அல்ராஸி (854- 935) மனோதத்துவியலின் தந்தை

by Mohamed Anas

இஸ்லாமிய மார்க்கத்தோடு முரண்பட்டு நின்றவர் என்கிற ஒரு கருங்கோடு எப்போதும் இவர் மீது உண்டு காரணம் தாம் வாழும் காலத்திலேயே கிறுஸ்துவத்தை தழுவிய ஒரு மதவழிபாடான மாணிக்கீசியம் எனும் ஒரு இரான் நாட்டு மதவழிபாட்டை ஆதரித்தவர் என புகழ்பெற்ற விஞ்ஞானிகளான அவிசீனா மற்றும் அல்பிருனி ஆகியவர்களால் விமர்சிக்கப்பட்டவர். எனினும் உடல்நல மருத்துவம் எனும் பெயரில் அவரது காலத்தில் வாழ்ந்த போலி மருத்துவர்களையும் அவர்களது சிகிச்சை முறைகளையும் ஓட ஓட விரட்டியவர்.

பக்தாத் மற்றும் ராய் பகுதிகளில் கைராசி மருத்துவர் என பெயரெடுத்த அல்ராசி பிறந்த இடம் இரானின் தெஹ்ரான் பகுதியில் உள்ள அல்போர்ஸ் மலைச்சரிவுகளில் இருக்கும் ராய் எனுமிடத்தில் தான். கி.பி.854ல் பிறந்த அவரது குலம் ராசி எனப்படுகிறது. அபூபக்ர் முகம்மதி ஸக்கரியா அல்ராசி தான் அவருடைய முழுப்பெயர். அவரது பெற்றோர் பற்றி முழுவிபரம் தெரியவில்லை எனினும் அவர் வாழ்ந்த பகுதியான பிரபலமான பட்டுவழிச்சாலை (Great Silk road ) அருகில் அமைந்திருந்தது என அவரது புத்தகங்கள் சிலவற்றில் குறிப்பு காணப்படுகிறது.

முதல் தொழில்முறை மருத்துவராக இஸ்லாமிய பொற்காலத்தில் அறியப்படும் இவர், மருத்துவம் மட்டுமன்றி ரசவாதம், மதுசாரம்,உயிர்ம வேதியியல் , உளவியல் , குழந்தை நலம், கண் மருத்துவம் மற்றும் கனிம வளம் பற்றி படித்த பல்துறை வித்தகர் ஆவார். இவரது அரும்பெரும் கண்டுபிடிப்பு சின்னம்மை மற்றும் பெரியம்மை நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்தது ஆகும். ஒரு மருத்துவராக முதன்முதலில் மனோதததுவத்தில் கவனம் செலுத்தி முதன்முறையாக ஹியூமோரல் தியரியினை வடிவமைத்து அதனை நோயாளிகளிடம் பிரயோகித்து அவர்களுக்கு சுகமளித்தார்.

அப்பாஸியக் கலிபா முக்தபீயின் காலத்தில் தேசிய வைத்தியசாலைக்கு தலைமை பொறுப்பேற்றார். ராய் மற்றும் பக்தாத் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் சுமார் 220 புத்தகங்களை எழுதினார். இதில் 140 புத்தகம் மருத்துவம் சம்பந்தமானது. இதற்கு முன் மருத்துவ துறைக்கென யாரும் இத்தனை புத்தகங்களை எழுதியிருக்கவில்லை. கண் மருத்துவத்தின் முன்னோடியான இவரது கைப்பிரதி நூல்கள் இன்றும் எகிப்து,இரான்,ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தின் பீட்டர்பரோ அபேயில் பாதுகாக்கப்படுகிறது. 

அவற்றுள் அல்ஹாவி, அல்ஜூதரி வல் ஹஸ்பா, கிதாப் திப்பில் மன்சூர், கிதாபுல் அஸ்ரார் ( Book of secrets of secrets)  என்பன இவரது பிரசித்தி பெற்ற நூல்களாகும்.
1911ம் ஆண்டு வெளியான என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தகவல் களஞ்சியத்தில் அல்ராசி எழுதிய முக்கியமான 10 புத்தகங்கள், அவரது காலத்தில் அவர் கையாண்ட மருத்துவ முறைகளை பாராட்டும் விதமாக அமைந்துள்ளது. அம்மை நோய் ஏன் உண்டாகிறது, அதன் தாக்கம் என்ன, அதை எப்படி கண்டறிவது மற்றும் அவற்றிற்கான சிகிச்சை யாது என மிக துல்லியமாக எழுதி வைத்துள்ளார் என்றும், இன்றுவரை அதனை மறுத்துக்கூற யாருமில்லை எனவும் பாராட்டி எழுதப்பட்டுள்ளது.

