சரக்கு விமானப் போக்குவரத்து (Air Cargo) உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் ஒரு வர்த்தக போக்குவரத்தாகும். உயர் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் விரைவில் வீணாகிப் போகக்கூடிய பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக கொண்டு செல்வதால் விமானப் போக்குவரத்து இன்றியமையாததாக மாறியிருக்கிறது.
உலக வர்த்தக மதிப்பில் ஒரு விழுக்காடிற்கும் குறைவாகவே சரக்கு விமானப் போக்குவரத்து உள்ள நிலையில் உலக வர்த்தகத்தின் மொத்த மதிப்பில் 35 விழுக்காடு காற்றினால் நடைபெறக்கூடிய இந்த சரக்கு விமானப் போக்குவரத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு உலக வர்த்தகத்தில் சுமார் 6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தத்துறை கையாண்டுள்ளது.
தமிழகத்தில் இருந்தும் சரக்கு விமானப் போக்குவரத்தின் பயன்பாடு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் திருச்சி விமான நிலையத்தின் சர்வதேச சரக்கு விமான முனையம் துவங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக ஒரு மாதத்தில் மட்டும் 800 மெட்ரிக் டன்களை கையாண்டு எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. திருச்சி வேளாண் மண்டலம் பல வேளாண் மாவட்டங்களால் சூழப்பட்டிருப்பதால் தினசரி சராசரியாக 25 டன் காய்கறிகள், பழங்கள் போன்ற எளிதில் வீணாகக்கூடிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பயிரிடக்கூடிய காய்கறிகள் சிங்கப்பூரில் விருப்பமான பொருட்களாக மாறிவிட்டதால், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கிட்டத்தட்ட 400 டன் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் சிங்கப்பூருக்கு திருச்சி சர்வதேச சரக்கு விமான முனையத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
திருச்சியை சுற்றி விளையும் கத்தரிக்காய், வெண்டைக்காய்,பீன்ஸ், எலுமிச்சை, தேங்காய்,மிளகாய் உள்ளிட்ட பலவகையான காய்கறிகள் தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கான ஏற்றுமதியில் பெரும்பகுதி வகிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் திருச்சி சர்வதேச சரக்கு விமான நிலையம் மூலம் கோலாலம்பூர், சிங்கப்பூர், மாலத்தீவு, ஷார்ஜா, துபாய் போன்ற நாடுகளுக்கு 7500 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்படுள்ளது. அதில் 80 விழுக்காடு பொருட்கள் சிங்கப்பூருக்கு மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளன.
சரக்கு விமானங்களின் போக்குவரத்து போதிய அளவிற்கு இல்லாமையால் சிங்கப்பூருக்குச் செல்லும் சர்வதேச பயணிகள் விமானமான ஸ்கூட் ஏர்லைன்ஸ், கோலாலம்பூர்-ஏர் ஏசியா, மலிண்டோ ஏர்,ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற பயணிகள் விமானங்களில் காய்கறிகள் ஏற்றுமதியாகின்றன.
திருச்சி மட்டுமின்றி கோயம்புத்தூர் சுற்றியுள்ள திருப்பூர்,ஈரோடு போன்ற மாவட்டங்களில் விளையக்கூடிய மற்றும் உற்பத்தியாகின்ற பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஆயுர்வேத மருந்து பொருட்கள், ஆயத்த ஆடைகள், இயந்திர உதிரிபாகங்கள் போன்றவை ஒவ்வொரு மாதம் சராசரியாக 350 டன்கள் கோயம்புத்தூர் சர்வதேச விமான முனையம் மூலம் சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் பல சர்வதேச விமான நிலையங்களுக்கு சென்று மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
இது போன்று மதுரையும் அதை சுற்றியுள்ள ஊர்களில் விளையும் வேளாண் பொருட்களும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மதுரை சர்வதேச சரக்கு விமான முனையம் துவங்கப்பட்டதற்கு பிறகு சுமார் 300 கிலோ மல்லிகைப் பூக்கள் ஸ்பைஸ் ஜெட் மூலம் துபாய்க்கு முதன் முதலில் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் பிறகு வேளாண் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதிக்கான அதிகாரிகள் பற்றாக்குறையாலும் அதிகநேர காலதாமதம் ஏற்படுவதாலும் திருச்சி சர்வதேச சரக்கு விமான முனையத்தின் மூலம் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் விளைவிக்கப்படுகின்ற வேளாண் பொருட்கள் முறையான வழிகாட்டல்கள் இல்லாதமையால் நுகர்வோரை சென்றடைவதற்கு முன் பல நேரங்களில் வீணாகிபோகின்றன.
உலகத்தின் உணவுத்தேவை அதிகரித்துக்கொண்டே செல்வதால் தரமான பொருட்களை உற்பத்தி செய்து நேர்மையான வியாபார முறைகளை பின்பற்றி நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டால் முந்தைய காலம் போல பல ஏற்றுமதி தொழில் நிறுவனங்களை முஸ்லிம்கள் உருவாக்கலாம்.
எழுத்தாளர் – அ. இஜாஸ் முஸம்மில்
மின்னஞ்சல் – ijasmuzammil45@gmail.com