இஸ்லாமிய பொற்கால விஞ்ஞானிகளில் கணிசமான பெண்களும் உண்டு. ஆய்வாளர்களாக இருந்த அவர்களுக்கு சிஷ்யைகளும் உண்டு. அவற்றில் முதன்மையானவர் மரியம் அஸ்த்ரோலாபி.
அஸ்த்ரோலாப் என்பது ஒரு வின்மானி. இதனை கண்டறிந்தவர் ஒரு பெண் என்பது நமக்கு வியப்பானதொரு விஷயம். சிரியாவின் அலெப்போ நகரில் வாழ்ந்த ஒரு இயந்திரப்பொறியாளரான லில்லி யா அஸ்த்ரோலாபி என்பவரது மகளாவார். தந்தையிடமே இயந்திர பொறிகளை பற்றிய அறிவினை பெற்ற இவர் பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த விண்வெளி விஞ்ஞானியான முஹம்மது இப்னு அப்துல்லாஹ் நாஸ்துலஸ் என்பவரது சிஷ்யையாக இருந்தார்.
அப்துல்லாஹ் நாஸ்துலஸ் உருவாக்கிய அஸ்த்ரோலாப் தான் உலகின் பழமையான வின்மானியாக இன்றும் பாதுக்காக்கபடுகிறது. கி.பி.927/28 ல் அதாவது ஹிஜ்ரி 315ல் வாழ்ந்தவராக கருதப்படும் அவர் பற்றி மேலும் விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இஸ்லாமிய வரலாற்று ஆய்வாளரான இப்னு அல் நதீம் அவர்கள் கொடுத்த குறிப்புகளின்படி மரியம் அஸ்த்ரோலாபி மற்றும் அப்துல்லாஹ் நாஸ்துலஸ் பற்றி குறைவாகவே அறிய முடிகிறது.
நாஸ்துலஸ் என்கிற பெயரை வைத்து இவர் கிரேக்க பகுதியை சேர்ந்தவர் என்பதும் அல்குவாரிஸ்மி மற்றும் அல்பதானி ஆகியோரை குருவாக ஏற்றுக்கொண்டவர் என்பது மட்டும் தெரிகிறது. இவருடைய சமகால விஞ்ஞானி என அபு ஸைது அல் ஸிஜ்ஜி என்பவர் பற்றியும் அறிய முடிகிறது.
மரியம் அஸ்த்ரோலாப் தயாரிப்பில் கரைகண்டவராக விளங்கினார். வின்மானி மட்டுமல்லாது உலகில் முதல்முதலில் கண்டறியப்பட்ட அலாரமாகவும், கிப்லாவை காட்டும் திசைமானியாகவும் அது இருந்துள்ளது. 944-67 வரை சிரியாவை ஆண்ட மன்னரான அமீர் சைஃப் அல் தவ்லா , மரியம் அஸ்த்ரோலாபியை இயந்திரமானிகள் தயாரிக்கும் பணியில் அமர்த்தியிருந்தார்.
மர்யம் அஸ்த்ரோலாபியை பாராட்டும் விதமாக 1990ல் பாலமோர் ஆப்ஸர்வேட்டிரியில் வைத்து ஹென்ரி.இ.ஹொல்ட் என்பவரால் கண்டறியப்பட்ட ஒரு விண்கல்லுக்கு 7060 அல்லில்லியா என பெயரிட்டனர். 2015ல் பாராட்டுதல்களை வாங்கி குவித்த சாகச கதைகள் அடங்கிய புத்தகமான “பின்தி” யில் மரியம் தான் சாகச பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.
அஸ்ட்ரொலாப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அனைவரும் Tomb rider படத்தில் பார்த்திருப்பீர்கள். அது மிகப்பிரம்மாண்டமானதாக இருக்கும் ஆனால் பொதுவாக அது 6 cm diameter ல் ஒரு தட்டு போல தான் இருக்கும்.
வெண்கலத்தால் மட்டுமே தயாராகும் இந்த கருவியை கொண்டு சூரியன்,சந்திரன் மற்றும் நட்சத்திர சஞ்சாரங்களை ஆதிகாலம் தொட்டு அறிந்துகொள்வதற்காக பயன்படுத்தியுள்ளார்கள். உலகின் மிக புராதன திசைமானி எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு.26 ல் உருவாக்கப்பட்ட அந்த திசைமானி இருபது பேர் சேர்த்தால் கூட நகற்றி மாற்ற முடியாது. பிறகு கிமு 3 ம் ஆண்டு டாலமி காலத்தில் இதனை ஒரு பெண் வைத்திருந்தார் என்பதற்காக கற்பழித்து கொல்லப்பட்டார் என்ற வரலாறும் உண்டு.
