மக்தூமிய்யா அரபிக் கல்லூரி. மறுமலர்ச்சி காலத்தின் அடையாளம்.

by Mohamed Anas

இன்று (4.2.2023) 150 ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடும் பள்ளப்பட்டி மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் ஆண்டுவிழா மலருக்கு நான் எழுதிய கட்டுரை
——‐—————————————

சமூக அக்கறை மிகுந்த பள்ளப்பட்டி சொந்தங்களுக்கு உங்களின் வணிக கலாச்சாரமும் சமூக ஊழியமும் சிறப்புற்று விளங்கிட எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் துஆ செய்கின்றேன்.

பள்ளப்பட்டி பெரிய மதரசா என்றழைக்கப்படும் மக்தூமிய்யா அரபிக் கல்லூரி துவங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை பெருமையுடன் கொண்டாடி வருகின்றோம்.

இது ஒரு நாகரீகச் சமூகத்தின் பெருமைக்குரிய அடையாளம்.

ஒரு சமூகம், தாங்கள் உருவாக்கிய கல்வி நிறுவனங்களை கொண்டும், அறிவுத்துறைக்கு அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்புகள்,வழங்கியுள்ள கொடைகளை கொண்டும் தான் அந்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் அதன் நாகரிகச் செழுமையையும் வரலாறு கணக்கீடு செய்கிறது.

அரபு மதரஸாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை.வரலாற்றில் அல்லாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட சிலரால் மட்டுமே அது சாத்தியப்பட்டுள்ளது.

மக்தூமிய்யா அரபிக் கல்லூரியின் நிறுவனரான ஷாஹ் முஹம்மது அப்துல் அஜீஸ் சாஹிப் ஹஜரத் (எ) புது சாஹிப் அவர்கள் புனிதமிக்க மக்காவில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதரஸா ஸவ்லத்தியா அரபிக் கல்லூரியின் துவக்க கால மாணவர் என்ற பேறுபெற்றவர்கள் என்று தெரியவருகிறது.

சங்கைமிக்க புது சாஹிப் அவர்களால் பள்ளபட்டியில் 1872 இல் உருவாக்கப்பட்ட மக்தூமிய்யா அரபிக் கல்லூரி கடந்த 150 ஆண்டுகளாக எவ்வித பின்னடைவும் இல்லாமல் நிலைத்து நின்று பள்ளப்பட்டி ஊருக்கும் முஸ்லிம் உம்மத்துக்கும் ஆன்மிகச் சேவையாற்றுவதற்கு அடித்தளமாக நிற்கும் அருள்நிறைந்த காரணத்தை உணர்ந்து கொள்வது சிறப்பாக இருக்கும்.

அதற்கு சங்கைமிக்க புது சாஹிப் அவர்கள் மக்காவில் கல்வி பயின்ற மதரஸா ஸவ்லத்தியாவின் வரலாற்றுப் பின்புலத்தையும் அதன் இலக்கையும் அந்த மதரஸா உருவாக்கப்பட்ட காலத்தில் இந்திய முஸ்லிம் உம்மத்தின் சமூக நிலையையும் சங்கிலித் தொடராக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய 1834 இல் கிருத்துவ மத போதகர் கார்ல் காட்லீப் ஃபாண்டர் (Karl Gottlieb Pfander) என்பவர் டெல்லி வந்து இறையியலில் (Theology) தன்னுடன் விவாதம் செய்ய இந்தியத் துணை கண்டத்தில் ஆண்மையுள்ள எந்த முல்லாவாவது (ஆலிம்) இருந்தால் முன்வரலாம் என்று அகங்காரத்துடன் அறிவித்தார்.

யாரும் முன்வரத் தயங்கிய போது உ.பி மாநிலம் முஸஃப்பராபாத்தின் கிரானா நகரில் பிறந்த மௌலானா ரஹ்மத்துல்லா கிரான்வி என்ற பேரறிஞர் ஃபாண்டரின் விவாத அழைப்பை ஏற்றார்.

மௌலானா ரஹ்மத்துல்லா கிரான்வி அவர்கள் மூன்றாம் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் வழித்தோன்றல். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்.மௌலானா அவர்களுடைய எள்ளுத் தாத்தா முகலாய மன்னர் அக்பருடைய அரசவையின் தலைமை மருத்துவராக பணியாற்றியவர்.