மனோதத்துவ முறையில் நகைச்சுவை உணர்வு, நிறங்களை கொண்டு மனநிலையை சரிப்படுத்துதல், உணவு முறை மாற்றத்தால் அவர்களது கவலைகளை போக்குதல் என ஒரு திட்டவட்ட அகராதியே தயாரித்து வைத்திருந்தார் ஆகவே தான் அவருக்கு, ஐரோப்பிய உலகம் ” Father of Psychology and Psychotherapy ” எனவும் Doctor of Docters எனவும் பெயரிட்டுள்ளது.

கி.பி. 1279 ஆம் ஆண்டில் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உத்தரவிற்கிணங்க மேற்கூரிய நூல்கள் கொண்டினன்ஸ் (Continence) என்ற பெயரில் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. 17ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இது பாடநூலாக பயன்படுத்தப்பட்டதென்று ஐரோப்பிய ஆய்வாளர் ஜே.டி.பேர்ணாட் (J.D.Bernad) தனது “வரலாற்றில் விஞ்ஞானம்” என்ற நூலிலே குறிப்பிடுகின்றார்.

இருபது பாகங்களைக் கொண்ட மிகப் பெரிய மருத்துவ நூலான அல்ஹாவி நோய்களைப் பற்றியும், அவற்றுக்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது. ஜெர்மனிய வரலாற்றாசிரியரான ஜோஸப் ஹெல் தனது “அரபு நாகரிகம்” என்ற நூலில் அல்ராஷி பத்துப்பாகங்களில் ஒரு மருத்துவ கலைக்களஞ்சியத்தையே உருவாக்கியுள்ளார் என்று பாராட்டியுள்ளார். அல்ஜூதரி வல் ஹஸ்பா (சின்னமுத்துவும் பெரியம்மையும்) என்னும் இவரது மற்றொரு நூல் அம்மை நோய்கள் பற்றி எழுதப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகின்றது.

இவரது மற்றொரு நூலான “கிதாப் திப்பில் மன்சூர்” கிரேக்கம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகளே முஸ்லிம்களது மருத்துவ விஞ்ஞானம் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. இவரது மருத்துவ சாதனைகளை கெளரவப்படுத்தும் முகமாக இவரின் உருவப்படம் இன்று பாரிஸ் பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்மருத்துவம், சத்திரசிகிச்சைத்துறை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஒருவித நூலிழையத்தை மிருகங்களின் குடலிலிருந்து கண்டுபிடித்தார். “வென்ரோஸா” என்னும் நோயை முதன்முதலாக அடையாளம் கண்டு, அதற்கு ஒட்டுண்ணி காரணம் எனக் கண்டுபிடித்தவரும்

இவரே. மேகநோய் பற்றியும் உடல்நோய் பற்றியும் இவர் ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்கள் அதிசயக்கத்தக்கன. குரல்வளைக்குள் குழாயினை உட்செலுத்தி சிகிச்சை செய்தல், கடின பிரசவத்தின் போது கையை உட்செலுத்தி குழந்தையைத் திருப்பி விடுதல், வயிற்றையும் கர்ப்பப்பையையும் பிளந்து குழந்தையை எடுத்தல் போன்ற முறைகளையும் அறிமுகம் செய்தார். வெளியில் உள்ள ஒளி கண்களில் ஊடுருவிச் செல்வதாலேயே கண்களால் பார்க்க முடிகிறது என்னும் தத்துவத்தை முதலில் நிறுவியவரும் இவரே.

ரசவாதம் பொருத்தவரை கிளிசரீன் மற்றும் ஆல்கஹால் (எத்தனால்) இரண்டையும் கண்டுபிடித்தார். ரசாயணங்களை புளிக்க வைக்கும் தத்துவத்தை (Fermentation theory) வைத்து  அவற்றில் மருந்துகள் தயாரித்தார். புண்களுக்கு தடவும் காயங்கள் (ointments) தயாரித்ததும் இவரே.

பொதுவாக நகைச்சுவை உணர்வு அதிகமுள்ள அல்ராசி , நோய்கள் முற்றிய நிலையில் வரும் நோயாளிகள் , நோய் குணமாகவில்லை என்றால் பதிலுக்கு மருத்துவரை திட்டுவதை நிறுத்த வேண்டும். மருத்துவர் கூறும் உணவுப்பழக்கத்திற்கு (Diet) தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள் தங்களுக்கு நோய் குணமாகும் என நம்ப வேண்டாம் என கூறியுள்ளார். யாரும் நெருங்க கூட சங்கடப்படும் தொழுநோயாளர்களுக்காக தனி இடம் அமைத்து வைத்தியம் செய்தார்.

