வடிவியல் அதாவது ஜியோமெட்ரியின் தந்தை என வரலாற்றில் வர்ணிக்கப்படுபவர் கிரேக்க கணிதமேதையான யூக்ளிட் ஆப் மெகாரா ஆவார். கி.மு.4ம் நூற்றாண்டில் எகிப்து , அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த தாலமி காலத்தில் வாழ்ந்தவராவார் , இருபதாம் நூற்றாண்டு வரை வடிவியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய யூக்ளிடியன் தியரம் இவரால் உருவாக்கப்பட்டதே.
தாலமியின் வானவியலில் ஒன்பதாவது கோளத்தையும் சேர்த்தவர் தாபித்.ஆனால் தாலமியின் வானியல் கருத்துக்களை விமர்சித்த ஆரம்ப கால அறிஞர்களில் ஒருவராக தாபித் திகழ்கிறார்.
இந்த கிரேக்க கணித மேதை போலவே வடிவியலில் கொஞ்சம் கவனம் செலுத்தியவர் அல்குவாரிஸ்மி ஆவார். அவருக்கு பிறகு வந்த பல்துறை வித்தகர்களில் இப்னு குர்ரா தான் கணித வடிவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என வரையறுக்கப்படுகிறார். பாரம்பர வடிவியலை ( Traditional Geometry) வடிவியல் சார்ந்த இயற்கணிதத்துக்கு (Geometrical Algebra ) விரிவுபடுத்தியதில் முன்னோடியானவர் தாபித்.
யுக்ளிட் கூறாத வடிவியல் தத்துவங்களின் வளர்ச்சிக்கு இவர் முதன்மை பங்கு வகித்தார். கோள நிலை திரிகோண கணிதம் (Spherical Trigonometry ) முழுமைக் கணிப்பெண் ( Integral Calculas ) ஆகிய கணிதத் துறைகளின் வளர்ச்சியில் இவரது பங்கு கணிசமானது. Internal sums எனும் கணித கேள்விகளுக்கு பதிலளிக்கும் பார்முலாக்களை உருவாக்கியதிலும் தாபித்தின் பங்கு முதன்மையானது.
திண்மத்தினுடைய மேற்பரப்பு மற்றும் கனஅளவு ஆகியவற்றை கணிப்பதற்கு அவர் பயன்படுத்திய முறைதான் பின்னாளில் முழுமைக் கணிப் பெண் என அறியப்படுகின்றது.
ஹிஜ்ரி 210-211 ஆண்டுகளுக்குள் , துருக்கியின் அப்போதைய பிலாத் அல் ஷாம் , தற்போதைய ஹர்ரான் நகரில் பிறந்தார். அல்சபி அத்தாபித் இப்னு குர்ரா அல் ஹரானி என்பது அவரது இயற்பெயராகும். அவரது பழங்குடி சாபியன் பழங்குடிகள் எனப்படுகிறது. கணிதம் தவிர விண்ணியல், இயந்திரவியல், கிரக சஞ்சாரம் மற்றும் மொழிப்பெயர்ப்பியல் ஆகியவற்றில் திறமை பெற்றிருந்தார்.
அப்பாஸிய கலிபாக்கள் உருவாக்கிய பைத்துல் ஹிக்மாவில் இவர் தயாரித்த பல மொழியாக்கங்கள் இன்றும் பெயர் கூறக்கூடியதாக தெளிவாகவும் துல்லியமாகவும் உள்ளது. பனூ மூஸா சகோதரர்களாகிய அபு ஜாஃபர் – அபு அல்காஸிம் ஆகியோருடைய ஆட்சியின் கீழ் பக்தாதின் பெரும் மதிப்பிற்குரிய ஆசிரியராக விளங்கினார்.
12ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளான மன்சூர் அல்காசினி, அல் இஸ்பிசாரி, நயீம் இப்னு மூசா ஆகியோரின் கணிதவியல் ஆசானாக தாபித் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார். லத்தீனில் இவரது ஆக்கங்கள் தெபித் ஆன் த காம்போசிஷன்ஸ் ஆப் தியரம் என மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. தாபீத்தின் தாய்மொழி சிரியக் ஆகும் எனினும் அவர் கிரேக்கத்திலும் அரபிக்கிலும் ஒருசேர புலமைபெற்றிருந்தார்.