ஃபாண்டருக்கும் மௌலானா அவர்களுக்கும் 1854 இல் ஆக்ராவில் விவாதம் நடைபெற்றது. மௌலானா அவர்கள் மார்க்க பாடத்திலும் அரபி உருது பார்சி கணிதம் வரலாறு புவியியல் மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் ஆழமான ஞானம் உடையவராக (Versatile Scholar) இருந்ததால் ஃபாண்டரை தனது அறிவு நுட்பத்தாலும் வாதத்திறமையாலும் எளிதாக வீழ்த்தினார்கள்.

கிருத்துவர்களுடனான இந்த விவாத அனுபவத்தின் நீட்சியாக மௌலானா அவர்கள் எழுதிய நூல்தான் உலக முஸ்லிம் உம்மத்துக்கு விலைமதிப்பில்லா சொத்தாக திகழும் “இள்ஹாருல் ஹக்” என்ற நூல்.

இன்றும் சரி இனிவரும் காலத்திலும் சரி உலகத்தின் இறுதிநாள் வரை உலகில் எங்கேனும் முஸ்லிம்கள் கிருத்துவர்களுடன் விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் மௌலானா ரஹ்மத்துல்லா கிரான்வி அவர்கள் எழுதிய 6 பாகங்களைக் கொண்ட இந்த இள்ஹாருல் ஹக் என்ற நூல் முஸ்லிம் அறிஞர்களுக்கு மிகப்பெரும் ஆதாரமாக இருக்கும்.இருக்கிறது.

இஸ்லாமிய அழைப்பாளர்களான அகமது தீதாத், சாகிர் நாயக் போன்றோர் இந்த நூலைத் தான் கிருத்துவர்களுடனான விவாதங்களுக்கு தங்களது ஆதார நூலாக எடுத்துக் கொள்கின்றனர்.

விவாதத்தில் தோலிவியடைந்த ஃபாண்டர் மௌலானா அவர்களை பழிவாங்க உத்தரவிட்டார். அடுத்த மூன்றாவது ஆண்டில் டெல்லியில் முஸ்லிம்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனி இராணுவத்துக்கும் நடைபெற்ற நேரடி யுத்தத்தில் (1857 – சிப்பாய் புரட்சி) மௌலானா அவர்கள் கலந்து கொண்டு போரிட்டார்கள்.

போரில் முஸ்லிம்கள் தோல்வியடைந்ததால் பிரிட்டிஷ் படைகள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களை தேடித்தேடி படுகொலை செய்தது. மௌலானா அவர்கள் டெல்லியிலிருந்து தப்பித்து பம்பாய் துறைமுகத்திலிருந்து எமன் நாட்டின் மெக்கோ (சனா) துறைமுகத்திற்கு சென்றடைந்து அங்கிருந்து 1000 கி.மீ தொலைவிலுள்ள மக்கா நகருக்கு பசி பட்டினியுடன் மாற்றுத் துணியில்லாமல் நடந்தே சென்றடைந்தார்கள்.

மௌலானா அவர்கள் மக்கா வந்தடைந்த செய்தி அறிந்த, மக்காவில் வாழ்ந்த மைசூரை பூர்வீகமாக கொண்ட பேகம் ஸவ்லத்துன் நிஷா என்ற வசதிபடைத்த பெண்மணி மக்காவில் ஒரு அரபு மதரஸாவை உருவாக்கும்படி மௌலானா அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இவர் மாவீரன் திப்பு சுல்தானின் பேத்தி வகையில் வருபவர் என்று வரலாறு பதிவு செய்கிறது.1873 இல் அந்த பெண்மணியின் பெயரிலேயே மௌலானா ரஹ்மத்துல்லா கிரான்வி அவர்கள் மக்காவில் நிறுவிய அரபு கலாசாலை தான் மதரஸா ஸவ்லத்தியா.

இந்த காலத்தில் பள்ளப்பட்டியிலிருந்து ஹஜ்பயணம் சென்ற சங்கைமிக்க புது சாஹிப் அவர்கள் மக்காவில் அப்போதுதான் துவங்கப்பட்டிருந்த மதரஸா ஸவ்லத்தியாவில் தங்கி மார்க்கப் பாடம் படித்துள்ளார்கள். அப்படியென்றால் நிச்சயமாக சங்கைமிக்க புது சாஹிப் அவர்கள் மௌலானா ரஹ்மத்துல்லா கிரான்வி அவர்களின் நேரடி மாணவராகத் தான் இருக்க முடியும்.

