகரந்த சேர்க்கை ஹதீஸை பொதுவிதியாக்கத் தேவையில்லை.

எந்தவித அறவழி முறைப்பாட்டுக்குள்ளும் வராமல், மேற்கத்திய நாடுகளால் தான்தோன்றித்தனமாக முன்னெடுக்கப்படும் உயிரியல் ஆராய்ச்சிகள். அரசியலுக்காகவும் உலகில் ஆதிக்கம் செலுத்தவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டு சேர்ந்து புதிது புதிதாக கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள். இறைவனின் இருப்பை மறுத்து மனித அறிவையும் தொழில்நுட்பங்களையும் தூக்கிப்பிடிக்கும் மேற்கத்திய நவீனமருத்துவம்.உழைப்பையும் ஏழை நாடுகளின் வளங்களையும் சுரண்டி,வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வட்டிக்கு கொடுத்து மக்களை வறுமைக்குள் தள்ளும் முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுகள்.

மேற்கண்ட நடவடிக்கைகளால் சிலருக்கு சில நன்மைகள் ஏற்பட்டாலும் கூட ஒட்டுமொத்தமாக மனித குலத்துக்கும் பூமிக்கும் கேடு விளைவிக்கும் மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சிகளில் மூன்றாம் உலக நாடுகள் சிக்கத்துவங்கிய காலத்தில்……

இந்த சிந்தனை அடிமைத்தனத்திலிருந்து முஸ்லிம் உம்மத்தையும் இஸ்லாமிய நாடுகளையும் பாதுகாத்திட வேண்டும் என்ற பெரும் முயற்சியின் வெளிப்பாடு தான் “அறிவை இஸ்லாமியப் படுத்துதல்” (ISLAMIZATION OF KNOWLEDGE) என்ற ஆன்மிகமான கருத்து.நவீன உலகின் அறிவுத்துறையை இஸ்லாமிய அறவழியில் சுத்தப்படுத்தி சீரமைக்கும் உன்னதமான கருத்து.

“அறிவை இஸ்லாமியப் படுத்துதல்” என்ற இந்த நவீனகால கருத்துக்கு 1970 களில் அமெரிக்காவில் வாழ்ந்த இஸ்மாயில் ஃபரூக்கி அல் ராஜி, மலேசியாவின் செய்யது முஹம்மது நகீப் அல் அட்டாஸ், மக்காவின் அப்துல் ஹமீத் அபு சுலைமான்,இந்தியத் துணைக் கண்டத்தின் மௌலானா மௌதூதி உள்ளிட்ட பல அறிஞர்கள், சூடான் நாட்டின் உளவியல் பேரறிஞர் மாலிக் பத்ரி மற்றும் மலேசியாவின் இன்றைய பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகிய பல அறிஞர்கள் மகத்தான பங்களிப்பை செய்துள்ளனர்.

உலகின் அறிவுத் துறையை ஷரீஆவின் வட்டத்துக்குள் கொண்டு வருவதும், முஸ்லிம்களுக்கு மாற்று வழிகளை உருவாக்கித் தந்து உம்மத்தின் ஈமானை பாதுகாப்பதுமான பேரருள் பொருந்திய முயற்சி இது.

இஸ்லாமிய வங்கி என்பது இந்த முயற்சியின் வெளிப்பாடு.உலகின் செல்வத்தை கையாளும் வங்கிப் பரிவர்த்தனையை இஸ்லாமியப்படுத்தும் ஒரு முயற்சி.இஸ்லாமிய வங்கியியலை வடிவமைத்த அறிஞர்கள் குழுவில் மௌலானா மௌதூதி அவர்களும் அங்கம் வகித்திருந்தார்கள்.இன்றைக்கு உலகின் பல நாடுகளிலும் இஸ்லாமிய வங்கி செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமிய வங்கியியல் முறையை இன்று விமர்சிப்பவர்கள் யாரிடமும் அதுபோன்ற எந்த ஒரு மாற்றுத்திட்டமும் இல்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகத்தில் “அறிவை இஸ்லாமியப் படுத்துவது” என்ற செயல்திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பது விவாதத்திற்குரியது. ஆனால் இன்றைய உலகின் ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள் கோட்பாடுகள் நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் இஸ்லாமிய மாற்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து முஸ்லிம் அறிஞர்களின் சிந்தனைக்குள் ஊடுருவியது தான் இதன் முதல் வெற்றி.

இன்றைய அறிவுத்துறை அனைத்துக்கும் இஸ்லாமிய ஆக்கம் கொடுக்கப்பட வேண்டும்,ஷரீஆவின் பாதுகாப்பு வளையும் போடப்பட வேண்டும் என்ற கருத்து உறக்கப் பேசப்படும் போதெல்லாம் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மருத்துவம் போன்றவை உலக விவகாரம் சார்ந்தவை இதில் பகுத்தறிவு மட்டுமே அளவுகோலாக இருக்க வேண்டும் பெருமானார் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக மதீனாவில் பேரீட்சை மர மகரந்த சேர்க்கையின் போது பெருமானார் (ஸல்) அவர்கள் “நான் ஒரு நபி என்ற வகையில் கூறிய விடயங்களை நீங்கள் பின்பற்றுங்கள்.அது தவிர்த்த உலக விவகாரங்களில் நீங்களே நன்கறிந்தவர்கள் ” என்ற ஹதீஸை மிக விசாலமாக புரிந்து கொள்ளாமல் முன்வைத்து முஸ்லிம் உம்மத்தின் தனித்துவமிக்க அறிவுப் பாய்ச்சலுக்கு தடைகளை எழுப்ப முயலுகின்றனர்.

