இஸ்லாமியர்களின் இறுதி திருவேதமான புனித திருக்குர்ஆனை முதன்முதலில் மொழிமாற்றியவர் மார்க் ஆஃப் டொலிடோ எனப்படும் ஒரு மதக்கோட்பாட்டு ஆசிரியர் ஆவார். கிபி 12ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் உருவாக்கப்பட்ட ஒரு பன்மொழி பல்கலைக்கழகம் தான் டொலிடோ எனப்பட்டது.
கதீட்ரல் ஆஃப் டொலிடோ என அறியப்பட்ட ஸ்பெயின் நாட்டில் செவில்லே என்ற நகரத்தில் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு கீழ் செயல்பட்ட அந்த பல்கலையில் புராதன நூல்களும், பல மதசார்புடைய வேதங்களையும் இதர அறிவியல் ,இலக்கியங்களையும் யூத மற்றும் கிறுஸ்தவ மொழிப்பெயர்ப்பாளர்களை கொண்டு லத்தீனில் மொழிப்பெயர்த்து வைத்துக்கொண்டிருந்தனர்.
இஸ்லாமிய பொற்காலத்தின் அடையாளமாக , பாக்தாதில் உருவாகிய பைத்துல் ஹிக்மா போன்றதான ஒரு அமைப்புடன் இந்த டொலிடோ பல்கலையும் பன்முகத்தன்மையுடைய கல்வியாளர்களை கொண்டு இயங்கிக்கொண்டிருந்தது. அரபிலக்கண நூல்கள் முதல் குர்ஆன், நபிகளாரின் வரலாறு அவர்களுடைய ஹதீஸ் கிரந்தங்கள், இஸ்லாமிய ஃபிக் சட்ட நூல்கள் , இஸ்லாமிய விஞ்ஞானிகள் எழுதிய நூல்கள் என அனைத்தையும் லத்தின் மொழிக்கு மாற்றிய பெருமை அங்கு ஆர்ச்பிஷப்பாக இருந்த ரேமண்ட் ஆஃப் டொலிடோ அவர்களுக்கு உண்டு.
கிபி 12ம் நூற்றாண்டு ஆரம்பத்திலேயே லத்தீன் மொழி பயன்பாட்டில் இருந்து பறக்கணிக்கப்பட ஆரம்பித்தவுடன் ஓல்டு ஸ்பானிஷ் எனும் பழைய ஸ்பானிஷ் மொழியில் அனைத்தையும் மொழிப்பெயர்க்க உத்தரவிட்டார். அங்கு பணியில் இருந்த மார்க் என்பவரால் திருக்குர்ஆன் முதன்முதலில் பழைய ஸ்பானிய மொழியில் மொழிமாற்றம் பெற்றது.
மார்க் ஒரு மருத்துவராகவும் கிறுஸ்தவ கத்தோலிக்க மதபோதகராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மார்க் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் முழுதும் பொய்யும் புரட்டுமாக இருந்தது, அவருக்கு லத்தீன் குர்ஆனில் கொடுக்கப்பட்டிருந்த தவறான தகவல்களை வைத்து அவர் மொழிப்பெயர்த்த குர்ஆனுக்கு “போலி தூதரின் பொய் சட்டங்கள்” (Lex Mahumet pseudoprophete (“[The] Law of the False Prophet Muhammad”) என்ற பெயரை கொடுத்திருந்தார்.
மார்க் மொழிப்பெயர்த்த திருக்குர்ஆன் நேரடியாக அரபியில் இருந்து இல்லாமல் லத்தீன் மொழி குர்ஆனில் இருந்து 13ம் நூற்றாண்டில் மொழிப்பெயர்ப்பானது. அரபுக்குர்ஆனை நேரடியாக லத்தீன் மொழியில் மொழிமாற்றம் செய்தவர் 1143ல் லத்தீன் குர்ஆன் ராபர்ட் ஆப் கெட்டன் மற்றும் ஹெர்மன் ஆப் கரீந்தியா ஆகியோரது கூட்டுத்தயாரிப்பில் பீட்டர் தி வெனரபிள் என்பவரால் வழிகாட்டப்பட்டு எழுதப்பட்டது.
பீட்டர் தி வெனரபிள் பதினொராம் நூற்றாண்டை சேர்ந்தவ கிறுஸ்தவ-இஸ்லாமிய மார்க்கங்களுக்கிடையிலான வேறுபாடுகளை களைய பாடுபட்டவர் ஆவார்.