(வாரலாற்றுப் பதிவில் ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்பின் இருக்கின்றன.அது இஸ்லாமிய ஆண்டுக்கும் ஆங்கில ஆண்டுக்குமான இடைவெளியாக இருக்கலாம். ஆனாலும் இதில் இன்னும் ஆழமான ஆய்வுகள் தேவை)

1857 இல் டெல்லியில் நடைபெற்ற போரில் முஸ்லிம்கள் பிரிட்டிஷாரிடம் தோல்வியடைந்த பிறகு ஆயிரக்கணக்கான அரபு மதரஸாக்களை பிரிட்டிஷார் இடித்து தரைமட்டம் ஆக்கியதையும் மார்க்கம் பயின்ற உலமாக்கள் வீதிகளில் படுகொலை செய்யப்படுவதையும் முஸ்லிம் வெகுஜனம் நேரடியாக கண்டது. உள்ளத்தில் ஆறாத ரணமாக மாறிப்போனது. அதன் பிறகு உயிரைக் கொடுத்தேனும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கற்பிக்கும் அரபு மதரஸாக்களை இந்திய முழுவதும் மீளுருவாக்கம் செய்ய வேண்டும் என்ற வீம்பும் வேட்கையும் உலமாக்களில் பலருக்கு உருவானது.

மௌலானா ரஹ்மத்துல்லா கிரான்வி அவர்கள் இந்தியாவில் பட்ட துயரங்களையும் முஸ்லிம்களின் ஆட்சி பறிபோய் பிரிட்டிஷார் அரபு மதரஸாக்களை இடித்து தரைமட்டமாக்கி வருவதையும் தனது மாணவர்களிடம் வேதனையோடு நிச்சயம் பகிர்ந்திருப்பார்கள்.

மௌலானா அவர்களிடம் ஆன்மிகப் பாடம் பயின்ற மாணவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் பலவேறு பகுதிகளிலும் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் போன்ற கிழக்காசிய நாடுகளிலும் இன்னும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் ஏராளமான அரபு மதரஸாக்களை உருவாக்கிட அதுதான் விதையாக இருந்திருக்கிறது.

பிரிட்டிஷார் நடத்திய கொடுமைகளின் நேரடி சாட்சியம் தான் மௌலானா ரஹ்மத்துல்லா கிரான்வி. மௌலானா அவர்களிடம் நேரடி பயிற்சி பெற்ற பெருந்தகை தான் சங்கைமிக்க புது சாஹிப் அவர்கள்.இந்த தொடர்பும் பயிற்சியும் தான் பள்ளப்பட்டியில் மக்தூமிய்யா அரபிக் கல்லூரியை துவங்குவதற்கு விதையாக இருந்திருக்கும்.

அதேபோல மக்காவின் மதரஸா ஸவ்லத்தியாவில் பயிற்சிபெற்ற மற்றுமொரு ஆலிம் பெருந்தகை சங்கைமிக்க அஃலா ஹள்ரத் அவர்கள் ஜாமிஆ அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியை வேலூரில் உருவாக்கியதற்கும் மெளலானா ரஹ்மத்துல்லா கிரான்வி அவர்களே உந்து விசையாக இருந்திருக்கிறார்கள்.
(Source :http://khanbaqavi.blogspot.com/2013/12/150.html#)

சங்கமிக்க புது சாஹிப் அவர்களின் சீரிய முயற்சியில் அவர்களின் சீடர் காயல்பட்டினம் கொடைவள்ளல் மக்தூம் மரைக்காயர் அவர்களின் நிதியில் மக்தூமிய்யா அரபிக் கல்லூரி 1872 இல் உருவாக்கப்பட்டு இப்போது 150 ஆண்டுகளை தொட்டு கம்பீரமாக நிற்கிறது.இதன் உருவாக்கத்திற்குப் பின்னால் இந்திய முஸ்லிம்களின் மிகப்பெரும் இழப்புகளும் வேதனைகளும் அடர்த்தியாக நின்று தூண்டியிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்வது இங்கே கட்டாயம்.

