மனித இனத்திற்கு பேரழிவை உண்டாக்கும் இந்த இரசாயனங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள்,பதப்படுத்தப்பட்ட – பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், அனைத்து எலக்ட்ரானிக் பொருட்கள், இரசாயண உரங்கள்,அழகு சாதன பொருட்கள், துப்புரவு பொருட்கள்,வண்ண ஆடைகள் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இந்த Endocrine Disrupting Chemicals (EDCs) இரசாயனங்கள் நமது உடலிலுள்ள சுரப்பிகள் மற்றும் ஹார்மோன் அமைப்பில் குளறுபடி செய்து, இறைவனால் ஆண் பெண் இருபாலாரிடமும் படைக்கப்பட்டுள்ள இனப்பெருக்கத்திற்கான இயற்கை அமைப்பை நாசம் செய்கிறது.
பெற்றோர் – பிள்ளை – பேரப்பிள்ளை – கொள்ளுப் பேரப்பிள்ளை என்று நான்கு தலைமுறைகளுக்கு இந்த நாசத்தின் வீரியம் ஊடுருவிச் செல்கிறது என்பதை கவலையோடு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனால் இளையதலைமுறையின் ஆண்மை பெண்மை இரண்டிலும் விவரிக்க முடியாத சீரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
நாட்டில் 3 கோடி இளம் தம்பதிகள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனஉளைச்சலில் அலைகின்றனர். விவாகரத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.திருமணம் என்றாலே ஒருவித அச்சம் இளைஞர்கள் இளம்பெண்களிடையே ஏற்பட்டுள்ளது.
எதை ஒன்றையும் காசாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இயங்கும் முதலாளித்துவ அமைப்பு ஒருபுறம் இந்த (EDCs) இரசாயனங்கள் கலந்த பொருட்களை உற்பத்தி செய்துகொண்டே, மறுபுறம் மனிதர்களிடையே பெருகும் குழந்தையின்மை கோளாறுகளுக்கு ஆங்காங்கே செயற்கைமுறை கருவூட்டல் மையங்களை துவங்க பயிற்றுவிக்கின்றனர்.
மனிதர்களின் சந்ததிச் சங்கிலி குறித்த அறமரபு இனமரபு சமூகமரபு உயிரியல்மரபு இவற்றின் எந்த ஒரு எல்லைகளையும் கருத்தில் கொள்ளாமல்,எந்த வழியிலாவது குழந்தையை தயாரித்து சந்தைப்படுத்த வேண்டும் என்ற பேராசைகொண்ட செயற்கைமுறை கருவூட்டல் மையங்கள் ஈசல் போல தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.
இதன் இன்றைய வர்த்தக மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய்.
(சில செயற்கைமுறை கருவூட்டல் ஏற்புடையது என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்)
நமது நவீன (?) வாழ்வின் பிரிக்க முடியாத அங்கங்களாகிவிட்ட இந்த (EDCs) இரசாயணம் கலந்த உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை இயன்ற அளவிற்கு தவிர்த்துக் கொண்டு இயற்கை பொருட்களை உபயோகிக்கத் துவங்குவது இந்த பேராபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
அதோடு இந்த பேராபத்துகள் குறித்து பள்ளி கல்லூரிகளில் பயிற்றுவிப்பதும், பொதுமக்களிடம் இதுகுறித்து விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், தீங்கிழைக்காத இயற்கைமுறை வீட்டு உபயோகப்பொருட்களின் தயாரிப்பு மற்றும் வணிகத்தை துவங்குவதும், முஸ்லிம்களின் முதன்மையான பொறுப்பாகும்.
– CMN சலீம்