இரண்டாவதாக மார்க் எழுதிய பழைய ஸ்பானிஷ் குர்ஆனை கிபி.1647ல் பிரெஞ்சு மொழிக்கு மாற்றியவர் சர் ஆன்ட்ரே டு ரையர் ஆவார். இவர் தற்போது பிரான்ஸ் நாட்டின் போர்கோக்ன் எனும் நகருக்கான பிரபுவாக பதவி வகித்தவர். பிரெஞ்சு கவுன்சிலில் துருக்கியின் தூதராக கான்ஸ்டான்டிநோபிளில் பணிபுரிந்த போது இவர் குர்ஆனை மொழிப்பெயர்த்துள்ளார்.
முன்னதாக துருக்கிய மொழி இலக்கணத்தையும், பெர்ஷிய எழுத்தாளர் ஷாதி எழுதிய குலிஸ்த்தான் எனும் புத்தகத்தையும் மொழிப்பெயர்த்திருந்தார். இந்த மொழிபெயர்ப்பும் ஏறத்தாழ அசல் குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளவற்றை தவறாக சித்தரித்து மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது.
இந்த மொழிப்பெயர்ப்பு வெளியான அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிபி.1649ல் பிரெஞ்சு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு குர்ஆனை மொழிமாற்றம் செய்தவர் அலெக்சாண்டர் ரோஸ் (Chaplain of Charles I ) ஆவார். இவர் அப்போதைய பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தனிப்பட்ட மதபோதகராக இருந்தவர் ஆவார்.
L”Alcoran de Mahomet (“The Qur’an of Muhammad”) என பெயரிடப்பட்ட அவரது குர்ஆன் பழைய தவறுகளை களைந்து திருத்தம்பெற்றதாக வெளிவந்தது.
முந்தைய பிரெஞ்சு பிரதியின் தழுவலாக இந்த மொழிப்பெயர்ப்பு இல்லை என்றும்… “துருக்கியர்களின் தற்பெருமைக்குள் அடங்கியிருக்கும் அவர்களது தூதரின் தூதுச்செய்தி உண்மைதானா? அதில் கூறப்பட்டுள்ள எச்சரிக்கைகளும் அறிவுரைகளும் என்ன கூற வருகிறது? உலகத்தினருக்கு இக்குர்ஆனுக்குள் ஒளிந்திருக்கும் செய்தி என்ன? என்பதை அறியவே இதனை மொழிப்பெயர்த்தேன்” என அவர் மொழிப்பெயர்த்த பிரெஞ்சு-ஆங்கில குர்ஆனின் பின்புறத்தில் எழுதியிருந்தார்.
அலெக்சாண்டர் ரோஸுக்கு பிறகு அதாவது 17ம் நூற்றாண்டில் இருந்து குர்ஆன் பல முறை பல அறிஞர்களால் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. எனினும் கிபி 1930ல் மர்மடியூக் பிட்ச்கால் என்ற பிரிட்டிஷ் அறிஞரால் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பான “The Meaning of the Glorious Koran” எனும் ஆங்கில குர்ஆன் தான் மிகத்துல்லியமான மொழிப்பெயர்ப்போடு முதன்முதலில் வெளியானது.
ஆங்கிலேயர்களுக்கும் இங்கிலாந்து நாட்டில் வாழ்ந்து பிரிட்டிஷ் முஸ்லிம்களுக்கும் கண்களில் கண்ணீர் வரவழைத்து மனதளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய குர்ஆன் என்றால் அது பிட்ச்கால் மொழிப்பெயர்த்த குர்ஆன் தான் என கூறுவதில் மிகையில்லை. இப்போதும் பிரிட்டிஷ் முஸ்லிம்கள் பலர் இவரது இறப்பு தினமான மே 19, அன்று இவரது கல்லறையில் சென்று இவரது அரும்பணியை நினைவு கூறுவதும் அவருக்காக இருகரமேந்தி பிரார்த்திப்பதும் தொடர்கிறது என்பதே இதற்கு சாட்சி.