உலகின் பயனுள்ள பலதுறைகளிலும் பாண்டித்யம் பெற்றிருந்த மௌலானா ரஹ்மத்துல்லா கிரான்வி அவர்களிடம் பயிற்சி பெற்ற சங்கைமிக்க புதுசாஹிப் அவர்கள் மக்தூமிய்யா அரபிக் கல்லூரியில் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட இஸ்லாமிய மரபு கல்வி முறைதான் இருந்திட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்கள்.மக்தூமிய்யா அரபிக் கல்லூரி 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அப்படித்தான் இருந்துள்ளது.
(Source : https://pallapattimakkal.wordpress.com/)

மார்க்கக் கல்வியுடன் உலகக்கல்வியும் இணைத்து கற்பிப்பது தான் இஸ்லாமிய கல்வித்திட்டம். ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் உலகின் முதல் தர குடிமக்களாக முஸ்லிம் உம்மத்தை அல்லாஹ் தலைநிமிர வைத்து உலகின் அறிவுத்தனத்தையும் தலைமைத்துவத்தையும் அளித்திருந்ததின் பின்னணியில் மார்க்க அறிவையும் உலக அறிவையும் ஒருசேர கற்று அல்லாஹ்வின் படைப்புகளை ஆராய்ச்சி செய்யும் பண்புகள் முஸ்லிம்களிடம் மிகைத்திருந்தது தான் காரணம்.

இந்தியாவில் முஸ்லிம்களிடமிருந்து பிரிட்டிஷார் கைக்கு ஆட்சி அதிகாரம் சென்ற 1857 காலம் வரை முஸ்லிம்களின் கல்விமுறை அப்படித்தான் இருந்தது. இடைக்காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் தான் இந்திய தமிழக முஸ்லிம்களின் கல்விமுறையில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முஸ்லிம்கள் பின்தங்கிப் போவதற்கும் இதுதான் காரணம்.

பள்ளப்பட்டி உள்ளிட்ட தமிழக முஸ்லிம்கள் மீண்டும் தங்களது மரபுக் கல்விமுறைக்கு மீளவேண்டும்.மார்க்கக் கல்வி கற்காத முஸ்லிம் குழைந்தைகளே கிடையாது என்ற நிலை தமிழகத்தில் உருவாக வேண்டும்.

தமிழக முஸ்லிம்களின் ஆரம்பக் கல்வி முதல் ஆய்வுக்கல்வி வரை இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதே நமது மைய்ய இலக்கு.

அதேபோல மக்தூமிய்யா அரபிக் கல்லூரியை பிரமாண்டமாக வளர்த்தெடுக்க வேண்டிய பெருங்கடமை பள்ளப்பட்டி மக்களுக்கு இருக்கிறது.இந்தியா முழுவதும் வியாபித்து தொழில் செய்யும் பள்ளப்பட்டி தொழிலதிபர்கள் தாங்கள் பிறந்த ஊரை நோக்கி இந்திய முஸ்லிம்களை ஈர்த்திடும் வகையில் மக்தூமிய்யா அரபிக் கல்லூரியை ஒரு மகத்தான இஸ்லாமிய பல்கலைக்கழகமாக உருவாக்கி எடுத்திட வேண்டும்.

இன்றைய சூழலில் இது ஒன்றும் பெரிய காரியமல்ல.அர்பணிப்புச் சிந்தனையுடன் களமிறங்கினால் அடுத்த பத்தாண்டுகளில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதுதான் சங்கைமிக்க புது சாஹிப் அவர்களுக்கும் காயல்பட்டினம் கொடை வள்ளல் மக்தூம் மரைக்காயர் அவர்களுக்கும் அவர்களைப் பின்தொடர்ந்து இந்த 150 ஆண்டுகளாக மக்தூமியாவை பாதுகாத்து பராமரித்து கல்வி போதித்த எல்லா சான்றோர்களுக்கும் அங்கே படித்து பட்டம் பெற்ற உலமாக்களுக்கும் பொருளாதார பங்களிப்பு செய்த சமுதாயப் புரவாளர்களுக்கும் நாம் செய்யும் கண்ணியமாக இருக்கும்

-CMN Saleem

Related Posts