கிரேக்க மேதைகளான அப்பல்லோனியஸ் ஆப் பெர்கா, ஆர்கிமிடிஸ்,யூக்ளிட் மற்றும் தாலமி ஆகியோரின் கணித விதிகளை துல்லியமாகவும் எளிமையாகவும் மொழிமாற்றம் செய்துகொடுத்தார். தாலமியின் புவியியல் எனும் கிரந்தமான அல்மகஸ்ட் எனும் புவிக்கோண புத்தகத்தை மொழிப்பெயர்த்தன் மூலம் எழுங்கோணம் அதாவது ஏழு பக்கங்களுடைய ஹெப்டகனை கண்டறிந்தார். இருபதாம் நூற்றாண்டிற்கு பிறகு அது பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது.
புவியியலை பொறுத்தவரை புவியானது சூரியனை சுற்றி முடிக்கும் சைட்ரியல் ஆண்டு கணக்காக துல்லியமாக 365 நாட்கள், 6 மணிநேரமும், 9 நிமிடமும் 12 நொடியும் ஆகிறது என சரியாக கணித்து வைத்திருந்தார். இதனை அவர் தமது அஷ்ஷம்ஸ் எனும் கிரந்தத்தில் எழுதியுள்ளதாக 15ம் நூற்றாண்டில் தோன்றிய காபர்நிகஸ் குறிப்பிட்டுள்ளார். பின்னாளில் 365நாள், 6 மணிநேரம், 9 நிமிடம், 12 நொடிகள் என்பது.. 10 நொடி என தீர்க்கமாக அறியப்பட்டது.
சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களில் உள்ள பல பிரச்சனைகளை ஆய்வு செய்த தாபித் கதிர் மணிப்பொறி (Sindial ) பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். பீர் மற்றும் மெட்லர் ஆகியோர் தங்கள் புகழ் பெற்ற பணியான டெர்மாண்ட் என்பதில் சந்திரனின் ஒரு பகுதிக்கு தாபித் உடைய பெயரை வைத்துள்ளனர்.
கணித்தத்தை பொறுத்தவரை தாபித் கண்டறிந்த அமிகேபில் நம்பர், தியரி ஆப் நம்பர்ஸ் ஆகியவற்றை வடிவமைத்தார். கிரேக்கர்கள் கையிலெடுக்காத வடிவியல் விகிதாச்சாரத்தை பற்றி கண்டறிந்து அவற்றையும் எழுதி வைத்தார். சதுரங்கம் விளையாட்டின் புதிய விதிகளுடனான அசைவுகளையும் கொடுத்தார். பைதாகரஸ் தியரத்தின் வடிவமைப்பினை பொதுமையாக்கி அனைவரும் எளிதில் விளங்கும்படி சீர்செய்தார்.
பௌதீகவியலின் ஒரே அங்கமாக நிலையியல் அதாவது Statics என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் விசை, திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும். இது இயந்திர பொறி வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துறையில் பெரிதும் பங்காற்றி வருகிறது.
தாபித்தின் மற்றொரு சாதனை ஹைட்ரோஸ்டாடிக்ஸ் எனும் பாய்மநிலையியலையும் முத்தாய்ப்பாக தொடங்கி வைத்தார்.குழுமம், உத்தரம், நெம்புகோல் ஆகியவற்றின் நடுநிலை அமைதி (Equilibrium of Bodies Scams and Levers ) பற்றிய நிலைகளை ஆய்வு செய்தது இயக்கவியல் மற்றும் இயற்பியலில் தாபித் உடைய மூலக் கண்டுபிடிப்பாகத் திகழ்கின்றது.
தனது பாரம்பரிய அறிவை தனது மகன்களான இப்றாகீம் மற்றும் சினான், பேரக்குழந்தைகளான தாபித் மற்றும் இப்றாகீம், கொள்ளுப் பேரன்களான அபு அல்பரஜ் அகியோரிடம் தாபித் விட்டுச் சென்றார். இவர்கள் எல்லோருமே வடிவியல் வானவியல் மற்றும் மருத்துவத்திற்கு கணிசமான பங்களிப்பை ஆற்றினார்கள்.
அவரது மகன் சினான் கி.பி 931ல் முதல்முதலில் மருத்துவர்களுக்கான சான்றிதழ் பரீட்சைகளை நடத்தி அதில் தேர்ந்த மருத்துவர்களுக்கு 800 சான்றிதழ்களை வழங்கினார்.நடமாடும் மருத்துவமனைகளை அன்றே ஏற்படுத்திய சினான் போதிய சுகாதார முறைகளைக் கண்டறிவதற்க்காக அடிக்கடி சிறைகளிலும் சோதனை நடத்தியவர்.
தாபித் இப்னு குர்ரா கி.பி.901-ல் பக்தாதில் மரணித்தார்.
எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)