கிபி.1875ல் ஒரு ஆர்தடாக்ஸ் பாதிரியார் குடும்பத்தில் பிறந்தவர் மர்மடியூக் வில்லியம் பிட்ச்கால். கேம்பிரிட்ஜ் நகரை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை சார்லஸ் கிரேசன் பிட்ச்கால் ஒரு மதபோதகரும் மதச்சட்டங்களை அறிவிக்கும் ரெக்டராகவும் பணியாற்றினார்.தந்தையின் இறப்பிற்கு பிறகு லண்டன் நோக்கி நகர்ந்தனர், அங்கு ஹாரோ பள்ளியில் சேர்க்கப்பட்ட பிட்ச்கால் ,பின்னாளில் இங்கிலாந்து பிரதமரான சர் வின்சன்ட் சர்ச்சிலின் பள்ளித்தோழராவார்.
பள்ளிப்படிப்பினை பாதிலேயே விட்ட பிட்ச்கால், மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு பிரயாணித்து தம்மை இலக்கிய எழுத்தாளராக தரம் உயர்த்திக்கொண்டார். உதுமானிய கலிபாக்களையும் அவரது ஆட்சியையும் குறித்த நன்மதிப்பு கொண்டிருந்த பிட்ச்கால், சிலகாலம் சுதந்திரத்திற்கு முன்னதான இந்தியாவின் ஹைதராபாத் நிஜாமிடமும் பணியாற்றியுள்ளார். அவர் இந்தியாவில் இருந்த பொழுது தான் 1930ல் குர்ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பினை எழுதி முடித்தார்.
அவர் மொழிமாற்றிய ஆங்கில குர்ஆனை எகிப்து,கெய்ரோவின் அல்’அஸார் பல்கலைக்கழகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான டைம்ஸ் லிட்ரரி சப்ளிமண்ட் ,பிட்ச்கால் அவர்களின் குர்ஆனை மிகவும் போற்றியது. குர்ஆனை மொழிமாற்றம் செய்த பிறகு தன்னை சுன்னி பிரிவு முஸ்லிமாகவும் ஹனஃபியா பள்ளி பின்பற்றாளராகவும் பிரகடனப்படுத்திக்கொண்டார்.
கிழக்கு லண்டன் பகுதியில் வோகிங்கிலுள்ள பிரபல பள்ளிவாசலான ஷாஜஹான் பள்ளிவாசலில் அவர் நடத்திய வெள்ளி குத்பா மேடைகளும் அவருடைய உரைகளும் பின்னாளில் அச்சுகளில் ஏற்றப்பட்டன.
1920ல் அவரது மனைவியுடன் மீண்டும் இந்தியா வந்து, பாம்பே க்ரானிகிள் பத்திரிகையில் பணியாற்றிய பிட்ச்கால் அவர் மரணிக்கும் ஆண்டிற்கு முதல் ஆண்டு 1935ல் இங்கிலாந்து சென்றார்.
செயிண்ட் கார்ன்வல் பகுதியில் வாழ்ந்தவர் இயற்கை மரணமடைந்தார். இங்கிலாந்து புரூக்வுட் கல்லறையின் இஸ்லாமிய பிரிவில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இஸ்லாத்தை தழுவிய பிறகு அவரது பெயருடன் முஹம்மத் என்பதை இணைத்துக்கொண்டு இடையில் வரும் வில்லியம் என்பதை நீக்கிவிட்டார் பிட்ச்கால்.
அவர் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்பதற்கு முன் சுமார் 15 நாவல்கள் எழுதியுள்ளார். அதன் பிறகு சிரியா மற்றும் பலஸ்தீனிய பிரச்சனை குறித்த புத்தகம் ஒன்றையும், இஸ்லாமிய கலாச்சாரம் குறித்த நூல் ஒன்றையும் மேலும் மூன்று நூல்களை இயற்றியுள்ளார்.
உலகில் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட அனைவருக்கும் பிட்ச்கால் எழுதிய பொழிப்பெயர்ப்பு தான் அரபு மூலத்தை போல நெருக்கமாக உள்ளது. அதன் பிறகு பல ஆங்கிலேயே இஸ்லாமிய அறிஞர்களும் மற்ற கல்வியாளர்களுக்கும் பிட்ச்காலின் குர்ஆன் மொழிபெயர்ப்பு ஒரு பெரிய வழிகாட்டியாக உள்ளது.
எழுத்தாளர் :- S. Nasrath Rosy (rosyamjath16@gmail.com)