இந்த ஹதீஸை குறிப்பிட்ட அந்த சம்பவத்தோடு மட்டும் தொடர்புடையதாக பார்ப்பது நல்லது.உலக விவகாரங்களுக்கான பொதுவிதியாக்கத் தேவையில்லை.

மகரந்த சேர்க்கை என்பது தாவரங்களுக்கான இயங்கு விதிகளில் ஒன்று. மகரந்த சேர்க்கையும் உற்பத்தியை பெருக்க உண்டாக்கப்படும் ஒட்டு இனமும் இயற்கையானது தான்.

ஆனால் இன்று மேற்கத்திய நாடுகளின் ஆய்வகங்களில் விதைகளின் மரபணுக்களையே தங்களின் அரசியல் ஆதிக்கத்திற்காக மாற்றிடும் கொடுமைகள் நடக்கின்றன.

பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் அவர்களது கண்முன் விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதையும் வேளாண்மையில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இரசாயன உரங்களும் கொட்டப்படுவதும் நடந்திருந்தால் இது உலக விவகாரங்கள் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள் என்று விட்டிருப்பார்களா என்ற கேள்வி எனது சிறிய அறிவுக்கு எழுகிறது.

இந்த இடத்தில் தான் ஷரீஆ அடிப்படையில் வேளாண்மையை இஸ்லாமியப்படுத்துவதற்கான தேவை எழுகிறது. அதுதான் “அறிவை இஸ்லாமியப்படுத்துதல் ” என்ற முயற்சி.

அதேபோல இன்றைய மருத்துவத் துறையிலும் நபிவழி மருத்துவம் அல்லது இஸ்லாமிய மருத்துவம் என்பதின் தேவையும் எழுந்து நிற்கிறது.அதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது.

படைப்புகளுக்கென்று அல்லாஹ் இயங்கு விதிகளை (Coding) எழுதியுள்ளான். அதை பகுத்தறிவின் (அறிவியல் ஆராய்ச்சியின்) மூலம் மனிதனால் ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடியும்.

ஆனால் இயற்கை படைப்புகளோடும் கிரேக்க இறைமறுப்புத் தத்துவங்களோடும் இன்றைய உலக அரசியலோடும் ஆதிக்க வெறியோடும் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டலோடும் கலந்துவிட்ட இன்றைய நவீன மருத்துவத் துறையில் ஹலாலும் ஹராமும் இரண்டற கலந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது.

இப்படிப்பட்ட சூழலில் மருத்துவம் என்பது பகுத்தறிவோடு தொடர்புடையது என்றும் அதற்கும் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் ஒதுங்கிக் கொள்வது தான் முஸ்லிம்களின் கடமையா என்ற கேள்வி எழுகிறது.

அல்குர்ஆனிலிருந்தும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்தும் இன்றைய காலத்திற்குத் வேவையான ஒரு முழுமையான மருத்துவ கோட்பாட்டை உருவாக்க முடியும். உருவாக்க வேண்டிய கட்டாயம் இன்று இருக்கிறது.

இறை நம்பிக்கை இல்லாமல், கிரேக்கத்தின் ஹிப்போகிரேட்ஸ் கேலன் ஆகியோரது பகுத்தறிவில் மட்டுமே நிறுவப்பட்ட யுனானி மருத்துவத்தை இஸ்லாமிய உலகத்திற்கு (பைத்துல் ஹிக்மா-பாக்தாத் ) கொண்டு வந்து அல்குர்ஆனையும் பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வியலையும் கொண்டு யுனானி மருத்துவக் கொள்கையை மெருகூட்டி இஸ்லாமிய மருத்துவமாக தரப்படுத்திய மத்தியகால மருத்துவ அறிஞர்களின் அறிவார்ந்த வாரிசுகள் நாம் என்பதை மறந்துவிடக் கூடாது.

இமாம் அல் ராஸி, இமாம் இப்னு சீனா,இமாம் இப்னு அல் கய்யூம்,இமாம் அல் சஹ்ராவி,இமாம் அல் பல்கி,போன்ற எண்ணற்ற மத்தியகால மருத்துவ அறிஞர்களின் எழுத்துக்களும் ஏடுகளும் இன்றும் நமக்கு நிறைவாக கிடைக்கின்றன.

இவற்றைக் கொண்டும்,தமிழ் மண்ணில் மரபாக பேணப்படும் இயற்கை மருத்துவத்தை கொண்டும், இன்றைய நவீன மருத்துவத்தின் சில பயனுள்ள பகுதிகளையும் தொழில்நுட்பங்களை கொண்டும் “இளநிலை இஸ்லாமிய மருத்துவம் & அறுவை சிகிச்சை (Bachelor of Islamic Medicine & Surgery) என்றதொரு மருத்துவ பாடத்தை உருவாக்கி ஹலாலான மருத்துவத்தை உம்மத்துக்கு கொடுக்க வேண்டிய கடப்பாடு இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

உலகின் இயங்கியல் எல்லாவற்றையும் இஸ்லாமிய அறிவுக்கண் கொண்டு பார்க்கும் ஆன்மிக மரபு முஸ்லிம்களிடம் தழைக்க வேண்டும்.

-CMN Saleem

Related Posts