இந்த திசைமானி போல உலகில் பல இருந்தாலும் ஐரோப்பாவில் இஸ்லாமிய அல்- அன்டுலஸ் காலத்தில் 1200ல் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரொலாப் தான் மிக மிக துல்லியமானதாக கருதப்படுகிறது. அராபிய மொழியில் இருந்த அந்த அஸ்ட்ரொலாபில் 1400 வாக்கில் லத்தீன் இலக்கங்களும் சொற்குறிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
அராபிய மொழியில் உள்ள வானியல் மற்றும் புவியியல் சாஸ்த்திரங்கள் அத்தனையும் அந்நாளில் கிரேக்க மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பொதுவாக இந்த அஸ்ட்ரொலாபை வைத்து வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மட்டும் பாராது, ஜோசியமும் கிரக சஞ்சாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன.
இப்போது இந்த அஸ்ட்ரொலாப் இப்போது ஒரு கலைப்பொருளாக மட்டும் பணக்காரர்களால் கோடிகளுக்கு வாங்கி அலங்காரமாக வைக்கப்பட்டாலும் இவற்றில் ஐரோப்பிய, அராபிய,கிரேக்க,எகிப்திய,இந்திய,ப்ளானி, ஆர்மிலாரி,மிட்ஈவல், சைனீஸ்,பராகுவன் என பல பல வகைகள் உண்டு என்பது பலருக்கும் தெரியாது.
டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு வரை அதாவது 17ம் நூற்றாண்டு வரை இந்த வகை அஸ்ட்ரொலாப், குவாடரன்ட் மற்றும் செலஸ்டியல் க்ளோப் போன்றவை தான் கடல் பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் வருங்கால கிரக நிலைகளையும் அறியும் கருவியாக இருந்துள்ளது. இந்த அஸ்ட்ரொலாப் கருவியை வைத்து இன்னும் எத்தனை ஆண்டு காலத்திற்கும் கிரக நிலெகளை அறிய முடியும் என நம்பப்படுகிறது
அஸ்ட்ரொலாப்களிலேயே இறுதியாக உருவானது 1712ல் இரானிய சவாபித் வம்சத்து இறுதி அரசனான ஷா சுல்தான் ஹுசைனுக்காக தயாரிக்கப்பட்டது தான். 52 செமி உயரமுள்ள அந்த மானி மிகவும் கனமானதும் துல்லியமானதுமாகும்.
மனித கண்டுபிடிப்புகளில் நேரம்காட்டி மற்றும் நாட்காட்டிகளின் கண்டுபிடிப்பும் பங்களிப்பும் அதிமுக்கியமானவை..அவற்றை வடிவமைத்த ஆதிகால மனிதர்களின் உழைப்பு அபரிதமானது. பிரம்மாண்டமான கற்களை கொண்டு ,தோராய தூரத்தில் அவற்றை நிலைக்குத்தி அடுக்கி வைத்து ஒரு நாளைய நேரத்தையும், ஒரு மாத காலத்தின் நிலவின் வளர்/தேய்பிறைகளை கொண்டு வருடத்தையும் கணித்து வைத்தனர்.
ஓரிடத்தில் இருந்து வேறிடத்திற்கு மாற்றி வைக்க இயலாத அளவிற்கு அவை இருந்தன. தற்போது அவை பழங்கால பொக்கிஷங்களாக பாதுகாக்கப்படுகிறது அவற்றில் முதன்மையானது பிரிட்டனில் உள்ள ஸ்டோன்ஹெஞ் ஆகும். அதன் பிறகு கிரேக்க கண்டுபிடிப்பாளரும் தத்துவஞானியுமான பிளாட்டோ வடிவமைத்த நீர்க்கடிகைகள் உருவாயின. அதன் பிறகு வந்தவர்களும் கற்கள், தண்ணீர் குடுவை மற்றும் மரப்பலகையில் கூம்புகள் சொருகிய சன்டைல் ஆகியவற்றை வடிவமைத்தனர்.
இஸ்லாமிய பொற்காலத்தின் போது தான் கடிகாரங்கள் தாமிரம், பித்தளை போன்ற உலோகங்கள் கொண்டு சிறிய அளவில் நுணுக்கமாக கண்டுபிடிக்கப்பட்டன. உலக /மனித வரலாற்றில் கடிகாரம்,நாட்காட்டி இவற்றின் தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளவை மட்டுமன்றி அசாதாரண விஷயங்களை கண்டறிய உதவியவை. வரும் பதிவுகளில் இஸ்லாமிய ஆய்வாளர்கள் வடிவமைத்த கடிகாரங்களையும் அவர்களுக்கு உதவிய புராதன வடிவமைப்பு யுக்திகளையும் காணலாம்.
எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)