பக்தாதில் மருத்துவமனை கட்ட , கலிபாக்கள் இடம் பார்க்க கூறும் போது சில குறிப்பிட்ட இடங்களில் இறைச்சி துண்டுகளை கட்டி தொங்கிவிட்டு போய்விடுவார். எந்த இடத்திலுள்ள இறைச்சி அழுகுவதற்கு நீண்ட நாள் பிடிக்கிமோ அந்த இடத்தில் மருத்துவமனை கட்டலாம் என அனுமதி கொடுப்பார். இது புவியின் காந்தசக்தி மற்றும் அழுத்தத்தை வைத்து மருத்துவமனை அமைக்கப்பட்டால் தான் நோயாளிகளது மனநிலை சரிசம்மாக இருக்கும் என ஜியோபாத்தடிக் முறைகளை அறிமுகப்படுத்தினார்.

நோய்களுக்கு கசகசா, பெருங்காயம், குங்குமப்பூ மற்றும் கொத்தமல்லி விதைகளை மருந்தாக அரைத்து பயன்படுத்தியுள்ளார். மனநோய் என்பது பேய் பிடித்து ஆட்டுவது தான் என நம்பி வந்த காலத்தில் முதல் முதலாக மனநோய் பிடித்தவர்களுக்கான தனி மருத்துவமனையை உருவாக்கினார்.

அவர்களிடம் இருக்கும் நகைச்சுவை உணர்வினை வெளிப்படுத்தி அவர்களது மனங்களை காயப்படுத்தும் விஷயங்களை கண்டறிந்துள்ளார். அவற்றை எழுதியும் வைத்துள்ளார். பொதுவாக தமக்கு பிடித்த ஒரு விஷயம் தன்னை சார்ந்தவருக்கும் கட்டாயம் பிடிக்க வேண்டும் என நினைப்பதே மனநோயின் ஆரம்பநிலை என்கிறார்.

எழுத எழுத விஞ்ஞானி அல்ராசியின் கதை நீண்டு கொண்டே செல்கிறது. கண்பார்வை சிகிச்சை செய்த அவருக்கு இறுதி காலத்தில் கண் நோய் ஏற்பட்டது. அதற்காக மருத்துவம் செய்ய ஒரு மருத்துவர் வந்தாராம், அவரிடம் அல்ராசி, “கண் ஏன் தெரியாமல் போகிறது ” என கேட்டாராம், அதற்கு அவர் எனக்கு தெரியாது என்று கூறவே..சரி, கண்ணுக்கு எத்தனை அடுக்கு உள்ளது என கேட்டாராம்,

அதற்கும் அவர் தெரியாது என கூறவே…கண் பற்றி அரவே தெரியாதவனிடம் சிகிச்சை செய்துகொள்வதற்கு நான் கண் தெரியாதவனாகவே இருந்துவிடுகிறேன் என்றாராம், இதுபோல அவரது வாழ்க்கையில் நடந்த ஏராளமான சம்பவங்கள் தொகுத்து எழுதப்பட்டால் நிச்சயமாக அதுவே ஒரு 200 பக்கம் அடங்கிய புத்தகமாக வரும். இங்கே நாம் அவரை பற்றி அறிந்துகொள்ள இது்போதும்.

கிபி.925-932 ஆகிய ஆண்டுகளுள் ராய் நகரில் இறந்துபோன அல்ராசி , இஸ்லாமிய உலகில் மட்டுமல்லாது , ஒட்டுமொத்த ஐரோப்பிய உலகிலும் மருத்துவ உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கியவர். இஸ்லாத்தை பற்றி யாரும் சர்ச்சையாக பேசினாலே வாளெடுத்து அவனது கழுத்தை சீவும் பழக்கம் இருக்கும்வரை இந்த புனிதமிகு இஸ்லாமிய மார்க்கம் வெளித்தெரியாமல் மறைந்தே போகும் என அவரது quote ஒன்று கூறுகிறது.

மருத்துவ உபகரணங்களான பிளாஸ்க், மருந்து அரைக்கும் உரல் ஆகியவை அல்ராசியின் கண்டுபிடிப்புகளே. கசகசாவின் விதைகளை அரைத்து முதன்முதலில் மயக்கமருந்து தயாரித்து அறுவை சிகிச்சைக்கு முன் நோயாளிகளுக்கு கொடுத்து அவர்களை உறங்க வைக்கும் தத்துவத்தை உருவாக்கியவர்.

மருத்துவராக மட்டுமன்றி மனநல ஆலோசகராக வலம் வந்த அல்ராசியின் மாணவர்கள் என படையே இருந்தனர். அவர்களில் கிரேக்க ஞானி காலனின் தத்துவங்களை சீன மொழியில் மொழிப்பெயர்த்து வைத்திருந்த ஒரு சீன மாணவனிடம் அந்த நூலை பெற்று பாரசீக மொழியில் மொழிமாற்றி அவற்றையும் கற்றரிந்தார் அல்ராசி.

(எட்டாம் நூற்றாண்டு)

எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)

Related Posts